Tuesday, December 20, 2011

உதிரும் விருப்பங்கள்


வாழ்க்கைக் குறித்த 
நம் விருப்பம் 
உதிர்ந்த 
மறுக்கணத்தில் 
துளிர்க்க  
ஆரம்பிக்கிறது 
நம் குறித்த 
வாழ்க்கையின் விருப்பம்.

Thursday, December 15, 2011

மௌனம் சம்மதமா?


மௌனத்தை சம்மதம் எனக் 
கொள்ளலாமா?
என்று கேட்கிறேன்.
மௌனத்தை 
மௌனம் எனவும் 
கொள்ளலாம் என்கிறாய்!

Saturday, December 10, 2011

நதியின் தாகம்


தாகத்திற்கு அள்ளிப் 
பருகினேன்.
தீர்ந்துபோனது 
நதியின் 
ஆயிரம் மைல்
பயணத் தாகம்

Saturday, December 3, 2011

குழந்தைச் சிந்தனை


 கேள்வி கேட்கும்
குழந்தைகள் 
என்னவோ 
தெளிவாகத்தான்
கேட்கிறார்கள்.
பதில் சொல்ல வேண்டிய 
 பெரியவர்கள்தான் 
குழம்பிவிடுகிறார்கள்.

Monday, November 21, 2011

இதய வலி


உடன்படாத 
இதயம் 
ஒன்றால் 
உடைபடுகிறது 
மற்றொரு 
இதயம்.

Thursday, November 17, 2011

நிலவும் வாழ்வும்


வளர்பிறையையும் 
தேய்பிறையையும் 
தவிர 
வேறென்ன வேண்டும்
நிலவையும் 
வாழ்வையும் 
ரசிக்க ?!Thursday, November 10, 2011

ஜனனம் - மரணம்


பிறப்பின் முடிவுரை 
மரணம்.
 இறப்பின் முன்னுரை 
ஜனனம்.

Monday, November 7, 2011

உண்மையைத் தேடும் உண்மை


என்னை
புரிந்தவர்களையும்,
பிடித்தவர்களையும் 
தெரிந்து கொள்வதற்காக 
மட்டுமே 
எப்போதும் 
உண்மை 
பேசுகிறேன்.


Wednesday, November 2, 2011

மரோ சரித்ரா

 


     நான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். "புன்னகை மன்னன்" - தமிழ் காதல் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. காரணம் அதன் one line . தனக்கு வாழ விருப்பம் இல்லை எனும்போது விதி அவனை வாழ வைக்கும். தான் வாழ வேண்டும் என அவன் விரும்பும் போது விதி அவனை கொன்று விடும். தினத்தந்தியில் "வரலாற்றுச் சுவடுகள்" -இல் அவரது படங்கள் குறித்து வெளிவந்து கொண்டிருந்த சமயம் அவர் கூறியிருந்தார், "மரோ சரித்ரா படம் வெளிவந்த போது தற்கொலை எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. அடடா! இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்தி விட்டோமோ என்கிற குற்ற உணர்வில் நான் எடுத்ததுதான் புன்னகை மன்னன். அதனால் தான் மரோ சரித்ராவின் கிளைமாக்ஸ்- ஐ புன்னகை மன்னனின் முதல் காட்சியாக வைத்தேன். காதல் தோல்வின் முடிவு மரணம் அல்ல.அதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. காதல் போயின் சாதல் என்பதை மாற்றி காதல் போயின் காதல் என படமாக்கினேன்" என்றார்.

     அப்போதிலிருந்தே மரோ சரித்ராவை பார்க்க வேண்டும் என எனக்கு ஆசையாய் இருந்தது. ஆனால் சமீபத்தில்தான் பார்க்க முடிந்தது. என்னதான் 1978 -இல் படம் வந்திருந்தாலும் அதன் கதை என்னவோ இன்றும் பொருந்திப் போகக் கூடியதாய் இருக்கிறது. அது சரி, காதல் உள்ள வரை, காதல் எதிர்ப்புகளும் இருக்கத்தானே செய்யும். (காதல் உயிர்ப்புடன் இருப்பது என்னவோ காதல் எதிராளிகளால்தான்.)


     விசாகப்பட்டினத்தில் குடியேறிய தமிழ் குடும்பம் கமல் உடையது. அந்த வீட்டிற்கு அருகே சரிதாவின் குடும்பம் இருக்கிறது. சரிதா அதே ஊரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் பெண். வேலையை விட்டு தன் வீட்டிற்க்கு வரும் கமல், சரிதாவுடன் காதல் வயப்படுகிறார். வழக்கம் போல இருவர் குடும்பமும் அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறது. இரு குடும்பத்திற்கும் பொதுவாக இருக்கும் நண்பர் ஒருவர், "அவர்களை ஒரு வருஷம் பார்க்காம, பேசாம இருக்க சொல்லுவோம். அப்புறமும் ரெண்டு பேருக்கும்  காதல் இருந்துச்சுனா கல்யாணம் பண்ணி வைங்க" என்று ஆலோசனை சொல்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் கமல். ஆனால், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், இதை நாம் சரியாக உபயோகித்துக் கொண்டால் நம் காதல் கைக்கூடும் என அவரை சம்மதிக்க வைக்கிறார் சரிதா. தான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால், இருவர் வீட்டிலும் எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை ( written agreement ) தர வேண்டும் என்கிறார் கமல். இது தான் சமயம் என கமலின் தந்தை கமலை ஹைதராபாத்துக்கு வேலைக்கு அனுப்புகிறார். இடைப்பட்ட காலத்தில் சரிதாவின் பெற்றோர் அவளை மனம் மாற்ற முயல்கின்றனர்.  ஹைதராபாத்துக்கு சென்ற கமல் என்ன ஆனார்? அவர்கள் காதல் கைகூடியதா என பாலச்சந்தருக்கே உரித்தான திரைக்கதை  தான் மீதி.


