Tuesday, December 28, 2010

மழை இரவு


நிலவைத் 
தொலைத்த வானம் 
அழுகிறது 
மழை !

Monday, December 27, 2010

காதல் முரண்

நீ 
என் வாழ்வில் முற்று
பெறாத கவிதை
நானோ 
உன் வாழ்வில் 
இன்னும் 
தொடங்கவேப்படாத கவிதை!

Thursday, December 23, 2010

வாழ்தல் ஒரு கலை


     வாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு  துன்பக் கடல் என்பது எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது வாழ்க்கை ஒரு கேளிக்கைக் கூடம் என்பதும். வாழ்க்கையை சுவாரசியாமாக வைத்துக் கொள்ளுதல் ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல; அது இன்னொரு சுவாரசியமான விஷயம். இங்கே பலரும் பொழுது போக தான் வாழுகிறார்கள். ஆனால் பொழுதுபோக்காக நாம் விளையாடும் விளையாட்டு ஒவ்வொன்றிலும் பொதிந்து உள்ளன வாழ்கையின் ரகசியம்.     Every thing is pre-written. Nothing can be re-written என்று வாழ்க்கையை பற்றி ஒரு சொல் உண்டு, அது போல தான் வீடியோ கேம்களும். ஆடுபவன் (மனிதர்கள்) ஒவ்வொருவரும் ஒரே இடத்தில் இருந்தே வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையை பொறுத்தே அவர்களுடைய பாவ, புண்ணிய கணக்குகள் ( Points ). மனிதர்கள் அனைவருக்கும் இறைவன் ஒன்று போலவே தான் தேவைகளை ( Power ) வழங்குகிறான். ஆனால் அதை பயன்படுத்துவதெல்லாம் ஒவ்வொரு மனிதனின் தேடல் தொடர்பானது. வயது ( level ) ஏற ஏற மனிதன் சந்திக்கும் துயரங்களும் அதிகரிக்கவே செய்யும். அது ஆட்ட  விதி! ஆனால் அதை எதிர்க் கொள்ளவும் மனிதனுக்கு மேலும் சில சக்திகளை இறைவன் வழங்கிக்கொண்டுத் தான் இருக்கிறான். வாழ்கையில் ஏதோ ஒரு நிலையில் அனைவருக்கும் இடறல் ஏற்படுவது இயல்பு தான். சிலர் தன் தவறை திருத்திக் கொண்டு மீண்டும் விளையாட்டை எதிர்க்கொள்கின்றனர் ( Replay ). பலரோ சில முறை முயற்சித்து பலன் அளிக்கவில்லை எனில்  விளையாட்டை அசட்டை செய்கிறார்கள்.

 
   என்ன தான் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் சமூக மொழி வழக்காக இருந்தாலும், இன்று அன்றாட தேவைகளுக்கு அடுத்தபடியாக மனிதன் எதிர்பார்ப்பது வெற்றியே. கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கத் தான் பந்து வீசப்படுகிறது. அதே பந்தைப் பயன்படுத்தி தான் பேட்ஸ்மேனும் சிக்ஸர் ஆகவும் பௌண்டரிகளாகவும் அடிக்கிறான்.


     இங்கே திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் வெற்றிப்படிகளில் ஏற முடியாதவர்கள் பலர். காரணம் அதிர்ஷ்டம் இல்லாமை. (பலரும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை ஒப்புக் கொள்வதில்லை. இதை பின்பு வேறொரு முறை பார்க்கலாம்). "வாழ்கையே ஒரு கலைச்சு போட்ட சீட்டுக் கட்டு தான்" என பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அது உண்மை தான். என்ன தான் ஒருவன் சீட்டாட்டத்தில் கில்லாடியாக இருந்தாலும் அவனுக்கு சரியான நேரத்தில் சரியான சீட்டு வரவில்லை எனில் அவன் தோல்வியை சந்தித்து தான் ஆக வேண்டும்.


     வாழ்க்கை ஒரு (சதுரங்கம்) போர்க்களம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே பலரும் முள்ளின் மீதே நடக்கின்றனர்; என்றாவது தங்கள் பாதம் மலரில் பதியும் என்ற நம்பிக்கையில்! யாரும் எதையும் இழப்பதற்கு விருப்பம் கொள்வதில்லை. இழந்தே ஆக வேண்டும்  என்கிற நிலை வரும் போது பெரிய விஷயங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக சிறிய விஷயங்களை இழக்க மனம் ஒப்புக்கொள்கிறது. பெரிய விஷயங்களை இழந்தே தீர வேண்டும் என்கிற போது தலை தப்பித்தால் போதும் என மனம் அதற்கும் பக்குவப்படுகிறது. இறுதியில் எல்லாவற்றையும் இழந்து, இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றான பின்பு வாழ்கையை புதிதாக தொடங்குகிற தைரியம் வந்துவிடுகிறது! ( இங்கே இழப்புகள் என்பது மனிதர்கள் அல்ல, வெறும் பொருட்களே).

    இங்கே ஆடத் தெரியாமல் யாரும் தோற்பதில்லை. சில தவறான முறைகளை கையாள்வதாலேயே தோற்கிறார்கள். வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது. அதனால் தான் அழகாகவும் இருக்கிறது!

Tuesday, December 21, 2010

பிரபஞ்சக் காதல்முக்கோணக் காதல்
பிரபஞ்ச விதிகளுள்
ஒன்று போலும்...
சூரியனைச் சுற்றும் பூமியும்
பூமியைச் சுற்றும் நிலவும்! 

