Sunday, October 17, 2010

அங்கீகரிக்கப்படாத பெண்மை


      இந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது  இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே! தாய்மை அடைகிற போது தான் அவளைக்  கொண்டாட ஆரம்பிக்க வேண்டுமா? ஏன் அப்போது மட்டும் அவளை கொண்டாட வேண்டும்? அப்படி கொண்டாடமல் விட்டால், இந்த உலகம் பழிக்குமே. அதனால் தானோ என்னவோ ஒருவன் தாய்மையை மட்டுமாவது மதிக்கிறான்.

     ஆனால் ஒரு பெண்ணுக்குள் ஆரம்பம் முதலே தாய்மை நிரம்பி வழிந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒரு பெண் குழந்தை பொம்மையை குழந்தை போல பாவித்து அதற்கு உணவு அளிப்பதும், தாலாட்டி உறங்க வைப்பதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் போகப் போக அதற்குள்ளும் ஆணாதிக்கத்தின் பாதிப்புக்கள் வந்து விடுகின்றன.
காலையில் வீட்டு வாசலில் இருக்கும் செய்தித்தாளை அப்பாவிடமும், பாலை அம்மாவிடமும் யாரும் கற்பிக்காமலே ஒரு குழந்தை எப்படி கொடுக்கிறது?

     இதை எழுதும் நான் ஒன்றும் கடைந்து எடுத்த யோக்கியன் அல்ல, சில ஆண்டுகள் முன் வரை. சில சம்பவங்கள், சில வாசிப்புக்கள் என்னையும் புத்தன் ஆக்கியது. என்ன அந்த புத்தன் ஞானத்தை தேடி வெளியே போனான். இந்த புத்தனுக்கு எந்த முயற்சியும் இல்லாமல் சற்று சுலபமாகவே கிடைத்தது.


     பெண்களின் பெருந்தன்மையால் தான் இங்கே பல ஆண்கள் தண்டிக்கப்படாமல் நிம்மதியாக வாழ முடிகிறது. ஒரு பெண்ணோட தியாகத்துக்கு முன்னாடி, ஆண்களோட வலிமை எல்லாம் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுகிறது.



      அது ஒரு மதியப்பொழுது. சென்னை தன் இயல்பு மாறாமல் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. சூரியன் தன் பங்குக்கு வெம்மையை கக்கி மக்களை இம்சித்துக் கொண்டிருந்தது. பேருந்தின் வருகைக்காக நான் சைதாபேட்டையில் நின்றுக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு சிறுவனும், சிறுமியும் பாக்கெட் தண்ணீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த சிறுவன் பேருந்து ஓட்டத்தில் இருக்கும் போதே தானும் ஓடி விற்றுக்கொண்டிருந்தான். ஆனால், அந்த சிறுமியால் ஓடி விற்க முடியவில்லை. அதனால் நின்றுக்கொண்டிருந்த பேருந்தில் எல்லாம் ஏறி விற்றுக்கொண்டிருந்தாள். தன் விற்பனையை முடித்தவுடன் அந்த சிறுமி இருக்கிற பேருந்தில் ஏறி அந்த சிறுவனும் விற்க முயன்றான். அந்த பேருந்தில் உள்ள ஒரு பயணி, அந்த சிறுமியிடம் தான் தண்ணீர் வாங்கினார். கிழே இறங்கியவுடன் அந்த சிறுவன், " ஏய்! இதோ பாரு. ஒழுங்கா மருவாதையா அங்க போய்டு. இல்ல மூஞ்சி முகர எல்லாம் கிழிச்சிடுவேன்". அந்த சிறுமி என்ன செய்வதென்றே தெரியாமல், அழுதால் ஆறுதல் கூட சொல்ல ஆள் இல்லாமையால் விழித்துக்கொண்டிருந்தாள்.

