Sunday, November 21, 2010

காதல் செய்வீர்


காதலியுங்கள் 
அழுது பார்க்கவும் 
அழுது தீர்க்கவும்

பசிப்பிணி

கடவுளே அருகில் இருந்தும் 
பசி தீர வழி இல்லை 
வேடதாரியின் குழந்தை.
 

உறவு

குடையாகிறேன் 
என்னைப் பிடித்தவர்களுக்கு.
எனக்கு பிடித்த மழையை பகைத்துக் கொண்டு.

Monday, November 8, 2010

அங்கீகரிக்கப்படாத பெண்மை - II

     (அங்கீகரிக்கப் படாத பெண்மையின் தொடர்ச்சி ...)
     "water"  தீபா மேத்தா இயக்கியத் திரைப்படம். கணவனை இழந்த பெண்களைப் பற்றி விவரிக்கும் கதைக் களம். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா. ஒரு மாட்டு வண்டியில் ஒரு சிறுமி, நோய்வாய்ப் பட்ட ஒருவன் மற்றும் அதை ஓட்டிக் கொண்டு செல்லும் வண்டிக்காரன். அவர்கள் சென்றுக் கொண்டிருக்கிற வண்டி ஒரு சுடுகாடை அடைகிறது. வண்டிக்காரன் அந்த சிறுமியை எழுப்பி, "ஏய்! உனக்கு கல்யாணம் ஆய்டுச்சு ஞாபகம் இருக்கா?"
சிறுமி, "என்ன?"
"ஆமாம். உன் புருஷன் செத்துட்டான். இன்னிலேர்ந்து நீ விதவை"
(படத்தின் முதல் வசனமே இது தான்!)


     அதன் அர்த்தமே புரியாத சிறுமியை தலை மயிர் மழித்து அந்த ஊரில் உள்ள விதவைகள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்! அந்த இல்லத்தில் இருக்கிற முதிய பெண்மணியால் இந்த சிறுமியின் இம்சைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எப்போதும் அவளை திட்டிக் கொண்டே இருக்கிறார். அதே இல்லத்தில் உள்ள பதின்ம வயது பெண்ணிடம் ஒட்டிக்கொள்கிறாள் சிறுமி. அந்த ஊரிற்கு வருகிற இளைஞன் அந்த பெண்ணைப் பார்த்ததும் காதல் கொள்கிறான். அவளும் கூட. இந்த சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொண்டதா? இல்லையா? அவர்கள் எப்படி இந்த சமுதாயத்தை எதிர் கொண்டனர் என்பதே மீதிக் கதை.

     எல்லாத் திரைப்படங்களிலும் கருப்பும், வெள்ளையும் அந்நியமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் மற்ற எல்லா நிறங்களும் அந்நியப்பட்டிருக்கும். தெருவோர கடையில் சிறுமிக்கு, அவள் விதவை என்பதால் தின்பண்டம் தர மறுப்பதும்,  அந்த இல்லத்தில் உள்ள  வயதான பெண்மணி மரணப் படுக்கையில் லட்டுக்காக ஏங்கி மரிப்பதும் கனம். எல்லாவற்றிற்கும் அந்த சிறுமி ஏன் ஏன் என கேள்வி கேட்பதும் இயக்குனரின் அருமையான யோசனை. பார்க்க வேண்டிய படம்.

      ஒரு துறவியாக வாழ்வதே கடினமான விஷயம் என்றால், அந்த துறவியின் மனைவியாய் வாழ்வது எவ்வளவு சவாலானதாக இருக்கும். ராகவேந்திரர் துறவறம் பூண்டதும் செய்வதறியாது தற்கொலை செய்த அவர் மனைவி; ஞானம் அடைந்ததும் வீட்டிற்கு வந்த புத்தரை கேள்வி மேல் கேள்வி கேட்ட அவர் மனைவி; ராமகிருஷ்ண பரம அம்சர் துறவறம் பூண்டப் பின் அவரே வணங்கும் அளவுக்கு தெய்வீக நிலையை அடைந்த சாரதா தேவி என நம்மிடம் பல வரலாறுகள் உண்டு. ஆனால் நிதர்சனத்தை முன் வைத்தவர் பாரதியின் செல்லம்மா.(ரேடியோ ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பதிவு செய்து உள்ளார்.)

     ஒரு பெண் துறவறம் ஏற்க தானாகவே விரும்பி முதுமை அடைந்த அவ்வையாரின் செய்கையே ஆயிரம் ஆயிரம் கேள்விகளை முன்வைக்கின்றது.

      நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம். நண்பன் ஒருவன் ப்ராஜெக்ட் செய்வதற்காக சென்னை தி.நகரில் தங்கி இருந்தான். அவனை சந்திக்க சென்ற நான், நண்பனின் அன்பிற்க்கிணங்க அங்கேயே தங்க வேண்டிய நிர்பந்தம். தேநீர் அருந்துவதற்காக இரவு பதினோரு மணியளவில் ரங்கநாதன் தெரு அருகே சென்றோம். அதுவரை நான் பார்த்த தெருவும் இதுவும் ஒன்றா என வியப்பளிக்கும் வகையில் இருந்தது. ஆள் அரவம் அற்ற வீதியில் வண்டிகளை வைத்து அடைத்து சரக்குகளை கடைகளில் வைத்துக் கொண்டிருந்தனர். சில மணித்துளிகள் கழித்து அங்குள்ள கடைகளில் பணி புரியும் விற்பன்னர்கள் தங்கள் இடம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் ஒவ்வொரு கதை. ஆனால், அத்தனை கதைகளின் கருவுமே சோகம் என்பது கசப்பான உண்மையே. (ஒரு வருடம் கழித்து வெளிவந்த "அங்காடித் தெரு" திரைப்படம் மாநகரில் உள்ள கடைத் தெருக்களின் முகமூடிகளை கிழித்து எறிந்தது. அதில் சொல்லப்பட்டது பாதி தானாம்!)


     இங்கு திருமணம் என்கிற பெயரில் நடப்பதே பெண்ணிற்கு எதிரான  வன்முறைதான். திருமணத்தில் ஒரு பெண்ணின் சம்மதம் என்பதே கடைசியில் தான் கேட்கப்படுகிறது. அவள் விருப்பமும், அவன் விருப்பமும் ஒத்துப்போய் இருப்பின் பிரச்சனை அவ்வளவாக இருப்பதில்லை. இல்லையெனில் பிரச்சனை உருவாகிறது, ஆணின் விட்டு கொடுத்துப் போகும் தன்மை இல்லாமையால். இங்கு பல வீடுகளில் சீரியல், கிரிக்கெட் சண்டையில் கிரிக்கெட் தான் ஆணாதிக்கம் போல எப்போதுமே மேலாதிக்கம் செய்கிறது. ஒரு நபர் எப்போதுமே விட்டுக் கொடுப்பதும், மறு நபர் மட்டுமே பலன் அடைவதும் தான் திருமணத்தை  அர்த்தமற்றதாக்கி விடுகிறது. தன் தியாகத்தால் மற்றவர்கள் பலன் பெறுவது,  குடும்ப உறுப்பினர்கள் வாங்கி வந்த வரம்; அந்த குடும்பத் தலைவி வாங்கி வந்த சாபம். ஒரு வீட்டில் என்ன சமையல், அந்த வார இறுதி நாட்களில் எங்கு செல்ல வேண்டும் என எல்லாவற்றையும் தீர்மானிப்பது இல்லத்தரசியை தவிர அனைவருமே. "சமையல் அறைக்கும், கட்டில் அறைக்கும் ரன் எடுத்தே ரணமானவள் மனைவி", என வைரமுத்து கூறியது நூறு சதவீதம் உண்மை.

     இங்கு எத்தனை பெண்ணிற்கு அவளுடைய வாழ்கைத் துணையை அவளாகவே தேர்ந்தெடுக்க உரிமை வழங்கப்பட்டிருக்கிறது? என்னைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் முதல் உரிமை இதுதான். ஒரு ஆண் பிள்ளை காதலிக்கும் போது பெற்றவர்களின் கண்ணிற்கு தெரியாத ஜாதி, மதம், கெளரவம் ஒரு பெண் காதலிக்கும் போது மட்டும் தெரிவது விந்தையே! ஒரு ஆணிற்கு பதின்ம வயதில் சுதந்திரம் முழுவதுமாக கிடைத்து விடுகிறது. ஆனால் பெண்ணிற்கு அப்போது தான் சிறை வாசமே ஆரம்பிக்கிறது. சில வயதுக்குப் பிறகு, அவளுக்கு இடப்படும் கட்டளைகளே ஒரு ஆணின் மீது அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.


     ஒரு வீட்டில் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் இருவரில் பெண் சற்று குறைவாக மதிப்பெண் எடுப்பதால் அவளை திட்டுகின்றனர். அப்போது அவள் மனதில் ஏற்படும் எண்ணம் என்னவாக இருக்கும்? "அவனோட நான் கொஞ்சம் தான் மார்க் கம்மி. எனக்கு வீட்ட பெருக்கி, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, பாத்திரம் கழுவினு பல வேலைகள் இருக்கு. ஆனால் அவனுக்கு அப்படியா? அவன் திங்கற தட்டக் கூட கழுவி வைக்க மாட்டான். ஆனா, அம்மா அப்பாக்கு அவன் தானே ஒசத்தி.......?!" இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள், விடைகளே கிடைக்காத கேள்விகள்.