Friday, December 17, 2010

மின்னல் உறவு

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
உண்டான தொப்புள்கொடி
"மின்னல்"

விண்மீன் மழை

பூமியின் மீது 
விழாமல் உறைந்துவிட்ட 
மழைத் துளிகள் 
"விண்மீன்கள்"

Sunday, November 21, 2010

காதல் செய்வீர்


காதலியுங்கள் 
அழுது பார்க்கவும் 
அழுது தீர்க்கவும்

பசிப்பிணி

கடவுளே அருகில் இருந்தும் 
பசி தீர வழி இல்லை 
வேடதாரியின் குழந்தை.
 

உறவு

குடையாகிறேன் 
என்னைப் பிடித்தவர்களுக்கு.
எனக்கு பிடித்த மழையை பகைத்துக் கொண்டு.

Monday, November 8, 2010

அங்கீகரிக்கப்படாத பெண்மை - II

     (அங்கீகரிக்கப் படாத பெண்மையின் தொடர்ச்சி ...)
     "water"  தீபா மேத்தா இயக்கியத் திரைப்படம். கணவனை இழந்த பெண்களைப் பற்றி விவரிக்கும் கதைக் களம். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா. ஒரு மாட்டு வண்டியில் ஒரு சிறுமி, நோய்வாய்ப் பட்ட ஒருவன் மற்றும் அதை ஓட்டிக் கொண்டு செல்லும் வண்டிக்காரன். அவர்கள் சென்றுக் கொண்டிருக்கிற வண்டி ஒரு சுடுகாடை அடைகிறது. வண்டிக்காரன் அந்த சிறுமியை எழுப்பி, "ஏய்! உனக்கு கல்யாணம் ஆய்டுச்சு ஞாபகம் இருக்கா?"
சிறுமி, "என்ன?"
"ஆமாம். உன் புருஷன் செத்துட்டான். இன்னிலேர்ந்து நீ விதவை"
(படத்தின் முதல் வசனமே இது தான்!)


     அதன் அர்த்தமே புரியாத சிறுமியை தலை மயிர் மழித்து அந்த ஊரில் உள்ள விதவைகள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்! அந்த இல்லத்தில் இருக்கிற முதிய பெண்மணியால் இந்த சிறுமியின் இம்சைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எப்போதும் அவளை திட்டிக் கொண்டே இருக்கிறார். அதே இல்லத்தில் உள்ள பதின்ம வயது பெண்ணிடம் ஒட்டிக்கொள்கிறாள் சிறுமி. அந்த ஊரிற்கு வருகிற இளைஞன் அந்த பெண்ணைப் பார்த்ததும் காதல் கொள்கிறான். அவளும் கூட. இந்த சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொண்டதா? இல்லையா? அவர்கள் எப்படி இந்த சமுதாயத்தை எதிர் கொண்டனர் என்பதே மீதிக் கதை.

     எல்லாத் திரைப்படங்களிலும் கருப்பும், வெள்ளையும் அந்நியமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் மற்ற எல்லா நிறங்களும் அந்நியப்பட்டிருக்கும். தெருவோர கடையில் சிறுமிக்கு, அவள் விதவை என்பதால் தின்பண்டம் தர மறுப்பதும்,  அந்த இல்லத்தில் உள்ள  வயதான பெண்மணி மரணப் படுக்கையில் லட்டுக்காக ஏங்கி மரிப்பதும் கனம். எல்லாவற்றிற்கும் அந்த சிறுமி ஏன் ஏன் என கேள்வி கேட்பதும் இயக்குனரின் அருமையான யோசனை. பார்க்க வேண்டிய படம்.

      ஒரு துறவியாக வாழ்வதே கடினமான விஷயம் என்றால், அந்த துறவியின் மனைவியாய் வாழ்வது எவ்வளவு சவாலானதாக இருக்கும். ராகவேந்திரர் துறவறம் பூண்டதும் செய்வதறியாது தற்கொலை செய்த அவர் மனைவி; ஞானம் அடைந்ததும் வீட்டிற்கு வந்த புத்தரை கேள்வி மேல் கேள்வி கேட்ட அவர் மனைவி; ராமகிருஷ்ண பரம அம்சர் துறவறம் பூண்டப் பின் அவரே வணங்கும் அளவுக்கு தெய்வீக நிலையை அடைந்த சாரதா தேவி என நம்மிடம் பல வரலாறுகள் உண்டு. ஆனால் நிதர்சனத்தை முன் வைத்தவர் பாரதியின் செல்லம்மா.(ரேடியோ ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பதிவு செய்து உள்ளார்.)

     ஒரு பெண் துறவறம் ஏற்க தானாகவே விரும்பி முதுமை அடைந்த அவ்வையாரின் செய்கையே ஆயிரம் ஆயிரம் கேள்விகளை முன்வைக்கின்றது.

      நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம். நண்பன் ஒருவன் ப்ராஜெக்ட் செய்வதற்காக சென்னை தி.நகரில் தங்கி இருந்தான். அவனை சந்திக்க சென்ற நான், நண்பனின் அன்பிற்க்கிணங்க அங்கேயே தங்க வேண்டிய நிர்பந்தம். தேநீர் அருந்துவதற்காக இரவு பதினோரு மணியளவில் ரங்கநாதன் தெரு அருகே சென்றோம். அதுவரை நான் பார்த்த தெருவும் இதுவும் ஒன்றா என வியப்பளிக்கும் வகையில் இருந்தது. ஆள் அரவம் அற்ற வீதியில் வண்டிகளை வைத்து அடைத்து சரக்குகளை கடைகளில் வைத்துக் கொண்டிருந்தனர். சில மணித்துளிகள் கழித்து அங்குள்ள கடைகளில் பணி புரியும் விற்பன்னர்கள் தங்கள் இடம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் ஒவ்வொரு கதை. ஆனால், அத்தனை கதைகளின் கருவுமே சோகம் என்பது கசப்பான உண்மையே. (ஒரு வருடம் கழித்து வெளிவந்த "அங்காடித் தெரு" திரைப்படம் மாநகரில் உள்ள கடைத் தெருக்களின் முகமூடிகளை கிழித்து எறிந்தது. அதில் சொல்லப்பட்டது பாதி தானாம்!)