     ஆணாதிக்கம் என்பது ஒரு பிறவிக் குணமா?  இயற்கை ஆணுக்கு அளித்த ஆயுதமா? இல்லை இயற்கையை வென்ற ஆணின் குணாதிசயமா? இப்படி என்னுள் விடை கிடைக்காத கேள்விகள் ஏராளம். யோசித்துக் கொண்டிருக்கயிலேயே நம் இதிகாசங்கள் நினைவுக்கு வந்தன. ஆண்களோட பழி சுமத்துகிற மனோபாவத்துக்கு விடைத் தேடி பயணிக்க வேண்டும்  என்றால் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அசுரன்கிட்ட சிக்கிய மனைவியை பார்த்ததும் மகிழ்ச்சி கொள்ளாமல் சந்தேகப்பட்ட ராமனும்  , ஆண்கள் சூதாடிய போது ஏதோ மண்ணை வைத்து விளையாடியதோடு மட்டுமல்லாமல் மனைவியையும் வைத்து விளையாடிய பாண்டவர்களும் தானே நம் முன்னோர்கள்? விபச்சாரம் செய்ததாக ஒரு பெண்ணை கல்லெறிந்து அடித்துக் கொல்ல முயற்சிக்கும்  போது ஏசுநாதர் வந்து தடுத்தாரே .. அப்போ அவர், " உங்களில் தவறு செய்யாதவர்கள் கல் எறியுங்கள்" என்றதும் ஆண்கள் எல்லாம் மௌனமானார்களே. ஆணின் பங்கு இல்லாமல் இங்கே விபச்சாரம் நடக்காது என்கிற உண்மை தெரியாதவர்கள் எவரும் இல்லை. அன்னை தெரெசா கொல்கத்தாவில் அறக்கட்டளை தொடங்கிய போது அதை அவதூறாக பேசியவர்கள் தானே நம் பாட்டனார்கள்.


      எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு முறை விலைமாதுக்களை பேட்டி எடுக்க சென்றிருந்தார். அவர்களில் எவரும் தன் வாடிக்கையாளர்களை குறை கூறுவதில்லையாம்! எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் ஒருவர் தான் ஒரு கதை எழுதி இருப்பதாகவும், அதற்கு அவர் பரிந்துரை எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். முதல் வரியை படித்த சிங்கம் தாள்களை தூக்கி எறிந்து விட்டு கர்ஜ்ஜித்ததாம், " என்னடா எழுதி இருக்கற? ஒரு ஊரில் ஒரு பரத்தை இருந்தாள் என்று.. அதை அப்படி எழுதக் கூடாது. ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்; பல ஆண்கள் இருந்தார்கள். அதனால் அவள் பரத்தை ஆக்கப்பட்டாள் என்று" (எவ்வளவு உண்மை!- ஏதோ ஒரு இதழில் இந்த செய்தியை    படித்தேன்).



      ".......மவனே", எல்லா மொழிகளிலும் உள்ள உச்சபச்ச கெட்டவார்த்தை ஒருவனின்/ஒருவளின் தாயை மற்றும் சகோதரியை பழிப்பதாகவே உள்ளது. "இப்பேர்பட்ட புள்ளைய பெத்ததுக்கு அவன பெத்தவள திட்டாம வேற என்ன செய்யறது?" என்று நியாயம் வேறு! அவனைப் பெற்று எடுப்பதில் ஆணுக்கும் சரி பாதி பங்கு இருக்கிறதே. ஏன் அவனைத் திட்ட வார்த்தைகள் ஏதும்  இல்லாமல் போயிற்று?

