Friday, January 14, 2011

வாழ்தல் ஒரு கலை - II

     வாழ்க்கை வரமா? சாபமா? சில நேரங்களில் தவமின்றி கிடைக்கிற வரம். சில நேரங்களில் தவமிருந்து பெறுகிற சாபம். வரம் ஆண்டவன் கொடுப்பது. சாபம் நாம் உண்டாகிக் கொள்வது. ஒரு மனிதன் அவனது தனி மனித இலட்சியங்களை அடைய அவன் எதிர்கொள்ளும் தடைகள், சவால்கள் பற்பல. அதில் முக்கியமானதொன்று "விமர்சனம்".

     நம் முன்னேற்றத்தைக் குறிவைத்து வீசப்படும் விமர்சனங்களை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் வீணான விமர்சனங்களுக்கு பதில் சொல்லுதல் என்பது நேர விரயம். உதாரணம்: சச்சின், ரஹ்மான் போன்றவர்கள். வார்த்தைகளில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களை விட அதிகம்.


    என் வாழ்விலும் பெரும்பான்மையான சமயங்களில் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு தான் வருகிறேன். அதில் பெற்றவர்கள், உடன்பிறப்புகள்,ஆசிரியர்கள்  மற்றும் நண்பர்கள் கூறும் விமர்சனங்களைத் தவிர வேறு எதிலும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. நடக்க ஆரம்பித்த குழந்தை ஓட முயற்சிக்கும் போது தவறி விழுவதை பரிகாசம் செய்வதைப் போல சில விமர்சனங்கள். பல சமயங்களில் கயிறு திரிப்பு வேறு! ஒரு மனிதனின் மதிப்பீடு என்பது அவனது  சமீபத்திய வெற்றித், தோல்விகளைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அடுத்த தலைமுறைகள் யாவரும் மேன்மையான வாழ்க்கையை வாழ வளர்க்கப் படுவது இல்லை. ஒரு பந்தயக் குதிரையாகத் தான் வளர்க்கப்படுகிறார்கள். தன்னம்பிக்கை என்பது வெற்றிப் பெற பயன்படுவதை விட, தோல்வியிலிருந்து மீள பயன்படும்போது தான் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது.


     என் மீது விமர்சனங்கள் விழும் போதெல்லாம் ஒரு கதையை நினைத்துக் கொள்வேன். அந்தக் கதை:
இரு பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வயல் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு சாமியாரைப் பார்த்து ஒரு பெண், "ஏய்! அங்க இருக்கறவர் பெரிய சாமியார்டி"
உடனே மற்றவள், "என்னத்த சாமியார்? எல்லாம் ஊர ஏமாத்தற வேலை"
"ச்சே! அப்படி எல்லாம் இல்லடீ. நான் அவரப் பத்தி நெறைய கேள்விப்பட்டிருக்கேன். அவர் எல்லாம் துறந்த ஞானி."
"என்னத்த ஞானி? எல்லாம் துறந்தவனுக்கு எதுக்குடி தூங்கறதுக்கு தலைகாணி மாதிரி வரப்பு வேண்டி கெடக்கு?" எனப் பேசிக்கொண்டே சென்று விட்டனர்.
அப்போது, திடுக்கிட்டு எழுந்த அந்த ஞானி, "ச்சே! அந்த பெண் சொன்னது நமக்கு தெரியாமல் போய் விட்டதே?" என்று திசை மாறி கீழே படுத்துக் கொண்டார்.
அந்த பெண்கள் திரும்புகையில், "பாருடி! நீ சொன்னத கேட்டு அவர் மாறிப் படுத்திருக்கார். இப்பவாது ஒத்துக்கிறியா அவர் ஞானின்னு?"
"அட போடி! தூங்கற மாதிரி நடிச்சுகிட்டு மத்தவன் பேசறத  ஒட்டு கேக்குறவன் என்னடி சாமியார்?" என பேசிக்கொண்டே சென்றனர்.
அந்த சாமியார் வேறு யாரும்  அல்ல. பொருள் வாழ்க்கையை வெறுத்து துறவறம் பூண்ட "பட்டினத்தார்"!   அவருக்கே அந்த நிலைமை என்றால் நமக்கு?!



       வைரமுத்து சொன்னதைப் போல், "பாசி படிந்த குளம் இந்த உலகம். அதன் நடுவே உள்ள வசீகரத் தாமரை தான் வாழ்க்கை."

8 comments:

Unknown said...

Its awesome buddy....

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Very nice Naga !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர். அதிலும் அந்த கடைசி வரிகள்....

பொங்கல் வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

G.M Balasubramaniam said...

அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது. விமரிசனங்களை எதிர் கொள்ளும்போது அவை நம்மைப்பற்றி நாமே புரிந்துகொள்ள
நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என்று தெளிந்திட்டால் மனக்கிலேசங்கள் குறையும்.நடப்பதெல்லாம் நன்மைக்கே. எல்லாம் வரமே. சாபம் என்று ஏதும் இல்லை.

சிவகுமாரன் said...

பட்டினத்தார் கதை அருமை.

உதிரிலை said...

வாழ்க்கையைத் தெளிந்து உணர்ந்திருக்கிறீர்கள். வாழ்க்கை வரமுமல்ல சாபமுமல்ல. அது வாழ்க்கை. மூடியிருந்து உதிர்க்கப்படுகிற வெங்காய சருகுகள் வாழ்க்கையைத்தான் சொல்லி கிடக்கின்றன. இன்னும் வானத்தைத் துளைப்பதாக கனவு கண்டுகொண்டிருக்கும் முள்ளின் கூர்மையாய் நம்பிக்கை பற்றுங்கள்.

எல் கே said...

உங்களை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_21.html

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"பாசி படிந்த குளம் இந்த உலகம். அதன் நடுவே உள்ள வசீகரத் தாமரை தான் வாழ்க்கை."
உண்மை.. அருமை

Post a Comment