Tuesday, December 11, 2012

அக்கா பாப்பா


தம்பி பாப்பாவோ
தங்கை பாப்பவோ
பிறந்த மறுகணத்தில்
அம்மா பாப்பா
அவதாரம் எடுக்கிறார்கள்
அக்கா பாப்பாக்கள்!
Thursday, December 6, 2012

அம்மாவும் என் காதலிகளும்...


சிறு வயதில்
என்னவென்றே
தெரியாமல்
நான் நடித்த நாடகத்தில்
என் மனைவியாக
நடித்த
ரசிதா
இன்றும் கனவில் வந்து
கேலி பேசுகிறாள் -
இப்போது வரை அவளிடம்
பேசியதில்லை என்று.
ஒரே தெருவில்
வசித்திருந்தாலும்
ஒருவருக்கு ஒருவர் 
பிடித்து 
இருந்தாலும்
காதல் சொல்லாமலே
விலகி சென்ற என்னை
கேள்வி கேட்டு
கனவில் துரத்திக்
கொண்டிருக்கிறாள்
தோழி காவ்யா.
என் காதலை ஏற்காமல்
நிராகரித்த கல்லூரி தோழி
லக்ஷ்மி நிதம் கனவில்
வந்து காதல் பேசுகிறாள்.
ஆனால் -
இத்தனை ஆண்டுகள்
சேர்ந்து இருப்பினும்
வார்த்தைகளால்
அன்பை பரிமாறிக்கொள்ளவில்லை
நானும் என் அம்மாவும்
கனவிலும் கூட!  


Wednesday, December 5, 2012

உதிரும் இலை


உதிரும் இலை
கூட்டுகிறது 
காற்றின் சுமையை!Friday, November 23, 2012

வீட்டின் கனவு


பின் இரவில்
ஆழ்ந்த உறக்கம்
கொண்டிருக்கிறது
என் வீடு.
துயில் கலைந்து
அழும் குழந்தையின்
அசைவு
வீட்டின் கனவாககூட இருக்கலாம்.
Saturday, November 3, 2012

குழந்தைகளின் அழகிய உலகம்புதிதாகப் பள்ளியில் 
சேர்ந்திருக்கும் 
என் மகள் 
நான் அலுவலகம் 
சென்று திரும்பிய 
ஒரு மாலைப் பொழுதில் 
ஓடி வந்து கேட்கிறாள்,
"அப்பா! இன்னிக்கு 
உங்க டீச்சர் புதுசா 
என்ன rhymes சொல்லிக் கொடுத்தாங்க" என்று.
குழந்தைகளின் உலகம்தான் 
எத்தனை அழகாய் இருக்கிறது -
அவர்களின் அழகான புரிதல்களைப் போல!Tuesday, October 23, 2012

நீ துரத்தும் வண்ணத்துப்பூச்சி


வண்ணத்துப்பூச்சியை விட அழகு
அதை நீ
பிடிக்க முயல்வது!


Saturday, October 13, 2012

புத்தகப் பிரியன்


புத்தக கடைக்குச் 
சென்றாலே 
என்னை வாங்கிவிடுகின்றன 
புத்தகங்கள்!Saturday, October 6, 2012

மறுதலிப்பின் அழகு


உன் மறுப்பும் 
அழகுதான் - குழந்தையின் 
அழுகையைப் போல!Monday, October 1, 2012

நிராகரிப்பின் வலி


என் ஒவ்வொரு
பிறந்தநாளன்றும்
என்னை அடையாளம்
தெரியாத மனிதர்களின்
உலகில் ஒளித்துக்கொள்கிறேன்.
நீ தவிர்த்த என்
பிறந்தநாளின் இனிப்பை
நான் சுவைக்காதிருக்க!