      "அயலவர் ஒருவர் உறவினர் ஆனார். உறவினர்கள் எல்லாம் அயலவர் ஆனார்கள்". ஒரு பெண்ணின் திருமணத்தையும் அவளின் வலிகளையும் நறுக்கென்று பதிவு செய்யும் வரிகள். திருமணதிற்குப் பின் தங்களின் தோழிகளுடன் பேசக் கூட அனுமதி பெரும் அவலம் இன்னும் நீடிப்பது கேவலமே. அந்த வீட்டில் இரவு சப்பாத்தி செய்வதாக வைத்துக்  கொள்வோம். அந்த பெண்ணுக்கு பிடித்தது xxxx . ஆனால் அந்த குடும்பத்தில் அது செய்யும் வழக்கம் இல்லை என்றால், முடிவு அவள் அதை தியாகம் செய்வது தான். இந்த உலகம் பெரிதும் புரிந்து கொள்ளப்படாமல் போன விஷயம் திருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு பெண்ணிற்கு ஏற்படும் தனிமையும், வெறுமையுமே. ஒரு பெண்ணால் எந்த ஒரு பிரச்சனையையும் சுலபமாக சமாளித்து விட முடியும். ஆண்களையே சமாளிப்பவர்கள் ஆயிற்றே!

     ஐந்து வருடங்களுக்கு முன் நான் படித்த ஒரு கதை. ஒரு பெண்ணின் தினசரி  வாழ்கையை  மையமாகக் கொண்டது. அவன் பிரபல தனியார் துறையில் மேல் பதவியில் இருப்பவன். தான் மட்டும் இந்த குடும்பத்தை காப்பாற்ற சிரமப்படுகிறோமே தன் மனைவி மட்டும் வீட்டில் சுகமாக இருக்கிறாளே என்று கடுப்பாகிறான். அன்றிரவு," சாமி! தயவு செஞ்சு என்ன என் மனைவியாகவும், அவளை நானாகவும் மாற்றிவிடேன்.." என்று வேண்டுகிறான். கடவுளும் அவ்வண்ணமே அருள் புரிகிறார். மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்குகிறான். மறுநாள், "ஏய்! என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க? எழுந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணு." என்கிறாள் கணவனாக மாறிய மனைவி. பல் தேய்த்து, வீடு வாசல் கூட்டி, சிற்றுண்டி தயாரித்து, அனைவருக்கும் மதிய உணவு தயார் செய்து வழி அனுப்பி வைத்து விட்டு குளிக்க செல்கிறாள். வெளிய வந்தவுடன் தான் ஞாபகம் வருகிறது அந்த மாதம் கட்ட வேண்டிய பில்கள் பற்றி. சிற்றுண்டி கூட உண்ணாமல் அதனதன் அலுவலகங்களுக்கு சென்று பில்களை கட்டி வரும் வழியிலே பள்ளிக்குச் சென்ற பிள்ளையை அழைத்து வந்து, அதனுடன்  மல்லுக்கட்டி உணவூட்டி, உறங்க வைத்து தானும் சாப்பிடுகிறாள். பிறகு துணிகளை துவைத்து, குழந்தை எழுந்தவுடன் அதை வீட்டுப்  பாடங்கள் எழுத வைத்துக் கொண்டிருக்கும் போதே அலுவலகம் விட்டு கணவர் வந்து விடுகிறார். அவருக்கு காபி கொடுத்து விட்டு இரவு உணவு தயார் செய்கிறாள். அனைவரும் உணவருந்திய பின்பு குழந்தையை தூங்க வைத்து, பாத்திரம் தேய்த்து விட்டு பிழிந்த சக்கையாக கட்டிலில் வந்து படுக்கும் போது கணவரை திருப்தி படுத்த வேண்டிய சூழ்நிலை. இறுதியில் எல்லோரும் உறங்கிய பின்பு கட்டிலுக்கு அடியில் சென்று மீண்டும் கடவுளை வேண்டுகிறான், "சாமி! இப்ப புரியுது இந்த பொம்பளைங்களோட கஷ்டம். மறுபடியும் என்ன ஆம்பளயாவே மாத்திடு, ப்ளீஸ்"என்கிறான். அவன் முன் தோன்றிய கடவுள் சிரித்துக்கொண்டே," மன்னித்து விடுப்பா. இன்னும் பத்து மாசம் நீ பொறுத்து இருக்க வேண்டும். ஏன் என்றால் நீ இப்பொழுது    ஒரு குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாய்". (எப்பூடி!)

