Wednesday, December 25, 2013

நிலவின் ரகசியம்


நிலவு மட்டுமே
அறிந்த ரகசியம் - 
அதன் முழுமை என்பது 
பௌர்ணமி மட்டுமன்று 
அமாவாசையும்தான் என்பதை.







Wednesday, December 18, 2013

காதல் குமிழிகள்


உன்னிடம் 
சேர்ப்பிக்க முடியாத
கடிதங்கள் -
எப்போதுமே
உடையாத
ஞாபகக் குமிழிகள்.


Saturday, December 14, 2013

உன்னை ஏன் காதலிக்கிறேன் ?


என்னை ஏன் காதலிக்கிறாய் 
எனக் கேட்கிறாய்.
உன்னைக் காதலிக்காமல் 
இருந்தால்தான் அதிசயம் என்கிறேன்.


Monday, December 2, 2013

உருவாகும் அடிமைத் தலைமுறை


என் தாத்தா ஒரு முதலாளி.
என் அப்பா ஒரு கடை நிலை ஊழியன்.
என்னை அடிமையாக்க முயற்சி செய்கிறார்கள்.
என் மகன் அடிமையாக்கப்படுவான்.
என் பேரன் அடிமையாகவே பிறப்பான்.


Sunday, November 10, 2013

காதல் மொழி



பேச ஆரம்பித்த 
குழந்தை 
இன்னும் சைகை கொண்டு 
விளக்குவது போலதான்  
காதல்சொன்ன பின்பும் 
உன்னை நான் பின்தொடர்தலும்.


Sunday, November 3, 2013

ரகசியம் கட்டவிழ்க்கும் நேரம் [சிறுகதை]


சுரேஷ், அனிதாவிற்கு திருமணமாகி ஆறு மாதங்களாகியிருந்தன. அவனுக்கு அவளிடம் சொல்ல ஒரு விஷயம் இருந்தது. ஆனால் அதை சொல்ல ஒரு தயக்கம். ஏனென்றால், அது நிச்சயம் ஒரு நாள் அவள் இல்லத்திற்கும் தெரிய வரும். அது குறித்தே அவன் கவலையனைத்தும். இப்பொழுது அதை சொல்லியேயாக வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு.

அனிதா படுக்கை அறையில் துணி மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளை அழைத்த சுரேஷ், மெல்லிய குரலில், "அனிதா, ரொம்ப நாளா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு இருந்தேன். ஆனா, இப்ப தான் அதுக்கு சரியான நேரம் வந்திருக்கு. கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டான்.

அவளும் புன்னகைத்தவாறே,"சொல்லுங்க" என்றாள்.

"அக்ச்சுவலா, இந்த விஷயத்த நமக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி உங்கிட்ட சொல்லைலனாலும், அட்லீஸ்ட் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்லயாவது நான் சொல்லி இருக்கணும், பட் டிலே பண்ணிட்டேன். சாரி"

அவள் சற்றே பயத்துடனும் பதட்டத்துடனும், "என்னங்க? பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்க" என்றாள்.

"இந்த விஷயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். ஏன், எங்க சொந்தகாரங்களுக்குக் கூட தெரியும். அவங்க சொல்லி உனக்கு தெரியறத விட நானே சொன்னா பெட்டரா இருக்கும்னு நெனைக்குறேன்"

அவள் சற்றே கலவரமானாள்.

"அது மட்டும் இல்லாம இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரியக் கூடாது. அப்படி தெரிஞ்சா அதை விட ஒரு அவமானம் வேற எதுவுமே எனக்கு இல்லை. அதனால இந்த விஷயத்த யார்கிட்டயும் சொல்ல மாட்ட, குறிப்பா உங்க வீட்டுக்குனு எனக்கு நீ சத்தியம் பண்ணனும்."

அவள் அஞ்சியவளாக,"என்னனுதான் சொல்லித் தொலைங்களேன்" என்று கேட்பதற்கும், அவன் அலுவலக மேலாளரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்றவன் வெளியே சென்று பேசி முடித்து அறை திரும்ப அரை மணி நேரமானது.

