Wednesday, August 7, 2013

மரித்த மனிதம்



மற்றுமொரு அவசரக் 
காலைப் பொழுது 
அலுவலகம் செல்ல.
என் வீட்டின் வெளியே
காயமடைந்த காகமொன்று 
வலியில் அலறிக்கொண்டிருந்தது.
செய்வதறியாத சககாக்கைகள் 
மரத்தின்மீதிருந்து துடித்துக்கொண்டிருந்தன.
சலனமற்று கடக்கிறேன் நான் - 
சகமனிதனின் விபத்தைக் 
கண்டுகொள்ளாததைப் போலவே. 


Saturday, August 3, 2013

தொலைந்த நட்பு

 


அறிமுகமான நாளில் தெரியாது
அவன் என் உயிர்த் தோழன்
ஆவானென்று.
பள்ளியின் இறுதி நாளில் 
நினைக்கவில்லை 
அன்றுடன் அவனுடனான 
நட்பு முடியுமென்று.
முறிந்த என் கிளையில் 
அமர்ந்தால் அது உடைபடுமே  
என்று வருந்தாதே.
உடைபடாதவாறு அமர்  என 
நான் சொல்லப்போவதில்லை.
ஆனால் அதை நீ 
உணர்ந்திருக்க வேண்டும்.
 
**** நண்பர்கள்தின வாழ்த்துக்கள் என்னைத் தொலைத்தவர்களுக்கும், நான் தொலைத்தவர்களுக்கும் சேர்த்தே ****
 
 

Friday, August 2, 2013

என்னுள் தேயும் கடவுள்



வளர வளர
என்னுள் இருக்கும்
தெய்வம் வெளியேறிக்கொண்டிருக்கிறார்.
இன்னும் சிறிது
நாட்களில்
பரிபூரண சுதந்திரம்
எனக்கும் அவருக்கும்!
 

 
 

Thursday, August 1, 2013

எனது Engliஷ் Vingliஷ்




     சில மாதங்களுக்கு முன்பு "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படம் பார்த்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஆங்கில மொழி அறியாமையை பற்றிய கதை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்த பின்புதான் தெரிந்தது ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவியின் அங்கீகாரமின்மைதான் கதைக்கரு என்று.

     எல்லாக் குடும்பத் தலைவிகளைப் போன்றே விடியும் சசியின் காலைப் பொழுதும். தனக்கான தேநீர் அருந்துவதற்குள்ளாகவே அடுத்தவரின் தேவையை நிறைவேற்ற வேண்டிய சூழல். கணவன், மகள், மகன், மாமியார் என அழகான குடும்பம் இருந்தும், சரியான ஆங்கில மொழியறிவு தெரியாததால் அவளை கேலி செய்கிறார்கள். ஆனாலும் அவளுக்கான உலகம் - அவள் தன் கைப்படவே செய்து விற்கும் லட்டு - பெரும் திருப்தியளிக்கிறது. ஒருநாள் சசியின் அக்கா மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், சசியை மட்டும் முதலில் அவர்கள் வசிக்கும் அமெரிக்காவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.


     எனக்கு இருவிதமான அனுபவங்களும் உண்டு - ஆங்கில அறிவின்மை மற்றும் குடும்பத் தலைவியை  அவமதித்தது. நான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி முறையில் பயின்று வந்தேன். மகனுக்கு நல்ல கல்வி அளித்துவிட வேண்டும் என்கிற காரணத்தினாலேயே எங்கள் நகரத்திலிருந்து பதினைந்து கி.மீ தொலைவிலுள்ள ஒரு நல்ல பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையில் அப்பா என்னை  சேர்த்து விட்டார். பள்ளியின் முதல்நாளன்றே என் வகுப்பிற்கு வந்து, அந்த வகுப்பாசிரியரிடம் நான் தமிழ் வழிக் கல்வி முறையில் பயின்று வந்துள்ளேன் என்றும், அதனால் என் மீது தனிக் கவனமளிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

     முதல்நாளின் முதல் இடைவேளை முடிந்து வகுப்புக்கு சென்றால், எனக்கு முன்னதாகவே  அந்த ஆசிரியை வகுப்பில் இருந்தார். "மிஸ் மிஸ்", என இருமுறை அழைத்தேன். என்னிடம் வந்தவர், "May I come in, miss ?" என கேட்க வேண்டுமென சொல்லிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அந்த வகுப்பிலுள்ள அனைவரையும் பார்த்து என் நிலைமையை சொல்லி எனக்கு மற்ற மாணவர்கள் உதவ வேண்டுமெனவும் கட்டளை இட்டார்.

