Thursday, August 8, 2019

சிலுவையின் எடை [சிறுகதை]

     9 மணிக்கு அப்பள்ளியின் நிறுத்தத்திற்கு வரவேண்டிய 24A  பேருந்து ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்துவிட்டிருந்தது. பள்ளி ஆரம்பிப்பது 9.15 என்பதனால் அதற்கு முன்னாள் 8 மணிக்கு வருகிற 24B - யில் ஒருசாரார்  மாணவர்களும், 9 மணி 24A -யில் மறுசாராரும் வருவர் - பஸ் பாஸ் உபயம். இதற்கு இடைப்பட்ட நேரத்திற்குள் வருகிற மௌஸல் பேருந்திலும் , இதர தனியார் டவுன் பேருந்துகளிலும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் வருவர்.

     24-A பேருந்தில் வரக்கூடிய ஏழாம் வகுப்பு 'அ' பிரிவு மாணவர்களுக்கு அந்த இன்ப அதிர்ச்சியை உண்மைதானா என நம்புவதற்கே சில மணித்துளிகள் தேவைப்பட்டன. காரணம் மாதவன். அப்பள்ளியில் எப்போதும் எக்காலத்திலும் தரப்படாத ஒரு விருதிற்காக அவன் மா-தவம் புரிந்துக்கொண்டிருந்தான். தனது நூறு சதவிகித வருகைப் பதிவின் மூலம் அவ்விருதை தனக்கு வழங்க வைக்க அப்பள்ளியை நிர்பந்திக்க முடியுமென தீர்க்கமாக நம்பினான். அன்று அவன் பள்ளிக்கு வரவில்லை.

     9 மணி வண்டியில் வந்த சுரேந்தர் மிக வேகமாக வகுப்பறைக்கு ஓடி, "டேய்!!! இன்னிக்கு மாதவன் A வண்டில வரலடா" என அனந்தக் கூத்தாடினான். அதைக் கேட்ட அனைவருக்கும் ஆச்சர்யம். காரணம் அவன் வரலாறு அப்படி. 

     ஒரு சமயம் தனக்கு காய்ச்சல் அதிகரித்த போதிலும் விடாப்பிடியாக பள்ளிக்கு வந்ததும், மறுசமயம் கடைசிப் பேருந்தை தவறவிட்டு பள்ளி அசெம்பிளி முடிந்து பத்து நிமிடம் தாமதமாக வந்த காரணத்தினால் வகுப்பாசிரியர் அவனுக்கு absent  போட்டுவிட அவரிடம் கண்ணீர் மல்க கெஞ்சிக் கூத்தாடி அதை மாற்றிக் காட்டியவனவன். 

     அவன் வராதது கிட்டத்தட்ட அனைத்து ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும் காற்றின் வழியாக பரவியிருந்தது. பள்ளி அசெம்பிளி முடிந்தவுடன் எல்லோரும் கலைந்து சென்ற அடுத்த இரண்டாவது நிமிடம் அவன் மூச்சிரைக்க பள்ளியினுள் நுழைந்தான். தலைமை ஆசிரியரைச் சந்தித்து அவரிடம் பிரம்பால் காணிக்கையை வாங்கிக் கொண்டு அழுது வீங்கிய முகத்தோடு வகுப்பறைக்குள் நுழைந்தான். 

     "என்னடா மாதவா!!! கடைசில வந்துட்ட? வரமாட்டன்லாம் நாங்களாம் நெனச்சுக்கிட்டு இருந்தோம்"-னு சரவணன் சொல்லவும், "நாமெல்லாம் வசமா மாட்டிக்கிட்டோம்டா" என்றானவன்.

    "என்னடா சொல்ற?" னு பக்கத்திலிருந்த அன்பரசன் கேட்கவும், மாதவன்,"பத்தாம் கிளாஸ் பப்ளிக் எக்ஸாம்-ல நம்ம ஸ்கூல்ல எல்லாரும் பாஸ் பண்ணிட்டாங்கன்னு நேத்து prayer முடிஞ்ச உடனே லீவு விட்டுட்டாங்கனு நாம சாயந்திரம் வரைக்கும் கார்த்திகேயன் வீட்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோம்ல? அது எங்கப்பாக்கு தெரிஞ்சுடுச்சுடா"

     "அவருக்கு எப்படிடா தெரிஞ்சுச்சு?"-னு ஆல்பர்ட் கேட்க, "ஆபீஸ் முடிஞ்சு என்னை கூப்பிட்டு போக பஸ் ஸ்டாண்டுக்கு நேத்து எங்கப்பா வந்துருக்காரு. நான் எப்பவும் வர டவுன் வண்டில வராம வேற வண்டில வரவும் என்னனு கேட்டாரு. நானும் எப்படியும் சமாளிச்சடலாம்னு  - வர வழில ஊஞ்சவேலாம்பட்டில பைல இருந்து காசெடுக்கறப்ப கை தவறி அது கீழ உருண்டு விழுந்துடுச்சு. அதை எறங்கி எடுக்கறதுக்குள்ள பஸ் போயிடுச்சு. அதனாலதான் வேற வண்டில வந்தேன்னு" சொன்னேன். "அமைதியா கேட்டுட்டு இருந்தவரு - சரி, வா வீட்டுக்கு போலாம்னு - வண்டில ஏற  சொன்னாரு. வீட்டுக்கு போன உடனே சப்புன்னு அறைஞ்சு - ஒழுங்கு மரியாதையா என்ன நடந்தது-னு சொல்லுனாரு. நானும் எல்லாத்தையும் சொல்லிட்டேன்டா. எல்லாத்தையும் கேட்டவரு - ஸ்கூலுக்கு போங்கடான்னா எல்லாரும் கட் அடிச்சுட்டு ஊரை  சுத்திகிட்டு திரியறீங்களா ? வரேன், நாளைக்கே வந்து அந்த ஒட்டு மொத்த gang - யம் உங்க ஹெட் மாஸ்டர்ட்ட மாட்டிவுடறேன்னு - சொன்னாருடா" னு அழுதான்.

