Sunday, March 9, 2014

நிஜமென்பதும் பொய்யே... [சிறுகதை]


ன்று சனிக்கிழமை என்பதால் சற்று தாமதமாக எழுந்திருக்கலாம் என நினைத்து உறங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் காயத்ரியோ காலை 8 மணிக்கே என்னை எழுப்ப ஆரம்பித்துவிட்டாள்.

"ஏங்க கொஞ்சம் எழுந்திரிங்க. வேலை இருக்கு", என்றாள்

"இப்ப என்னம்மா வேலை?" கண்கூட திறக்காத நிலையில் கேட்டேன்.

"என்ன நேத்து சொன்னத அதுக்குள்ள மறந்துடீங்களா? உங்க அப்பா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அவரு ரூம்ல இருக்குற புஸ்தகங்கள், டைரி இதெல்லாம் பார்த்து சரி கட்டுங்கனு நானும் எத்தனை மாசமா சொல்லிட்டு இருக்கேன்" என்று என்னை எழுப்பி குளியலறைக்குள் தள்ளினாள்.

அவள் சொல்வதுமென்னவோ உண்மைதான். அப்பா ஒரு புத்தகப் புழு என்று சொன்னால் அது மிகச் சாதாரணம். அவர் ஒரு புத்தக மலைப்பாம்பு என்றால் தகும். தன் அறையில் தனக்கான உலகத்தை சிருஷ்டித்து வைத்திருந்தார். அறை முழுவதும் அலமாரிகள். அதிலனைத்தும் சிறிதும் பெரியதுமாக புத்தகங்கள். அறையின் நடுவில் படுக்கை விரித்து படுத்துக் கிடப்பார் - அவரைச் சுற்றியும் புத்தகங்களாக.

அம்மா நான் கைக் குழந்தையாக இருந்தபோதே தவறிவிட்டதால், என்னை பராமரிக்கும் முழு பொறுப்பும் அப்பாவுடையதாயிருந்தது. அதனால் அவருக்கும் என்னை கவனிக்கவே சரியாக இருந்தது. உண்மையை சொல்வதானால் நான் பள்ளி முடிக்கும் வரை அவர் நாளிதழ், வாரயிதழோடு தன் வாசிப்பை நிறுத்தியிருந்தார். ஆனாலும் அவர் புத்தகம் வாங்குவதை விடாமல் தொடர்ந்தார்.

நான் கல்லூரி சேர கோயம்புத்தூர் செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் சென்னையில் தனியாக இருந்தார். நான் செமஸ்டருக்கு இருமுறை வீட்டுக்கு வந்து செல்வேன். நான் முதல்முறை வந்தபோது எனக்கு அத்தனை அதிர்ச்சி. மாடியில் இருந்த இரு அறைகளையும் புனரமைப்பு செய்து சிறு நூலகமாகவே மாற்றியிருந்தார்.

"என்னப்பா?" என்று கேட்டதற்க்கு, "இல்லடா! நீயும் இல்ல. நானும் வாங்கின புஸ்தகங்களையெல்லாம் இப்பதான் படிக்க முடிஞ்சது. இனிமேலும் வாங்கற புஸ்தங்களையும் சரியா வச்சுகுனும்ல?" என்றார்.

நானும் எதுவும் சொல்லவில்லை. அவர் விருப்பமென்று விட்டுவிட்டேன். மற்றவர்கள் போலல்லாது பிறரது கருத்துக்கு பெரிதும் மதிப்பளிப்பார், அது குழந்தையாக இருந்தாலும்கூட. என் விருப்பங்கள் எதிலும் தலையிடாதவர். அவருக்கு என் விருப்பம்மேல் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வார். என் பதிலை வைத்தே நான் எடுத்த முடியில் எத்தனை தெளிவாக இருக்கிறேன், எவ்வளவு ஞானம் எனக்கு அதிலுண்டு என்பதை கணித்துவிடுவார்.

அப்பாவுக்கு ஒரு பழக்கமுண்டு. தான் வாசித்ததில் பிடித்த வரிகளை தனியாக ஒரு டைரியில் எழுதி வைப்பார். புத்தகத்தில் தன் பெயர், அதை வாங்கிய தேதி மட்டுமே எழுதப்பட்டிருக்கும். புத்தகத்தை அவ்வளவு நேர்த்தியாக பராமரிப்பார்.

குளித்து முடித்து வரும்போது இட்லி தயாராக இருந்தது. டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

"ஏங்க! அவ்வளவு புஸ்தகத்தையும் என்ன பண்ணப் போறீங்க?"