       இது ஒரு புனைக் கதையாக இருக்கலாம். ஆனால் அது சொல்ல வரும் கருத்து வலிமையானது. சில பேர்கள் கதையை கதையாக மட்டுமே பார்ப்பார்கள். அவர்களுக்காக ஒரு உண்மைக் கதை.(ஆனந்த விகடனில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்தது). அவள் ஒரு கிராமத்துப் பைங்கிளி. வழக்கம் போல ஒருவன் காதல் என்கிற போர்வையில் அவளை அணுகி இருக்கிறான். அவளும் பிடிக்கொடுக்காமலே இருந்திருக்கிறாள். எப்படியோ அவனும் அவளை தன் வலையில் சிக்க வைத்துவிடுகிறான். அவள் பேரழகி என்றும், அவளை தான் சினிமாவில் அறிமுகம் செய்ய போவதாகவும் மாய வார்த்தைகள் சொல்லி சென்னைக்கு அழைத்து இருக்கிறான். அவளும் வெகுளியாக அவனை நம்பி தன் (வாழ்நாள்) பயணத்தை அவனுடன் சென்னை நோக்கி துவங்கி இருக்கிறாள். ரயிலில் உள்ள கழிவறை ஒன்றில் அவளை அனுபவித்து  முடித்தவுடன், அவளை உறங்க வைத்து நடுவிலேயே இறங்கிச் சென்று விடுகிறான். அசதியாக இருந்தவள் சென்னை வந்தவுடன்தான் முழித்து இருக்கிறாள். தன் கிராமத்தை விட்டு வேறு எங்கும் செல்லாத அவள் துக்கத்துடன் ரயில் நிலையத்திலேயே அன்று முழுவதும் இருந்திருக்கிறாள். அவளை வெகு நேரம் கவனித்து வந்த மத்திம வயதுக்காரர், அவளை நெருங்கி விசாரிக்கிறார். பிறகு அவளுக்கு (மயக்க மருந்து கலந்த) உணவு வாங்கித் தந்து  தன் பசியை தீர்த்துக் கொள்கிறான். இப்படி அவள் கிட்டத்தட்ட 45 ஆண்களின் பசிக்கு உணவாகி இருக்கிறாள். ( தன் வேதனையை தன் தந்தை வயதில் இருக்கும் ஒருவனிடம் சொல்லி அழுதிருக்கிறாள். அவனும் அப்படியே). கடைசியில் சுயநிலை மறந்த நிலையில் ஏதோ ஒரு இடுகாட்டில் வந்து தஞ்சம் அடைந்து இருக்கிறாள்.(பிணமான ஆண்கள்  மட்டுமே ஒரு பெண் நம்ப தகுதியானவை!). அங்கேயே வசித்து வரும் ஒரு ஆண்மகன் தான் அவளை சோறிட்டு காத்திருக்கிறான்.(அவன் அளித்த பேட்டி தான் வெளிவந்தது).  சில மாதங்கள் கழித்து அவளும் இந்த பாவப் பட்ட உலகை விட்டு சுதந்திரம் வாங்கிச சென்று விட்டாள். இந்த சம்பவம் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. (இங்கே வயது பல ஆண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது). இந்த கதையா நம்ப மறுக்கிறவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
                                   http://www.youtube.com/watch?v=k5GfFBkLGi4