Wednesday, September 26, 2012

நரைத்திடாத காதல்


வேண்டுவதெல்லாம் 
நரைகூடும் வயதிலும் 
நரைத்திடாத காதல்தான்!
Wednesday, September 19, 2012

காதல் துரோணர்எதிர்பார்ப்பை தட்சணையாக 
பெற்றுக்கொண்டு 
வாழ்க்கையைக்
கற்றுக்கொடுப்பதால் 
காதலும் 
துரோணரே!
Friday, September 14, 2012

உதிரும் மன இறகுஉன் ஒவ்வொரு 
அடி விலகலுக்கும்  
உதிர்கிறது 
என் மனச்சிறகின் 
ஒவ்வொரு இறகு!


Saturday, September 8, 2012

காதல் நிலவு


தொலைதூரம் 
பிரிந்திருந்தாலும் 
உன்னைச் சுற்றியே 
நகர்கிறது 
என் 
காதல் நிலவு !


Tuesday, August 28, 2012

முதுமை


ஆசைகள் 
வற்றிய பின்பு 
வாழ்க்கை என்பது 
வெறும் நாள் கடத்தியே!Sunday, August 26, 2012

மதுபான கடை

     வாழ்வில் பலமுறை பயணம் செய்திருந்தாலும், வெகு சில பயணங்கள் மட்டுமே நினைவில் நிற்கும். எனக்கு அப்படி நினைவில் உள்ள பயணங்களில், சகபயணி குடிகாரர்களாய் அமைந்த பயணங்கள்தான். குடிகாரர்களுக்கும் சாதாரணனுக்கும் நூலிழை வேறுபாடுதான். தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்பவர் முன்னவர்; மனதிற்குள் புலம்புவர் பின்னவர். அதனால்தான் என்னவோ 'மதுபான கடை' படம் வெளிவருவதற்கு முன்பே என்னை வெகுவாக ஈர்த்தது.     கதையின்றி, திருப்பங்களின்றி, தீர்வுகள் எதுவும் சொல்லாமல், இது ஒரு படமா என கேள்வி எழும் அளவிற்கு அமைந்திருப்பது ஆச்சர்யத்துக்குரியது. சொல்ல வந்ததை கதைமாந்தர்கள் மற்றும் வசனங்கள் மூலமாக மட்டுமே எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது வியத்தகு தைரியம் என்றே சொல்ல வேண்டும்.


     பத்து மணிக்கு திறக்க வேண்டிய மதுபான கடையை பத்து பத்துக்கு திறக்கிற பணியாளை கேள்வி கேட்கிறவர், காவல் நிலையத்தில் பெட்டிஷன் எழுதும் மணி, பயணிகளிடம் ஆங்கிலம் பேசி ஏமாற்றி காசு கறந்து குடிப்பவர், பள்ளி மாணாக்கர்கள் பயந்து பயந்து குடிக்க முனைவது, கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டமாக குடிப்பது, தொழிலாளிகள் களைப்பை போக்க குடிக்க வருவது, காதல் தோல்வியால் ஒருவன் முதல் முதலாக குடிப்பது, பணி நிமித்தமாக துப்புரவு தொழிலாளிகள் குடிப்பது என ஒவ்வொரு கதாபாத்திரமும் குடியை ஒவ்வொரு விதமாக அணுகுவது என காட்டி இருப்பதும், அதில் எந்த இடத்திலும் எவர் சார்பிலும் கருத்து சொல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே காட்சியை கடப்பது பாராட்டுதலுக்குரியது.