     படத்தில் ஒரு காட்சியைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஓராண்டு கழித்து சரிதா வீட்டிற்கு வரும் கமல் சரளமாக  தெலுங்கின் எல்லா வட்டார மொழியிலும் பேசுவார். அதில் ஒன்று "தசவதாரம் - பல்ராம் நாயுடு" பேசும் வட்டார வழக்கு. எப்படி புன்னகை மன்னனில் ஒரே ஒரு காட்சியில் குள்ள மனிதனாக "அபூர்வ சகோதர்கள்" -க்கு முன்பரிசோதனை செய்து இருப்பாரோ  அதே மாதிரி இதிலும் செய்து இருக்கிறார். இதை முன்பரிசோதனை என சொல்வதைக் காட்டிலும் ஒரு கலைஞன் தன் திறமையின் இம்மி அளவையும் வீண் செய்யாது பயன்படுத்திக்கொள்ள முனைவதாகவே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. 

     

     இந்த படத்தை பார்த்து முடித்த போது ஒரு ரஷ்யக் கவிதையின் மொழிபெயர்ப்பு நினைவிற்கு வந்தது.
   
"அன்பே!
இன்று இரவுக்குள் நான்
சாகப் போகிறேன்.
எனக்குத் தெரியும் 
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய் 
நீ வருவாய்"
இதற்கு அந்த காதலியின் பதில்
"அன்பே!
இந்த இரவுக்குள் நீ 
சாகப்போகிறாய்.
அந்தியின் முதல் இருளாய் 
நான் வருவேன்"


      பாலச்சந்தர் பாணியிலே சொல்வதானால் மரோ சரித்ரா - "இந்தப் புனிதப்  பயணம் இன்னும் ஒரு சரித்திரம்."

Wednesday, October 19, 2011

சுகமான நினைவுகள்


 வலிகளின்றி
வாழ்வேது?
வலிகள்
அனைத்தும் 
உன்னையே
நினைவுருத்துவதால் 
இந்த வாழ்வே 
சுகமின்றி 
வேறேது?

Monday, October 17, 2011

மௌனம்


உண்மையின் 
கல்லறை 
மௌனம்

Wednesday, October 12, 2011

கடவுளும் சாத்தானும்குடித்திருப்பவனும்,
குடிக்க அழைக்கப்பட்டாலும் 
குடிக்காமல் 
கண்ணியம் காப்பவனும் 
கலந்துரையாடுகிறார்கள்
கடவுளையும் சாத்தானையும் பற்றி.
மது அருந்தும் சாத்தான் 
தான் அருந்துவது அமிர்தம் என்கிறது.
வேடிக்கை பார்க்கும் 
கடவுளுக்கே தெரியும்
அது விஷம் என்று. 
கடவுளுக்கு பகிர்ந்தளித்து 
சாத்தான் தெய்வத்தன்மை 
அடைய முயல்கிறது 
நரகத்தின் ஒரு படி முன்னேறி.
விஷம் எனும் அமிர்தம் தவிர்த்து 
சாத்தானை தோள் சாய்த்து 
அழைத்துப் போகிறார் கடவுள் 
சொர்கத்தின் ஒரு படி கீழ் இறங்கி.


Saturday, October 8, 2011

பல்லக்கு


பனித்துளி சுமக்கும் 
பல்லக்கு 
இலை

Sunday, October 2, 2011

நேசம்


நான் 
என்னை நேசிப்பதே 
நீ 
என்னை நேசிப்பதால்தான்!

Wednesday, September 28, 2011

பிம்பம்


நிலத்தில் மிதக்கிறது
மலை.
குளத்தில் மூழ்கி இருக்கிறது
பிம்பம்.

Thursday, September 22, 2011

கடவுளும் மனிதனும்ராமனோ ?
கிருஷ்ணனோ ?
கடவுளாக 
இருக்கும் 
வரையில் 
எந்தப் 
பிரச்சனையும் 
இல்லை.

Tuesday, September 20, 2011

பால்ய நினைவுகுறும்பு செய்யும் 
என் மகனை 
அதட்டும் போது
என்னை 
அதட்டும் 
என் பெற்றோரைப் 
பார்க்கையில் 
நினைவுக்கு 
வருகிறது
தாத்தா பாட்டி 
இல்லாத 
எனது பால்ய காலம்!

Sunday, September 18, 2011

...சொல்லாததும் உண்மை

    

     "பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே. மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், பொய் உன்னை வாழ விடாது. உண்மை உன்னை சாக விடாது", என்றார் விவேகானந்தர்.

     இன்று நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், உண்மையை எப்படி எதிர்கொள்வது என்பதே. உண்மை பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அன்றோ? இந்த உலகத்தில் சொல்ல மறுக்கிற விஷயங்களும், சொல்லாமல் மறைக்கிற வீஷயங்களும் மட்டுமே தற்போது உண்மையாக இருக்கின்றன. உண்மை பேசுகிறவன் பலர் பார்க்க கயிற்றின் மேல் நடக்கிறவன் போல. எல்லாருக்கும் அந்த தைரியம் வந்துவிடாது. ஆனால், அவனது செய்கையை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். மேற்கொண்டு அவனுக்கு எதுவும் கிடைக்காது!