    ஒரு ஆண் தன் காதல் தோல்வி அடைந்தால், தம், தண்ணி (எல்லோரும் அல்ல) அடித்து தன் வேதனையை வெளிப்படுத்தி விடுவான். ஆனால் ஒரு பெண் காதல் தோல்வியை  எப்படி எதிர் கொள்வாள்? நான் வெகு நாளாய் துரத்திய கேள்வி. பதில் "பூ" படம் மூலமாக கிடைத்தது. என்னை மிகவும் பாதித்த படம். தனக்காக இல்லாவிட்டாலும்  தன் குடும்பதுக்காகவாது ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகிறாள், தனக்கு விருப்பம் இல்லாவிடிலும். "மௌன ராகம்" ஒரு பெண்ணின் பார்வையில் நகர்கிற அற்புதமான படைப்பு. மாப்பிள்ளை நல்ல சம்பாதிச்சா போதும்னு நினைக்கிற பக்கா நடுத்தர வர்க்க குடும்பம். ஆனால் திருமணம் செய்து கொள்ள மன நிலையில்  இல்லாத மகள். திருமணம் முடிந்த இரவுப் பொழுதில், வீட்டுக் கொள்ளைப் புறத்தில் அமர்ந்து இருக்கிற ரேவதியை அவள் அம்மா மாப்பிள்ளை காத்திருப்பதாக சொல்லும் போது, "அம்மா ப்ளீஸ் மா, இது வேண்டாம் மா. இதே ரெண்டு நாளைக்கு முன்னாடி இதே காரியத்துக்கு வேற யாரோவதோடு அனுபிச்சி இருப்பியா?" என்று சொல்லும் இடம் ஒட்டு மொத்த பெண் வர்கத்தின் நியாமும் , இத்தனை ஆண்டுகால  அடிமைத்தனத்தின் வலிகளும் ஒரே ஒரு கேள்வியாய்!

      புத்தகம் வாசித்தல் எனக்கு மிகவும் பிடித்தமானதொரு விஷயம். ஆனால் ஒரே ஒரு புத்தகம் படிக்க முடியாமால் தவிர்த்து வருகிறேன். அது அஞ்சனா தேவ் எழுதிய விகடன் பதிப்பகத்தின் "கதவுகளுக்கு பின்னே கண்ணீர் பதிவுகள்". இந்தியா முழுவதுமாக பயணித்து பல பெண்களின் வாழ்கைத் தொகுப்பே இந்த புத்தகம். என் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கிறது ஒவ்வொரு சம்பவுமும்! கரு கலைப்பு செய்வதற்காக தன் மனைவின் வயிற்றில் உட்கார்ந்து குதித்த கணவன் ....... இப்படி பலப்பல அதிச்சிகள். அந்த புத்தகம் என் கண்ணில் பட்டாலே ஒருவித மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறேன். "நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்" என்று இன்னொரு புத்தகம். வெவ்வேறு நாடுகளில் பெண்களை மையமாக வைத்து வெளியான படங்களின் தொகுப்பு. ஏதோ நம் நாட்டில் தான் இப்படி என்றால், அயல் நாடுகளில் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு, சமீபத்தில் ஆப்கானில் தன் கணவனால் மூக்கறுக்கப்பட்ட பெண்ணின் கதை.
  
     கடந்த வருடம் நடந்த ஈழப் போரில் நம் அரசு மௌனம்காத்தே நாட்களை ராஜதந்திரமாக நகர்த்தியது. அப்போது தமிழ் திரை உலகம் நடத்திய கண்டன பேரணியில் எல்லோரும் பட்டும் படாமல் பேசிக்கொண்டிருக்க கவிஞர் தாமரை (தமிழச்சி!) பேசிய பேச்சு!!!! விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு தைரியம்!!!. கீழே  உள்ள உரலியை  சொடுக்கவும், கவிஞரின் ஆவேசப் பேச்சைக் காண..


     நம் நாட்டில் ஹாக்கிக்கு கூட மதிப்பு இல்லை. கிரிக்கெட்டுக்கு தான் கிராக்கி. ஆனால் மகளிர் கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ.4000 ஒரு நாள் போட்டிக்கும், ரூ.7000 டெஸ்ட் போட்டிக்கும்!

      "பெண் ஏன் அடிமை ஆனாள்?" என்ற கருத்தையே ஒரு ஆண் (தந்தை பெரியார்) எழுதிய நிலையில் தான்  நாம் இருந்திருக்கிறோம். ஆனால், அதே கருத்தை ஒரு பெண் எழுதி இருந்தால் இன்னும் சிறப்புக்குரியதாய் அமைந்து இருக்கும்.