திரும்பியவன் அவளைப் பார்த்தான். அழுது அழுது கண் சிவந்தவளாக அமர்ந்திருந்தாள்.

அவன் அவளருகில் சென்று அவள் கன்னத்தை தன் இரு கரங்களால் தாங்கியவாறு," இல்லம்மா, தப்பா நெனச்சுக்காத. எனக்கு பட்டாசுனா ரொம்ப பயம். இந்த வாரம் வேற நம்ம தலை தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு போறோம். எப்படியாவது உங்க வீட்டுக்கு தெரியாம என் மானத்த காப்பாத்திடு, ப்ளீஸ்!" எனக் கெஞ்சினான்.

கண்ணீரைத் தாண்டிய சிரிப்புடன், "ச்சீ.. போடா.." என செல்லமாக அறைந்து அவனைக் கட்டிக்கொண்டாள் அனிதா.




Saturday, November 2, 2013

இரவின் நீளம்


உறக்கமற்ற இரவுகளே 
உணர்த்துகின்றன 
ஒரு இரவு 
எவ்வளவு பெரியதென; 
எத்தனை துயரமானதென!




Friday, November 1, 2013

கிளைக்கும் ஆசைகள்


உதிர்தலுக்கு 
பழகியிருக்கிறதோ 
இல்லையோ 
கிளைப்பதற்கு
நன்கு பழகியிருக்கின்றன 
என் ஆசைகள்! 


Wednesday, October 9, 2013

என் உலகை சிதைத்தவர்கள்


நான் 
கனவுலகில் வாழ்கிறேன் எனக் 
குறை  கூறுபவர்களுக்கு  
எப்போது  தெரியப் போகிறது 
என் யதார்த்த  உலகை 
சிதைத்தவர்களில் அவரும்  ஒருவரென்று!  


Tuesday, October 8, 2013

சுயம் விரும்பி


அரிதாரமற்ற 
என்னை நீங்கள் 
நிராகரிக்கலாம்.
ஒரு நிலைக்கண்ணாடி  போதும் 
என்னை நேசிக்க
அல்லது பிரதிபலிக்க!



Sunday, October 6, 2013

காதல் யோகி


என்னை வெறுப்பவர்களையும்
நேசிக்கக் கற்றுக்கொடுத்தது
காதல்தான்!


Thursday, October 3, 2013

சுமைதாங்கி


மனம் - ஒரு 
சுமைதாங்கி 


Saturday, September 14, 2013

சிலுவைகளின் அணிவகுப்பு


பிரக்ஞையற்று செய்த 
தவறுகளின்  விளைவுகள் 
சிலுவைகளென 
ஒன்றன்பின் ஒன்றாக 
அணிவகுத்து 
நிற்கின்றன. 
கடைசி சிலுவையில் 
என்னை அறைகிற 
வேளையிலாவது 
சொர்கத்திற்கான திறவுகோல் 
கிட்டுமா என்று தான் தெரியவில்லை.


Sunday, September 8, 2013

பிரிவென்பது


பிரிவென்பது 
காதலின் உட்பிரிவு.   


Saturday, September 7, 2013

குழந்தையின் முத்தம்


பரிசுத்தமான அன்பெனப்படுவது  
கேட்காமலே தரப்படும் 
குழந்தையின் முத்தம். 






Sunday, September 1, 2013

வாழ்க்கை போதை




ஒருபோதும் புகைத்ததில்லை.
துளி மதுவையும்
சுவைத்ததில்லை.
எந்த பெண்ணின் தேகத்தையும்
தீண்டியதில்லை.
இருந்த போதிலும்
என்னைப் பித்தனாக்க
இவ்வாழ்வோன்றே போதும்!
 