     மௌனத்தை வார்த்தைகளால் என்றுமே வெல்ல முடியாது. ஏனென்றால் மௌனம் என்பதுதான் உண்மை. வார்த்தைகளால் மௌனத்தை விளக்க முடியும். ஆனால், நம்மால் என்றுமே மௌனத்தை உருவாக்க முடியாது. மௌனம் சில நேரங்களில் தண்டனை; சில நேரங்களில் மன்னிப்பு!

    நிர்வாணமே உண்மை. ஆனால், நம்மால் அந்த நிர்வாணத்தை எதிர்கொள்ள முடியுமா? எதிர்க்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை ஒப்புக்கொள்ளவாது முடியுமா? இந்த உலகத்தில் சொல்லாமல் போகின்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் போவதில்லை
          
    வாழ்க்கை அபூர்வம் என்றால், அதை அணு அணுவாக வாழ்பவன்? அபூர்வங்களின் அபூர்வம்! அப்படி ஒரு அபூர்வக் கலைஞன் தான் "பிரகாஷ்ராஜ்". அவரது "...சொல்லாததும் உண்மை" என்கிற தொடர் ஆனந்த விகடனில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்து, பிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டதுஉண்மையை சொல்வதே தைரியமான விஷயம் என்றால், ஒரு ஊடகத்தின் வாயிலாக உண்மையை உரக்க சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!

     தாயன்பு, காதல், காமம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம், நட்பு, திமிர், கர்வம், பயம், பிரிவு என ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதைகளை உண்மையாக திரும்பி பார்க்கிற தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாது. ஒரு விஷயத்தை உண்மையாக பார்ப்பதற்கும், நமக்கு வசதியாக பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், நமக்கு எது வசதி என்பதில், எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எந்த மனிதனும் காமத்துடனான தன் அனுபவத்தை எவரிடமும் அவ்வளவு எளிதில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். காந்தி  தன் தந்தை இறக்கும் தருவாயில், தன் உடல் பசியை தீர்க்க தன் மனைவியை அழைத்ததையும், தனது வயதோகிய காலத்தில் தன் துறவர வாழ்க்கையின் மீது தானே சந்தேகம் கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டதையும் இந்த உலகத்துக்கு வெளிப்படையாக சொன்னார். அதே துணிச்சலை பிரகாஷ்ரஜிடமும் பார்க்கிறேன்.

    சகமனிதனின் அனுபவம் தானே நமக்கு வாழ்க்கை பாடம்?  

நூல் விவரம்:- 
பெயர்: ...சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ. 110 /- 


Friday, September 16, 2011

உயிர்ப்பு

உயிர்ப்புடன் இருக்கிறேன் 
மரணிக்கும் 
தருவாயிலாவது...

Sunday, September 11, 2011

வாழ்க்கையின் முரண்
நினைத்தது 
எல்லாம் 
நடந்துவிடாது 
என்கிற 
யதார்த்தத்துக்கும் 
நினைத்தது
எல்லாம்
நடக்க வேண்டும் 
 என்கிற
எதிர்ப்பார்புக்கும் 
இடையில் 
சிக்கித் 
தவிக்கும் 
மனித வாழ்க்கை

Wednesday, September 7, 2011

உழைப்பு


மிதித்தால்தான் 
உழைப்பேன் என்கிறது.
தையல் எந்திரம்.

Thursday, August 25, 2011

தலைமுறை இடைவெளி

அற்புதமாக எனக்குத் 
தோன்றுவன  எல்லாம் 
அற்பமாகத் தோன்றுகின்றன
எனது தந்தைக்கு.
என்ன செய்ய?
வயசுக் கோளாறு.
இருவருக்கும்!

Friday, August 19, 2011

வன்மம்

விரட்டி அடிக்கிறேன் 
எலியை.
வாடகை தராமல்
என் வீட்டில் 
குடியேறியதனால்.

Tuesday, August 9, 2011

பொறாமை

கரப்பான்பூச்சிகளைக் கண்டு 
அஞ்சும் பெண்களைப் பார்க்கும் போது
சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது 
கரப்பான்பூச்சிகளின் மேல்!

Saturday, August 6, 2011

வாழ்தல் ஒரு கலை - VIII


     ஆங்கிலத்தில் " Empathy " என்றொரு சொல் உண்டு. மிகவும்  அர்த்தம் பொதிந்த சொல் - மற்றவர் கண்ணோட்டத்திலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவது. உறவை  பேணுவதற்கு சுலபமான வழி. ஆனால் நாம் பெரும்பாலும் அவ்வாறு செய்வதில்லை என்பதே உண்மை. 

     இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்ததில் இருந்தே இதை பின்பற்றவேண்டும் என்ற ஆவலும் தொற்றிக்கொண்டது. கி.மு, கி.பி என்பது போல என் வாழ்க்கையை இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிவதற்கு முன், பின்  எனப் பிரித்துக்கொள்ளலாம். இதை என் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து பல்சுவை அனுபவங்கள் நடந்தன. 