"நம்ம பக்கத்து தெருவுல ஒரு அனாதை ஆசிரமம் இருக்குல்ல, அங்க இருக்குற மேனஜர்ட பேசிருக்கேன். அவரும் ரொம்ப சந்தோசமா கொண்டுவாங்கனு சொல்லிருக்கார்"
அப்பாவும் அதைதான் விரும்பினார். ஆம், அவர் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர். தன் அயராத உழைப்பினால் முன்னேறி அம்மவை காதல் திருமணம் செய்து கொண்டவர். அம்மாவும் இறந்த பிறகு என் தாய் வழி சொந்தங்களிடம் உறவாட முடியாத நிலை.

சாப்பிட்டு முடித்து அப்பா அறைக்கு சென்றேன். நல்லவேளை அவர் ஒன்றும் எனக்கு பெரிதாக வேலை வைக்கவில்லை. அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை அட்டைப் பெட்டிக்குள் போட்டு கயிறு கட்டி வைக்க வேண்டும். அவ்வளவுதான். ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அந்த அலமாரி முழுக்க எடுத்த பிறகுதான் அங்கே ஒரு டைரி இருந்தது கண்ணில்பட்டது. திறந்து பார்த்தேன். "லோகனாதன் (BE EEE)" என அப்பா பெயர் இருந்தது. அது அவரது நண்பர்கள் கல்லூரி முடிந்தவுடன் அப்பாவுக்கு எழுதிக் கொடுத்தது போலும்.

அப்படியே அங்கமர்ந்து அதை படிக்க ஆரம்பித்தேன். அப்பா எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு இருப்பவரென்பது அப்போதிருந்தே என்று உணர முடிந்தது. அதேபோல் எல்லாரும் அதில் குறிப்பிட்டிருந்த ஒரு பெயர் - லக்ஷ்மி - என் அம்மாவின் பெயர். நான் எத்தனை முறை கேட்டும் அப்பா அவரின் காதல் கதையை என்னிடம் சொன்னதில்லை. என்னக்கோ அம்மாவின் பெயரை அந்த டைரியில் பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படியே படித்துக் கொண்டு வருகையில் அந்த பக்கத்தில் அம்மா எழுதியிருந்தார்.

திப்பிற்குரிய லோகனாதனுக்கு,
உங்களைக் கண்டு நான் வியக்காத நாளில்லை. நீங்கள் யாரிடமும் அதிகம் பேசாதவர். எப்போதும் முகத்தில் தவழ்கிற புன்னகை. பிறருக்கு உதவும் மனப்பான்மை. உங்களின் அயராத உழைப்பு. எல்லவாற்றுக்கும் மேலாக உங்களின் கவிதைக்கு நான் பரம விசிறி. படிக்கும்போதே part time -ஆ வேலைக்குப் போய் உங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொள்வது இப்படிப் பற்பல எனக்கு உங்களிடத்தில் பிடிக்கும். இத்தகைய குணாதிசயங்கள் உள்ள ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காமலிருந்தால்தான் ஆச்சரியம். எனக்குத் தெரியும் நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று. நீங்கள் சொல்லாவிடிலும் உங்கள் நண்பர் சக்திவேல் என்னிடம் சொல்லிவிட்டார். எனக்கு உங்களிடம் நேரில் சொல்லத் தயக்கம். அதனால்தான் இந்த டைரியின் மூலமாக சொல்கிறேன். நான் எங்கள் காலனியில் இருக்கும் இன்னொருவரை விரும்புகிறேன். என் படிப்பு முடிந்ததும் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து பேசுவதாக சொல்லியிருக்கிறார்.

லோகு, தயவு செய்து என்னை மன்னிக்கவும். நீ'ங்கள் என்னை புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு,
லக்ஷ்மி.

னக்கு தலை சுற்றியது. இது என்ன புதுக் கதை? பிறகெப்படி அப்பா அம்மாவை மணந்துகொண்டார். என் மனம் ஒரு நிலையிலில்லை. எண்ணம் தறிகெட்டு ஓடத்துவங்கியது. இதுகுறித்து தெளிவுபெற வேண்டுமானால் நான் அனந்து மாமாவைத்தான் நாட வேண்டும். அவர் அப்பாவின் பள்ளித் தோழர். அப்பாவுக்கு 40 ஆண்டுகால பழக்கம். அப்பாவுக்கு ஏதேனும் மனம் சரியில்லையென்றால் அவரைத்தான் பார்க்கப் போவார்.

உடனே அந்த டைரியை எடுத்துக் கொண்டு அவரைச் சந்திக்க தாம்பரத்திற்கு சென்றேன். நான் அவர் வீட்டுக்கு சென்று உள்ளே நுழைந்தபோது அவர் திண்ணையிலமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.

"மாமா"

"வாப்பா ராஜு. என்ன இவ்வளவு தூரம்? வீட்ல யாரும் இல்லாத நேரமா பார்த்து வந்திருக்க."