     "டேய், நாம எங்கடா ஸ்கூல்ல கட் அடிச்சோம்? லீவுலடா வுட்டாங்க ?- னு சுரேந்தர் மாதவன்ட  கேட்க, அவனோ "தெரியலடா. எங்கப்பா அப்படிதான் சொன்னாரு"னு இன்னும் அழுதான்.

    "மயிரு!!! இவன் சொன்ன பொய்க்கு எனக்கே இவன ரெண்டு அப்பு அப்பலாம்னு தோணுது, அவருக்கு தோணிருக்காதா?"-னு பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேஷ் தனது கையை ஓங்க அவனை அடக்கி அமர்த்தினார்கள்.

     "சரி! இப்ப உங்கப்பா எங்க? வந்துருக்காரா? - னு நிதானமாக விசாரித்தான் சரவணன். "இல்லடா, அவருக்கு காலைல duty. அதை முடிச்சுட்டு மதியானத்துக்கு மேல வரேன்னு சொல்லிருக்காரு.

     இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே முருகவேள் சார் வகுப்பறைக்குள் நுழைந்தார். தினசரி அலுவல்களான வருகைப்பதிவை சரிபார்த்து, கரும்பலகையில் தேதி மற்றும் இன்னபிற குறிப்புகளை சரி செய்தவர், யாருக்கும் விளங்காத அவரது ஆங்கிலத்தில் பாடத்தை ஆரம்பித்தார்.

    எல்லோரும் அவனை மிரட்டிக் கொண்டிருந்தனரே தவிர அவர்கள் அனைவரின்  சப்த நாடிகளும் ஒடுங்கித்தான் போயிருந்தன. ஒரே காரணம் அப்பள்ளி.

     A.நாகூர் என்பது அப்பள்ளியின் பரவலான பெயர். ஆனால் அதன் உண்மைப் பெயரோ "மத்திய மேல்நிலைப் பள்ளி" - யாரும் அறியாதது. A.நாகூர் என்பது அப்பள்ளி இருக்கும் கிராமத்தின் பெயர். டவுனிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அப்பள்ளி அதன் கண்டிப்புக்கு பெயர் போனது. கண்டிப்பென்றால் எல்லாவற்றிலும். எல்லாவற்றிலுமென்பது எல்லாமும்தான். அதில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உட்பட. 

     சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்னதாகவே தொடங்கப்பட்டது அப்பள்ளி. அரசின் மானியம் சார்ந்து இயங்குவது. எனினும் அதன் கண்டிப்பு ராணுவ ஒழுங்குக்கு நிகரானது.

     காலை மிகச்சரியாக 9.15-க்கு தொடங்கப்படும் அசெம்பிளி. அதற்கு முன்பாக - வாரம் ஓர் வகுப்பு - என்கிற வீதம் அசெம்பிளி நடக்கும் மைதானத்தை சுத்தம் செய்யும் அட்டவணை, அதில் பங்கேற்கும் ஒழுங்கு குலையாத அணிவகுப்பு, எப்போதும் நிலவும் மயான அமைதி, பள்ளிக்குள் யாரும் நடந்து செல்லாமல் மென் ஓட்டத்துடன் செல்வது (jogging) - அதிலும் குறிப்பாக இருவரிருவராக செல்வது, ஏனைய பள்ளிகளைப் போலல்லாது காலை, மதியம் இடைவேளைகளின் போது விளையாட்டுகளை அனுமதிக்காதது, ஆறாம் வகுப்பு முதலே முழு கால்சட்டை, வெவ்வேறு இடங்களில் சீருடை வாங்க நேர்ந்தால் அதன் வாயிலாக நிற வேறுபாடு வரக்கூடுமென அவர்களே மாணவர் சேர்க்கையின் போது பள்ளியிலேயே ஒவ்வொரு மாணவர்களுக்கான சீருடையை அளவெடுத்து தைத்துக் கொடுப்பது, அதை பள்ளியின் முதல்நாள் P.T வாத்தியார் ஒவ்வொரு வகுப்பாக சென்று கண்காணிப்பது, தங்கள் பள்ளியிலேயே பிரத்யேகமாக புத்ததகங்களும், நோட்டுக்களும் அதில் பெயர், வகுப்பு போன்றவற்றை எழுதி ஒட்ட ஒரே மாதிரியான முகப்பு சீட்டுக்களும், ஒருபோதும் விண்ணப்பமல்லாது விடுப்பு அளிக்கப்படாதது - ஆசிரியர்கள் உட்பட, பாடவேளை தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள்ளாக ஆசிரியர் வராது போனால் உடனே அவ்வகுப்பிலிருந்து ஆசிரியரை அணுகி தெரிவிக்க வேண்டும். அவர் அகப்படவில்லையெனில் தலைமையாசிரியருக்கு அத்தகவலை கொண்டு சேர்ப்பது, எப்போதும் பாடவேளையின் போது எவரையும் வெளியில் அனுமதிக்காதது என இதன் பட்டியல் இறுதியில் பள்ளி முடிந்து பேருந்து ஏறும் போது வரிசையாக செல்வதில் முடியும்.