     இங்கு திருமணம் என்கிற பெயரில் நடப்பதே பெண்ணிற்கு எதிரான  வன்முறைதான். திருமணத்தில் ஒரு பெண்ணின் சம்மதம் என்பதே கடைசியில் தான் கேட்கப்படுகிறது. அவள் விருப்பமும், அவன் விருப்பமும் ஒத்துப்போய் இருப்பின் பிரச்சனை அவ்வளவாக இருப்பதில்லை. இல்லையெனில் பிரச்சனை உருவாகிறது, ஆணின் விட்டு கொடுத்துப் போகும் தன்மை இல்லாமையால். இங்கு பல வீடுகளில் சீரியல், கிரிக்கெட் சண்டையில் கிரிக்கெட் தான் ஆணாதிக்கம் போல எப்போதுமே மேலாதிக்கம் செய்கிறது. ஒரு நபர் எப்போதுமே விட்டுக் கொடுப்பதும், மறு நபர் மட்டுமே பலன் அடைவதும் தான் திருமணத்தை  அர்த்தமற்றதாக்கி விடுகிறது. தன் தியாகத்தால் மற்றவர்கள் பலன் பெறுவது,  குடும்ப உறுப்பினர்கள் வாங்கி வந்த வரம்; அந்த குடும்பத் தலைவி வாங்கி வந்த சாபம். ஒரு வீட்டில் என்ன சமையல், அந்த வார இறுதி நாட்களில் எங்கு செல்ல வேண்டும் என எல்லாவற்றையும் தீர்மானிப்பது இல்லத்தரசியை தவிர அனைவருமே. "சமையல் அறைக்கும், கட்டில் அறைக்கும் ரன் எடுத்தே ரணமானவள் மனைவி", என வைரமுத்து கூறியது நூறு சதவீதம் உண்மை.

     இங்கு எத்தனை பெண்ணிற்கு அவளுடைய வாழ்கைத் துணையை அவளாகவே தேர்ந்தெடுக்க உரிமை வழங்கப்பட்டிருக்கிறது? என்னைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் முதல் உரிமை இதுதான். ஒரு ஆண் பிள்ளை காதலிக்கும் போது பெற்றவர்களின் கண்ணிற்கு தெரியாத ஜாதி, மதம், கெளரவம் ஒரு பெண் காதலிக்கும் போது மட்டும் தெரிவது விந்தையே! ஒரு ஆணிற்கு பதின்ம வயதில் சுதந்திரம் முழுவதுமாக கிடைத்து விடுகிறது. ஆனால் பெண்ணிற்கு அப்போது தான் சிறை வாசமே ஆரம்பிக்கிறது. சில வயதுக்குப் பிறகு, அவளுக்கு இடப்படும் கட்டளைகளே ஒரு ஆணின் மீது அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.


     ஒரு வீட்டில் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் இருவரில் பெண் சற்று குறைவாக மதிப்பெண் எடுப்பதால் அவளை திட்டுகின்றனர். அப்போது அவள் மனதில் ஏற்படும் எண்ணம் என்னவாக இருக்கும்? "அவனோட நான் கொஞ்சம் தான் மார்க் கம்மி. எனக்கு வீட்ட பெருக்கி, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, பாத்திரம் கழுவினு பல வேலைகள் இருக்கு. ஆனால் அவனுக்கு அப்படியா? அவன் திங்கற தட்டக் கூட கழுவி வைக்க மாட்டான். ஆனா, அம்மா அப்பாக்கு அவன் தானே ஒசத்தி.......?!" இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள், விடைகளே கிடைக்காத கேள்விகள்.

     இந்த உலகத்தில் அக்கா, தங்கையுடன் பிறந்த ஆண்கள் தான் கொடுத்து வைத்தவர்களே. அதிலும் அக்கா என்றால் அலாதி தான். ஆனால் ஒரு ஆணிற்கு இது புரியும் போது அவனுடைய சகோதரி வேறொரு வீட்டினுடைய உடமை ஆகியிருப்பாள். ஆண்களுக்கு எப்போதுமே காலம் கடந்து போன பிறகு தான் விஷயங்கள் புரிய வருகின்றன.

     சாப்பிடுகிற ஆண்மகனுக்கு அவன் தட்டு மட்டுமே தெரியும். பரிமாறுகிற பெண்ணிற்கு தான் மற்றவர்களின் வயிறும் புரியும். டிஷ்யூம் படத்தில் வருகிற பாடலில், "பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு பட்டினியாய் கிடப்பாளே அதுபோல" னு  வருமே  ஒரு வரி. எவ்வளவு உண்மை. எல்லோருக்கும் பரிமாறிய பிறகு என்ன மீதம் இருக்கிறதோ  அதையே தான் உண்டு வாழ்கிற குடும்பத் தலைவிகள் நூறிற்கு தொண்ணூற்று ஒன்பது பேர். வைரமுத்து சொன்னது போல, "இங்கு ஒவ்வொரு வீட்டிலும் அந்த குடும்பத் தலைவியின் ரத்தமே மறைமுகமாக பரிமாறப்படுகிறது."

     ஆனந்த விகடனில் சில வருடங்களுக்கு முன் பிரபலமான ஒரு ஆணிடம்,"ஒரு பெண் எப்போது அழகாகிறாள்?" என்றும் மறு வாரத்தில் பிரபலமான ஒரு பெண்ணிடம்,"ஒரு ஆண் எப்போது அழகாகிறான்?" என்றும் மாறி மாறி கேட்கப்பட்டது. ஆண்கள், "பிறந்த குழந்தை, பெற்றெடுத்த தாய், விட்டுக் கொடுக்கிற சகோதரி, சண்டை போடுகிற தோழி, வாழ்கையை உணர்த்திய காதலி, தன் சிசுவை சுமந்து நிக்கிற மனைவி, தன்னை வளர்த்த  பாட்டி..." என்று விதவிதமான பதில்கள். ஆனால் எல்லா பெண்களிடமிருந்தம் வந்த ஒருமித்த பதில்கள்," எப்போது ஒரு ஆண் பெண்ணின் கருத்துக்களுக்கு மதிப்பு தருகிறானோ அப்போதே அவன் அழகாகிறான்." என்றனர்.