     படத்திற்கு வெகுவாக பலம் சேர்ப்பது வசனங்கள். 'குடிகாரன் பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படுவான்', 'வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த bar - ரினில் நமக்கே இடம் ஏது?', 'தள்ளாட குடியும் தலை சாய்க்க மடியும்தான் இந்த பெட்டிஷன் மணிக்கு தேவை','நாம தள்ளாடற வரைக்கும்தான் இந்த கவர்மென்ட் steady - யா இருக்கும். நாம steady - ஆகிட்டா இந்த கவர்மெண்டே தள்ளாடிடும்','குடிகாரன் தனி மனிதனல்ல; சமூகம்','கஞ்சிக்கே வழி இல்லாத போது கட்டிங் கொடுக்கறவன்தான் கடவுள்' என ஒவ்வொரு வசனமும் தற்கால அரசியலையும், நிகழ்வையும் வெகுவாக பகடி செய்கின்றன. அதிலும் குறிப்பாக ராமன், அனுமன் வேடதாரிகளின் உரையாடல் கடவுள்களையும் கேலி பேசுகின்றன. இறுதியாக, துப்புரவுத் தொழிலாளியின் கேள்விகள் பதிலற்று முடியும் அந்த காட்சி இப்பொழுது வரை காதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.


     மதுபான கடை - பகடியின் உச்சம்.


Friday, August 24, 2012

நினைவின் ஊசலாட்டம்


பிரிவின் நினைவுகளோடு 
வாழ்கிறேன் 
தன்னந்ததனியாக 
ஆடிக்கொண்டிருக்கும் 
ஒரு ஊஞ்சலைப்போல.
நினைவிற்கும் 
நிதர்சனத்திற்கும் 
இடையே 
நிகழும் 
இந்த ஊசலாட்டம் 
முடியும் போது 
இரண்டில் 
எந்த இடத்திலும் 
நான் இருக்கப் போவதில்லை.Sunday, August 12, 2012

கனவுகளின் கதவுதினம் 
ஒரு முறையாவது 
என் கனவுக்குள் 
வந்துவிடுகிறாய்.
கனவில் 
உன்னை 
பின்தொடரும் போதே
மாயமாய்  
மறைந்துவிடுகிறாய்.
நம் கனவுகளின் 
கதவு எங்கே 
இருக்கிறது என்றே 
தெரியவில்லை.
நீ வெளியே செல்லும் 
என் கனவின் கதவுகளும்.
நான் உள்ளே நுழையாதிருக்கிற
உன் கனவுகளின் கதவுகளும்.

Sunday, July 29, 2012

வாழ்நாள் தனிமைப் பயணம்
நீ என்னை 
பிரிந்து செல்லும் 
அந்த நொடிப்பொழுதில் 
தலைமேல் அனிச்சையாக 
பறக்கிறது 
ஒற்றைப் பறவை.Saturday, July 21, 2012

வாழ்தல் ஒரு கலை - XI


     "நல்லா இருக்கீங்களா?", என்கிற பொதுவான விசாரிப்புகளைவிட "சாப்டீங்களா?", போன்ற விசாரிப்பில் பின் ஒளிந்திருக்கும் சகமனிதனின் பிரியத்தையே அதிகம் நேசிக்கிறேன்.

     சகமனிதனின் பசியைப் புரிந்துகொள்ளுதல் என்பது எவ்வளவு மகத்தானது! எத்தனை பேரின் பசியை இதுவரை நிராகரித்திருக்கிறோம்? புரிந்திருக்கிறோம்?


     ஒருவேளை பசியைக் கடத்துவதற்குதானே வாழ்வின் இத்தனை போராட்டங்களும்? பசியின் அவமதிப்பு தலையணை நனைக்கும் கண்ணீராக கழியும் இரவுதான் எத்தனை கொடுமையானது?

     நடுநிசியில் வீட்டினுள் நுழையும் நபரின் முகத்தைப் பார்த்தே சமையலறை நோக்கி நகரும் பாதங்களை எத்தனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தாலும் தகும்.


     ஒரு ரொட்டித் துண்டில், ஒரு கோப்பைத் தேநீரில் தன் பசியைக் கடக்கும் மனிதனின் பார்வையில்  இந்த உலகம் எப்படித் தெரியும்? இந்த உலகத்தின் மீதான அவனின் கருத்து என்னவாக இருக்கும்?

