Monday, January 17, 2011

Dasvidaniya - 'The best goodbye ever'

     வாழ்க்கையில் சில விஷயங்களைத் தவிர்க்கவே முடியாது, மரணத்தைப் போல. எப்படியோ ஆரம்பித்த வாழ்க்கை, எதிலோ பயணித்து எங்கோ முடிந்து விடுகிறது. சில விஷயங்களை விரும்பாமலே செய்கிறோம். சிலவற்றை விரும்பியும் கைவிடுகிறோம். வாழ்க்கையின் மிகப் பெரிய சுவாரசியமே நம் மரண தேதி தெரியாதது தான். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் பல நிலுவையில் இருக்க,  உங்கள் ஆசைப் பட்டியலில் பல நிராசைகள் இருக்கும் போது உங்கள் மரணம் உங்களுக்கு தெரிய வந்தால்........................


     ஆம். அப்பேர்ப்பட்ட கதையம்சம் கொண்ட ஒரு ஹிந்தித் படம் தான் Dasvidaniya - 'The best goodbye ever'. அதன் கதை பல நெகிழ்ச்சியான காட்சிகளைக் கொண்டதனால் அதை நான் இங்கு பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டிய படம். எனக்கு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக, கதையின் நாயகன், தான் சொல்லாத காதலை பல வருடங்கள் கழித்து தான் காதலியிடம்  வெளிப்படுத்தும் இடம்!!! (காதல் கைக் கூடாதவர்கள் மனம் உடைந்து அழக்  கூடும்)


     அன்பின் அடையாளமாய் ஒருவருக்கொருவர் ஏதேனும் பகிர்ந்துக் கொள்ளும் போது அந்த அன்பு இன்னும் வலுப்பெறுகிறது. பரிசுக் கொடுத்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. நாம் விரும்பும் பொருளை மற்றவர்க்கு அளிப்பதை விட அவர் விரும்புவதை அளிக்கும் போதே அர்த்தம் பெறுகிறது. அதை படத்தின் கடைசிக் காட்சி அற்புதமாக விளக்குகிறது.


      முடிந்தவரையில் சீக்கிரம் இந்த படத்தை பாருங்கள். கிடைக்காவிட்டால், youtube - யில் பார்ட் பார்ட் ஆக இருக்கிறது. (படம் பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்தால் மிக்க மகிழ்ச்சி)     
     பின்னோட்டம் அளிக்கையில் தங்களின் "wish - list " யும் பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, January 14, 2011

வாழ்தல் ஒரு கலை - II

     வாழ்க்கை வரமா? சாபமா? சில நேரங்களில் தவமின்றி கிடைக்கிற வரம். சில நேரங்களில் தவமிருந்து பெறுகிற சாபம். வரம் ஆண்டவன் கொடுப்பது. சாபம் நாம் உண்டாகிக் கொள்வது. ஒரு மனிதன் அவனது தனி மனித இலட்சியங்களை அடைய அவன் எதிர்கொள்ளும் தடைகள், சவால்கள் பற்பல. அதில் முக்கியமானதொன்று "விமர்சனம்".

     நம் முன்னேற்றத்தைக் குறிவைத்து வீசப்படும் விமர்சனங்களை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் வீணான விமர்சனங்களுக்கு பதில் சொல்லுதல் என்பது நேர விரயம். உதாரணம்: சச்சின், ரஹ்மான் போன்றவர்கள். வார்த்தைகளில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களை விட அதிகம்.


    என் வாழ்விலும் பெரும்பான்மையான சமயங்களில் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு தான் வருகிறேன். அதில் பெற்றவர்கள், உடன்பிறப்புகள்,ஆசிரியர்கள்  மற்றும் நண்பர்கள் கூறும் விமர்சனங்களைத் தவிர வேறு எதிலும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. நடக்க ஆரம்பித்த குழந்தை ஓட முயற்சிக்கும் போது தவறி விழுவதை பரிகாசம் செய்வதைப் போல சில விமர்சனங்கள். பல சமயங்களில் கயிறு திரிப்பு வேறு! ஒரு மனிதனின் மதிப்பீடு என்பது அவனது  சமீபத்திய வெற்றித், தோல்விகளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அடுத்த தலைமுறைகள் யாவரும் மேன்மையான வாழ்க்கையை வாழ வளர்க்கப் படுவது இல்லை. ஒரு பந்தயக் குதிரையாகத் தான் வளர்க்கப்படுகிறார்கள். தன்னம்பிக்கை என்பது வெற்றிப் பெற பயன்படுவதை விட, தோல்வியிலிருந்து மீள பயன்படும்போது தான் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது.