     சில ஆண்டுகள் முன்பு வரை ஓரளவே வளர்ச்சி கண்டிருந்த விஞ்ஞானம் சமீபத்திய ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதிற்கு காரணம் வேலைக்கு செல்லக் கூடிய  சூழல் பெண்களுக்கு அதிகம் வாய்க்கப்பட்டதால் தான் என்னவோ. ஒரு பெண் தன் இறுதி காலம் வரை கற்றுக் கொள்கிற ஆர்வத்தை குறைத்துக் கொள்வதே இல்லை. நம்பிக்கை இல்லை எனில், உங்கள் வீட்டில் இருக்கிற தாத்தா, பாட்டிக்கு அலைபேசியின் உபயோகத்தை கற்றுக் கொடுங்கள். பாட்டி ரொம்ப ஆர்வமாக கற்றுக் கொள்வார். தாத்தாவோ,"இந்த ரெட் பட்டன அமுக்கினா கட் ஆய்டும். பச்சை பட்டன அமுக்கினா பேசலாம் அதானே. சரி போதும் போ" என்பார்.     கார்ல் மார்க்ஸ் சொல்லி புரியாத சமத்துவம் ஒரு பிடி வெங்காயம் நறுக்கும் போது தான் புரிகிறது. என்ன செய்ய? ஒரு ஆண் தவறு செய்தும் போது சம்பவம் ஆக்கிப் பார்க்கிற சமுதாயம், ஒரு பெண் தவறு செய்யும் போது மட்டும் சரித்திரம் ஆக்கிப் பார்க்கிறது.

     பிரசவத்திற்காக நாட்டிலேயே வசதியான மருத்துவமனையில் அந்த கர்ப்பிணியை சேர்க்கலாம். ஆனால் அந்த தாய் அனுபவிக்கிற வலிக்கு நம்மால் என்ன விலை கொடுத்து விட முடியும்?

மழை சிநேகம்குடை கொண்டு செல்ல 
மறந்த நாட்களில் தான் 
புரிகிறது.
மழையுடன் 
எனக்கு உண்டான 
சிநேகமும் விரோதமும்!

Sunday, October 17, 2010

அங்கீகரிக்கப்படாத பெண்மை


      இந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது  இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே! தாய்மை அடைகிற போது தான் அவளைக்  கொண்டாட ஆரம்பிக்க வேண்டுமா? ஏன் அப்போது மட்டும் அவளை கொண்டாட வேண்டும்? அப்படி கொண்டாடமல் விட்டால், இந்த உலகம் பழிக்குமே. அதனால் தானோ என்னவோ ஒருவன் தாய்மையை மட்டுமாவது மதிக்கிறான்.

     ஆனால் ஒரு பெண்ணுக்குள் ஆரம்பம் முதலே தாய்மை நிரம்பி வழிந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒரு பெண் குழந்தை பொம்மையை குழந்தை போல பாவித்து அதற்கு உணவு அளிப்பதும், தாலாட்டி உறங்க வைப்பதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் போகப் போக அதற்குள்ளும் ஆணாதிக்கத்தின் பாதிப்புக்கள் வந்து விடுகின்றன.
காலையில் வீட்டு வாசலில் இருக்கும் செய்தித்தாளை அப்பாவிடமும், பாலை அம்மாவிடமும் யாரும் கற்பிக்காமலே ஒரு குழந்தை எப்படி கொடுக்கிறது?

     இதை எழுதும் நான் ஒன்றும் கடைந்து எடுத்த யோக்கியன் அல்ல, சில ஆண்டுகள் முன் வரை. சில சம்பவங்கள், சில வாசிப்புக்கள் என்னையும் புத்தன் ஆக்கியது. என்ன அந்த புத்தன் ஞானத்தை தேடி வெளியே போனான். இந்த புத்தனுக்கு எந்த முயற்சியும் இல்லாமல் சற்று சுலபமாகவே கிடைத்தது.


     பெண்களின் பெருந்தன்மையால் தான் இங்கே பல ஆண்கள் தண்டிக்கப்படாமல் நிம்மதியாக வாழ முடிகிறது. ஒரு பெண்ணோட தியாகத்துக்கு முன்னாடி, ஆண்களோட வலிமை எல்லாம் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுகிறது.      அது ஒரு மதியப்பொழுது. சென்னை தன் இயல்பு மாறாமல் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. சூரியன் தன் பங்குக்கு வெம்மையை கக்கி மக்களை இம்சித்துக் கொண்டிருந்தது. பேருந்தின் வருகைக்காக நான் சைதாபேட்டையில் நின்றுக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு சிறுவனும், சிறுமியும் பாக்கெட் தண்ணீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த சிறுவன் பேருந்து ஓட்டத்தில் இருக்கும் போதே தானும் ஓடி விற்றுக்கொண்டிருந்தான். ஆனால், அந்த சிறுமியால் ஓடி விற்க முடியவில்லை. அதனால் நின்றுக்கொண்டிருந்த பேருந்தில் எல்லாம் ஏறி விற்றுக்கொண்டிருந்தாள். தன் விற்பனையை முடித்தவுடன் அந்த சிறுமி இருக்கிற பேருந்தில் ஏறி அந்த சிறுவனும் விற்க முயன்றான். அந்த பேருந்தில் உள்ள ஒரு பயணி, அந்த சிறுமியிடம் தான் தண்ணீர் வாங்கினார். கிழே இறங்கியவுடன் அந்த சிறுவன், " ஏய்! இதோ பாரு. ஒழுங்கா மருவாதையா அங்க போய்டு. இல்ல மூஞ்சி முகர எல்லாம் கிழிச்சிடுவேன்". அந்த சிறுமி என்ன செய்வதென்றே தெரியாமல், அழுதால் ஆறுதல் கூட சொல்ல ஆள் இல்லாமையால் விழித்துக்கொண்டிருந்தாள்.