     இத்தகைய கண்டிப்புகளைக் கொண்ட பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள்  மிக மூர்க்கமாகவே இருந்தனர். புதிதாக அப்பள்ளியில் சேர்கிற ஆசிரியர்கள் கூட ஒரு வாரத்திற்குள்ளாக அச்சூழலுக்கு  தங்களை தயார் செய்துகொண்டனர். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வாத்தியார்களும் ஒவ்வொரு விதமாக  அடிக்கும் பாணியையும் பின்பற்றினர். கடிகாரத்தின் சீரான பெண்டுல வேகத்தைப் போல மாணவர்களின் கைகளை நோக்கி மட்டுமே பிரம்பை செலுத்தும் ரமேஷ் வாத்தியார், தரையில் பொறிக்கப்பட்டுள்ள சதுரத்தில் நிறுத்தி வைத்து அதை மீறி வெளியே வரக்கூடாது என்கிற விதியுடன்  சரமாரியாக உடலெங்கும் அடிக்கும் செந்தில் வாத்தியார், கரும்பலகையில் கைகளை வைக்கச் சொல்லிவிட்டு புட்டத்தை மட்டுமே பதம் பார்க்கும் ரவீந்திரன் சார், சுழல் பந்து வீச்சைப்  போல தனது மாணிக்கட்டை மட்டுமே சுழற்றி அடிக்கும் கந்தசாமி அய்யா, தனது இரு கைகளாலேயே எதிராளியின் இரண்டு கன்னங்களையும்ஒரு மணித்துளி இடைவெளிகளில் அறைந்து தள்ளும் P.T வாத்தியார் பத்பநாபன், குனிய வைத்து முதுகில் அடிக்கும் அந்நொடிப்பொழுதில் அடிவாங்கிய முதுகை மறித்து நகரும் கைகளின் நகர்வை கவனித்து உடனே மாணவனின் கன்னத்தை அறையும் ஜெயராமன் சார் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.

     அதனாலேயே மாநிலத்தின் ஏதோ  ஒரு மூலையில் இருக்கும் அப்பள்ளியை நோக்கி தமிழ்நாட்டின் சகல திசைகளிலிருந்தும் தங்கள் வீட்டின் அடங்க மறுக்கிற பிள்ளைகளைக் கொண்டு வந்து சேர்த்தனர் பெற்றவர்கள். சமயங்களில் அதன் ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பிற மாநிலத்திலிருந்து ஓரிருவர் வந்தும் அகப்பட்டுக் கொண்டனர். அதற்கேற்ப அங்கு மாணவர் விடுதியும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் விதிகள் இன்னும் கண்டிப்பானவை.

     விடுதி நேரத்தில்கூட மாணவர்கள் உடுத்தக்கூடிய உடைகளுக்கான விதிகள் இருந்தன. வேட்டி அல்லது முழுக்கால் சட்டை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேர இடைவெளியில் மட்டுமே அவர்களுக்கு விளையாட அனுமதி. அதன் பிறகான கால் மணி நேர பிராத்தனைக் கூட்டம், பிறகு ஆறு மணியிலிருந்து எட்டு மணிவரையில் வாசிப்பு வேளை  - அதில் எந்த வீட்டுப்பாடங்களையும் எழுதுவதற்கு அனுமதி இல்லை. எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை இரவு உணவு இடைவேளை - அதிலும் இரு பிரிவாக அணிவகுப்பு இருந்தன. அதன் பிறகு 2 மணி நேரத்தை எழுத்துவதற்கோ, படிப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வொழுங்கையும் மீறாதவர்களாக.

      ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுதியில் சற்றே இறுக்கம் தளர்த்திக் கொள்ளப்படும். அதுவும் எந்த மாணவர்களைக் காண அவர்கள் பெற்றோர் வந்திருப்பார்களோ அவர்களுக்கு மட்டுமே. ஏனைய அனைவருக்கும் மற்ற நாட்களைப் போலவே அந்நாளும்.

     அகப்படும் சிறைவாசிகளில் ஒரு சிலரேனும் தப்பிக்க முயற்சித்தல்தானே இயற்கையின் நியதி. அதற்கேற்ப அப்போதுதான் அப்பள்ளியில் சேர்க்கப்பட்ட (சேர்ந்த அல்ல) முகமது இப்ராஹிம் நடந்தே தனது ஊரான நாமக்கலுக்கு  சென்றதாக பரவிய செய்தி அன்றைய தினத்தின் தலைப்புச் செய்தியும்கூட.

     அதிலும்அப்பள்ளியில் பயன்படுத்தும் பிரம்பும், அதை ஒவ்வொரு விதமாக தயார் செய்வதும் அத்தனை படிநிலைகளைக் கொண்டது. தண்ணீரிலோ அல்லது காய்ச்சிய எண்ணெயிலோ ஓரிருநாள் ஊறவைத்து அதன் பின்பு நன்கு காய்ந்த பின்னர் அதன் மேல் cello tape-யை ஒரு முனையிலுருந்து மறுமுனைக்கு பிசிறு தட்டாதவாறு மிக நேர்த்தியாக சுற்றி முடித்தால் அது தயார் என அறிக.