 

Wednesday, August 7, 2013

மரித்த மனிதம்



மற்றுமொரு அவசரக் 
காலைப் பொழுது 
அலுவலகம் செல்ல.
என் வீட்டின் வெளியே
காயமடைந்த காகமொன்று 
வலியில் அலறிக்கொண்டிருந்தது.
செய்வதறியாத சககாக்கைகள் 
மரத்தின்மீதிருந்து துடித்துக்கொண்டிருந்தன.
சலனமற்று கடக்கிறேன் நான் - 
சகமனிதனின் விபத்தைக் 
கண்டுகொள்ளாததைப் போலவே. 


Saturday, August 3, 2013

தொலைந்த நட்பு

 


அறிமுகமான நாளில் தெரியாது
அவன் என் உயிர்த் தோழன்
ஆவானென்று.
பள்ளியின் இறுதி நாளில் 
நினைக்கவில்லை 
அன்றுடன் அவனுடனான 
நட்பு முடியுமென்று.
முறிந்த என் கிளையில் 
அமர்ந்தால் அது உடைபடுமே  
என்று வருந்தாதே.
உடைபடாதவாறு அமர்  என 
நான் சொல்லப்போவதில்லை.
ஆனால் அதை நீ 
உணர்ந்திருக்க வேண்டும்.
 
**** நண்பர்கள்தின வாழ்த்துக்கள் என்னைத் தொலைத்தவர்களுக்கும், நான் தொலைத்தவர்களுக்கும் சேர்த்தே ****
 
 

Friday, August 2, 2013

என்னுள் தேயும் கடவுள்



வளர வளர
என்னுள் இருக்கும்
தெய்வம் வெளியேறிக்கொண்டிருக்கிறார்.
இன்னும் சிறிது
நாட்களில்
பரிபூரண சுதந்திரம்
எனக்கும் அவருக்கும்!
 

 
 

Thursday, August 1, 2013

எனது Engliஷ் Vingliஷ்




     சில மாதங்களுக்கு முன்பு "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படம் பார்த்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஆங்கில மொழி அறியாமையை பற்றிய கதை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்த பின்புதான் தெரிந்தது ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவியின் அங்கீகாரமின்மைதான் கதைக்கரு என்று.

     எல்லாக் குடும்பத் தலைவிகளைப் போன்றே விடியும் சசியின் காலைப் பொழுதும். தனக்கான தேநீர் அருந்துவதற்குள்ளாகவே அடுத்தவரின் தேவையை நிறைவேற்ற வேண்டிய சூழல். கணவன், மகள், மகன், மாமியார் என அழகான குடும்பம் இருந்தும், சரியான ஆங்கில மொழியறிவு தெரியாததால் அவளை கேலி செய்கிறார்கள். ஆனாலும் அவளுக்கான உலகம் - அவள் தன் கைப்படவே செய்து விற்கும் லட்டு - பெரும் திருப்தியளிக்கிறது. ஒருநாள் சசியின் அக்கா மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், சசியை மட்டும் முதலில் அவர்கள் வசிக்கும் அமெரிக்காவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.


     எனக்கு இருவிதமான அனுபவங்களும் உண்டு - ஆங்கில அறிவின்மை மற்றும் குடும்பத் தலைவியை  அவமதித்தது. நான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி முறையில் பயின்று வந்தேன். மகனுக்கு நல்ல கல்வி அளித்துவிட வேண்டும் என்கிற காரணத்தினாலேயே எங்கள் நகரத்திலிருந்து பதினைந்து கி.மீ தொலைவிலுள்ள ஒரு நல்ல பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையில் அப்பா என்னை  சேர்த்து விட்டார். பள்ளியின் முதல்நாளன்றே என் வகுப்பிற்கு வந்து, அந்த வகுப்பாசிரியரிடம் நான் தமிழ் வழிக் கல்வி முறையில் பயின்று வந்துள்ளேன் என்றும், அதனால் என் மீது தனிக் கவனமளிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

     முதல்நாளின் முதல் இடைவேளை முடிந்து வகுப்புக்கு சென்றால், எனக்கு முன்னதாகவே  அந்த ஆசிரியை வகுப்பில் இருந்தார். "மிஸ் மிஸ்", என இருமுறை அழைத்தேன். என்னிடம் வந்தவர், "May I come in, miss ?" என கேட்க வேண்டுமென சொல்லிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அந்த வகுப்பிலுள்ள அனைவரையும் பார்த்து என் நிலைமையை சொல்லி எனக்கு மற்ற மாணவர்கள் உதவ வேண்டுமெனவும் கட்டளை இட்டார்.