     குறிப்பாக, ஒருமுறை சென்னையில் இருந்து என் ஊருக்கு செல்ல தாம்பரத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன், முன்பதிவு எதுவும் செய்யாமல். அது வார இறுதி, விழாக் காலம் என எதுவும் அற்ற சாதாரண நாள். எனவே, சொல்லும்படி கூட்டம் எதுவுமில்லை. அதனால், சிறிது பொறுத்தே ஒரு ultra deluxe பேருந்தில் ஏறி, கடைசி வரிசையில் அமர்ந்துக்கொண்டேன். நடத்துனர் அனைவருக்கும் பயணச்சீட்டு தந்துவிட்டு கடைசியாக என் அருகில் வந்து அமர்ந்து கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவராக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் பேச்சு நீண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். பிறகு நான், "ஏங்க! இந்த மாதிரி சாதாரண நேரத்துல எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு passengers - அ ஏத்துறீங்களே, அது ஏன் தீபாவளி, பொங்கல் மாதிரியான நேரத்துல மட்டும் எங்கள மனுஷனாவே மதிக்க மாட்டீங்கறீங்க?" கேட்டதும் வெடிச் சிரிப்பு சிரித்தார். பிறகு அவர், "தம்பி நீங்க சொல்றது வாஸ்தவம் தான். நாங்க சாதாரண நேரத்துல கூப்பிடும் போது நெறைய பேர் சாதாரண பஸ்ல ஒடுங்கி கஷ்டப்பட்டு போய் காச மிச்சப்படுத்தப் பாக்குறாங்க. இதே தீபாவளி, பொங்கல் மாதிரியான நேரத்துல கொஞ்சம் இடம் இருந்தாலும் பரவா இல்லை, கொஞ்சம் ஏத்திக்கோங்க - னு கேப்பாங்க. நாங்க என்ன செய்ய முடியும் சொல்லு ",னு கேட்டார். நியாயம் தான். சில நேரங்களில் சில மனிதர்கள்!!!

     வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது. பணிக்கு செல்லும் மனைவிக்கு உதவுவது, வயதான பெற்றோர் சொல்லும் விஷயங்களை காது  கொடுத்துக் கேட்பது (It is easier to accept her thoughts rather than argue with her - அகவை அறுபதில் இருப்பவர் அவர் தாயைப் பார்த்து அவர் வீட்டிற்கு சென்றிருந்த எங்களிடம் சொன்னது!!!) என எல்லா இடத்திலும் Empathy - ஐ கடைப்பிடித்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

     குறிப்பாக காதலில். ஒருதலைக் காதல், இருவரும் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைகூடாமல் போன காதல் என காதலின் ஒவ்வொரு நிலைகளிலும் நம்மை பொறுமையுடன் இருக்கச் செய்வதில் Empathy - யின் பங்கு அதிகம். சில ஆண்கள் காதலில் பொறுமைக் காப்பதில்லை. வெகு சிலரே முதிர்ச்சியோடு காதலை அணுகிறார்கள். ஒரு பறவை பறந்து வந்து எவ்வண்ணம் அமர்ந்ததோ, அவ்வண்ணம் அந்த பறவை பறந்து செல்வதற்கும் சிரமமற்றபடி கிளையாக இருப்பதே ஒரு ஆணுக்கு அழகு! பிரிவு என்பது வலிதான்.  மறுப்பதற்கில்லை. ஆனால் பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை. பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்த்தப்படுத்திவிடும் என்பது என் நம்பிக்கை.
    ஒரு உண்மைச் சம்பவம் ஒரு பெரியவர் அவர் 25  வயது மகனுடன் இரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அவர்கள் இருக்கைக்கு எதிரே இளவயது தம்பதி அமர்ந்திருந்தனர். இரயில் பயணிக்க ஆரம்பித்ததும் அந்த இளைஞன் ரொம்பவும் உற்சாகமாக தன் தந்தையை பார்த்து,"அப்பா! மரம், செடி எல்லாம் பின்னாடி போகுது" என்றான். தந்தை அவனைப் பார்த்து புன்னகைத்தார். அந்த தம்பதிகள் விசித்திரமாக அவர்களைப் பார்த்தனர். இப்படியே ஒவ்வொன்றாக அந்த இளைஞன் சொல்வதும் அவனது தந்தை புன்னகைப்பதுமாக சென்றுக் கொண்டிருந்தது. இது அந்த தம்பதிக்கு சற்று எரிச்சலைத் தந்தது. சிறிது நேரம் கழித்து, மழைத் தூறல் விழத் துவங்கியது. சன்னலின் வழியே கையை வெளியே நீட்டி, கண்களை மூடிக்கொண்ட இளைஞன், பிறகு தன் தந்தையைப் பார்த்து,"அப்பா மழை! மழை!" என பெருமிதத்துடன் கூறினான். தங்கள் பொறுமையை இழந்த அந்த தம்பதி, "உங்க பையன ஹாஸ்பிடல்ல காமிக்கணும்னு நெனைக்கிறேன்"-னு  சொன்னார்கள். இதைக் கேட்ட அவனது தந்தை ஒரு புன்முறுவலுடன் பதில் அளித்தார். ""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வரோம். இவனுக்கு சின்ன வயசுலேயே பார்வை  போய்டுச்சு. இப்ப தான் ஆபரேஷன் பண்ணி பார்வை கெடைச்சுருக்கு".


Tuesday, July 26, 2011

நிராசை


 நிதர்சனத்தின் 
மறுப்பெயர் 
நிராசை

Sunday, July 17, 2011

வெயில் நதி

தாகத்திற்கு
அள்ளிப் பருக முடியாத
வெயில் நதி
சாலை!

Saturday, July 16, 2011

பலிகடா

பலி இடப்பட்டுக் கொண்டே
இருக்கிறேன்.
மற்றவர்களை
பலி வாங்கிவிடக் கூடாது
என்பதனால்!

Friday, July 15, 2011

மனது படுத்தும் பாடு

தொலைத்த ஒன்றையே
பத்திரப்'படுத்து'கிறது
மனது!

Thursday, June 23, 2011

நாடக மேடை

ஒத்திகை இல்லாத 
நாடகம் 
வாழ்க்கை!

Monday, June 20, 2011

எங்கே எனது கவிதை?

வெற்றுக் காகிதத்தில் 
நிரம்பிக் கிடக்கின்றன 
என் 
எழுதப்படாத கவிதைகள்!