     கொண்டை பிரம்பென்பது அதன் உருவத்திற்கான காரணப் பெயர். ஆனால், நிஜத்திலோ அது மாட்டையடிக்கும் பிரம்பு. சிலது சற்றே ஒல்லியாகவும், சிலது சற்றே தடிமனாகவும் அதன் ஒரு முனையில் கலாக்காய் அளவிலான தடித்த பகுதியைத்தான் கொண்டை என்பர். வெறியேறிய சமயங்களில் ஆசிரியர்கள் அக்கொண்டையைத் கொண்டு மாணவர்களில் நடு மண்டையை பிளப்பதுமுண்டு.

     அங்கிருக்கும் இயற்பியல் கூடமென்பது அதன் அமைப்புக்கும், அதன் பயன்பாட்டுக்கும் பெயர் போனது. சற்றே பெரிய சதுர அமைப்பிலான அவ்வறையில் நடுவே மேசைகளையிட்டு அதன் மேல் ஆய்வு உபகரணங்களை வைப்பதற்கான வடிவமைப்பென்பதே பொது புத்தியில் தோன்றும். ஆனால், அதன் பின்பான உளவியல் வினோதமானது. அடங்க மறுக்கிற மாணவர்களை சுவருக்கும், அம்மேசைகளுக்கும் நடுவே ஒரு நபர் மட்டுமே நடப்பதற்கு சாத்தியமான அக்குறுகிய பாதையில் ஓடவிட்டு அவ்வறையின் நான்கு மூலைகளிலும் நான்கு ஆசிரியர்கள் நின்று கொண்டு பிரம்பின் சகிதம் லாடம் கட்டுவதற்கான உத்தி.கிட்டத்தட்ட எலி வலையின் எல்லாப் பாதைகளையும் அடைத்துவிட்டு ஒரே வழியை மட்டும் விட்டு, அதில் புகையை புகுத்தி எலியை பிடிப்பதற்கான வேட்டைக்கு நிகரானது. ஆம் , எலி வேட்டைதான். எளியன மீது கட்டவிழ்க்கப்படும் வன்வேட்டை.

     எல்லாவற்றையும் நினைத்து நம்மை எப்படி துவைத்தெடுக்கப் போகிறார்களென கற்பனை செய்யக்கூட முடியாமல் மூச்சடைத்துப் போயிருக்கும் போது  மணி 11 ஆகியிருந்தது. காலை இடைவேளைக்கான மணியொலிக்க இதற்காகத்தான் இத்தனை நேரம் காத்திருந்தோமென்பது போலவே அவர்களனைவரும்மைதானத்தை நோக்கி விரைந்தனர் - இருவர் பின் இருவராக சீரான இடைவெளியில் சீரான வேகத்தில்.

     தான் வரவில்லை என சொன்ன மாதவனை, நெம்பி நகற்றி தங்களுக்கு நடுவில் நிற்க வைத்து ஓட்டிக்கொண்டு சென்றனர்.

     "டேய் மாதவா, நான் நேத்து மதியமே எங்க வீட்டுக்கு கிளம்பி போயிட்டேன். அதே மாதிரி எங்க வீட்லயும் கார்த்திகேயன் வீட்ல கிரிக்கெட் விளையாடிட்டுதான் வந்தோம்ங்கிறதையும் சொல்லிட்டேன். அதுனால இதுல எம் பேரு வரவே கூடாது" எனக் கறாராக கண்டித்தான் ஆல்பர்ட்- அவ்வகுப்பின் தலைவன்.

     "இல்லடா, நான் உன்னை சொல்ல மாட்டேன்"-னு இன்னும் அழுகையை நிறுத்தாமல், அவனது அதிகாரத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக.

      "ஓ!! அப்ப எங்களையெல்லாம் சொல்லி கொடுத்துடுவ இல்ல ?" என நாக்கை துருத்தினான் அன்பரசன்.

      "அப்படிலாம் இல்லடா, நான் யாரையும் மாட்டிவிட மாட்டேன். நம்புங்கடா" என இன்னும் கேவி அழுதான்.

      "அது எப்படிடா நம்பறது? நீயே ஒரு பேடிப்பய. வாத்தியார் உன்னை கூப்பிடும்போதே ஒண்ணுக்கு போறவன். எப்படி எங்கள மாட்டிவிடாம இருப்ப?" என அவன் மண்டைய பதம் பார்க்க முயன்றான் வெங்கடேஷ்.

     "அது சரிடா, நீங்க எல்லாருமே தப்பிச்சுருவீங்கனே வச்சுக்கோங்க, யாரு வீட்ல போய் வெளையாண்டிங்கனு கேக்கும் போது  எப்படி பாத்தாலும் என் பேருதான அடிபடும்"னு கலவரமானான் கார்த்திகேயன்.

     இதற்குள்ளாகவே மணியடிக்க அனைவரும் வகுப்புக்கு விரைந்தனர்.

     ஐந்து நிமிடத்திற்கு மேலாகியும் அப்போது வரவேண்டிய பொன்னுசாமி அய்யா வராததுனால் வகுப்புத் தலைவன் என்கிற முறையில் ஆல்பர்ட்டும் அவனுக்கு துணையாக அன்பரசனும் staff room நோக்கி விரைந்தனர். அங்கேயும் அவர் இல்லாததினால் தலைமையாசிரியர் சக்திவேல் அய்யாவின் அறையை நோக்கி நகர்ந்தனர். வெளியில் நின்றுக்கொண்டிருந்த பியூன் ராமசாமி அண்ணனை பார்த்து, "அண்ணா, அய்யா இருக்காரா?" என்றான் ஆல்பர்ட்.