     அன்றே மாணவர்கள் என்னிடம், " நீ hosteller ஆ? dayschollar ஆ ?" என வினவினர். hostel என்கிற வார்த்தை புரிந்தமையால் மற்றொரு வார்த்தையான dayschollar எனச் சொன்னேன்.

     பள்ளிக்கு அரசுப் பேருந்தில்தான் தினமும் சென்று வருவோம்.  பேருந்து பயணத்தின் தொடக்க இடத்திலேயே நாங்கள் ஏறிக்கொள்வோம். நாங்கள் செல்லும் அதே பேருந்தில்  சுமார் இருபத்தைந்து வயது உள்ள ஒரு அண்ணனும் வருவார். பொதுவாக நாங்கள் வரும் முன்னரே அந்த பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பார். ஆனால் அன்று சற்றே தாமதாமாக வந்தார். கொஞ்சம் நொண்டியவாறே நடந்து வந்தவரைப் பார்த்து,"என்னண்ணா கால்ல ஏதாவது அடிபட்டுடுச்சா?", என்று கேட்டேன். அவர் மெல்லிய புன்னகையுடன்,"இல்ல தம்பி நான் handicapped" என்றார். நான் சற்றும் யோசிக்காமல்,"அப்படினா என்னண்ணேன்?" என்று கேட்டேன். அருகிலமர்ந்திருந்த நண்பன் சற்றே கோபமான தொனியில்,"வாய மூடுடா" என்று காதில் அவ்வார்த்தைக்கு அர்த்தம் சொன்னான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப்பார்த்து மன்னிப்பு கேட்டேன். அவர் புன்னகையையே பதிலாக தந்தார்.


     இரண்டாவதாக, பல முறை அம்மாவின் மேல் கோபப்பட்டுள்ளேன்; காயப்படுத்தியுள்ளேன். பனிரெண்டாம் வகுப்பு முடித்தபின்னான கோடை விடுமுறை. அப்போது அப்பா வேறொரு ஊரில் பணி செய்துக் கொண்டிருந்தார். குடும்பத்துடன் ஊர் மாறிச் சென்றால் என் படிப்பு பாதிக்கப்படுமே என்று என்னையும் அம்மாவையும் விட்டுவிட்டு தான் மட்டும் அங்கு சென்றார். நான்  காலையில் எழுந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு விட்டு வெளியே சென்றால் எப்போது வீட்டுக்கு  வருவேன் என்று  எனக்கேத் தெரியாது. அன்றும் அதுபோலவே மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்து என்ன உணவு என்று அம்மாவிடம் கேட்டேன். பதிலளித்த அவரிடம் ஏன் வேறொரு சமையல் செய்யவில்லை  என்று கத்தினேன். "உன் மனசுல என்னதான்டா நினச்சுகிட்டு இருக்க? ஏதோ boarding & lodging மாதிரி நெனச்ச நேரத்துக்கு வர; போற. கொஞ்சம் கூட  நல்லா இல்லைடா" என எரிமலையாக வெடித்தார். இப்போதும் எங்களுக்கு பரிமாறிவிட்ட பின்னரே தான் சாப்பிட அமருவார். அப்படி நாங்கள் சாப்பிட்ட பின்னர் எதுவும் இல்லாத சமயங்களில் மீதமுள்ள காய்கறிகளையோ, பாலையோ சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுவார்.