     சகமனிதர் பசியுடன் இருக்க அதை உணர்ந்து அவர் பசியாற்றுவது இறைவன் ஆசிர்வதிக்கப்பட்ட இதயம் என்பதைத் தவிர வேறென்ன?

     கல்லூரியின் இறுதி இரண்டாண்டுகள், நண்பர்களுடன் வெளியில் அறை  எடுத்துத் தங்கியிருந்தேன். தங்கியிருந்த அறையிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில்தான் உணவகமே இருந்தது. வெயில், மழை போன்ற இயற்கையின் தன்மையை கண்டுகொள்ளாமல் பசி என்ற இயற்கைத்தன்மையைதான் முக்கியமாக கருதவேண்டியதாயிற்று.

     அதற்குமுன் அறிமுகமிருந்தாலும், கல்லூரி தினங்களிலிருந்துதான் 'பசி' அறைத்தோழன் அளவுக்கு உரிமையுடன் என்னிடம்  நெருங்கியது. கையில் பணமிருந்தும் சரியான அல்லது கிடைக்கவே பெறாத உணவு என்பதுதான் பிறர் வாழ்க்கையை தரிசிக்க வைத்தது.


     அது பொங்கல் பண்டிகை சமயம். உணவகம் வைத்திருந்த அனைவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதனால், எங்கும் உணவு கிடைக்காத நிலை. அறைத் தோழர்களும் அவரவர் ஊருக்கு சென்றிருந்தனர். நான் அறையைவிட்டு எங்கும் செல்லாதிருப்பதைக் கவனித்த வீட்டின் உரிமையாளர் என்னை அழைத்து,"சாப்பிட்டியா?" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்பதைப் போல தலையசைத்தேன். என் முகத்தை சில நொடிகள் கவனித்தவர், "இவனுக்கு சாப்பாடு கொண்டு வாம்மா", எனத் தன் மனைவியிடம் சொன்னார். பிறகு என்னை நோக்கி, "நீ வெளியே எல்லாம் போய் சாப்பிட வேண்டாம்.இங்கேயே வந்துடு, என்ன ?" என்று கூறினார்.

     கல்லூரி முடிந்து வேறு இடத்திற்கு நான் வீடு பார்த்து மாறுகையில் கடைசியாக அவர் என்னிடம் சொன்னது,"அங்க புது எடத்துல ஏதாவது பிரச்சனைனா சும்மா யோசிச்சுகிட்டு நிக்காம, பெட்டியை தூக்கிட்டு இங்கேயே
வந்துடு என்ன?" என என் பதிலையும் எதிர்பாராமல் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினார்.     வீட்டில் மிஞ்சுகிற பாலை தெருவில் இருக்கும் நாய்க்கு ஊற்றும் பக்கத்து வீட்டு அக்கா, தனக்களிக்கும் உணவை குருவிக்குத் தருமாறு அடம்பிடிக்கும் குழந்தை, வீட்டு வாசலில் பிராணிகளின் தாகம் தணிக்க தண்ணீர் வைக்கும் முதியவர் என பிறர் நலன் கருதி வாழ்பவர்கள்தானே நம் உலகத்தின் பெருங்கொடை!
     சார்லி சாப்ளினிடம் அவரை இயங்க வைக்கும் உந்து சக்தி என்ன என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"பசி" என பதில் அளித்தார். அவரது படங்களை சற்றே கூர்ந்து கவனித்தீர்களேயானால் அது எவ்வளவு பெரிய உண்மை எனத் தெரிய வரும். தனது ஒவ்வொரு படங்களிலும் அவர்  நிதானித்து உண்கிற மாதிரியான காட்சி இருக்காது. மாறாக தனக்கு கிடைத்த உணவை அவசரமாக, பிறர் பிடுங்கி விடுவார்களோ போன்ற தவிப்புடனே சாப்பிடுகிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பார். 

   சிறிது யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு உயிரின் முதல் அனுபவம் பசியாகத்தானே இருக்கிறது?
   