     "இல்லப்பா rounds  போயிருக்காரு. கொஞ்சம் இருங்க" என்றார்.

      அப்போது அன்பரசன் ஆல்பர்ட்டை தனது தோள்பட்டையால் இடித்து தனது கண்ணசைவை அவனுக்கு மிக சாதுர்யமாக கடத்தினான். அவன் கண்ணசைத்த திசையை நோக்கியவன் அங்கு அமர்ந்திருந்த ஐம்பது வயதை தாண்டிய மனிதரை தனது கண்களால் அளந்துக் கொண்டான்.

     "ஒருவேளை மாதவனோட அப்பாவா இருக்குமோ?" என இருவரும் கிலியானார்கள்.

     ஐந்து நிமிடங்களாகியும் அவர் வராததால், "அண்ணா, அய்யா இன்னும் வரலையேண்ணா? என்ன பண்றது?"-னு கேட்டார்கள்.

     "நீங்க வேணா அவரு எங்க இருக்காருன்னு பாத்துட்டு அங்கேயே அவர்ட்ட சொல்லிடுங்க"

     வேறுவழியில்லை என்பது போல இருவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சக்திவேல் அய்யாவை தேடி புறப்பட்டனர். போகும் வழியில் தங்கள் வகுப்பில் அவர் சரவணனையும், கார்த்திகேயனையும் தன்னுடைய பிரத்யேகப் பிரம்பால் அடி வெளுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இருவருக்கும் வயிறு கலங்கலாயிற்று.

      இவர்கள் வகுப்பின் வாசல் முன் வந்து நிற்கவும் அவர், "எவன்டா ஆல்பர்ட்?" என கர்ஜிக்கவும் மிகச் சரியாக இருந்தது.

     "அய்யா...." என வெளியிருந்து நடுங்கும் குரலுடன் அவரை நோக்கி வார்த்தையை அலைவரிசையாக அனுப்பினான்.

      "என்ன?" என குரலை உயர்த்தினார்.

      "அய்யா, ஆல்பர்ட்...."னு அவன் சொல்லிய மறுவினாடி அவன்மீது பாய்ந்து அவனது மயிரைப் பிடித்திழுத்து "class time -ல எங்க ரெண்டு பேரும் சுத்திட்டு வரீங்க?" என அவனை வகுப்பறையின் மறுமூலைக்கு  அனாசயமாக தள்ளினார்.

      "அய்யய்யா, இல்லங்கய்யா. வாத்தியார் இன்னும் வரலன்னு உங்களை தேடித்தான் போயிருந்தோம்"-னு அவன் சொன்ன வேகத்தினால் நூழிலையில் தப்பித்தான்.

      "யார் period ?" என சற்றே அமைதியாக வினவினார்.

     "பொன்னுசாமி அய்யா"

     "ஓ!!!" என ஒரு வினாடி அமைதியானவர், "நீ வெளிய போனா கிளாஸ்ல கவனிக்க ஆள் வைக்க மாட்டியா? எல்லாரும் கத்துக்கிட்டு இருக்கானுங்க" என தனது மணிக்கட்டை முறுக்கியவாறு கேட்டார்.

     "ஐயோ! அடுத்து நாமதானா?" என மனதுக்குள் குலசாமியை வேண்டிக்கொண்டான் அன்பரசன்.

      "போய் உக்காருங்க, அடுத்த period வரைக்கும் கிளாஸ அமைதியா பாத்துக்கோ" என வெளியில் விரைந்தார்.

      பெருமூச்சுவிட்டபடியே இருவரும் அமர்ந்துக் கொண்டனர்.

      "டேய் மாதவா, உங்கப்பா வந்துருக்காரு-னு நினைக்கறேன்டா. staff  room  பக்கத்துல உள்ள பெஞ்சுல ஒருத்தர் உக்கார்ந்துட்டு இருந்தாரு" என்றான் அன்பரசன்.

       "என்னடா சொல்ற" என நிறுத்தியிருந்த அழுகையை மீண்டும் தொடர்ந்தான் மாதவன்.

       "ஆமாடா" என அதை உறுதி செய்தான் ஆல்பர்ட்.

       "டேய், நீங்க ரெண்டு பெரும் முதல்ல அவங்கப்பாவ பாத்துருக்கீங்களா?" என நிதானமா, நியாயமாக கேட்டான் சரவணன்.

       "இல்ல"

       "அப்பறம் அப்படி அது அவங்கப்பாதான்னு சொல்றிங்க?"

       "சரி இரு, இவன்-டையே கேட்போம்" என்ற அன்பரசன், எதிர் திசையில் திரும்பி, "மாதவா, உங்கப்பாக்கு முடி கொஞ்சம் வழுக்கை தானே?"

      "ஆமாடா"

      "எப்போதும் குங்குமப் போட்டுத்தான வச்சுப்பாரு?"

      "ஆமாடா" என இன்னும் கலவரமானான்.

     "வேஷ்ட்டிதானே கட்டுவாரு?"

      "இல்லடா, அவரு பேண்ட்டுதான் போடுவாரு" என குழம்பினான்.

      "பெரிய CID  சங்கரு... மூடிக்கிட்டு உக்காருங்கடா. யாரையோ பாத்துட்டு உளறிட்டு இருக்கானுங்க" என அன்பரசன் பின்மண்டையை இதுதான் நேரமென்பது போல அடித்தான் வெங்கடேஷ்.