     புத்தகங்களில்  என்னைத் தொலைக்க ஆரம்பித்த நாட்களில், "கதவுகளுக்கு பின்னே கண்ணீர் பதிவுகள், நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்" என்கிற பெண்கள் சார்ந்த இரு புத்தகங்கள் வாங்கி வீட்டுக்குச் சென்றேன். புத்தகத்தை எடுத்துப் பார்த்த அம்மா "ச்!" என்ற அலுப்புடன் கீழே போட்டார். அது எத்தனை வருடத்திற்கானது என்பதை என்னால் உணர முடியவில்லை.


      இப்படத்தில் சசி ஆங்கிலம் பயிலும் இடத்தில் உடனிருக்கும் ஒரு பிரஞ்சுக்காரன் அவளிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசுவான். அப்போது அருகிலிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அக்கா மகள்,"சித்தி, he really likes you. உங்கள்ளுக்கும் அவர.. ?" என்பவளை ஒரு வெற்றுப்புன்னகையுடன் சசி,"எனக்கு காதலெல்லாம் தேவையில்லை. தேவைனா கொஞ்சம் மரியாதைதான்" என்பாள்.

     அதுதானே எல்லோரது தேவையும்!!!





 

Saturday, July 27, 2013

கணினியும் நானும் ( தொடர் பதிவு )



     தொடர்பதிவுக்கு அழைத்த G M பாலு சாருக்கு நன்றி.

     பத்தாம் வகுப்பு வரை கணினி எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இல்லாத ஒரு விசயத்தில் எப்போதுமே எனக்கு ஈர்ப்பு இருந்ததில்லை, இன்றுவரை. கணினியோ, அலைபேசியோ அது என்னுடைமை ஆகும்வரை அதை எப்படி பயன்படுத்துவது என்பதில் நான் கவனம் செலுத்தியதாக ஞாபகம் இல்லை.

     உயர்நிலைப் படிப்பை முடித்து மேனிலை படிப்புக்கு பள்ளி மாறுவதென (மாற்றியே ஆக வேண்டுமென) வீட்டில் கேட்டிருந்தமையால் எங்கள் ஊரிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்று உயிரியல் பாடத்திட்டத்தில் (கணிப்பொறி பற்றிய என் ஞானத்தின்பால் எனக்குள்ள அச்சத்தால்) இடம் கேட்டோம். அவர்களோ கணிப்பொறி பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக சொன்னார்கள். வேறுவழியின்றி அதிலேயே சேர்ந்தேன்.

     அன்று கணினி செயல்முறை பாடவேளை. எனது ஆசிரியர் கணினியில் ஏதாவது செய்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கோ அதை எப்படி உயிரூட்டுவது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். உயர்நிலை வரை என்னுடன் படித்தவன் ஒருவனும் என் வகுப்பிலேயே இருந்ததால் அவனை அணுகி உதவுமாறு கேட்டேன். ஆனாலும் சில வகுப்புகள் வரை என்னுள் இருந்த பயம் தணியவில்லை. எனக்கு என்ன பயமென்றால், நான் ஏதாவது செய்ய போய், கணினியின் பயன்பாடுக்கு பங்கம் வந்து, அதற்கென திட்டுவார்களோ என்று.

     அதேவேளையில் இன்னொன்றும் கூறியாக வேண்டும்.  நாங்கள் செயல்முறை பாடவேளையில் இருக்கும் அதே நேரத்தில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பிள்ளைகளும் வருவார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல் கணினியில்  கற்றுக்கொண்டிருப்பார்கள். நானோ  MSPaint, Desktop wallpaper, screensaver போன்றவைகளையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

     ஆனால் இன்று நான் மென்பொருள் துறையில் (IT) இருக்கிறேன். எது எனக்குத் தெரியாதோ வாழ்க்கை அதை நோக்கி தள்ளுகிறது. நீரில் விழுந்த பிறகே நீச்சல் கற்றுக்கொள்கிறேன், எப்போதும்.

