Tuesday, May 31, 2011

மறதி

மறந்தவை அனைத்தும் 
மறந்தவை மட்டுமல்ல;
மறக்கப்பட்டவையும் தான்.

Saturday, May 21, 2011

வாழ்தல் ஒரு கலை - VII

     
     இங்கே யாரும் தனி மனிதர்கள் இல்லை. ஆனால், தனி மனிதர்களாகிய சிலருக்கு தேவை சிறு மனிதம். இந்த பரந்த விரிந்த உலகில் நாம் தினமும் பலரைக் கடக்கிறோம். அவர்களுள் சிலருக்கு நம் இருப்பு அல்லது உதவியோ தேவைப்படும். நம் வாழ்கைப் பயணம் என்பது நம்முடையதாய் மட்டும் இருக்கலாம். ஆனால், நம் ஊர்தியில் வேறு சிலரும் பயணம் செய்யக் கூடும். அல்லது அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு நாம் உதவ வேண்டும்.
      "உதவின்னு கேட்டா இன்னிக்கு எவங்க செய்யறான்?" - நாம் பலரும்  கடந்து வந்த கேள்வி. உண்மைதான். சில உதவிகள் மற்றவர் கேட்க நாம் செய்வது. மற்றும் சிலதோ மற்றவர்கள் கேட்காமலே நாமாக முன் சென்று செய்வது. 
"தன்னை அறிதல் தான் -ஜென் தத்துவம்-னு" சொல்வார்கள். என் சென்னை வாழ்க்கையும் அப்படிதான். கூட்டை பிரிகிற பறவைக்குத்தானே வானம் சொந்தம். அதுபோல கல்லூரியில் சேர்வதற்காக என் மண்ணை  விட்டு சென்னை வந்தேன். சென்னை - ஒரு விசித்திர நகரம். ஒரு மனிதனை  சாமரம் கொண்டு   வரவேற்கும். மற்றொருவனை காட்டில் வாழும்  உயிர் பயம் கொண்ட தாவர உண்ணி போல அலைக்கழிக்கும். மாணவன் ஆனதால் முதல் பிரிவில் சென்னை என்னை சேர்த்துக் கொண்டது. 

      
     அங்கே நான் இருந்த ஒவ்வொரு நாளும் என்னை நானே  வேறு கோணத்தில் உணர ஆரம்பித்தேன். அந்த ஊரில் தான் எத்தனை எத்தனை மனிதர்கள். தேடல் பொருட்டு சிலர், தேவை பொருட்டு சிலர், வாழ பொருட்டு சிலர், வாழ்கையை தொலைத்து சிலர் என அது ஒரு தனி உலகம். அங்கே உள்ள மின்சார ரயில் என்பது வெறும் ஊர்தி அல்ல; போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் வாழ்வின் ஏதோ ஒரு அர்த்தத்தை உணர்த்திச் செல்லும். "எல்லா பயணங்களும் தன் லட்சியத்தை  அடைவதில்லை. ஆனால் - ஏதோ  ஒன்றை கற்றுத்தரும்.

      "எது உதவி?". ஒருவர் தேவை பொருட்டு மற்றொருவர் மனமுவந்து அவருக்கு உதவுவது. எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது ஒருவர் என்னை நாடி உதவி என்று கேட்டால், அவர் மறைபொருளாக என்னை நம்புகிறார் என்று. அதற்காகவே என்னை நாடி வந்தால் மறுயோசனை இன்றி உதவ முற்படுவேன். ஆனால் - சிலரோ உதவி கேட்க தயங்கி நிற்பார்கள். நாமாக முன் சென்று உதவ வேண்டும் - பேருந்தில் பெரியவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கை தருவது போல. தெரு ஓரத்தில் சாப்பாடு விற்கும் சாமானியனின் சோற்றின் தரம் மேல் எனக்கு ஆயிரம் கேள்வி இருந்தது (தரத்திற்கு ஏற்ற விலை குறித்தும்). சென்னை எனக்கு சொன்னது, "அது ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு செய்யும் சேவை!" என்று.