       அதற்குள்ளாகவே அடுத்த வகுப்புக்கு வந்த வாஞ்சிநாதன் சார் வந்த வேகத்திலேயே கணக்குப் பாடத்திற்குள் நுழைந்தார். பாடத்தை தொடங்கிய அதே வேகத்தில் உணவு இடைவேளையும் வந்தது.

       எல்லோரும் அவர்களது சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு எப்போதும் அமரும் மைதானத்தின் ஒரு பகுதியை அடைந்தனர். தற்செயலாக அது பள்ளியின் வாசலை நோக்கியதாகவும் இருந்தது. ஒரு புயலை எப்போதும் எதிர் நோக்கி காத்திருக்கும் மனோ திடத்துடன் சாப்பிட்டுகொண்டிருந்தனர்.

      அக்கும்பலில் எல்லோருக்கும் ஓரளவுக்கு நடப்பதை எதிர்கொள்ள தயாராய் இருந்தனர் -இருவரைத் தவிர.

       மாதவன் - முதல் குற்றவாளி. வேறு வழியேயில்லை.

      கார்த்திகேயன் - இரண்டாம் குற்றவாளி. அவர்கள் வீடுதான் குற்றம் புரிந்த களம் என்பதனால், அதில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டவன்.

      "டேய் மாதவா, உங்கப்பா கண்டிப்பா வருவாராடா?" , என சந்தேகமாக கேட்டான் சரவணன்.

     "ஆமாடா, கண்டிப்பா வருவாருடா".

      "எப்படிடா அவ்வளவு strong -ஆ சொல்ற?" என்றான் ஆல்பர்ட்.

      "எனக்குத் தெரியாதாடா?!"

      "டேய், எல்லார் வீட்லயும் அப்படிதான் சொல்லுவாங்க. ஆனா, கடைசில வரமாட்டாங்க. அப்படிகூட இருக்கலாம்ல?" எனக் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தான் சுரேந்தர்.

     "இல்லடா, எங்கப்பா கண்டிப்பா வருவாருடா" என சாப்பிடாமல் அழுதான்.

     "அட்றா அவனை. இத்தனை பேரு சொன்னாலும் கேக்கறானா பாரு" என கையை முறுக்கி அவன் தலையில் கொட்டினான் வெங்கடேஷ்.

      "டேய் உக்கார்றா" என வெங்கடேஷை சாந்தப்படுத்திய சரவணன், "எப்படிடா அவரு வருவாருனு சொல்ற?" எனக் கேட்டான்.

      "எங்கப்பா ரொம்ப strict-டா. சின்ன வயசுல இருந்தே என்னை எங்கயும் வெளையாட  அனுப்ப மாட்டாரு. எப்ப பாத்தாலும் படிப்பு மட்டும்தான். அதேமாரி சினிமா, அங்க இங்க-னு எங்கயுமே கிடையாது. எப்பவாது சொந்தகாரங்க யாராவது வந்து எங்கயாவது கூப்பிட்டு போறேன்னு சொன்னாலும் விடமாட்டாரு. எப்பவுமே படிப்பு மட்டும்தான். நேத்து நான் வீட்டுக்கு நேரா போகாம உங்களோட வெளையாட வந்தது தெரிஞ்சதும் ரொம்பவே கோவப்பட்டாரு, நேத்து ராத்திரி எங்க வீட்ல யாருமே சாப்பிடக்கூட இல்லடா" என வெளிர்த்துப் போயிருந்தான்.

      கூடவே வீட்டுக்கு தான் ஒரே பிள்ளை எனவும், அதிலும் அவனது பெற்றோருக்கு நெடுங்காலம் கடந்து பிறந்ததாகவும் அதனாலேயே அவன் மீது காட்டும் அக்கறையும், பாசமும் கண்டிப்பின் வெளிப்பாடாகவே எப்போதும் இருப்பதாகவும் பற்பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டிருந்தான். மேலும் தன்னை இப்பள்ளியை தவிர வேறெங்கேயும் சேர்க்கப்போவதில்லை எனவும், அவனை விடுதியில் சேர்க்கப் போவதாகவும் அவனது அப்பா முடிவெடுத்திருந்தார் எனவும் கூறினான். பின்பொருநாள் தனது வீட்டுக்கு வந்த தனது தாத்தாவிடம் அவன் அழுது தன்னை விடுதியில் சேர்க்க வேண்டாமென தனது அப்பாவிடம் அவரைப் பேசச் சொல்லி ஒருவகையாக முடிவுக்கு வந்ததாகவும் கூறியவன், இப்போது அவனை கண்டிப்பாக விடுதியில் சேர்க்கப் போவதாகவும், "வீட்டுக்கு அடங்காத புள்ள இனிமே இந்த வீட்ல இருக்கக் கூடாது"-னு அவர் அப்பா தீர்க்கமாக சொன்னதாகவும் கூறினான்.

      எல்லாரும் மூர்ச்சையாகிப் போயிருந்தார்கள். இனி எது நடந்தாலும் அதை எதிர் கொள்வதைத் தவிர யாருக்கும் வேறுவழியில்லை என ஒரு புரிந்துணர்வுக்கும்  வந்திருந்தனர்.

      "கெட்டதுலயும்  ஒரு நல்லதுடா. இன்னிக்கு நல்லவேளையா சுப்பிரமணி வரல" என சரவணன் சொல்லவும் "ஆமாடா" என ஒட்டுமொத்தக் கூட்டமும் அதிர்ச்சி கலந்த பெருமூச்சு விடவும் மணி ஒலித்தது அவர்கள் வகுப்பறைக்கு செல்ல.