Tuesday, July 17, 2012

குழந்தைக் கவிஞன்உன் பிரிவில் 
பிறந்த கவிஞன் நான்.
இக்குழந்தைக்குத்தான் 
எத்தனை வலி 
இப்பிரசவிப்பில்!
Saturday, July 7, 2012

காதல் தவம்


உன் பதிலுக்கு
காத்திருக்கிற
நாட்கள்
நீள்கையில்
வரத்திற்கு
தகுதியானவனா
என்ற
ஐயத்தைவிட
தவமிருக்க
தகுதியானவனா
என்ற
கேள்வியே
எழுகிறது!


Thursday, June 28, 2012

காதல் பறவை
எல்லோராலும்
நேசிக்கப்படும்
ஒருவனை
காரணமின்றி
ஒருத்தி
வெறுத்து
ஒதுக்குகிற
ரகசியத்தை
அடைகாக்கும்
காதல் பறவை!
Thursday, June 21, 2012

பிரிவின் தவிப்புபயணத்தின் நடுவில் 
அறுபட்ட செருப்புபோல 
உந்தன் பிரிவு.
அந்த இடத்திலேயே 
நின்றுவிடவும் 
முடியவில்லை.
பயணத்தை மேற்கொண்டு 
தொடரவும் 
மனமில்லை.


Friday, June 8, 2012

சருகாகும் என் காதல்சாலையில்
நீ கடந்து செல்கையில்
உன் மேல் விழும்
பூக்கள்
கேலிபேசுகின்றன
சருகாகும்
என் காதலை.Monday, June 4, 2012

கவிதைத் தோட்டம்உன் பிரிவு
அழைத்துச் செல்லும்
திசையில்
இருக்கிறது
என்
கவிதைத் தோட்டம்!Thursday, May 17, 2012

மழைத்தேடல்விளையாட்டாய்
கடலில் கால்
நனைத்துச் சென்றுவிட்டாய்.
மழையாய் மாறி
உனைத் தேடும்
கடலின் பரிதவிப்பை
நான் மட்டுமே அறிவேன்.


Tuesday, May 15, 2012

இறகின் பயணம்
காற்றின் கைப்பாவை
சிறகைப் பிரிந்த
இறகு!Friday, May 11, 2012

காதல்


எதன் பொருட்டு
வாழுதல் சுகமோ
அதன் பொருட்டு
சாவதும் சுகமே!

Thursday, May 3, 2012

தனிமை

தவிர்க்கிறாய்
தவிக்கிறேன்.
Sunday, April 29, 2012

காதல் ரயில்எதையும் எதிர்பாராமல்
ரயிலை நோக்கி கையசைக்கும்
குழந்தைகளைப்போல காதலிக்கிறேன்.
கண்டும் காணாமல்
நொடிப்பொழுதில் கடந்து
செல்கிறது
காதல் ரயில்
ஒரு அனுபவமாய்!


Thursday, April 19, 2012

காதல் ஆயுள்உன் மறுதலித்தலில் 
நீள்கிறது
நம் காதல் ஆயுள்.


Sunday, April 15, 2012

பிரிவு
பிரிவு 
எனும் ஆழிப்பேரலை 
கால் நனைத்துச் செல்கிறது.
காத்திருக்கிறது 
மற்றுமொரு ஆழிப்பேரலை 
உயிரெடுக்கவோ ?
கால் நனைக்கவோ ? 

 

Sunday, April 1, 2012

காதல் தோல்விபூக்களை நேசிக்கையில்
முட்களின் பரிசு 
காதல் தோல்வி! Wednesday, March 21, 2012

இது உங்க டைரியா பாருங்க!     புத்தகக் கடையில் சற்றே யதார்த்தமாக கண்ணில் பட்டது அந்த புத்தகம். புத்தகத்தின் தலைப்பே அதை எடுத்து ஒரு முறையேனும் புரட்டத் தோன்றும். அப்படிப் புரட்டிய போது, என்னை வசீகரித்த விஷயம் அதன் எழுத்தாளார்கள். நண்பர்கள் மூவர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளான அவர்கள், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தும் எழுத்தை கைவிடாது அதை செம்மையானா புத்தகமாகக் கொண்டுவந்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்று. ஒரு எழுத்தாளர் பதிப்பகத்தாரின் மகன் எனினும், எழுத்து நடை எந்த இடத்திலும் சோர்வாக இல்லாமல் அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கின்றனர்!