      
     ஒரு பெரியவர் கலிபோர்னியா கடற்கரையின் வழியாக வண்டியில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு சிறுவன் கடலினுள் ஏதோ ஒன்றை கீழிருந்து எடுத்து தூக்கி எரிந்துக் கொண்டிருந்தான். அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வரும் போதும் அந்த சிறுவன் அவ்வாறே செய்துக் கொண்டிருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை. உடனே, வண்டியில் இருந்து இறங்கி அவனிடமே சென்று, "என்ன செய்கிறாய்?" எனக் கேட்டார். அவன்," இதோ இந்த உடுமீன்கள் (star fishes) வழி தவறி கரைக்கு வந்து விட்டன.அதனால் அவற்றை கடலிடமே எரிந்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். பெரியவர் சிரித்துக் கொண்டே, "இந்த உலகில் எவ்வளவோ உடுமீன்கள் உள்ளன. நீ எரியும் சில மீன்களால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?" என்றார். சிறுவனோ மென்மையாக, "உண்மைதான். ஆனால் நான் எரியும் இந்த ஒரு மீனின் வாழ்விலாவது மாற்றம் நிகழும்" என்று தன் பணியை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
       
      நாம் அனைவரும் முழு நேர அன்னை தெரேசா ஆக முடியாது என்பது உண்மை தான்.ஆனால், பகுதி நேர தெரேசா ஆக வழ முடியுமே!

Wednesday, May 4, 2011

வாழ்தல் ஒரு கலை - VI

    
     ஒரு மனிதன் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளுள் ஒன்று, அவன் பணி செய்ய வேண்டிய துறையை தேர்ந்தெடுப்பது. ஏனென்றால், ஒருவனது வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை அவன் பணி சார்ந்தே வாழ நேரிடுகிறது. விருப்பமில்லாத துறையில் எந்த ஒரு மனிதனாலும் அத்தனை நாள் நீடிக்க  முடியாது. முந்தய தலைமுறைக்கு தன் விருப்பமான  துறையை தேர்ந்தெடுப்பது சற்று சவாலான விஷயமே. காரணம், அக்காலத்தில் இருந்த குறுகிய வாய்ப்பு, அறியாமை மற்றும் புது துறையில் தன் பிள்ளையை வைத்து பரிசீலனை செய்ய பெற்றோருக்கு இருக்கும் தயக்கம் எனப் பற்பல.

     ஆனால், இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலான தடை கற்கள் ஏதும் இருப்பதில்லை, சக போட்டியாளர்களைத் தவிர. இருந்தாலும் சில குடும்பங்களில் உள்ள புரிதல் குறித்த பிரச்சனைகளையும் மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தையுடன் ஒரு ஆசையும் , கனவும் வளர ஆரம்பிக்கிறது. கனவு - குழந்தையுடையது. ஆசை - பெற்றோருடையது. பெரும்பாலும் ஆசை - கனவு எனும் போராட்டத்தில் கனவு   
நசுக்கப்படுவது வன்சோகமே. ஆனாலும் கனவுகளுக்கு அழிவில்லை என்பதனால் அது வேறு அவதாரம் எடுத்து தன்னை நிரூபித்துக் கொள்கிறது. 
எல்லோருடைய கனவுகளும் மறுவடிவம் ஏற்பதில்லை. அப்பேர்பட்டவுனுடைய வாழ்வை அவனாக வடிவமைத்துக் கொள்வதை தவிர வேறொரு வழியும் இல்லை.

     நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள போராட துப்பிலாமல் தன்னைத்தானே  சமாதானப்படுத்திகொள்ளும் லட்சோப லட்சம் பேரில் நானும் ஒருவன். எனது விருப்ப பாடத்தை எடுக்க எதிர்ப்புகள் ஆயிரம் வந்த போதிலும் அதை எதிர்த்து போராட முடியாத என் கையாலாகாத தனத்தை பழியாக மற்றவர் மேல் போட என் மனம் இதுவரை சம்மதித்ததில்லை என்பது எனக்கே என்னால் ஏற்பட்ட மிகப் பெரிய ஆறுதல். என் கனவுகளின் எதிர் திசையில் மிக வேகமாக ஓடலானேன், பலன் - அந்த திசையில் கிடைக்க வேண்டிய சாதாரண அங்கீகாரம் அல்லது வெற்றியின் நிழற்குடையின் கீழ் இளைப்பாற கூட இடம் கிடைக்காமல் போனது. அதிலும் ஒரு நன்மை நடந்தது. என்னை பற்றிய மற்றவர்களின் உண்மையான எண்ணத்தை அறிய ஒரு வாய்ப்பாய்  அமைந்தது. இயக்குனர் பாக்யராஜ் ரேடியோ மிர்ச்சியின் விளம்பரத்தில் சொல்லுவார், " ஒரு மனுஷன் தொடர்ந்து ஜெய்ச்சிட்டே இருந்தா மக்களுக்கு சந்தேகம் வந்துடும். அவனுக்கு அதிஷ்டம் ஜாஸ்தி, அதனால தான் அவனால தொடர்ந்து ஜெய்க்க முடியுதுனு சுலபமா சொல்லிடுவாங்க. ஆனா, அவன் ஒரு தடவை கீழ விழுந்து அப்பறம் ஜெயச்சான்னா, மக்கள் ஒத்துக்குவாங்க அவன் ஜெய்க்கிறது திறமையால தான்னு". என் வாழ்வில் நான் அனுபவித்த உண்மை. அதே சமயம் தத்துவங்களை படிக்கும்போது ஏற்படும் அனுபவத்திற்கும், அதை வாழ்ந்து பார்த்து உணர்வதற்கும் உள்ள இடைவெளியும் உணர முடிந்தது.    