     ஒரு மரத்தை நாம் அப்படியே ஏ ற்றுக்கொள்வதே இல்லை. அதை வேலைப் பாடுகள் கொண்ட நாற்காலியாகவோ, மேசையாகவோ இருப்பதைத் தான் விரும்புகிறோம். நாம் ஒரு விஷயத்தை இயல்பாக பார்க்க பழகவில்லையோ? ஆனால் பெண் என்பவள் அவள் பெருமையை உணராத குருட்டு மனிதர்களுக்கும் கைத்தடியாக வாழ்பவள்!!!

 ( 1091 - women help line. Avail it )    

11 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Really a great article !
Hats off !

Subeeshkumar S said...

Hi friend this is an awesome article i like it very much but the thing you forget is you are a men too.I will accept all your comments as a man but at the same time i object few of them as man.

james appollo said...

fulla padichen....i like dis line a lot...very meaningful..பெண்களின் பெருந்தன்மையால் தான் இங்கே பல ஆண்கள் தண்டிக்கப்படாமல் நிம்மதியாக வாழ முடிகிறது....nice topic 2 think...carry on...

Nithya said...

You present here a very good article and every human being have to read this and try to understand the facts of women. This is the first time , i read this kind of article and thanks a lot to make my time very wonderful and feel good while reading.

நிலாமகள் said...

அடிபட்ட குழந்தை, 'ஐயோ வலிக்குதா' என்ற பரிவான குரல் எழும்பிய மறுநொடி கேவியழத் தொடங்குவது போலிருக்கிறது தங்கள் பதிவைப் படித்த மறுநொடி...

இராஜராஜேஸ்வரி said...

பெண் என்பவள் அவள் பெருமையை உணராத குருட்டு மனிதர்களுக்கும் கைத்தடியாக வாழ்பவள்!!!
மறுக்கமுடியாத உண்மை.

கீதமஞ்சரி said...

பெண்ணைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும் வேண்டாம், காலின் கீழே போட்டு மிதிக்கவும் வேண்டாம். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சகமனுஷியாகப் பாவித்தாலே போதுமானது.

ஆற்றாமைகளை நயம்பட உரைத்துள்ளீர்கள். அதற்காக பெண்குலத்தின் சார்பாக நன்றிகள் பல.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமை. அற்புதமான கருத்துகள்.. பெண்ணின் வலிகள் இன்னும் பல வடிவில் , பல இடங்களில்..எத்தனைதான் முன்னேறினாலுமே..

Sri Saravana said...

அருமையான பதிவு... கூகிள் இமேஜ் சர்ச் மூலமாதான் இந்த ப்ளாக்ஐ கண்டேன்.. நல்ல பதிவு நன்றி...

dr.tj vadivukkarasi said...

very nice article." to dominate" is not only in a male s mind ..it is also in a female s mind.this is called patriarchy..man-woman,woman-woman,man-man,man-animals and plants...the domination is endless.femininity is diferent from biological femalehood. not all women are loving..not all men are dominating. but femininity is always a way of surrender and love and masculinity is a way of domination and success(worldly). today s need is to bring femininity to all men and women...a woman can be worser than a man when her security is questioned..as in mother in lawism.. so today the world needs adoration for femininity..not for females(either males).
your writing is very sensitive and melting.

அனைவருக்கும் அன்பு  said...

நாம் சேர்ந்திருந்த

இரவுகளில்

வானம் கடலானது

நிலவு ஓடமானது

நாம் அதில் நீண்டநேரம்

பயணித்து கொண்டிருந்தோம் ...........





























பெண்மையின் வலி உணர்ந்தமைக்கு என் மகிழ்ச்சியை வெளிபடுதுகிறேன்

இதை ஒரு ஆணின் மனதில் இருந்து வந்தது இரட்டிப்பு மகிழ்வை தருகிறது

Post a Comment