     ஆணாதிக்கம் என்பது ஒரு பிறவிக் குணமா?  இயற்கை ஆணுக்கு அளித்த ஆயுதமா? இல்லை இயற்கையை வென்ற ஆணின் குணாதிசயமா? இப்படி என்னுள் விடை கிடைக்காத கேள்விகள் ஏராளம். யோசித்துக் கொண்டிருக்கயிலேயே நம் இதிகாசங்கள் நினைவுக்கு வந்தன. ஆண்களோட பழி சுமத்துகிற மனோபாவத்துக்கு விடைத் தேடி பயணிக்க வேண்டும்  என்றால் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அசுரன்கிட்ட சிக்கிய மனைவியை பார்த்ததும் மகிழ்ச்சி கொள்ளாமல் சந்தேகப்பட்ட ராமனும்  , ஆண்கள் சூதாடிய போது ஏதோ மண்ணை வைத்து விளையாடியதோடு மட்டுமல்லாமல் மனைவியையும் வைத்து விளையாடிய பாண்டவர்களும் தானே நம் முன்னோர்கள்? விபச்சாரம் செய்ததாக ஒரு பெண்ணை கல்லெறிந்து அடித்துக் கொல்ல முயற்சிக்கும்  போது ஏசுநாதர் வந்து தடுத்தாரே .. அப்போ அவர், " உங்களில் தவறு செய்யாதவர்கள் கல் எறியுங்கள்" என்றதும் ஆண்கள் எல்லாம் மௌனமானார்களே. ஆணின் பங்கு இல்லாமல் இங்கே விபச்சாரம் நடக்காது என்கிற உண்மை தெரியாதவர்கள் எவரும் இல்லை. அன்னை தெரெசா கொல்கத்தாவில் அறக்கட்டளை தொடங்கிய போது அதை அவதூறாக பேசியவர்கள் தானே நம் பாட்டனார்கள்.


      எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு முறை விலைமாதுக்களை பேட்டி எடுக்க சென்றிருந்தார். அவர்களில் எவரும் தன் வாடிக்கையாளர்களை குறை கூறுவதில்லையாம்! எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் ஒருவர் தான் ஒரு கதை எழுதி இருப்பதாகவும், அதற்கு அவர் பரிந்துரை எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். முதல் வரியை படித்த சிங்கம் தாள்களை தூக்கி எறிந்து விட்டு கர்ஜ்ஜித்ததாம், " என்னடா எழுதி இருக்கற? ஒரு ஊரில் ஒரு பரத்தை இருந்தாள் என்று.. அதை அப்படி எழுதக் கூடாது. ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்; பல ஆண்கள் இருந்தார்கள். அதனால் அவள் பரத்தை ஆக்கப்பட்டாள் என்று" (எவ்வளவு உண்மை!- ஏதோ ஒரு இதழில் இந்த செய்தியை    படித்தேன்).      ".......மவனே", எல்லா மொழிகளிலும் உள்ள உச்சபச்ச கெட்டவார்த்தை ஒருவனின்/ஒருவளின் தாயை மற்றும் சகோதரியை பழிப்பதாகவே உள்ளது. "இப்பேர்பட்ட புள்ளைய பெத்ததுக்கு அவன பெத்தவள திட்டாம வேற என்ன செய்யறது?" என்று நியாயம் வேறு! அவனைப் பெற்று எடுப்பதில் ஆணுக்கும் சரி பாதி பங்கு இருக்கிறதே. ஏன் அவனைத் திட்ட வார்த்தைகள் ஏதும்  இல்லாமல் போயிற்று?

      "அயலவர் ஒருவர் உறவினர் ஆனார். உறவினர்கள் எல்லாம் அயலவர் ஆனார்கள்". ஒரு பெண்ணின் திருமணத்தையும் அவளின் வலிகளையும் நறுக்கென்று பதிவு செய்யும் வரிகள். திருமணதிற்குப் பின் தங்களின் தோழிகளுடன் பேசக் கூட அனுமதி பெரும் அவலம் இன்னும் நீடிப்பது கேவலமே. அந்த வீட்டில் இரவு சப்பாத்தி செய்வதாக வைத்துக்  கொள்வோம். அந்த பெண்ணுக்கு பிடித்தது xxxx . ஆனால் அந்த குடும்பத்தில் அது செய்யும் வழக்கம் இல்லை என்றால், முடிவு அவள் அதை தியாகம் செய்வது தான். இந்த உலகம் பெரிதும் புரிந்து கொள்ளப்படாமல் போன விஷயம் திருமணமாகி பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு பெண்ணிற்கு ஏற்படும் தனிமையும், வெறுமையுமே. ஒரு பெண்ணால் எந்த ஒரு பிரச்சனையையும் சுலபமாக சமாளித்து விட முடியும். ஆண்களையே சமாளிப்பவர்கள் ஆயிற்றே!