      சுப்பிரமணி - ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே இருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவனது அப்பா அவனை நாகூரில் சேர்ப்பதாக முடிவெடுத்திருந்தார். அதை அவன் நண்பர்களிடம் அவன் சொன்ன போது, "டேய் நாகூரா? அது ரொம்ப strict  ஆன ஸ்கூல் ஆச்சேடா. எங்க அண்ணன் அங்கதான் படிச்சாப்ல, அடி தாங்காம ஓடி வந்துட்டாப்ல. சாவடிச்சுடுவாங்கடா. மத்தியானம் சாப்பிட்றதுக்கு கூட அஞ்சு நிமிஷம்தான் தருவாங்கலாம்" என அந்தந்த வயதிற்கே உண்டான மிகையான உண்மைகளைக் கேட்டு எதற்கும் பயந்து நடுங்கியவனாய் மாறிப் போயிருந்தான்.

      எப்போதும் வகுப்பறையை விட்டு வெளியே வராமல் இருப்பது, காலை அசெம்பளிக்கு அவனாகவே பத்து நிமிடத்திற்கு முன்பாகவே எல்லோரையும் அழைத்து (கெஞ்சி) வெளியில் வரிசையில் நிற்க வைத்து மைதானத்துக்கு நேரத்திற்கு அழைத்துச் செல்வது, புரிகிறதோ இல்லையோ புரிகின்றது என்கிற முகபாவனையுடனே வகுப்பில் இருப்பது, மிக கவனமாக முன்னுமல்லாது, பின்னுமல்லாது நடுவரிசையில் மிக கச்சிதமாக மையத்தில் அமர்ந்துக் கொள்வது, பள்ளியின் வெளிப்புறப் பகுதியாயினும், எந்நேரமாகிலும் மென்ஓட்டத்தை கைவிடாதிருப்பது என அவனது பயம் அனைத்தும் அத்தனை அசலானவை.

     அப்பயம் பரீட்சை வேளைகளில் இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும். குறிப்பாக அவன் எழுதும் பதில்களுக்கு அவனாகவே மதிப்பெண் இட்டு தான் தேர்ச்சி பெறுவோமா இல்லையா என கணக்கிட்டு மிக நிச்சயமாக தான் தேர்ச்சி பெறப்போவதில்லை என நினைத்து அத்தேர்வு அறையிலேயே ஆசிரியருக்கு தெரியாதவாறு அழுவது, அதன்பிறகான மதிய இடைவேளையின் போது சாப்பிடாமல் "ஐயோ நான் கண்டிப்பா fail ஆயிடுவேன்டா" என அழுதுக்கொண்டே இருப்பது என அப்பட்டியல் மிக நீளமானவை அப்பள்ளியின் கண்டிப்புக்கான பட்டியலைவிட.

      ஒருவேளை அன்று சுப்பிரமணி வந்திருந்தால் அவனாகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து எல்லோரையும் காட்டிக் கொடுத்திருக்கக்கூடும். தவறை தானகாவே ஒப்புக் கொண்டால் தன் மீது விழும் பிரம்படிகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்குமென்பது அவனது நம்பிக்கை; எப்போதும் அப்பள்ளியில் செல்லுபடியாகாத நம்பிக்கையென்பதை அவன் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

      மணி 3 ஆகியிருந்தது. அடுத்த இரண்டு பாடவேலைகளும் சாம்ராஜ் மாஸ்டருடையது - சமூகறிவியல். தனது கண்டிப்பின் பலனாக "இளம் புயல்" என தலைமை ஆசிரியர் சக்திவேல் அய்யாவால் அழைக்கப்படுபவர்.

      மாதவனது அப்பா இப்போது வரும் பட்சத்தில் என்னென்ன நடக்கக்கூடும் என ஒவ்வொருவரும் அவரவர் கற்பனையில் உறைந்திருந்தனர். ஒரு சமயம் பாட வேளையில் மணி என்ன என ஒருவன் பார்க்க அதற்காகவே மீதமிருந்த மணித்துளிகளை அவனை பிரம்புக்கு இரையாக்கினார். அதன் பிறகு அவர் செல்லும் வகுப்பில் கைக்கடிகாரம் என்பது மறைமுகமாக தடை செய்யப்பட்டிருந்தது.

      எப்போதையும்விட அன்று நேரம் மிக மெதுவாகவே போய்க்கொண்டிருந்தது. அவர்  கரும்பலகை பக்கம் திரும்பும் போதெல்லாம் கதவின் புறம் யாராவது இவர்கள் வகுப்பை நோக்கி வருகிறார்களா என மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். இனி தானொரு விடுதிப் பறவை ஆகப்போகிறோம் என்பது மட்டும்தான் மாதவனது மனதில் அறைந்த சிலுவையாக இருந்தது. அதன்மேல் கசிந்து உறைந்த அச்சிறுவனின் ரத்தம் கர்த்தரின் ரத்தத்ததை விட மிகப் புனிதமாகவும், அர்த்தமானதாகவும் இருந்தது. தன் மீது ஏன் அவர் எப்போதும் கருணையற்றவராக, கறார்தன்மையடனே இருக்கிறார் என நினைக்க நினைக்க இன்னும் அழுகை வந்தது. ஆனால் அழுகையை எப்போதும் கடக்க முடியாதவனாகவே அவனது முழு வாழ்வும் இருந்துவிடக்கூடுமோ என அவனது வயதுக்கு மீறி எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தான்.