 

Monday, July 22, 2013

குழந்தையின் பிராத்தனை

 
மனைவியுடன் கோவிலுக்குச் 
சென்று வந்த என் குழந்தையிடம்,
"சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட?"
என்று கேட்டேன்.
இரு கைகளையும் 
காற்றில் வீசியபடி 
ஒன்றுமில்லை என்றாள்.
எனக்கென்னவோ அதில்தான் 
எல்லாம் இருப்பதாக 
தோன்றியது!
 
 
 
 
 

Sunday, July 14, 2013

வாழ்தல்




இத்தனை ஆண்டுகாலமாக
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் -
இன்னும் வாழத்தான்
பழகவில்லை.

 

Tuesday, July 2, 2013

ஏதுமறியாத நான்



பார்வையற்றவனின்
குரலைப் போல
என்னால் பாட இயலாது.
எதுவுமற்று
தெருவில் இருக்கிறவன் போல
ஒற்றை சாக்கட்டியால் கடவுளை
சிருஷ்டிக்கிற விரல் என்னிடம் இல்லை.
புல்லாங்குழல் விற்பன்னனின்
அமுதகானமும் என்னிடம் கிடையாது.
ஆனாலும் அவர்களைவிட
நான் பெரியவன் என
எண்ணுகிற மனம் மட்டும்
என்னிடம் உண்டு.  
 
 

Monday, July 1, 2013

காதல் கவிஞன்




மொழி வசப்பட்டுவிட்டது.
காதல்தான் படுத்துகிறது.
 
 

Saturday, June 29, 2013

அனுமானம்


 
அந்திப் பொழுதில்
அலுவல் முடிந்து
வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தேன்.
ஒரு மர நிழலில்
அவள் அவனிடம் ஏதோ சொல்லி
அழுதுக்கொண்டிருந்தாள்.
என் மனதில்
ஏதேதோக் கதைகள்
கிளைக்கத் தொடங்கின -
அவர்களுக்கு மட்டும்
தெரிந்த அந்த
உண்மைக்கதையைத் தவிர!
 
 
 
 

Thursday, June 27, 2013

காதலிக்கப்படாதவன்



என்னை நீ
காதலிக்க வேண்டாம் .
அது அவசியமுமன்று.
ஆனால் -
என்னைக் கடக்கும் போது
சக மனிதனை கடக்கும்
பாவனையுடனாவது நடந்து செல்.


Wednesday, June 26, 2013

சிறைப் பறவை




என்னை
ஒரு அறையில் சிறை வையுங்கள்.  
அதுகுறித்து எனக்கு எவ்வித  கவலையுமில்லை. 
ஆனால் -
ஒரு புத்தகத்தையாவது என்னிடம் தந்துவிடுங்கள்.
என் உலகை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.



Friday, June 21, 2013

வாழ்க்கைச் சுமை


கல் சுமக்கும் சிறுவன்
நடந்து செல்கிறான்
தன் வாழ்க்கையை சுமந்தபடி!



Tuesday, June 18, 2013

காதல் மேகம்


 
காதல் சொல்லாமல்
உன்னைக் கடந்து
செல்கிறேன் -
மழைப் பொழியா
கார்மேகம் என!




 

Tuesday, June 11, 2013

கேலிச்சித்திரம்



கைதேர்ந்த
ஓவியர்களைவிடவும்
குழந்தைகள்
எளிதாக
வரைந்துவிடுகிறார்கள்
கேலிச்சித்திரத்தை!

 

Wednesday, April 24, 2013

மழைப் புத்தன்




புத்தனாகிற முயற்சியில்
அவர் ஓவியத்தில்
விழுகிறது  
ஒற்றை மழைத்துளி.
சலனமற்று புன்னகைக்கிற
புத்தர்,
மழையாக மாற
தொடங்கியிருந்தார்! 
 

Saturday, April 20, 2013

வண்ணத்துப்பூச்சி இலை



மரத்திலிருந்து
உதிரும் இலை
மேல் எழுந்து
பறக்கத் தெரியாத
வண்ணத்துப்பூச்சி!
 