     என் திசையை நான் அறிவேன். என்னையும் நான் அறிவேன். ஆனால் என்னை அறிந்தவரை நான் அறியேன். நான் ஆசைப்பட்ட பல நியாயமான விசயங்கள் கூட என் வசம் ஆனதில்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகமாகி இருக்கிறது. நம் ஆசைப்பட்ட விஷயங்கள் கிடைக்காத போது அதன் மதிப்பு இருமடங்காகி விடுகிறது என்பது கசப்பான உண்மையே!  

     எது நடந்தாலும் அதிலுள்ள நேர்மறை விஷயங்களை நீங்கள் பார்ப்பவராயின், நீங்கள் நரகத்தில் இருந்தாலும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.


     அந்த ஊரில் மண்பாண்டம் செய்பவனும், வைரப் பட்டறை வைத்திருப்பவனும் அருகருகே வசித்து வந்தார்கள். இருவருமே தங்கள் தொழிலை நூறு சதவிகிதம் உண்மையாய் செய்பவர்கள்.

     ஒருமுறை இருவரும் சந்தித்துக் கொள்ளும் போது பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். அப்போது வைரப்பட்டறை வைத்திருப்பவன் மற்றவனைப் பார்த்து, "உன் தொழில் எப்படி போகிறது?" என்றான்.

     அவனோ அலுத்துக்கொண்டு, "நல்லாத்தான் போகிறது. ஆனாலும் உன்னைப் போல் வெள்ளையும், சொள்ளையுமாக என்னால் இருக்க்க முடிய வில்லை. எப்போதும் சேறும், சகதியுமாக இருக்கிறேன்" என்றான்.
 
     முதலாமவனோ," உனக்கு என்னத் தெரியும் வைரத்தைப் பட்டைத் தீட்டும் போது எனக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி.." என அவர்கள் வாக்கு வாதம் வழுக்க ஆரம்பித்தது.

     அப்போது அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த ஞானியிடம் சென்று  மகிழ்ச்சியான வேலைதான் எது என முறையிட்டனர். அவர் புன்னகைத்துக் கொண்டே, "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்யும் வேலையைத் தவிர வேறேதேனும் வேலை தெரியுமா?" என்று கேட்டார். இருவருமே தத்தம் வேலைகளை மட்டுமே தெரியும் என்றனர்.

     "உலகிலேயே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.

      "எங்கள் வேலைக்கே மதிப்பிலாமல் போய்விடும்!", என்று பயத்துடன் சொன்னார்கள்.

     "அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" எனக் கேட்டார் ஞானி.

     "களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல பளபளக்க செய்வதும் தான்" என்றனர் இருவரும்.

     "உலகில் குறைகள் இருப்பதனால் தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்த திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரியதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரியதாக நினைக்கிறீர்கள்." என அறிவுறுத்தினார்.

      நான் மிகவும் ரசித்த கவிதை:-
"வளர்பிறையும் 
 தேய்பிறையுமாய்
 வாழ்க்கை.
 ஆனால் 
 பிறப்பென்னவோ
 பவுர்ணமிக்குத்தான்."
     

Monday, May 2, 2011

நான்

சிக்கலே  இல்லாத 
வாழ்வில்
 சிக்கித் தவிக்கும் 
மனிதன் 
நான்!