     என் மீது விமர்சனங்கள் விழும் போதெல்லாம் ஒரு கதையை நினைத்துக் கொள்வேன். அந்தக் கதை:
இரு பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வயல் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு சாமியாரைப் பார்த்து ஒரு பெண், "ஏய்! அங்க இருக்கறவர் பெரிய சாமியார்டி"
உடனே மற்றவள், "என்னத்த சாமியார்? எல்லாம் ஊர ஏமாத்தற வேலை"
"ச்சே! அப்படி எல்லாம் இல்லடீ. நான் அவரப் பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். அவர் எல்லாம் துறந்த ஞானி."
"என்னத்த ஞானி? எல்லாம் துறந்தவனுக்கு எதுக்குடி தூங்கறதுக்கு தலைகாணி மாதிரி வரப்பு வேண்டி கெடக்கு?" எனப் பேசிக்கொண்டே சென்று விட்டனர்.
அப்போது, திடுக்கிட்டு எழுந்த அந்த ஞானி, "ச்சே! அந்த பெண் சொன்னது நமக்கு தெரியாமல் போய் விட்டதே?" என்று திசை மாறி கீழே படுத்துக் கொண்டார்.
அந்த பெண்கள் திரும்புகையில், "பாருடி! நீ சொன்னத கேட்டு அவர் மாறிப் படுத்திருக்கார். இப்பவாது ஒத்துக்கிறியா அவர் ஞானின்னு?"
"அட போடி! தூங்கற மாதிரி நடிச்சுகிட்டு மத்தவன் பேசறத  ஒட்டு கேக்குறவன் என்னடி சாமியார்?" என பேசிக்கொண்டே சென்றனர்.
அந்த சாமியார் வேறு யாரும்  அல்ல. பொருள் வாழ்க்கையை வெறுத்து துறவறம் பூண்ட "பட்டினத்தார்"!   அவருக்கே அந்த நிலைமை என்றால் நமக்கு?!       வைரமுத்து சொன்னதைப் போல், "பாசி படிந்த குளம் இந்த உலகம். அதன் நடுவே உள்ள வசீகரத் தாமரை தான் வாழ்க்கை."

Tuesday, January 11, 2011

தமிழின் பெருமை

     சில  மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வளமையை  அந்த மொழி கொண்டுள்ள வார்த்தைகளைக் கொண்டும், வார்த்தைகளை கையாள்வதைக் கொண்டும்  கணிக்கலாம். உ.ம்: தமிழில், "உயர்திணை, அஃறினை வேறுபாடு உண்டு. ஆனால், ஆங்கிலத்தில் அது அவ்வளவு தெளிவாக இல்லை. நாம், "நாய் வருகிறது" என்றும், "ராம் வருகிறான்/வருகிறார்" என்றும் குறிப்பிடுவோம். ஆனால் ஆங்கிலத்திலோ "Dog comes", "Ram comes" என்றே குறிப்பிடுவர். நம் பலவீனமே நம் பலத்தை அறியாது தான். இங்கே அருகே உள்ள தஞ்சை பெரிய கோவிலின் பெருமையை வெள்ளையன் சொல்லித் தான் நாம் தெரிந்து கொண்டோம். இப்படி பலவாறு  உண்டு நம் அறியாமை. எங்கோ, என்றோ நான் படித்த கவிதை ஒன்று இப்போது நினைவிற்கு  வருகிறது. அது:

"அதிகம் படிக்காத அப்பாவிற்கு 
ஜேம்ஸ் பாண்ட் தமிழில் 
பேச வேண்டுமாம்;
ஜாக்கி ஜான் தமிழில் 
பேச வேண்டுமாம் - ஆனால் 
நேற்று கான்வென்ட்டில் சேர்ந்த 
அவன் குழந்தை மட்டும் இன்றே 
ஆங்கிலத்தில் பேச வேண்டுமாம்!"

      ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே:


                                     
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" 
(இப்படி சொல்லி ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் உஷார்!)

Friday, January 7, 2011

நட்சத்திரக் கோலம்

கோலம் அல்லாது 
வெறும் புள்ளிகள் மட்டுமே அழகாய் 
நட்சத்திரங்கள்!

Thursday, January 6, 2011

எது தேசபக்தி?

     அது இந்தியாவின் 63 - வது சுதந்திர தினம். எல்லோரது வீட்டைப் போலவும் தான் சுப்பையாவின் வீட்டிற்கும்  அன்று விடிந்தது, தொலைக் காட்சியின் மூலம். 88 வயது வயதோகி + தியாகி.

     சுப்பையா, "ஹ்ம்ம், சுதந்திரம் வாங்கி 63  வருஷம் ஆச்சு ஆனா நாடு என்னமோ வெள்ளையன்ட இருந்து அரசியல்வாதிட்ட போய்டுச்சு. ஜனநாயகம் செத்துப் போய்டுச்சு. இதோ டிவி, FM  ல கூட எந்த த்யாகிகள் பத்தியும் அவ்வளவா பேச மாட்டீன்க்ராங்க. எவனோ ஒரு கூத்தாடி   அவனோட பேட்டிய போடுறானுங்க.......... "


        இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பள்ளி விட்டு அவர் ஏழு வயது பேத்தி லக்ஷ்மி வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள். அவர் பேசும் போது இடைமறித்து, "தாத்தா! நீங்களும் ஒரு வருஷம் விடாம இப்படி தான் பேசிட்டு இருக்கீங்க. ஆனா, நம்ம கொடிய சட்டையில குத்தி அதை ஓட்டை போடுறது தப்புன்னு ஏன் உங்களுக்கு தெரியாம போச்சு?"
  
     "?!........"


   

Saturday, January 1, 2011

எல்லாம் நன்மைக்கே!

   
     இதோ மற்றுமொரு ஆண்டு பிறந்தாகி விட்டது. இத்தனை காலம் தான் அனுபவித்த துயரங்களும் கவலைகளும் ஒரே ஒரு வினாடியில் மாறிவிடும் என மனிதன் எதிர்பார்ப்பது சுத்த மடத்தனமாக இருந்தாலும், அது ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. எத்தனை முறை விரும்பி ஏற்ற பிரமாணங்கள்? தொடர முடியாமல் கைவிடப்பட்ட பிரமாணங்கள் என நம்மை நாமே பார்த்து நகைக்க கூடிய விஷயங்கள் ஏராளம்.

      ஆனால், சிலர் எதிர்மறையான வாழ்கையை மிகவும் நம்பிக்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கவலைகளிலும், விரக்திகளிலுமே வாழ்க்கை முடிந்து போகப் போவது  இல்லை. இன்னும் சிலரோ இறைவன் தனக்கு மட்டுமே துன்பங்களை தருவதாக எண்ணிக் கொண்டிருகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறு. குர்ஆனில் ஒரு வாசகம் உண்டு " உங்களால் தாங்க முடியாத துயரங்களை இறைவன் ஒருபோதும் உங்களுக்கு தருவது இல்லை".

     "எல்லாம் நன்மைக்கே"  என்பதை பலரும் தத்துவரீதியாக நம்பினாலும் நடைமுறையில் பெரும்பாலோனார் அதை நம்புவதில்லை. அவர்களுக்காகவே  பின்வரும் கதை:


     அந்த காட்டில் மூன்று மரங்கள் அடுத்தடுத்து இருந்தன. ஒவ்வொன்றும் தங்கள் ஆசைகளை பகிர்ந்து கொண்டன. முதல் மரம், "நான் விண்ணை முட்டும் அளவிற்கு வளர வேண்டும்." என்றது. இரண்டாம் மரம், " நான் கப்பலாக மாறி பயணம் செய்ய வேண்டும்" என்றது. மூன்றாவது மரம், "நான் வைரம், வைடூரியம் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களை வைக்கும் ஆபரண பெட்டியாக இருக்க வேண்டும்." என்றது.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு சில மரவெட்டிகள் வந்ததனர். அதில் ஒருவன் இரண்டாம் மரத்தை பார்த்து, "இது நன்கு வலுவாக உள்ளது. அதனால் இதை வெட்டி கப்பல் செய்பவர்களிடம் விற்க போகிறேன்" என்றான். அந்த மரம் தன் ஆசை நிறைவேற போவதை நினைத்து மகிழ்ந்தது. மற்றொருவன் மூன்றாம் மரத்தை பார்த்து, "இதை வைத்து ஆபரணப் பெட்டி செய்யாலாம்" என்றான் . அந்த மரமும் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் எந்த ஒரு வார்த்தையும் கூறாமல் இன்னொருவன் முதல் மரத்தை வெட்ட ஆரம்பித்தான். தன் ஆசை நிராசையாய் போகப் போவதை நினைத்து அந்த மரம் வருத்தம் உற்றது.