 

Thursday, April 11, 2013

மனிதன் படைத்த கடவுள்

 
கடவுள் படைத்த
மனிதனுக்கு மட்டும்
பசி,
கல்வி,
மதிப்பெண்,
காதல்,
அலுவல்,
திருமணம்,
லௌகீகம்,
குழந்தையின்மை,
குழந்தையின் எதிர்காலம்,
நிச்சயமற்ற வாழ்க்கை,
முதுமை
என எண்ணில்லடங்கா பிரச்சனைகள்.
கடவுளைப் படைத்த
மனிதன்
அவனுக்கு 
வெறுமனே
இரு மனைவி
பிரச்சனையை மட்டும்
கொடுத்து
திருப்தி கொண்டான்!!!
 

Wednesday, April 10, 2013

சந்தியாராகம் - முதுமையும் முதுமை நிமித்தமும்


      ஒருநாள் அம்மா என்னிடம் கீழ் வீட்டுக்கு ஓட்டு  கேட்டு வந்தார்கள். அந்த தாத்தா தனக்கு ஓட்டு  போட விருப்பம் இல்லை எனவும், தன்  மனைவி இறந்த பின் வாழ்க்கையில் பற்றுதல் இன்றி இருப்பதாகவும் சொல்லி அனுப்பிவிட்டதாக கூறினார். எனக்கு சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மூப்படைந்து இறந்துபோவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அது வெறும் மரணம் என நினைத்திருந்தேன். ஆனால், அது ஒரு பிரிவு என்ற கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை.

     காதல் பிரிவைவிட, திருமணம் செய்து அதன் பிறகு  வருகிற  பிரிவின்  அடர்த்தி சற்றே அதிகம் என பிறகுதான் உணர முடிந்தது.

 
     "சந்தியாராகம்" - ஒரு நாவலுக்கான கதைக்களம். அதை படமாக்கிய விதம் அசாத்தியமானது. வணிக காரணத்திற்காக எந்தவித சமரசமும் இன்றி இப்படி ஒரு படைப்பை உருவாக்கியது பாலுமகேந்திராவுக்கே உண்டான துணிச்சல்.

     கிராமத்தில் வாழ்கின்றனர் பிள்ளைகளற்ற ஒரு மூத்த தம்பதி. தனது மனைவி இறந்த  காரணத்தால், ஆதரவற்ற முதியவர் சென்னையில் இருக்கும் தனது தம்பி மகன் வீட்டிற்கு செல்கிறார். பெற்றோர் இறந்த பிறகு தனக்கு சோறிட்டு வளர்த்த தன் பெரியப்பாவை நன்றியுடன் வரவேற்று உபசரிக்கிறான். மூன்றுநாள் கழித்த பிறகும் தன்  பெரிய மாமனார் அதே  வீட்டில் இருப்பதைக் கண்டு, கணவனிடம் வருந்துகிறாள். அதனால் அந்த தம்பதிக்குள் சின்ன சண்டை நடக்கிறது. வீட்டின் வெளியே  படுத்துக்கொண்டிருக்கிற முதியவர் காதில் அச்சண்டை விழவே அவர் பெரிதும் வருந்துகிறார்.

     எப்போதும் போலவே, அன்றும் முதியவர் தன் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், மதியமே அக்குழந்தை மூன்று முறை வாந்தி எடுத்துதனால், அவளை வீட்டுக்கு வந்து சேர்ப்பிக்கின்றார் பள்ளியில் பணி  புரிகிற ஆயா. குழந்தையை விசாரிக்கும் போது,  தான் காலை வடை தின்றதாக சொல்ல, அதை வாங்கிதந்தவர் முதியவர்தான் என அறிந்ததும்  அவரின் தம்பி மருமகள் அவரை திட்டுகிறார். மனம் வருந்தும் பெரியவர்  என்ன முடிவு எடுத்தார் என்பதுதான்  மீதிக் கதை.


