Thursday, December 23, 2010

வாழ்தல் ஒரு கலை


     வாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு  துன்பக் கடல் என்பது எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது வாழ்க்கை ஒரு கேளிக்கைக் கூடம் என்பதும். வாழ்க்கையை சுவாரசியாமாக வைத்துக் கொள்ளுதல் ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல; அது இன்னொரு சுவாரசியமான விஷயம். இங்கே பலரும் பொழுது போக தான் வாழுகிறார்கள். ஆனால் பொழுதுபோக்காக நாம் விளையாடும் விளையாட்டு ஒவ்வொன்றிலும் பொதிந்து உள்ளன வாழ்கையின் ரகசியம்.     Every thing is pre-written. Nothing can be re-written என்று வாழ்க்கையை பற்றி ஒரு சொல் உண்டு, அது போல தான் வீடியோ கேம்களும். ஆடுபவன் (மனிதர்கள்) ஒவ்வொருவரும் ஒரே இடத்தில் இருந்தே வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையை பொறுத்தே அவர்களுடைய பாவ, புண்ணிய கணக்குகள் ( Points ). மனிதர்கள் அனைவருக்கும் இறைவன் ஒன்று போலவே தான் தேவைகளை ( Power ) வழங்குகிறான். ஆனால் அதை பயன்படுத்துவதெல்லாம் ஒவ்வொரு மனிதனின் தேடல் தொடர்பானது. வயது ( level ) ஏற ஏற மனிதன் சந்திக்கும் துயரங்களும் அதிகரிக்கவே செய்யும். அது ஆட்ட  விதி! ஆனால் அதை எதிர்க் கொள்ளவும் மனிதனுக்கு மேலும் சில சக்திகளை இறைவன் வழங்கிக்கொண்டுத் தான் இருக்கிறான். வாழ்கையில் ஏதோ ஒரு நிலையில் அனைவருக்கும் இடறல் ஏற்படுவது இயல்பு தான். சிலர் தன் தவறை திருத்திக் கொண்டு மீண்டும் விளையாட்டை எதிர்க்கொள்கின்றனர் ( Replay ). பலரோ சில முறை முயற்சித்து பலன் அளிக்கவில்லை எனில்  விளையாட்டை அசட்டை செய்கிறார்கள்.

 
   என்ன தான் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் சமூக மொழி வழக்காக இருந்தாலும், இன்று அன்றாட தேவைகளுக்கு அடுத்தபடியாக மனிதன் எதிர்பார்ப்பது வெற்றியே. கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கத் தான் பந்து வீசப்படுகிறது. அதே பந்தைப் பயன்படுத்தி தான் பேட்ஸ்மேனும் சிக்ஸர் ஆகவும் பௌண்டரிகளாகவும் அடிக்கிறான்.


     இங்கே திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் வெற்றிப்படிகளில் ஏற முடியாதவர்கள் பலர். காரணம் அதிர்ஷ்டம் இல்லாமை. (பலரும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை ஒப்புக் கொள்வதில்லை. இதை பின்பு வேறொரு முறை பார்க்கலாம்). "வாழ்கையே ஒரு கலைச்சு போட்ட சீட்டுக் கட்டு தான்" என பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அது உண்மை தான். என்ன தான் ஒருவன் சீட்டாட்டத்தில் கில்லாடியாக இருந்தாலும் அவனுக்கு சரியான நேரத்தில் சரியான சீட்டு வரவில்லை எனில் அவன் தோல்வியை சந்தித்து தான் ஆக வேண்டும்.


     வாழ்க்கை ஒரு (சதுரங்கம்) போர்க்களம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே பலரும் முள்ளின் மீதே நடக்கின்றனர்; என்றாவது தங்கள் பாதம் மலரில் பதியும் என்ற நம்பிக்கையில்! யாரும் எதையும் இழப்பதற்கு விருப்பம் கொள்வதில்லை. இழந்தே ஆக வேண்டும்  என்கிற நிலை வரும் போது பெரிய விஷயங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக சிறிய விஷயங்களை இழக்க மனம் ஒப்புக்கொள்கிறது. பெரிய விஷயங்களை இழந்தே தீர வேண்டும் என்கிற போது தலை தப்பித்தால் போதும் என மனம் அதற்கும் பக்குவப்படுகிறது. இறுதியில் எல்லாவற்றையும் இழந்து, இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றான பின்பு வாழ்கையை புதிதாக தொடங்குகிற தைரியம் வந்துவிடுகிறது! ( இங்கே இழப்புகள் என்பது மனிதர்கள் அல்ல, வெறும் பொருட்களே).

    இங்கே ஆடத் தெரியாமல் யாரும் தோற்பதில்லை. சில தவறான முறைகளை கையாள்வதாலேயே தோற்கிறார்கள். வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது. அதனால் தான் அழகாகவும் இருக்கிறது!

8 comments:

G.M Balasubramaniam said...

வாழ்க்கையை விளையாட்டுடன் ஒப்பிடலாம். ஆனால்வாழ்க்கை விளையாட்டாகாது.விளையாட்டில் வெற்றியே குறி.விளையாட்டில் எல்லோரும் வெற்றி பெற முடியாது. தோல்வியை சகஜமாக பாவிக்க முடியவேண்டும். அதே போல் வாழ்வில் தோல்வி கண்டு துவளக்கூடாது. வாழ்த்துகள்

Matangi Mawley said...

very well written!!

சிவகுமாரன் said...

\\\வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது. அதனால் தான் அழகாகவும் இருக்கிறது!///

....அடேங்கப்பா...

subeesh said...

This is so awesome and good this approach is known as optimistic way of living not all the people will get this attitude only a man with strong determination and ambition is able to posses this kind of attitude.I always bow to your optimistic character my pal...........

siva said...

ம் photos..
ரொம்ப நல்ல இருக்கு அண்ணா

நிலாமகள் said...

பக்குவப்பட்ட மனமும் தெளிந்த ஞானமும் தென்படுகிறது உங்கள் கருத்துகளில்... வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்ந்துதான் விளக்கம் பெறவேண்டும் -போர்க்களமா?
விளையாட்டுத்திடலா என்று அனுபவமே கூறும்.

vasan said...

விளையாட்ட‌ வாழ்க்கைச் சொல்லீட்டிங்க‌.
வாழ்க்கையில் விளையாட்டிருக்க‌லாம்,
ஆனால், நிச்ச‌ய‌‌மாய்
வாழ்க்கை விளையாட்டில்லை.
அது ஒரு க‌ணித‌ம்.
கூட்ட‌ல், கழித்த‌ல், வ‌ருத்த‌ல், பெருக்க‌ல்
க‌ட‌ன் வாங்க‌ல், ஒன்றின் மேல், ஒன்றின் கீழ் இப்ப‌டி.
எத்த‌னையெத்த‌னை வித‌ த‌ச‌ம‌ங்க‌ளில் க‌ணக்கிருந்தாலும்,
கடைசியில் ச‌ரியான விடை எல்லோருக்கும் ஒன்றுதான்.

Post a Comment