    உங்களுக்குகாக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து உதவிய நண்பர்களை நினைவு கூர்ந்தது உண்டா? உலகை திரும்பி பார்க்க வைத்த சாதனை செய்து, பின்வரும் நாட்களிலே இந்த உலகம் அதை மறந்து புறக்கணித்து அந்த வெறுமையை எதிர்கொண்டது உண்டா? இவள் நமக்கானவள் என முடிவு செய்து, அதை அவளிடம் கூறிய பின் அவளது புறக்கணிப்பு உங்களை வாழ்வில் மற்றுமொரு தளத்திற்கு அழைத்து சென்று, வாழ்வில் பின்னொரு நாளில் இனிமையான தினத்தில் அவளை சந்தித்த அனுபவம் உண்டா?

     தங்கள் தந்தை செய்து வரும் தொழிலை, தங்கள் அனுபவம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமான தருணம் நினைவிருக்கிறதா? தங்கள் கனவை வெறியோடு துரத்தி அதை அடைந்த ஆனந்தம் இருக்கிறதா? சிறு வயதில் பெற்றவர்களுடன் போராடி மீன் வளர்த்த அனுபவம் உண்டா ? சரக்கடித்துவிட்டு காதலியை பற்றி நண்பன் தங்களிடம் புலம்பியது உண்டா? ஒரு பின்தங்கிய சமுதாயம் ஒரு பெண்ணின் கல்வி ஆசையாய் மறுத்து அவளை ஒதுக்கிய சம்பவம் அறிந்தது உண்டா?  தங்களின் காதலியிடம் காதலை சொல்ல பரிதவித்து, ஆயிரமாயிரம் தயக்கங்களுடன் அவளிடம் காதலை சொன்ன அனுபவம் உண்டா?

    இதில் எந்த அனுபம் இல்லாவிடினும் இந்த புத்தகத்தை படித்து ரசிக்கலாம். எதிர்மறையான முடிவுகள் தர வாய்ப்பு இருந்தும், அத்தனை கதைகளையும் நேர்மறையாக முடித்துள்ளது பாராட்டுதலுக்குரியது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் என வகைப்படுத்த முடியாவிட்டாலும், பயணங்களில் படிக்க ஏதுவான புத்தகம்.


நூல் விவரம்:

பெயர்: இது உங்க டைரியா பாருங்க!

ஆசிரியர் : கே.பி.கார்த்திக், பு.கார்த்திகேயன், பா.சீனுவாசன்.

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

விலை: ரூ. 100 /-    

Tuesday, March 20, 2012

பின்தொடரும் நினைவு

இருளிலும்
பின்தொடரும்
நிழல்
நினைவுகள் !


Tuesday, March 6, 2012

காத்திருப்புஆள் அரவமற்ற
தெருவில்
யாருக்குக்
காத்திருக்கிறது
இந்த
தெருவிளக்கு?


Friday, February 24, 2012

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க!

     "Hi, How is your life"
    "as usual, nothing interesting"
    "Then make it interesting"

     சிறியதொரு உரையாடலில் எவ்வளவு பெரிய உண்மை ஒளிந்திருக்கிறது! வாழ்வில் பெரும்பான்மையான விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருப்பதில்லை. தெரிந்திருந்தும் நாம் அலட்சியம் செய்வதே வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணம். அப்படி நமக்கு தெரிந்தும் நாம் அலட்சியம் செய்யும் விஷயங்களை எப்படி அணுகுவது என சொல்வதே கோபிநாத்தின் "ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க!"