நான் அமைதியாக இருப்பதைப் பார்த்தவர், "என்னடா? ஏதும் பிரச்சனையா?" என்றார்.

மெதுவாக அவரிடம் டைரியை நீட்டினேன்.

"என்ன இது?" என்றவாறு வாங்கி அதைப் பிரித்து படிக்க ஆரம்பித்தார். அவர் முகபாவனை மாறுவதை என்னால் உணர முடிந்தது. படித்து முடித்தவுடன் பெருமூச்சு விட்டபடி
தரையைப் பார்த்தவாறே இருந்தார்.

"மாமா! உங்களுக்கு தெரியாம எதுவும் இருக்காது. அப்படி என்னதான் நடந்தது? சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரியல".

சற்றே கலங்கியபடி பேசத்துவங்கினார், "ம்ம், எனக்குத் தெரியும். எது உனக்குத் தெரியக்கூடாதுனு உங்க அப்பன் இத்தனை வருஷம் மறைச்சு வச்சிருந்தானோ இப்ப அதை தெரிஞ்சுக்கவே நீ வந்துருக்க. நாங்க ஸ்கூல் முடிஞ்சு அடுத்து காலேஜ் சேர காத்திருந்தோம். உங்க அப்பா annual exam ல நல்லா மார்க் வாங்கியிருந்ததனால அவனுக்கு சென்னை college of enginneering ல மெரிட்ல சீட் கிடச்சது. அங்கதான் அவன் உங்க அம்மாவ பார்த்தான். அவளை அவனுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ஆனா, அவனுக்கு அவகிட்ட தன் காதலை சொல்ல ரொம்பவே தயக்கம். ஏனா, இவனே ரொம்ப கஷ்டப்படுறவன். இதுல எப்படி அவகிட்ட போய் எப்படி சொல்றதுனு இவனுக்குத் தெரியலை. சரி, காலேஜ் முடிச்சுட்டு ஒரு வேலை வாங்கிட்டு அவங்க வீட்லயே போய் பொண்ணு கேட்கலாம்னு நாந்தான் அவனை சமாதானப்படுத்தி வச்சிருந்தேன். ஆனா அதுக்குள்ள இப்படி ஒரு இடி வந்திறங்கிச்சு."

"இதுக்கு நடுவுல அந்த பொண்ணு வீட்லயும் அவங்க காதல் விஷயம் கேள்விப்பட்டு ஒரே பிரச்சனை. அப்புறம் உங்க அப்பாதான் அவங்க ரெண்டுபேரையும் register office கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிவச்சு அவங்களை நான் அப்ப வேலை பார்த்துட்டு இருந்த ஊரான நெய்வேலிக்கு அனுப்பி வச்சான். அடுத்த ரெண்டு வருஷம் வரைக்கும் எல்லாம் சரியாதான் போய்கிட்டு இருந்தது."

"ஒருநாள் உன்னை பக்கத்து வீட்ல விட்டுட்டு எங்கேயோ வெளிய போயிருக்காங்க. அப்பதான் ஒரு லாரி இடிச்சு அவங்க ரெண்டு பேரும் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க."

நான் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"விஷயம் கேள்விபட்டு நான் உங்க அப்பாவுக்கு தந்தி கொடுத்தேன். அவனும் உடனே கிளம்பிவந்தான். அப்புறம் அவங்களுக்கு காரியமெல்லாம் முடிச்சவுடனேதான் எங்களுக்கு நீயிருந்ததே உறைச்சது. என்ன பண்ணலாம்னு நான் அவங்கிட்ட கேட்டபோது, அவன் தானே உன்னை வளர்க்கிறதா சொன்னான். நான் அது கஷ்டம், பேசமா உன்னை உங்க தாத்தா பாட்டி வீட்லேயே குடுத்தடலாம்னு எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் கேக்கலை."

நான் அங்கிருந்த ஷோஃபாவில் சாய்ந்து அழ ஆரம்பித்தேன். மெதுவாக எழுந்து உள்ளே சென்றவர் சில நிமிடங்கள் கழித்து ஒரு பையுடன் வந்தார்.

"அழாத! கண்ணை தொடச்சுக்கோ. நீ அவனோட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கனு நெனச்சு பெருமை படு. இந்தா, உனக்கு தெரியக் கூடாதுனுதான் இந்த டைரியை எல்லாம் அவன் எங்கிட்ட கொடுத்து வச்சிருந்தான். இனிமே இது எங்கிட்ட இருக்கறதில்ல ஒரு பிரோஜனமுமில்ல."

அதிலிருந்த ஒரு டைரியைப் பிரித்துப் பார்க்கையில் "நினைவுகளின் சுமை தாங்காமல்தான் தினமும் துயில் கொள்கிறேன்" என எழுதியிருந்தார் அந்த மாமனிதன்!!!