     ஐந்து வருடங்களுக்கு முன் நான் படித்த ஒரு கதை. ஒரு பெண்ணின் தினசரி  வாழ்கையை  மையமாகக் கொண்டது. அவன் பிரபல தனியார் துறையில் மேல் பதவியில் இருப்பவன். தான் மட்டும் இந்த குடும்பத்தை காப்பாற்ற சிரமப்படுகிறோமே தன் மனைவி மட்டும் வீட்டில் சுகமாக இருக்கிறாளே என்று கடுப்பாகிறான். அன்றிரவு," சாமி! தயவு செஞ்சு என்ன என் மனைவியாகவும், அவளை நானாகவும் மாற்றிவிடேன்.." என்று வேண்டுகிறான். கடவுளும் அவ்வண்ணமே அருள் புரிகிறார். மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்குகிறான். மறுநாள், "ஏய்! என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க? எழுந்திரிச்சு எல்லாம் ரெடி பண்ணு." என்கிறாள் கணவனாக மாறிய மனைவி. பல் தேய்த்து, வீடு வாசல் கூட்டி, சிற்றுண்டி தயாரித்து, அனைவருக்கும் மதிய உணவு தயார் செய்து வழி அனுப்பி வைத்து விட்டு குளிக்க செல்கிறாள். வெளிய வந்தவுடன் தான் ஞாபகம் வருகிறது அந்த மாதம் கட்ட வேண்டிய பில்கள் பற்றி. சிற்றுண்டி கூட உண்ணாமல் அதனதன் அலுவலகங்களுக்கு சென்று பில்களை கட்டி வரும் வழியிலே பள்ளிக்குச் சென்ற பிள்ளையை அழைத்து வந்து, அதனுடன்  மல்லுக்கட்டி உணவூட்டி, உறங்க வைத்து தானும் சாப்பிடுகிறாள். பிறகு துணிகளை துவைத்து, குழந்தை எழுந்தவுடன் அதை வீட்டுப்  பாடங்கள் எழுத வைத்துக் கொண்டிருக்கும் போதே அலுவலகம் விட்டு கணவர் வந்து விடுகிறார். அவருக்கு காபி கொடுத்து விட்டு இரவு உணவு தயார் செய்கிறாள். அனைவரும் உணவருந்திய பின்பு குழந்தையை தூங்க வைத்து, பாத்திரம் தேய்த்து விட்டு பிழிந்த சக்கையாக கட்டிலில் வந்து படுக்கும் போது கணவரை திருப்தி படுத்த வேண்டிய சூழ்நிலை. இறுதியில் எல்லோரும் உறங்கிய பின்பு கட்டிலுக்கு அடியில் சென்று மீண்டும் கடவுளை வேண்டுகிறான், "சாமி! இப்ப புரியுது இந்த பொம்பளைங்களோட கஷ்டம். மறுபடியும் என்ன ஆம்பளயாவே மாத்திடு, ப்ளீஸ்"என்கிறான். அவன் முன் தோன்றிய கடவுள் சிரித்துக்கொண்டே," மன்னித்து விடுப்பா. இன்னும் பத்து மாசம் நீ பொறுத்து இருக்க வேண்டும். ஏன் என்றால் நீ இப்பொழுது    ஒரு குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாய்". (எப்பூடி!)

       இது ஒரு புனைக் கதையாக இருக்கலாம். ஆனால் அது சொல்ல வரும் கருத்து வலிமையானது. சில பேர்கள் கதையை கதையாக மட்டுமே பார்ப்பார்கள். அவர்களுக்காக ஒரு உண்மைக் கதை.(ஆனந்த விகடனில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்தது). அவள் ஒரு கிராமத்துப் பைங்கிளி. வழக்கம் போல ஒருவன் காதல் என்கிற போர்வையில் அவளை அணுகி இருக்கிறான். அவளும் பிடிக்கொடுக்காமலே இருந்திருக்கிறாள். எப்படியோ அவனும் அவளை தன் வலையில் சிக்க வைத்துவிடுகிறான். அவள் பேரழகி என்றும், அவளை தான் சினிமாவில் அறிமுகம் செய்ய போவதாகவும் மாய வார்த்தைகள் சொல்லி சென்னைக்கு அழைத்து இருக்கிறான். அவளும் வெகுளியாக அவனை நம்பி தன் (வாழ்நாள்) பயணத்தை அவனுடன் சென்னை நோக்கி துவங்கி இருக்கிறாள். ரயிலில் உள்ள கழிவறை ஒன்றில் அவளை அனுபவித்து  முடித்தவுடன், அவளை உறங்க வைத்து நடுவிலேயே இறங்கிச் சென்று விடுகிறான். அசதியாக இருந்தவள் சென்னை வந்தவுடன்தான் முழித்து இருக்கிறாள். தன் கிராமத்தை விட்டு வேறு எங்கும் செல்லாத அவள் துக்கத்துடன் ரயில் நிலையத்திலேயே அன்று முழுவதும் இருந்திருக்கிறாள். அவளை வெகு நேரம் கவனித்து வந்த மத்திம வயதுக்காரர், அவளை நெருங்கி விசாரிக்கிறார். பிறகு அவளுக்கு (மயக்க மருந்து கலந்த) உணவு வாங்கித் தந்து  தன் பசியை தீர்த்துக் கொள்கிறான். இப்படி அவள் கிட்டத்தட்ட 45 ஆண்களின் பசிக்கு உணவாகி இருக்கிறாள். ( தன் வேதனையை தன் தந்தை வயதில் இருக்கும் ஒருவனிடம் சொல்லி அழுதிருக்கிறாள். அவனும் அப்படியே). கடைசியில் சுயநிலை மறந்த நிலையில் ஏதோ ஒரு இடுகாட்டில் வந்து தஞ்சம் அடைந்து இருக்கிறாள்.(பிணமான ஆண்கள்  மட்டுமே ஒரு பெண் நம்ப தகுதியானவை!). அங்கேயே வசித்து வரும் ஒரு ஆண்மகன் தான் அவளை சோறிட்டு காத்திருக்கிறான்.(அவன் அளித்த பேட்டி தான் வெளிவந்தது).  சில மாதங்கள் கழித்து அவளும் இந்த பாவப் பட்ட உலகை விட்டு சுதந்திரம் வாங்கிச சென்று விட்டாள். இந்த சம்பவம் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. (இங்கே வயது பல ஆண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது). இந்த கதையா நம்ப மறுக்கிறவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
                                   http://www.youtube.com/watch?v=k5GfFBkLGi4
    ஒரு ஆண் தன் காதல் தோல்வி அடைந்தால், தம், தண்ணி (எல்லோரும் அல்ல) அடித்து தன் வேதனையை வெளிப்படுத்தி விடுவான். ஆனால் ஒரு பெண் காதல் தோல்வியை  எப்படி எதிர் கொள்வாள்? நான் வெகு நாளாய் துரத்திய கேள்வி. பதில் "பூ" படம் மூலமாக கிடைத்தது. என்னை மிகவும் பாதித்த படம். தனக்காக இல்லாவிட்டாலும்  தன் குடும்பதுக்காகவாது ஒரு பெண் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகிறாள், தனக்கு விருப்பம் இல்லாவிடிலும். "மௌன ராகம்" ஒரு பெண்ணின் பார்வையில் நகர்கிற அற்புதமான படைப்பு. மாப்பிள்ளை நல்ல சம்பாதிச்சா போதும்னு நினைக்கிற பக்கா நடுத்தர வர்க்க குடும்பம். ஆனால் திருமணம் செய்து கொள்ள மன நிலையில்  இல்லாத மகள். திருமணம் முடிந்த இரவுப் பொழுதில், வீட்டுக் கொள்ளைப் புறத்தில் அமர்ந்து இருக்கிற ரேவதியை அவள் அம்மா மாப்பிள்ளை காத்திருப்பதாக சொல்லும் போது, "அம்மா ப்ளீஸ் மா, இது வேண்டாம் மா. இதே ரெண்டு நாளைக்கு முன்னாடி இதே காரியத்துக்கு வேற யாரோவதோடு அனுபிச்சி இருப்பியா?" என்று சொல்லும் இடம் ஒட்டு மொத்த பெண் வர்கத்தின் நியாமும் , இத்தனை ஆண்டுகால  அடிமைத்தனத்தின் வலிகளும் ஒரே ஒரு கேள்வியாய்!