    ஆனால் இரண்டாம் மரத்தை கொண்டு சென்றவன் அதை கப்பல் செய்ய பயன்படுத்தாமல் அதை படகு செய்வதற்குப் பயன்படுத்தினான். தன் ஆசை நிறைவேறாமல் போனதற்காக அந்த மரம் வருத்தப்பட்டது.
 மூன்றாம் மரத்தை கொண்டு சென்றவனும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அதை மாட்டு தொழுவத்தில் பயன்படுத்துவதற்காக சிறு தொட்டி போல உருமாற்றினான். அந்த மரமும் வருத்தப்பட்டது. ஆனால் அந்த முதல் மரத்தை எடுத்து சென்றவன் அதை உபயோகப்படுத்தவே இல்லை.


     சில தினங்கள் கழித்து படகாக மாறிய மரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக அது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்த அனைவரும் கத்திக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு முனிவர் மட்டும் எழுந்து, "நில்" என்றார். உடனே வெள்ளமும் நின்றது. படகாக மாறிய மரம்," ச்சே!இப்பேர்ப்பட்ட முனிவரை சுமந்து செல்ல நான் என்ன பாக்கியம் செய்து இருக்க வேண்டும். கப்பலாய் மாறி இருந்தால் கூட நமக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!" என சந்தோஷப்பட்டது. சிறு தொட்டியாக மாறிய மரமோ தன்னை இப்படி மாட்டு தொழுவத்தில் பயன்படுத்தி விட்டனரே என வருத்தம் கொண்டது. அப்போது அங்கே கருவுற்ற ஒரு பெண்ணும் , அவள் கணவனும் அந்த தொழுவத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த ஓரிரு நிமிடங்களிலேயே அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட அங்கேயே ஒரு குழந்தையை பிரசவித்தாள். அந்த குழந்தையை அவர்கள் அந்த தொட்டியில் வைத்து அழகு பார்த்தனர். மூன்றாம் மரமோ," நாம் என்னவோ பொருளை பாதுகாக்கும் பெட்டியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், இப்பொழுது இப்பேர்பட்ட  அப்பழுக்கற்ற ஒரு குழந்தையை  சுமக்கும் புண்ணியம் யாருக்கு கிடைக்கும்" என மகிழ்ச்சியில் திளைத்தது.

     ஆனால் ஆண்டுகள் பலவாகியும் அந்த முதல் மரம் வெட்டப்பட்டு இருந்த அறையை விட்டு வெளியே கொண்டு வந்து பயன்படுத்த எவரும் வரவி்ல்லை. சில தினங்கள் கழித்து அந்த முதல் மரத்தை ஒருவன் வெளியே எடுத்து வந்து அவசர அவசரமாக உருமாற்றிக் கொண்டிருந்தான். பிறகு அந்த மரத்தை சுமந்து செல்லும் படி ஒருவனிடம்  சிப்பாய் ஆணையிட்டான். பிறகு தான் அந்த மரத்திற்கு தெரிந்தது தன்ன சுமப்பவர் ஏசுபிரான் என்று. அதன் பிறகு அது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


     இந்த கதையில் வரும் மூன்று மரங்களும் தங்கள் ஆசையை அடைந்ததன. ஆனால் தாங்கள் நினைத்த பாதையில் அல்ல; இறைவன் விரும்பிய பாதையில்!

    ஓஷோ சொன்னதைப் போல் "வாழ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அதனால் நாம் இழக்கப் போவது ஒன்றும் இல்லை."