      தன்னை விடுதியில் சேர்த்துவிட்டால் அவனது பெற்றோர்கள் அவனை பார்க்க வருவார்களா, இல்லை அதற்கும் இடமளிக்காமல் தன்னை நிராதரவனாக விட்டுவிடுவார்களோ  என எல்லா சாத்தியங்களின் படிநிலைகளின் மீதும் ஒவ்வொரு கேள்வியை எறிந்துக் கொண்டிருந்தான், எதற்கும் பதிலின்றி.

      தனது பையன் தன்னுடனிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்து என ஏதோ ஒரு ஜோதிடர் சொல்லவும் அதற்காகவே ஒன்றாம் வகுப்பிலிருந்தே விடுதியில் விடப்பட்ட அவனது வகுப்புத் தோழனான நவீனை நினைத்து ஒருநிமிடம் கண்ணீர் சிந்தினான். இனித் தானும் அதுபோலவே எப்போதும் தனது கூட்டுக்கு செல்லமுடியாத ஒருதனிப் பறவையாக எந்தெந்த காடுகளின் முட்களை கடந்து செல்லப் போகிறோம் என ஒன்றும் புரியாதவனாக அமைதியாய் இருக்கும்போது, அவ்வகுப்புள் நுழைந்த பியூன் ராமசாமி , "சார், மாதவனோட அப்பா வந்துருக்காரு. headmaster, bag-ஓட கூப்பிட்டு வர சொன்னாரு" என சொல்லவும் அனைவருக்கும் கிலி பிடித்துக் கொண்டது.

      "மாதவா, bag எடுத்துட்டு போ" என சாம்ராஜ் மாஸ்டர் சொல்லவும் மிக அமைதியாக ராமசாமியுடன் சென்றான்.

      அவர்கள் சென்ற ஐந்தாவது நிமிடம் மணி அடிக்கப்பட்டது. இதுதான் தருணம் என்பது போல அவர்கள் அனைவரும் மிக வேகமாக தனது பைகளை எடுத்துக் கொண்டு எப்படியேனும் முதல் பேருந்தைப் பிடித்து வீட்டுக்கு சென்றுவிட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டனர்.

      அவர்கள் வெளியேறும் போது தலைமையாசிரியர் அறையை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் எங்கேனும் மாதவன் தெரிகிறானா என. அதே சமயம் பள்ளியின் வெளியே ஒரு பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தங்களது முழு கவனத்தையும் அப்பேருந்தின் மீது செலுத்தி எப்படியேனும் தப்பித்தாக வேண்டும் என அனைவரும் மென்னோட்டத்தை சற்றே வேகமெடுத்து அப்பேருந்தை அடைவதற்கும், பேருந்து கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.

      "அப்பாடா, தப்பிச்சோம்டா" என எல்லோரும் ஏகோபித்தோமாக பெருமூச்சு விட்டனர். அப்போது அன்பரசன், "டேய் அங்க பாருங்கடா" என சொன்ன திசையை எல்லோரும் பார்க்கும் பொழுது, அவர்கள் பேருந்து ஒரு இருசக்கர வாகனத்தைக் கடந்து சென்றது. அதில் மாதவனும், அவனது அப்பாவும் ஒரு ஓவியம் போல தெரிந்து நொடிப்பொழுதில் மறைந்தனர்.

      வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த மாதவனின் அப்பா அவனை தனது வாகனத்தின் கண்ணாடி வழியாக ஊடுருவி பார்த்தார். அவன் அழுதழுது வீங்கிய முகம் தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன் தான் செய்த சிறு பிழையை மன்னிக்கத் தவறிய தனது தந்தையின் கண்டிப்புக்கு எதிராக ஒரு கலகக்காரனாக மாறி தனது வாழ்வைத் தொலைத்த நிமிடங்களை நினைத்த அந்தவொரு நிமிடம் அவனிடமிருந்து சிலுவையை தன் மனதில் சுமக்க ஆரம்பித்திருந்தார்.


Saturday, June 22, 2019

காதல் > புரிதல்


உன் புரிதலுக்குள் 
அடங்காது என் 
காதல்.


Sunday, May 26, 2019

தேடலின் சாபம்

தேடல் ஒரு மனிதனை 
என்ன செய்யும்?
என்னவெல்லாமோ செய்யும் -
அவனை ஒன்றும் ஆகவிடாமல் 
செய்வதையும் சேர்த்து.



Saturday, March 2, 2019

Pencil கிழவன்



ஏதோ ஒன்றை வரைய 
பென்சிலைத் தேடிக் 
கொண்டிருக்கும் அச்சிறுவனிடம் 
கிடைக்கிறது அவன் பிஞ்சுக் 
கைகளுக்குள்கூட அகப்படாத 
சிறு பென்சில்.
தன்னால் கூர்தீட்டிட முடியாத 
அப்பென்சிலைத் தன் தாத்தாவிடம் 
கூர்த்தீட்டிட கேட்கிறான்.
உடலும் சில நினைவுகளும் மட்டுமேயுள்ள 
இரு கிழவர்களும் ஒருவரை ஒருவர் 
பார்த்துக் கொள்கின்றனர் 
மிக அமைதியாக....


Saturday, February 16, 2019

திசைகள்


பிரிந்தே கிடக்கும் 
எதிரெதிர் துருவங்களான 
கிழக்கையும் மேற்கையும் 
மிக அமைதியாக 
கைகோர்த்து பிணைத்தே 
வைத்திருக்கின்றன 
வடக்கும் தெற்கும் 
காலங்காலமாக...