      புத்தகம் வாசித்தல் எனக்கு மிகவும் பிடித்தமானதொரு விஷயம். ஆனால் ஒரே ஒரு புத்தகம் படிக்க முடியாமால் தவிர்த்து வருகிறேன். அது அஞ்சனா தேவ் எழுதிய விகடன் பதிப்பகத்தின் "கதவுகளுக்கு பின்னே கண்ணீர் பதிவுகள்". இந்தியா முழுவதுமாக பயணித்து பல பெண்களின் வாழ்கைத் தொகுப்பே இந்த புத்தகம். என் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கிறது ஒவ்வொரு சம்பவுமும்! கரு கலைப்பு செய்வதற்காக தன் மனைவின் வயிற்றில் உட்கார்ந்து குதித்த கணவன் ....... இப்படி பலப்பல அதிச்சிகள். அந்த புத்தகம் என் கண்ணில் பட்டாலே ஒருவித மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறேன். "நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்" என்று இன்னொரு புத்தகம். வெவ்வேறு நாடுகளில் பெண்களை மையமாக வைத்து வெளியான படங்களின் தொகுப்பு. ஏதோ நம் நாட்டில் தான் இப்படி என்றால், அயல் நாடுகளில் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு, சமீபத்தில் ஆப்கானில் தன் கணவனால் மூக்கறுக்கப்பட்ட பெண்ணின் கதை.
  
     கடந்த வருடம் நடந்த ஈழப் போரில் நம் அரசு மௌனம்காத்தே நாட்களை ராஜதந்திரமாக நகர்த்தியது. அப்போது தமிழ் திரை உலகம் நடத்திய கண்டன பேரணியில் எல்லோரும் பட்டும் படாமல் பேசிக்கொண்டிருக்க கவிஞர் தாமரை (தமிழச்சி!) பேசிய பேச்சு!!!! விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு தைரியம்!!!. கீழே  உள்ள உரலியை  சொடுக்கவும், கவிஞரின் ஆவேசப் பேச்சைக் காண..


     நம் நாட்டில் ஹாக்கிக்கு கூட மதிப்பு இல்லை. கிரிக்கெட்டுக்கு தான் கிராக்கி. ஆனால் மகளிர் கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ.4000 ஒரு நாள் போட்டிக்கும், ரூ.7000 டெஸ்ட் போட்டிக்கும்!

      "பெண் ஏன் அடிமை ஆனாள்?" என்ற கருத்தையே ஒரு ஆண் (தந்தை பெரியார்) எழுதிய நிலையில் தான்  நாம் இருந்திருக்கிறோம். ஆனால், அதே கருத்தை ஒரு பெண் எழுதி இருந்தால் இன்னும் சிறப்புக்குரியதாய் அமைந்து இருக்கும்.

     ஒரு மரத்தை நாம் அப்படியே ஏ ற்றுக்கொள்வதே இல்லை. அதை வேலைப் பாடுகள் கொண்ட நாற்காலியாகவோ, மேசையாகவோ இருப்பதைத் தான் விரும்புகிறோம். நாம் ஒரு விஷயத்தை இயல்பாக பார்க்க பழகவில்லையோ? ஆனால் பெண் என்பவள் அவள் பெருமையை உணராத குருட்டு மனிதர்களுக்கும் கைத்தடியாக வாழ்பவள்!!!