     இந்த உலகத்தில் அக்கா, தங்கையுடன் பிறந்த ஆண்கள் தான் கொடுத்து வைத்தவர்களே. அதிலும் அக்கா என்றால் அலாதி தான். ஆனால் ஒரு ஆணிற்கு இது புரியும் போது அவனுடைய சகோதரி வேறொரு வீட்டினுடைய உடமை ஆகியிருப்பாள். ஆண்களுக்கு எப்போதுமே காலம் கடந்து போன பிறகு தான் விஷயங்கள் புரிய வருகின்றன.

     சாப்பிடுகிற ஆண்மகனுக்கு அவன் தட்டு மட்டுமே தெரியும். பரிமாறுகிற பெண்ணிற்கு தான் மற்றவர்களின் வயிறும் புரியும். டிஷ்யூம் படத்தில் வருகிற பாடலில், "பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு பட்டினியாய் கிடப்பாளே அதுபோல" னு  வருமே  ஒரு வரி. எவ்வளவு உண்மை. எல்லோருக்கும் பரிமாறிய பிறகு என்ன மீதம் இருக்கிறதோ  அதையே தான் உண்டு வாழ்கிற குடும்பத் தலைவிகள் நூறிற்கு தொண்ணூற்று ஒன்பது பேர். வைரமுத்து சொன்னது போல, "இங்கு ஒவ்வொரு வீட்டிலும் அந்த குடும்பத் தலைவியின் ரத்தமே மறைமுகமாக பரிமாறப்படுகிறது."

     ஆனந்த விகடனில் சில வருடங்களுக்கு முன் பிரபலமான ஒரு ஆணிடம்,"ஒரு பெண் எப்போது அழகாகிறாள்?" என்றும் மறு வாரத்தில் பிரபலமான ஒரு பெண்ணிடம்,"ஒரு ஆண் எப்போது அழகாகிறான்?" என்றும் மாறி மாறி கேட்கப்பட்டது. ஆண்கள், "பிறந்த குழந்தை, பெற்றெடுத்த தாய், விட்டுக் கொடுக்கிற சகோதரி, சண்டை போடுகிற தோழி, வாழ்கையை உணர்த்திய காதலி, தன் சிசுவை சுமந்து நிக்கிற மனைவி, தன்னை வளர்த்த  பாட்டி..." என்று விதவிதமான பதில்கள். ஆனால் எல்லா பெண்களிடமிருந்தம் வந்த ஒருமித்த பதில்கள்," எப்போது ஒரு ஆண் பெண்ணின் கருத்துக்களுக்கு மதிப்பு தருகிறானோ அப்போதே அவன் அழகாகிறான்." என்றனர்.

     சில ஆண்டுகள் முன்பு வரை ஓரளவே வளர்ச்சி கண்டிருந்த விஞ்ஞானம் சமீபத்திய ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதிற்கு காரணம் வேலைக்கு செல்லக் கூடிய  சூழல் பெண்களுக்கு அதிகம் வாய்க்கப்பட்டதால் தான் என்னவோ. ஒரு பெண் தன் இறுதி காலம் வரை கற்றுக் கொள்கிற ஆர்வத்தை குறைத்துக் கொள்வதே இல்லை. நம்பிக்கை இல்லை எனில், உங்கள் வீட்டில் இருக்கிற தாத்தா, பாட்டிக்கு அலைபேசியின் உபயோகத்தை கற்றுக் கொடுங்கள். பாட்டி ரொம்ப ஆர்வமாக கற்றுக் கொள்வார். தாத்தாவோ,"இந்த ரெட் பட்டன அமுக்கினா கட் ஆய்டும். பச்சை பட்டன அமுக்கினா பேசலாம் அதானே. சரி போதும் போ" என்பார்.



     கார்ல் மார்க்ஸ் சொல்லி புரியாத சமத்துவம் ஒரு பிடி வெங்காயம் நறுக்கும் போது தான் புரிகிறது. என்ன செய்ய? ஒரு ஆண் தவறு செய்தும் போது சம்பவம் ஆக்கிப் பார்க்கிற சமுதாயம், ஒரு பெண் தவறு செய்யும் போது மட்டும் சரித்திரம் ஆக்கிப் பார்க்கிறது.

     பிரசவத்திற்காக நாட்டிலேயே வசதியான மருத்துவமனையில் அந்த கர்ப்பிணியை சேர்க்கலாம். ஆனால் அந்த தாய் அனுபவிக்கிற வலிக்கு நம்மால் என்ன விலை கொடுத்து விட முடியும்?

மழை சிநேகம்



குடை கொண்டு செல்ல 
மறந்த நாட்களில் தான் 
புரிகிறது.
மழையுடன் 
எனக்கு உண்டான 
சிநேகமும் விரோதமும்!