     புத்தகத்தின் தலைப்பே வியாபார உத்தி எனினும் அதற்கு முன்னுரையிலேயே விளக்கம் அளித்திருப்பது பாராட்டுதலுக்குரியது.  அன்பு, வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கொள்கை, லட்சியம், முனைப்பு, நேர்மறை எண்ணம், ஆழ் மன சக்தி என பல தளங்களில் விஷயங்கள் இதில் பரிமாறப்பட்டுள்ளன.


     வெற்றி, தோல்வி குறித்த வைரமுத்துவின் பேட்டியை பதிவு செய்தது குறிப்பிடத்தகுந்தது. அந்த பேட்டியில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
"வெற்றி என்பதும் தோல்வி என்பதும் உங்கள் பார்வைதான். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த வருடம் எனக்கு தேசிய விருது கிடைத்தது உங்கள் பார்வையின்படி அது எனக்கு கிடைத்த வெற்றி என்றால், அடுத்த வருடம் அது எனக்குக் கிடைக்காமல் போனால் அதன் பெயர் தோல்வி என்றாகி விடும். இது இரண்டுமே என்னைப் பற்றிய உங்கள் பார்வைதான். என்னைப் பொறுத்தவரை, வெற்றி என்பதும் தோல்வி என்பதும் இரு வேறு சம்பவங்கள். இந்த வாழ்க்கை என்பது பல சம்பவங்களால் ஆனது"    இப்படி பற்பல சம்பவங்கள் கொண்டு சொல்ல வந்த கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறார். மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை படிக்க ஏதுவாக விஷயங்களை ஒரே புத்தகத்தில் தொகுத்திருக்கிறார்.


    அவர் பாணியிலேயே சொல்வதானால் ஒன்றும் ஒன்றும் இரண்டு நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிற போதுஒரு கால்குலேட்டரைத் தேடுகிறோம். அதனால் நமக்கு கணக்கு தெரியாது என்று அர்த்தமன்று. அதுபோல இந்த புத்தகம் ஒரு கால்குலேட்டர். நமக்கு தெரிந்ததை நாமே வேகமாக புரிந்துக் கொள்ள இது எழுத்து கால்குலேட்டர்.நூல் விவரம்:-
பெயர்: ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூ. 60 /-

Friday, February 17, 2012

நிபந்தனை அற்ற அன்பு

எல்லோராலும்
மிருகங்களிடம்
அன்பு செலுத்த முடிவதில்லை.
சக மனிதர்களிடம்
செலுத்த முடியாததைப் போல!


Saturday, February 11, 2012

தொலைந்து போன பால்யம்


விற்கப்படாத 
பலூன்களில்
நிரம்பியிருக்கிறது 
தொலைந்து போன 
குழந்தைப் பருவம்.


Wednesday, February 1, 2012

வாழ்தல் ஒரு கலை - X
     உலகமயமாதலின் விளைவாக இன்று நம் கைக்குள் உலகம் வந்துவிட்டது. மறுபுறம் மற்றவர்களை தொடர்புகொள்ளும் தூரம், நேரம் போன்ற காரணிகளும் காலவதியாகிவிட்டன. நினைத்தவுடன் நினைத்த நபரை தொடர்புகொள்ளுதல் என்பது இன்று சர்வசாதாரண விஷயம். தொலைத்தொடர்பு வசதி குறைந்து இருந்த நாட்களில் ஊரில் இருப்பவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல் என்பது எவ்வளவு அலாதியானது என்பது இனி வரும் தலை முறைக்கு புரியாத/புரிய வைக்க முடியாத விஷயம். 