Monday, June 13, 2011

கண்ணீர்

மனநடுக்கத்தின்
சுனாமி
கண்ணீர் !

Tuesday, May 31, 2011

மறதி

மறந்தவை அனைத்தும் 
மறந்தவை மட்டுமல்ல;
மறக்கப்பட்டவையும் தான்.

Saturday, May 21, 2011

வாழ்தல் ஒரு கலை - VII

     
     இங்கே யாரும் தனி மனிதர்கள் இல்லை. ஆனால், தனி மனிதர்களாகிய சிலருக்கு தேவை சிறு மனிதம். இந்த பரந்த விரிந்த உலகில் நாம் தினமும் பலரைக் கடக்கிறோம். அவர்களுள் சிலருக்கு நம் இருப்பு அல்லது உதவியோ தேவைப்படும். நம் வாழ்கைப் பயணம் என்பது நம்முடையதாய் மட்டும் இருக்கலாம். ஆனால், நம் ஊர்தியில் வேறு சிலரும் பயணம் செய்யக் கூடும். அல்லது அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு நாம் உதவ வேண்டும்.
      "உதவின்னு கேட்டா இன்னிக்கு எவங்க செய்யறான்?" - நாம் பலரும்  கடந்து வந்த கேள்வி. உண்மைதான். சில உதவிகள் மற்றவர் கேட்க நாம் செய்வது. மற்றும் சிலதோ மற்றவர்கள் கேட்காமலே நாமாக முன் சென்று செய்வது. 
"தன்னை அறிதல் தான் -ஜென் தத்துவம்-னு" சொல்வார்கள். என் சென்னை வாழ்க்கையும் அப்படிதான். கூட்டை பிரிகிற பறவைக்குத்தானே வானம் சொந்தம். அதுபோல கல்லூரியில் சேர்வதற்காக என் மண்ணை  விட்டு சென்னை வந்தேன். சென்னை - ஒரு விசித்திர நகரம். ஒரு மனிதனை  சாமரம் கொண்டு   வரவேற்கும். மற்றொருவனை காட்டில் வாழும்  உயிர் பயம் கொண்ட தாவர உண்ணி போல அலைக்கழிக்கும். மாணவன் ஆனதால் முதல் பிரிவில் சென்னை என்னை சேர்த்துக் கொண்டது. 

      
     அங்கே நான் இருந்த ஒவ்வொரு நாளும் என்னை நானே  வேறு கோணத்தில் உணர ஆரம்பித்தேன். அந்த ஊரில் தான் எத்தனை எத்தனை மனிதர்கள். தேடல் பொருட்டு சிலர், தேவை பொருட்டு சிலர், வாழ பொருட்டு சிலர், வாழ்கையை தொலைத்து சிலர் என அது ஒரு தனி உலகம். அங்கே உள்ள மின்சார ரயில் என்பது வெறும் ஊர்தி அல்ல; போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் வாழ்வின் ஏதோ ஒரு அர்த்தத்தை உணர்த்திச் செல்லும். "எல்லா பயணங்களும் தன் லட்சியத்தை  அடைவதில்லை. ஆனால் - ஏதோ  ஒன்றை கற்றுத்தரும்.

      "எது உதவி?". ஒருவர் தேவை பொருட்டு மற்றொருவர் மனமுவந்து அவருக்கு உதவுவது. எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது ஒருவர் என்னை நாடி உதவி என்று கேட்டால், அவர் மறைபொருளாக என்னை நம்புகிறார் என்று. அதற்காகவே என்னை நாடி வந்தால் மறுயோசனை இன்றி உதவ முற்படுவேன். ஆனால் - சிலரோ உதவி கேட்க தயங்கி நிற்பார்கள். நாமாக முன் சென்று உதவ வேண்டும் - பேருந்தில் பெரியவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கை தருவது போல. தெரு ஓரத்தில் சாப்பாடு விற்கும் சாமானியனின் சோற்றின் தரம் மேல் எனக்கு ஆயிரம் கேள்வி இருந்தது (தரத்திற்கு ஏற்ற விலை குறித்தும்). சென்னை எனக்கு சொன்னது, "அது ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு செய்யும் சேவை!" என்று.

      
     ஒரு பெரியவர் கலிபோர்னியா கடற்கரையின் வழியாக வண்டியில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு சிறுவன் கடலினுள் ஏதோ ஒன்றை கீழிருந்து எடுத்து தூக்கி எரிந்துக் கொண்டிருந்தான். அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வரும் போதும் அந்த சிறுவன் அவ்வாறே செய்துக் கொண்டிருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை. உடனே, வண்டியில் இருந்து இறங்கி அவனிடமே சென்று, "என்ன செய்கிறாய்?" எனக் கேட்டார். அவன்," இதோ இந்த உடுமீன்கள் (star fishes) வழி தவறி கரைக்கு வந்து விட்டன.அதனால் அவற்றை கடலிடமே எரிந்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். பெரியவர் சிரித்துக் கொண்டே, "இந்த உலகில் எவ்வளவோ உடுமீன்கள் உள்ளன. நீ எரியும் சில மீன்களால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?" என்றார். சிறுவனோ மென்மையாக, "உண்மைதான். ஆனால் நான் எரியும் இந்த ஒரு மீனின் வாழ்விலாவது மாற்றம் நிகழும்" என்று தன் பணியை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
       
      நாம் அனைவரும் முழு நேர அன்னை தெரேசா ஆக முடியாது என்பது உண்மை தான்.ஆனால், பகுதி நேர தெரேசா ஆக வழ முடியுமே!