     சொக்கலிங்க பாகவதர் - அந்த முதியவர் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அத்தனை கச்சிதம். பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தியதாக தெரியவில்லை. அவரது நடிப்பு ஆகச் சிறந்ததாக இருந்தது. ஆனால் தமிழ் திரையுலகம் இப்படிப்பட்ட ஒரு கலைஞனை வீணாக்கிவிட்டது. குறிப்பாக அவர், தான் சிறு வயதில் நடித்த நாடகத்தை நடித்துக் காட்டுவது - மகாநடிகன்!!!


     கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அதற்கு நேரெதிரான நகரத்து வாழ்க்கை, மனிதர்கள், வாழ்க்கைச் சிக்கல், கிராமத்து மனிதர் நகரத்தில் ஒன்றிப்போக முடியாத தவிப்பு, சக முதியவர்களின் புரிந்துணர்வு என ஒவ்வொரு விசயமும் அவ்வளவு அழகு; அற்புதம்.

    கிராமத்தில் குளத்தில் நிதானமாக குளித்த பெரியவர், நகரத்தில் ஒரு வாளித் தண்ணீரில் எப்படி குளிப்பது என யோசிப்பது, தன் தம்பி மகன் வீட்டு உரிமையாளரிடம் வாங்கிய ஐம்பது ரூபாயை அவர்கள் தெரியாத விதம் முதியவர் உரிமையாளரிடம் அவர்கள் தந்ததாகவே ஒப்படைப்பது, முதியவர்களுக்கே உண்டான கிண்டல் என ஒவ்வொன்றயும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் பாலுமகேந்திரா!

    தமிழ் திரை உலகில் கண்டுகொள்ளப்படாத ஆகச் சிறந்த  கலைஞன் - சொக்கலிங்க பாகவதர் என்றால், கண்டுகொள்ளப்படாத படம் - சந்தியாராகம்.

 

Sunday, April 7, 2013

என் காதலி



வேறொருவரை மணந்துகொண்டாலும் 
என் நண்பர்களுக்கு 
எப்போதுமே 
நீ 
என்  காதலிதான்!


Thursday, March 28, 2013

நம் காதல்



என் வார்த்தைக்கும்
உன் மௌனத்திற்கும்
நடுவில் உறங்குகிறது
நம் காதல்!
 

Thursday, March 14, 2013

காதல்


ஒரு வார்த்தைக்குள்
பலகோடி கதைகள்
காதல்!




 

Monday, March 11, 2013

உதிரும் காதல் சொற்கள்


 
நம் இருவரும்
பேசிவிட்டு விடைபெற்று
சென்ற பின்னர்
என்றாவது நீ,
நான் திரும்பிச் சென்ற
பாதையை பார்த்திருப்பின்
உணர்ந்திருக்கக்கூடும்
உன்னிடம் சொல்லாத
என் காதலை
உதிர்த்தவாறு
நான் நடந்து செல்வதை!!
 
 

Friday, February 22, 2013

உதிரிலை


உதிரும்
இலையாக நான்.
உதிர்த்துவிடும்
மரமாக நீ.
இலையறியாத
விடயங்கள்
மரம் அறியும்!
 

 

Thursday, February 21, 2013

கவிதைதினம்



நீ
பிறந்தநாள்
இன்னும் அறிவிக்கப்படாத
கவிதைதினம்!





 

Thursday, January 17, 2013

நீயும் நதியும்


உனக்கும்
எனக்குமான
நெருக்கத்தை நீ
மட்டுமே
தீர்மானிக்கிறாய் -
தன் கரைகளை
தானே தீர்மானிக்கும்
நதி போல!

Friday, January 11, 2013

மரணத்தைக் கொண்டாடும் இலை


காற்றின் இசைக்கு
நடனமாடியபடியே
உதிரும் ஒரு
பழுப்பு இலை
உணர்த்துகிறது
மரணம்கூட
கொண்டாட்டம்தான் என்று!




Tuesday, January 1, 2013

காயம்படும் நெஞ்சம்



அன்பு நிறைந்த
நெஞ்சமே அதிகம்
காயம்படுகிறது.
கனிகள்
அதிகம் கொண்ட  மரம்
கல்லடி படுவதைப்போல!