Thursday, September 23, 2010

கூடல்


குழந்தையாகிறாய்
என்னை கொஞ்சச்  சொல்லியே!
பொம்மையாகிறேன்
 நீ என்னை கொஞ்சிக் கொல்லவே!

ஆன்மிகமும் அறிவியலும்

  
 
    ஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே! சமீபத்தில் நான் படித்த கட்டுரை அதை பூரணமாக நிரூபித்தது.

     நம் வாழ்வு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. அதில் நீரின் பங்கு மற்றவையை விட சற்று அதிகம். அத்தகைய நீருக்கும் நம் எண்ணங்களுக்கும் தொடர்புண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

     ஆம். ஜப்பானிய அறிஞர் ஒருவரின் ஆய்வுக்கட்டுரை அதனை நிரூபணம் செய்கிறது.

ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி, "உன்னால் தான் நான் நலமாக இருக்கிறேன். நன்றி!" எனக் கூறி, அதை உறைய வைத்து microscope - இன் வழியே பார்க்கிறார். அதன் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது. பிறகு சிறிது நீரை எடுத்து , "நீ என்னை பலவீனப்படுத்திவிட்டாய்" எனக் கூறி முடிவைப் பார்த்தால், வடிவம் மோசமாய் இருக்கிறது.

     அதன் பின்னர், நீர் உள்ள பாத்திரத்தில்  "அன்பு" என எழுதி முடிவை பார்த்தால், ஆச்சர்யம் - வடிவம் அவ்வளவு அழகாம்! அதே முடிவு அசுத்த நீரில் பார்த்தால் மிக அகோரமாய் இருந்திருகிறது.    அவர் அளித்த பேட்டியாவது, " நான் ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டது சிறிதளவு தண்ணீரே. அப்படி என்றால் நம் உடலில் உள்ள நீரின் அளவு எத்தனை, நம் சொற்களும் எண்ணங்களும் அதை எந்த அளவு பாதிக்கும்!  எனவே  நேர்மறை எண்ணம் கொண்டவராகவே இருங்கள்; அவை உங்களை வளப்படுத்தும்."  
    இதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா முக்கிய வைபோகங்களிலும் நீரை சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். பிராமணர்களில் சந்தியாவந்தனம் என்றொரு வழக்கம் உண்டு. அது அனைத்து பிராமணர்களும் பின்பற்ற
வேண்டியது. அதில், மந்திரத்தை மனதில் உச்சரித்துக்கொண்டே நீரையும் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இதை முன்னோர்கள் அறிவியல் ரீதியாக விளக்காமல் ஆன்மிக முறையாகவே கடைபிடித்து வந்துள்ளனர். இதை அவர்கள் அறியாமல் செய்யவில்லை. அவர்களுக்கு பிறகு வந்த வம்சாவளிகள் பலரும் அதன் காரணத்தை அறிய விருப்பம் இல்லாமலோ அல்லது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமலோ போனதன் விளைவு இன்று நம்மிடம் எஞ்சி இருக்கும் அறியாமை.

     இந்த ஆய்வும் (அதாவது அறிவியலும்) ஆன்மிகமும் ஒரே திசையில், ஒரே இலக்கை நோக்கிச்  செல்லும் இரு வேறு  பாதைகள் என்பதை நிரூபணம் செய்கிறது.

Sunday, September 19, 2010

எதற்காக இந்த ப்ளாக்?

நண்பர்களே,
       ஒரு ஓவியத்தை எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்கும் ஓவியனைப் போல தான் நானும் யோசித்து கொண்டிருக்கிறேன், இந்த ப்ளாக்-ஐ  எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று.

       ஒரு ப்ளாக்-ஐ தொடங்க வேண்டும் என்று நான் எண்ணிய பொழுதில் இருந்தே சில ப்ளாக் - களை வாசித்தேன்.ஆனால் பெரும்பாலும் அவை தனி மனிதனின் வாழ்கை குறிப்பு போலவே இருந்தன.

        அப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்னுடையதும் அப்படி இருக்க கூடாது என்று. ஆனாலும் அனுபவங்கள் அன்றி ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவும், புரிய வைக்கவும் முடியாது. அதனால் என் வாழ்வின் சில துளிகள் மட்டும் அங்கங்கே சாரல் போல பெய்யும்.

                                                      
         சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" போல தான் இந்த ப்ளாக்கும். 
நான் கற்ற , சந்தித்த மனிதர்கள், மேற்கொண்ட பயணங்கள், பாதித்த சம்பவங்கள், பார்த்த சினிமா,  படித்த புத்தகம் மட்டுமே...

         
         என் வாழ்கை "நதியில் விழுந்த  இலை" போல தான்.....
             வாழ்கையின் ஒரு கரை அழகாய் இருக்கிறது;
             மறுகரை அழகற்றதாய் இருக்கிறது.ஆனால்-
            அதனதன் இயல்பில் செல்வது தானே நதியின் அழகு!