Wednesday, May 4, 2011

வாழ்தல் ஒரு கலை - VI

    
     ஒரு மனிதன் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளுள் ஒன்று, அவன் பணி செய்ய வேண்டிய துறையை தேர்ந்தெடுப்பது. ஏனென்றால், ஒருவனது வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை அவன் பணி சார்ந்தே வாழ நேரிடுகிறது. விருப்பமில்லாத துறையில் எந்த ஒரு மனிதனாலும் அத்தனை நாள் நீடிக்க  முடியாது. முந்தய தலைமுறைக்கு தன் விருப்பமான  துறையை தேர்ந்தெடுப்பது சற்று சவாலான விஷயமே. காரணம், அக்காலத்தில் இருந்த குறுகிய வாய்ப்பு, அறியாமை மற்றும் புது துறையில் தன் பிள்ளையை வைத்து பரிசீலனை செய்ய பெற்றோருக்கு இருக்கும் தயக்கம் எனப் பற்பல.

     ஆனால், இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலான தடை கற்கள் ஏதும் இருப்பதில்லை, சக போட்டியாளர்களைத் தவிர. இருந்தாலும் சில குடும்பங்களில் உள்ள புரிதல் குறித்த பிரச்சனைகளையும் மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தையுடன் ஒரு ஆசையும் , கனவும் வளர ஆரம்பிக்கிறது. கனவு - குழந்தையுடையது. ஆசை - பெற்றோருடையது. பெரும்பாலும் ஆசை - கனவு எனும் போராட்டத்தில் கனவு   
நசுக்கப்படுவது வன்சோகமே. ஆனாலும் கனவுகளுக்கு அழிவில்லை என்பதனால் அது வேறு அவதாரம் எடுத்து தன்னை நிரூபித்துக் கொள்கிறது. 
எல்லோருடைய கனவுகளும் மறுவடிவம் ஏற்பதில்லை. அப்பேர்பட்டவுனுடைய வாழ்வை அவனாக வடிவமைத்துக் கொள்வதை தவிர வேறொரு வழியும் இல்லை.

     நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள போராட துப்பிலாமல் தன்னைத்தானே  சமாதானப்படுத்திகொள்ளும் லட்சோப லட்சம் பேரில் நானும் ஒருவன். எனது விருப்ப பாடத்தை எடுக்க எதிர்ப்புகள் ஆயிரம் வந்த போதிலும் அதை எதிர்த்து போராட முடியாத என் கையாலாகாத தனத்தை பழியாக மற்றவர் மேல் போட என் மனம் இதுவரை சம்மதித்ததில்லை என்பது எனக்கே என்னால் ஏற்பட்ட மிகப் பெரிய ஆறுதல். என் கனவுகளின் எதிர் திசையில் மிக வேகமாக ஓடலானேன், பலன் - அந்த திசையில் கிடைக்க வேண்டிய சாதாரண அங்கீகாரம் அல்லது வெற்றியின் நிழற்குடையின் கீழ் இளைப்பாற கூட இடம் கிடைக்காமல் போனது. அதிலும் ஒரு நன்மை நடந்தது. என்னை பற்றிய மற்றவர்களின் உண்மையான எண்ணத்தை அறிய ஒரு வாய்ப்பாய்  அமைந்தது. இயக்குனர் பாக்யராஜ் ரேடியோ மிர்ச்சியின் விளம்பரத்தில் சொல்லுவார், " ஒரு மனுஷன் தொடர்ந்து ஜெய்ச்சிட்டே இருந்தா மக்களுக்கு சந்தேகம் வந்துடும். அவனுக்கு அதிஷ்டம் ஜாஸ்தி, அதனால தான் அவனால தொடர்ந்து ஜெய்க்க முடியுதுனு சுலபமா சொல்லிடுவாங்க. ஆனா, அவன் ஒரு தடவை கீழ விழுந்து அப்பறம் ஜெயச்சான்னா, மக்கள் ஒத்துக்குவாங்க அவன் ஜெய்க்கிறது திறமையால தான்னு". என் வாழ்வில் நான் அனுபவித்த உண்மை. அதே சமயம் தத்துவங்களை படிக்கும்போது ஏற்படும் அனுபவத்திற்கும், அதை வாழ்ந்து பார்த்து உணர்வதற்கும் உள்ள இடைவெளியும் உணர முடிந்தது.    

     என் திசையை நான் அறிவேன். என்னையும் நான் அறிவேன். ஆனால் என்னை அறிந்தவரை நான் அறியேன். நான் ஆசைப்பட்ட பல நியாயமான விசயங்கள் கூட என் வசம் ஆனதில்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகமாகி இருக்கிறது. நம் ஆசைப்பட்ட விஷயங்கள் கிடைக்காத போது அதன் மதிப்பு இருமடங்காகி விடுகிறது என்பது கசப்பான உண்மையே!  

     எது நடந்தாலும் அதிலுள்ள நேர்மறை விஷயங்களை நீங்கள் பார்ப்பவராயின், நீங்கள் நரகத்தில் இருந்தாலும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.


     அந்த ஊரில் மண்பாண்டம் செய்பவனும், வைரப் பட்டறை வைத்திருப்பவனும் அருகருகே வசித்து வந்தார்கள். இருவருமே தங்கள் தொழிலை நூறு சதவிகிதம் உண்மையாய் செய்பவர்கள்.

     ஒருமுறை இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். அப்போது வைரப்பட்டறை வைத்திருப்பவன் மற்றவனைப் பார்த்து, "உன் தொழில் எப்படி போகிறது?" என்றான்.

     அவனோ அலுத்துக்கொண்டு, "நல்லாத்தான் போகிறது. ஆனாலும் உன்னைப் போல் வெள்ளையும், சொள்ளையுமாக என்னால் இருக்க்க முடிய வில்லை. எப்போதும் சேறும், சகதியுமாக இருக்கிறேன்" என்றான்.
 