     அன்றே மாணவர்கள் என்னிடம், " நீ hosteller ஆ? dayschollar ஆ ?" என வினவினர். hostel என்கிற வார்த்தை புரிந்தமையால் மற்றொரு வார்த்தையான dayschollar எனச் சொன்னேன்.

     பள்ளிக்கு அரசுப் பேருந்தில்தான் தினமும் சென்று வருவோம்.  பேருந்து பயணத்தின் தொடக்க இடத்திலேயே நாங்கள் ஏறிக்கொள்வோம். நாங்கள் செல்லும் அதே பேருந்தில்  சுமார் இருபத்தைந்து வயது உள்ள ஒரு அண்ணனும் வருவார். பொதுவாக நாங்கள் வரும் முன்னரே அந்த பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பார். ஆனால் அன்று சற்றே தாமதாமாக வந்தார். கொஞ்சம் நொண்டியவாறே நடந்து வந்தவரைப் பார்த்து,"என்னண்ணா கால்ல ஏதாவது அடிபட்டுடுச்சா?", என்று கேட்டேன். அவர் மெல்லிய புன்னகையுடன்,"இல்ல தம்பி நான் handicapped" என்றார். நான் சற்றும் யோசிக்காமல்,"அப்படினா என்னண்ணேன்?" என்று கேட்டேன். அருகிலமர்ந்திருந்த நண்பன் சற்றே கோபமான தொனியில்,"வாய மூடுடா" என்று காதில் அவ்வார்த்தைக்கு அர்த்தம் சொன்னான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப்பார்த்து மன்னிப்பு கேட்டேன். அவர் புன்னகையையே பதிலாக தந்தார்.


     இரண்டாவதாக, பல முறை அம்மாவின் மேல் கோபப்பட்டுள்ளேன்; காயப்படுத்தியுள்ளேன். பனிரெண்டாம் வகுப்பு முடித்தபின்னான கோடை விடுமுறை. அப்போது அப்பா வேறொரு ஊரில் பணி செய்துக் கொண்டிருந்தார். குடும்பத்துடன் ஊர் மாறிச் சென்றால் என் படிப்பு பாதிக்கப்படுமே என்று என்னையும் அம்மாவையும் விட்டுவிட்டு தான் மட்டும் அங்கு சென்றார். நான்  காலையில் எழுந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு விட்டு வெளியே சென்றால் எப்போது வீட்டுக்கு  வருவேன் என்று  எனக்கேத் தெரியாது. அன்றும் அதுபோலவே மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்து என்ன உணவு என்று அம்மாவிடம் கேட்டேன். பதிலளித்த அவரிடம் ஏன் வேறொரு சமையல் செய்யவில்லை  என்று கத்தினேன். "உன் மனசுல என்னதான்டா நினச்சுகிட்டு இருக்க? ஏதோ boarding & lodging மாதிரி நெனச்ச நேரத்துக்கு வர; போற. கொஞ்சம் கூட  நல்லா இல்லைடா" என எரிமலையாக வெடித்தார். இப்போதும் எங்களுக்கு பரிமாறிவிட்ட பின்னரே தான் சாப்பிட அமருவார். அப்படி நாங்கள் சாப்பிட்ட பின்னர் எதுவும் இல்லாத சமயங்களில் மீதமுள்ள காய்கறிகளையோ, பாலையோ சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுவார்.

     புத்தகங்களில்  என்னைத் தொலைக்க ஆரம்பித்த நாட்களில், "கதவுகளுக்கு பின்னே கண்ணீர் பதிவுகள், நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்" என்கிற பெண்கள் சார்ந்த இரு புத்தகங்கள் வாங்கி வீட்டுக்குச் சென்றேன். புத்தகத்தை எடுத்துப் பார்த்த அம்மா "ச்!" என்ற அலுப்புடன் கீழே போட்டார். அது எத்தனை வருடத்திற்கானது என்பதை என்னால் உணர முடியவில்லை.


      இப்படத்தில் சசி ஆங்கிலம் பயிலும் இடத்தில் உடனிருக்கும் ஒரு பிரஞ்சுக்காரன் அவளிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசுவான். அப்போது அருகிலிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அக்கா மகள்,"சித்தி, he really likes you. உங்கள்ளுக்கும் அவர.. ?" என்பவளை ஒரு வெற்றுப்புன்னகையுடன் சசி,"எனக்கு காதலெல்லாம் தேவையில்லை. தேவைனா கொஞ்சம் மரியாதைதான்" என்பாள்.

     அதுதானே எல்லோரது தேவையும்!!!