Wednesday, September 28, 2011

பிம்பம்


நிலத்தில் மிதக்கிறது
மலை.
குளத்தில் மூழ்கி இருக்கிறது
பிம்பம்.

Thursday, September 22, 2011

கடவுளும் மனிதனும்



ராமனோ ?
கிருஷ்ணனோ ?
கடவுளாக 
இருக்கும் 
வரையில் 
எந்தப் 
பிரச்சனையும் 
இல்லை.

Tuesday, September 20, 2011

பால்ய நினைவு



குறும்பு செய்யும் 
என் மகனை 
அதட்டும் போது
என்னை 
அதட்டும் 
என் பெற்றோரைப் 
பார்க்கையில் 
நினைவுக்கு 
வருகிறது
தாத்தா பாட்டி 
இல்லாத 
எனது பால்ய காலம்!

Sunday, September 18, 2011

...சொல்லாததும் உண்மை

    

     "பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே. மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், பொய் உன்னை வாழ விடாது. உண்மை உன்னை சாக விடாது", என்றார் விவேகானந்தர்.

     இன்று நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், உண்மையை எப்படி எதிர்கொள்வது என்பதே. உண்மை பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அன்றோ? இந்த உலகத்தில் சொல்ல மறுக்கிற விஷயங்களும், சொல்லாமல் மறைக்கிற வீஷயங்களும் மட்டுமே தற்போது உண்மையாக இருக்கின்றன. உண்மை பேசுகிறவன் பலர் பார்க்க கயிற்றின் மேல் நடக்கிறவன் போல. எல்லாருக்கும் அந்த தைரியம் வந்துவிடாது. ஆனால், அவனது செய்கையை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். மேற்கொண்டு அவனுக்கு எதுவும் கிடைக்காது!

     மௌனத்தை வார்த்தைகளால் என்றுமே வெல்ல முடியாது. ஏனென்றால் மௌனம் என்பதுதான் உண்மை. வார்த்தைகளால் மௌனத்தை விளக்க முடியும். ஆனால், நம்மால் என்றுமே மௌனத்தை உருவாக்க முடியாது. மௌனம் சில நேரங்களில் தண்டனை; சில நேரங்களில் மன்னிப்பு!

    நிர்வாணமே உண்மை. ஆனால், நம்மால் அந்த நிர்வாணத்தை எதிர்கொள்ள முடியுமா? எதிர்க்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை ஒப்புக்கொள்ளவாது முடியுமா? இந்த உலகத்தில் சொல்லாமல் போகின்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் போவதில்லை
          
    வாழ்க்கை அபூர்வம் என்றால், அதை அணு அணுவாக வாழ்பவன்? அபூர்வங்களின் அபூர்வம்! அப்படி ஒரு அபூர்வக் கலைஞன் தான் "பிரகாஷ்ராஜ்". அவரது "...சொல்லாததும் உண்மை" என்கிற தொடர் ஆனந்த விகடனில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்து, பிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டதுஉண்மையை சொல்வதே தைரியமான விஷயம் என்றால், ஒரு ஊடகத்தின் வாயிலாக உண்மையை உரக்க சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!

     தாயன்பு, காதல், காமம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம், நட்பு, திமிர், கர்வம், பயம், பிரிவு என ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதைகளை உண்மையாக திரும்பி பார்க்கிற தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாது. ஒரு விஷயத்தை உண்மையாக பார்ப்பதற்கும், நமக்கு வசதியாக பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், நமக்கு எது வசதி என்பதில், எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.



    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எந்த மனிதனும் காமத்துடனான தன் அனுபவத்தை எவரிடமும் அவ்வளவு எளிதில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். காந்தி  தன் தந்தை இறக்கும் தருவாயில், தன் உடல் பசியை தீர்க்க தன் மனைவியை அழைத்ததையும், தனது வயதோகிய காலத்தில் தன் துறவர வாழ்க்கையின் மீது தானே சந்தேகம் கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டதையும் இந்த உலகத்துக்கு வெளிப்படையாக சொன்னார். அதே துணிச்சலை பிரகாஷ்ரஜிடமும் பார்க்கிறேன்.

    சகமனிதனின் அனுபவம் தானே நமக்கு வாழ்க்கை பாடம்?  

நூல் விவரம்:- 
பெயர்: ...சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ. 110 /- 


Friday, September 16, 2011

உயிர்ப்பு

உயிர்ப்புடன் இருக்கிறேன் 
மரணிக்கும் 
தருவாயிலாவது...

Sunday, September 11, 2011

வாழ்க்கையின் முரண்




நினைத்தது 
எல்லாம் 
நடந்துவிடாது 
என்கிற 
யதார்த்தத்துக்கும் 
நினைத்தது
எல்லாம்
நடக்க வேண்டும் 
 என்கிற
எதிர்ப்பார்புக்கும் 
இடையில் 
சிக்கித் 
தவிக்கும் 
மனித வாழ்க்கை

Wednesday, September 7, 2011

உழைப்பு


மிதித்தால்தான் 
உழைப்பேன் என்கிறது.
தையல் எந்திரம்.