     முதலாமவனோ," உனக்கு என்னத் தெரியும் வைரத்தைப் பட்டைத் தீட்டும் போது எனக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி.." என அவர்கள் வாக்கு வாதம் வழுக்க ஆரம்பித்தது.

     அப்போது அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த ஞானியிடம் சென்று  மகிழ்ச்சியான வேலைதான் எது என முறையிட்டனர். அவர் புன்னகைத்துக் கொண்டே, "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்யும் வேலையைத் தவிர வேறேதேனும் வேலை தெரியுமா?" என்று கேட்டார். இருவருமே தத்தம் வேலைகளை மட்டுமே தெரியும் என்றனர்.

     "உலகிலேயே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.

      "எங்கள் வேலைக்கே மதிப்பிலாமல் போய்விடும்!", என்று பயத்துடன் சொன்னார்கள்.

     "அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" எனக் கேட்டார் ஞானி.

     "களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல பளபளக்க செய்வதும் தான்" என்றனர் இருவரும்.

     "உலகில் குறைகள் இருப்பதனால் தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்த திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரியதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரியதாக நினைக்கிறீர்கள்." என அறிவுறுத்தினார்.

      நான் மிகவும் ரசித்த கவிதை:-
"வளர்பிறையும் 
 தேய்பிறையுமாய்
 வாழ்க்கை.
 ஆனால் 
 பிறப்பென்னவோ
 பவுர்ணமிக்குத்தான்."
     

Monday, May 2, 2011

நான்

சிக்கலே  இல்லாத 
வாழ்வில்
 சிக்கித் தவிக்கும் 
மனிதன் 
நான்!

Friday, April 29, 2011

நேர் நேர் தேமா

     வைரமுத்து சொன்னது போல "யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அந்த வகையில் தன் பணி நிமித்தம் காரணமாக எடுத்த சில பேட்டிகளை புத்தக வடிவமாக்கி இருக்கிறார் "நீயா நானா " கோபிநாத். திரையில் நாம் காணும் பேட்டி பிரபலங்களின் மனதை மட்டுமே பதிவு செய்கிறது. ஆனால், இந்த புத்தகத்தின் மூலம் பேட்டி எடுப்பவரின்  மனதையும் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு.
      பேட்டிகளை எழுத்தாக்கம் செய்யும் போது எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் வார்த்தைகளைக்  கையாண்டு இருக்கிறார். அதற்காக பேட்டி காணும் முன் ஏற்பட்ட படபடப்பு, மனதில் தோன்றிய கேள்விகள் என அற்புதமாக நம்மை அந்த இடத்திற்கே கூட்டி சென்று விடுகிறார்.

     "ஒரு சுய முன்னேற்ற நூலில் கூறிய அனைத்தும் உனக்கு ஒத்துவராது. உனக்கு என்ன தேவையோ, அதை நீ எடுத்துக் கொள்", என யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல பல்துறை சாதனையாளர்களின் பேட்டிகளின் தொகுப்பு என்ற வகையில் இது முக்கியமான படைப்பாக மனதிற்குப்படுகிறது. 


புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் கூறியுள்ளதாவது:
     அரிச்சந்திரன் நாடகம் பார்த்து காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்வார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையை அது அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்திபோல் முடிவு செய்திருக்க வேண்டும்.

     இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

     என் வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் முன்னேற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

     அவற்றை இனம் கண்டு ஆராய்கிற நுட்பத்தை, தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கிக் கொள்ளும் சிந்தனையைப் புத்தகத்தைப் படிப்பவரே கொண்டு வரவேண்டும் காந்தி கொண்டு வந்ததைப் போல. வேண்டுமானால் இந்த புத்தகம் அதற்குரிய ஆர்வத்தைத் தூண்டலாம்.

     இது சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஏற்பாடு இல்லை. அவர்கள் கடந்து வந்த பாதையில் கற்றுக் கொண்ட உத்திகளை முன்வைக்கிற முயற்சி. 

     இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெலாம் உறுதி தருவதற்கில்லை. தன்னம்பிக்கை நம்முள் இருந்து தான் பிறக்கிறது என்பதை நானும் தீவிரமாக நம்புகிறேன். என்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்த புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும்.

     எழுதியது கோபிநாத் - ஆக இருக்கட்டும்.
     படிக்கிறவர்கள் காந்தி - ஆக இருங்கள்.
     அது தான் என் வேண்டுகோள்.
நன்றியுடன்,
கோபிநாத்.

நூல் விவரம்:- 
பெயர்: நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூ. 100 /- 

Wednesday, April 27, 2011

பொம்மைப் பயணி


குழந்தையின் குழந்தையாய்
ஊரெங்கும் பயணிக்கிறது
பொம்மை

Friday, April 15, 2011

மண்ணின் மைந்தர்கள்

மண் பிரசவிப்பது என்னவோ 
மரங்களைத்தான்.
ஆனால் -
அதைக் கொன்றுக் குவிக்கும் 
நம்மைத்தான் 
"மண்ணின் மைந்தர்கள் "
என்றழைக்கிறார்கள்.

