Wednesday, November 2, 2011

மரோ சரித்ரா

 


     நான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். "புன்னகை மன்னன்" - தமிழ் காதல் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. காரணம் அதன் one line . தனக்கு வாழ விருப்பம் இல்லை எனும்போது விதி அவனை வாழ வைக்கும். தான் வாழ வேண்டும் என அவன் விரும்பும் போது விதி அவனை கொன்று விடும். தினத்தந்தியில் "வரலாற்றுச் சுவடுகள்" -இல் அவரது படங்கள் குறித்து வெளிவந்து கொண்டிருந்த சமயம் அவர் கூறியிருந்தார், "மரோ சரித்ரா படம் வெளிவந்த போது தற்கொலை எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. அடடா! இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்தி விட்டோமோ என்கிற குற்ற உணர்வில் நான் எடுத்ததுதான் புன்னகை மன்னன். அதனால் தான் மரோ சரித்ராவின் கிளைமாக்ஸ்- ஐ புன்னகை மன்னனின் முதல் காட்சியாக வைத்தேன். காதல் தோல்வின் முடிவு மரணம் அல்ல.அதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. காதல் போயின் சாதல் என்பதை மாற்றி காதல் போயின் காதல் என படமாக்கினேன்" என்றார்.

     அப்போதிலிருந்தே மரோ சரித்ராவை பார்க்க வேண்டும் என எனக்கு ஆசையாய் இருந்தது. ஆனால் சமீபத்தில்தான் பார்க்க முடிந்தது. என்னதான் 1978 -இல் படம் வந்திருந்தாலும் அதன் கதை என்னவோ இன்றும் பொருந்திப் போகக் கூடியதாய் இருக்கிறது. அது சரி, காதல் உள்ள வரை, காதல் எதிர்ப்புகளும் இருக்கத்தானே செய்யும். (காதல் உயிர்ப்புடன் இருப்பது என்னவோ காதல் எதிராளிகளால்தான்.)


     விசாகப்பட்டினத்தில் குடியேறிய தமிழ் குடும்பம் கமல் உடையது. அந்த வீட்டிற்கு அருகே சரிதாவின் குடும்பம் இருக்கிறது. சரிதா அதே ஊரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் பெண். வேலையை விட்டு தன் வீட்டிற்க்கு வரும் கமல், சரிதாவுடன் காதல் வயப்படுகிறார். வழக்கம் போல இருவர் குடும்பமும் அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறது. இரு குடும்பத்திற்கும் பொதுவாக இருக்கும் நண்பர் ஒருவர், "அவர்களை ஒரு வருஷம் பார்க்காம, பேசாம இருக்க சொல்லுவோம். அப்புறமும் ரெண்டு பேருக்கும்  காதல் இருந்துச்சுனா கல்யாணம் பண்ணி வைங்க" என்று ஆலோசனை சொல்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் கமல். ஆனால், இது ஒரு நல்ல சந்தர்ப்பம், இதை நாம் சரியாக உபயோகித்துக் கொண்டால் நம் காதல் கைக்கூடும் என அவரை சம்மதிக்க வைக்கிறார் சரிதா. தான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால், இருவர் வீட்டிலும் எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை ( written agreement ) தர வேண்டும் என்கிறார் கமல். இது தான் சமயம் என கமலின் தந்தை கமலை ஹைதராபாத்துக்கு வேலைக்கு அனுப்புகிறார். இடைப்பட்ட காலத்தில் சரிதாவின் பெற்றோர் அவளை மனம் மாற்ற முயல்கின்றனர்.  ஹைதராபாத்துக்கு சென்ற கமல் என்ன ஆனார்? அவர்கள் காதல் கைகூடியதா என பாலச்சந்தருக்கே உரித்தான திரைக்கதை  தான் மீதி.


     படத்தில் ஒரு காட்சியைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஓராண்டு கழித்து சரிதா வீட்டிற்கு வரும் கமல் சரளமாக  தெலுங்கின் எல்லா வட்டார மொழியிலும் பேசுவார். அதில் ஒன்று "தசவதாரம் - பல்ராம் நாயுடு" பேசும் வட்டார வழக்கு. எப்படி புன்னகை மன்னனில் ஒரே ஒரு காட்சியில் குள்ள மனிதனாக "அபூர்வ சகோதர்கள்" -க்கு முன்பரிசோதனை செய்து இருப்பாரோ  அதே மாதிரி இதிலும் செய்து இருக்கிறார். இதை முன்பரிசோதனை என சொல்வதைக் காட்டிலும் ஒரு கலைஞன் தன் திறமையின் இம்மி அளவையும் வீண் செய்யாது பயன்படுத்திக்கொள்ள முனைவதாகவே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. 

     

     இந்த படத்தை பார்த்து முடித்த போது ஒரு ரஷ்யக் கவிதையின் மொழிபெயர்ப்பு நினைவிற்கு வந்தது.
   
"அன்பே!
இன்று இரவுக்குள் நான்
சாகப் போகிறேன்.
எனக்குத் தெரியும் 
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய் 
நீ வருவாய்"
இதற்கு அந்த காதலியின் பதில்
"அன்பே!
இந்த இரவுக்குள் நீ 
சாகப்போகிறாய்.
அந்தியின் முதல் இருளாய் 
நான் வருவேன்"


      பாலச்சந்தர் பாணியிலே சொல்வதானால் மரோ சரித்ரா - "இந்தப் புனிதப்  பயணம் இன்னும் ஒரு சரித்திரம்."

3 comments:

தமிழ் உதயம் said...

மரோ சரித்ரா பார்க்கவில்லை. அதன் இந்தி வடிவமான ஏக் துஜே கேலியே பார்த்தேன். ஒரு காதலின் மரணம் கொடூரமானது.

G.M Balasubramaniam said...

குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களும் நானும் பார்த்து ரசித்தது. அந்தக் காலத்தில் நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்தபோது பாலசந்தரே எனக்கு இன்ஸ்பிரேஷன்.

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!
ரஷ்யக்கவிதை கிளாஸ்.
இனி மரோசரித்ரா நினைவுக்கு வரும் போது..
ரஷ்யக்கவிதையும் நினைவுக்கு வரும்...
நாகசுப்ரமணியனும் வருவார்கள்.

உங்கள் கவிதைகள்... என் தலைக்களிமண்ணை பிசைகிறது.

Post a Comment