     இந்த தொலைபேசுதல் என்பது நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது சமீபத்திய நாட்களில் சில அனுபவங்கள் வாயிலாக புரிந்துக் கொள்ள நேர்ந்தது. எதிர்முனையில் இருப்பவரின் மனநிலையை அவரிடம் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் புரிந்துக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமான விஷயம். குறிப்பாக நண்பர்களிடம் பேசும் போது உரையாடல் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அங்கே சம்பிரதாயங்களுக்கு என்றுமே இடமில்லை. அதனால் அங்கே எதிர்முனையில் இருப்பவரின் மன நிலையை புரிந்துகொள்ளுதலில் நம் உரையாடல் தொடங்கும் விதத்தைப் பொறுத்து சில தர்மசங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.     சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். சென்னையிலிருந்து ஒரு மாற்றத்திற்காக கோயம்புத்தூரில் வேலை தேடலாம் என ஒரு வாரம் அங்கு தங்கி தேடிக் கொண்டிருந்தேன். ஒரு மாலை, என் உயிர் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்திருந்தான். நான் எடுத்தவுடனேயே, "என்ன மச்சி! எப்படி இருக்க? ஒரு வாரமா போன் - ஐயே காணோம். என்ன ஆச்சு ?" என்று ஒரு அரை நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சற்று நிதானித்து, "இல்ல டா, அப்பா இறந்துட்டாரு. எங்களுக்கெல்லாம் என்ன பண்றதுனே தெரியல. நம்ம பிரண்ட்ஸ்ட யார்கிட்டயும் சொல்லல. நீ கொஞ்சம் சொல்லிடிரியா" என்றான். என்னால்  பதில் ஏதும் பேச முடியவில்லை. அந்த ஒரு நிமிட மௌனம் என் வாழ்வின் தீராக் குற்றவுணர்வில் கொண்டு தள்ளியது. இப்படி ஒரு அனுபவம் என்றால் இதற்கு சற்றே மாறான  இன்னொரு அனுபவமும் சமீபத்தில் நிகழ்ந்தது.

      இன்னொரு நண்பன். அவன் தொலைபேசியில் எங்களை அழைப்பதே அரிது. நாங்கள் அழைத்தாலும் அவனைத் தொடர்பு கொள்ளுதல் அதைவிட அரிது. ஆனால், அந்த மாதத்தில் இந்த நிலை சற்றே உச்சத்தில் இருந்தது. அவனது தந்தை சற்றே உடல்நிலை குன்றி இருந்ததால், அவரின் தொழிலை இவன் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமின்மை மற்றும் சோர்வு காரணமாக அவனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என எண்ணி இருந்தேன். ஒரு மாதம் கழித்து என்னை அழைத்தான். "எப்படி இருக்க டா?" போன்ற வழக்கமான விசாரிப்புகளுடன் (முன் அனுபவம் காரணமாக) பொறுமையாக தொடங்கிற்று அந்த உரையாடல். பின் நான் சற்றே மகிழ்ச்சியான தொனியில் பேச அரைமணி நேரம் பேசி இருப்போம். பிறகு ஒரு வாரம் கழித்து எங்கள் (நாங்கள் மூவர் ஒரு நண்பர் குழு) நண்பன் இன்னொருவன் என்னை அழைத்தான். "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமாடா?" என்று கேட்டான். "என்னடா விஷயம்? எதை பத்தி கேக்குற?", என்று கேட்டேன். "இல்லடா, அவனோட அப்பா இறந்துட்டாராம். அதை உன்கிட்ட சொல்லலாம்னு அன்னிக்கு அவன் போன் பண்ணிருக்கான். நீ ஏதோ சந்தோசமா பேசிட்டு இருந்ததுனால உன் mood - அ கெடுக்க வேண்டாமேன்னு  அவன் சொல்லலையாண்டாம்". நான் விக்கித்து நின்றேன். 


     ஒரே அனுபவம். ஆனால் இரு விதமான படிப்பினைகள். வாழ்க்கை ஒருபோதும் கற்பித்தலை நிறுத்துவதில்லை, நாம் கற்க விரும்பா விடினும்!