Thursday, April 14, 2011

கண்ணீர் பூக்கள்

நிறம் மாறும் 
வேதனைகளுக்கு 
நிறம் மாறா 
அர்ச்சனை 
"கண்ணீர் பூக்கள்"

Tuesday, April 5, 2011

வாழ்தல் ஒரு கலை - V

     மனிதனால் தாங்க முடியாத துயரங்களுள் ஒன்று, தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம்  என்பதும். ஏமாற்றுதலும், ஏமாறுதலும் நபர் சார்ந்த விஷயம் மட்டும் அன்று; அது பெரும்பாலும் சமய, சந்தர்ப்ப சார்ந்த விஷயமும் கூட. நாம் அலட்சியப்படுத்தும்  விஷயங்களே நம்மை ஆட்டிப்படைக்கக் கூடியவையாகக் கூடும். நாம் ஏமாற்றத்தையும், ஏமாறுதலையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், நாம் பார்வையாளனாக இருக்கும் வரையில்.

     அந்நாளில் சென்னையில் ஒரு புத்தகம் விற்கப்படுமாம் - எப்படியெல்லாம் சென்னையில் ஏமாற்றுவார்கள் என்பதை உள்ளடக்கியது. சாதாரண ஊர்களைக் காட்டிலும் சுற்றுலாத் தளங்களில் ஏமாற்று வேலைகள் அதிகம் என்பதை அறிவோம். அங்கு யாரோ தான் ஏமாற்றப்பட்டதை பகிர்ந்துக் கொண்டிருக்கும் வேலையில் நம் மனப் புத்தகம் ஒன்று குறிப்பெடுத்துக் கொள்கிறது அல்லது நாம் இவ்வாறு ஏமாற்றப்பட்டோமா என சரிப்பார்த்துக்  கொள்கிறது.

     ஆனால், நாம் நினைப்பது போல ஏமாறுபவனும், ஏமாற்றுபவனும் இரு வேறு நபர் அல்லர். ஒரு மனிதன் ஒரு நிலை வரைக்குமே ஏமாறுபவனாக இருக்கிறான். பிறகு அவனும் ஏமாற்றத் தொடங்குகிறான். ஒவ்வொருவரின் மனதிலும் இரு வேறு ஓநாய்கள் இருக்கின்றன. ஒன்று நல்லெண்ணம் கொண்டது. மற்றொன்று தீய எண்ணம் கொண்டது. எதற்குத் தீனி போடுகிறோமோ  ஆதுவே வளரும்.

  
     எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "கேள்விக்குறி" புத்தகத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட கதை :-
அவன் மூர்க்கமானவன்; தன சுயநலத்துக்காக எவரையும் ஏமாற்றக் கூடியவன். ஆனால் அவன் தந்தையோ அந்த ஊரே போற்றும் அளவுக்கு நல்லவர்; நேர்மையானவர். அவர் எவ்வளவோ முறை சொல்லியும் அவன் ஏமாற்றுவதை நிறுத்துவதாக இல்லை. கடைசியில் ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, "நான் உன்னிடம் எவ்வளவோ முறை கூறிவிட்டேன் ஆனாலும் நீ திருந்துவதாகயில்லை. இருக்கட்டும். இனி நீ ஒவ்வொரு முறை ஏமாற்றும் போதும் நம் வாசல் கதவில் ஒவ்வொரு ஆணியாக அடி. அது போதும் எனக்கு" என்றவாறு கூறிச் சென்றார்.      அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை இனி கேள்வி கேட்ப்பாரில்லை  என சுதந்திரமாக சுற்றித் திரிந்தான். சில மாதங்கள் கழித்து இரவு வீட்டுக்கு வந்தவுடன் அந்தக் கதவைப் பார்த்து அதிர்ச்சியுற்றான். காரணம், சிறிது கூட இடைவெளி இல்லாமல் அதில் ஆணி அறையப்பட்டிருந்தது. அவனுக்கு மனசு வலித்தது. ஏனோ தான் செய்த ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்கள் முன் நிழலாடின. வீறிட்டு அழத் தொடங்கினான். பிறகு தன் தந்தையிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் தான் எவருக்கும் துன்பம் அளிக்காத வண்ணம் வாழப் போவதாகவும் சத்தியம் செய்தான்.

     அதைக் கேட்ட அவன் அப்பா சிறிய புன்முறுவலுடன், "நல்லது. இனி மக்களுக்கு உன்னாலான நல்லதை செய். நீ செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும்  நம் கதவில் அறையப்பட்ட ஆணிகளை ஒவ்வொன்றாக  நீக்கிவிடு" என்றார். 

     மகன் சிறிது நிம்மதி அடையலானான். ஆனால் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல நன்மை செய்வது அவ்வளவு சுலபமாய் இல்லை. ஒவ்வொரு நாளும் அவன் தன் வீட்டுக் கதவின் முன் நின்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆயின. 

     அவனது தந்தையும் மூப்பு காரணமாக படுத்த படுக்கையானார். அன்றொரு நாள், அவன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம் வந்து தான் கதவில் அறையப்பட்ட எல்லா ஆணிகளையும் எடுத்து விட்டதாகவும், இதோ தன் கையில் இருப்பது தான் கடைசி ஆணி என்றும் காண்பித்து, தான் இப்போது நல்லவனா என தந்தையிடம் வினவினான். தந்தை புன்னகைத்துக் கொண்டே மீண்டும் கதவை சென்றுப் பார்க்குமாறு கூறினார். திரும்பி வந்த மகனிடம் என்ன தெரிந்தது எனக் கேட்டார். அதற்கு மகனோ, "கதவு முழுவதும் சிறு சிறு ஓட்டைகளாக உள்ளன" என்றான். தந்தை மென்மையாக, " நீ செய்த தவறுகள் தான் அந்த கதவில் அறையப் பட்ட ஆணிகள். நீ திருந்துவதன் மூலம் அந்த ஆணிகள் பிடுங்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் நீ அறைந்ததன் விளைவுகளான ஓட்டைகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.