 ( 1091 - women help line. Avail it )    

Saturday, October 16, 2010

எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

     "ஆனால் , இருந்தால் என்ற வார்த்தைகள் மிகவும் வசீகரமானவை. ஏன் என்றால் அவை தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்ய வைக்கிறது. நாம் பள்ளியில் படிக்கும் போது "நான் முதலமைச்சர் ஆனால்.." என்ற கட்டுரையும் அதே ரகம் தான். இப்படி நம் கற்பனைக் குதிரையை தட்டி விட வைக்கும் தருணங்கள் ஏராளம். ஆனால் எத்தனை பேரால் தங்களுடைய கற்பனையை நிஜமாக்க முடியும். அத்தகைய சிலரில் ஒருவர் தான் ஷங்கர். மாஸ் ஹீரோ பிம்பத்தில் சிக்கித் தவித்த ரஜினிக்கு சரியான தீனி தான் இந்த "எந்திரன்".

     மீண்டும்  If it happens? வகையறா தான் எந்திரனும். ஆனால் டெக்னிக்கலாக இது விஷ்வ ரூபம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

     மனிதனைப் போலவே ஒரு ரோபோவை உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்கினால்  அந்த ரோபோவை எல்லாத் தருணங்களிலும் சரியாக கையாள மனிதனால் (அதுவும் வஞ்சம், பொறாமை,.. நிரம்பிய  இந்த யுகத்தில் ) முடியுமா? அப்படி முடிந்தால் அந்த எந்திரத்தால் மனித உணர்வுகளை புரிந்து சரியாக நடந்து கொள்ள முடியுமா? மனிதனைப் புரிந்து கொள்ள உணர்வுகளை கற்பித்தால் அதனால் அதீத  விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா ? ஏழாம் அறிவு கொண்ட எந்திரம் ஆறாம் அறிவை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால்? இப்படி பல கேள்விகளுக்கு மூன்று மணி நேரத்தில் சுவாரசியமாக பதில் கிடைக்கிறது.     வசீகரன், மனிதனைப் போலவே ஒரு ரோபவை உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ள ஒரு விஞ்ஞானி. பத்து வருட உழைப்பின் பிரதி பலனாக அவரைப் போலவே ஒரு ரோபோவை (சிட்டி) உருவாக்குகிறார். அந்த ரோபோவிற்கு எல்லா மொழிகளும், கலைகளும் , இத்யாதி இத்யாதிகளும் ப்ரோக்ராம் செய்யப்படுகிறது.  அதை ராணுவத்தில் பயன்படுத்தினால் மனித உயிர் இழப்பு ஏற்படாது என்பது வசீகரனின் கருத்து. ஆனால், அதை உயர் மட்டக்  குழுவில் உள்ள வசீகரனின் குரு ஏற்க  மறுக்கிறார்  ( Dany - யும் மனிதனைப் போலவே ரோபக்களை உருவாக்கி அதை நாசகாரியங்களுக்கு வெளிநாட்டவரிடம் விற்று காசாக்கி கொள்ள முயல்கிறான்).  அதற்கு சொல்லப்படும் காரணம், "அது வெறும் எந்திரம். அதை யார் வேண்டுமானாலும் திசைத் திருப்பி தவறாக பயன்படுத்திவிடலாம்" என்று.     தன் பத்து வருட உழைப்பு வீண் ஆகிவிடக் கூடாது என்று வசீகரன் அதற்கு உணர்வுகளைக் கற்ப்பிக்கிறார். ஆனால் அதன் விளைவு , சிட்டி வசீகரன் மணந்து கொள்ளப் போகும் பெண்ணை (ஐஸ்-சனா)  காதலிக்க துவங்குகிறது. இது தெரிய வரும் போது அதிர்ச்சியாகும் வசீகரனும்,சனாவும் சிட்டி ஒரு எந்திரம் என்றும், மனிதனும் எந்திரமும் வாழ்நாள் துணையாக வாழ முடியாது என்றும் விளக்குகிறார்கள். தன் காதல் தோல்வியை தழுவதில் வருத்தம் கொண்ட சிட்டி ஆராய்ச்சிக் கூடத்திற்கு சென்று மறு நாள் நடை பெற இருக்கும் ராணுவ பரிசோதனைக்கு தயாராக தன்னை charge - இல் போட்டுக் கொண்டு படுத்திருக்கிறது. அப்போது வசீகரனின் குரு  சிட்டியை   மனிதப் படைப்பின் உச்சம் என்றும் ,  ஆனால் சிட்டியை வீட்டு வேலை செய்பவனாக வசீகரன் பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குழப்புகிறார். காதலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத சிட்டி மறு நாள் பரிசோதனையில் வெடிகுண்டை கையில் வைத்துக் கொண்டு கவிதை சொல்லி சொதப்புகிறது. இதனால் கோபப்படும் வசீகரன், சிட்டியை வெட்டி தூக்கி எறிகிறார்.     இதை அறிந்து கொள்கிற வசீகரனின் குரு, அந்த ரோபோவின் பாகங்களை எடுத்து வந்து அதை reprogram  செய்து நாச வேலைகளுக்கு பயன்படுத்த நினைக்கிறார்.     ஆனால், dany -யின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது சிட்டி. அது தானாகவே அதைப் போலவே உள்ள ரோபக்களை உருவாக்கி, ரோபோ இனத்தை உருவாக்குகிறது. பிறகு மணவறையில் உள்ள சனாவையும் கடத்தி வந்து அவள் கூட வாழ ஆசைப்படுகிறது. தான் மனிதனை விட எந்த விதத்திலும் குறைந்தவனல்ல என்றும், சனாவுடன் சேர்ந்து ஒரு கலப்பினத்தையே உருவாக்க நினைக்கிறது (robosepians  !). பிறகு வசீகரன் சிட்டியை  எதிர்கொண்டு சனாவை எப்படி காப்பாத்துகிறார் என்பதே மீதி திரைக்கதை.

     ரஜினியை இவ்வளவு இளமையாக, இவ்வளவு உருக்கி எடுத்தற்காகவே ஷங்கருக்கு தனி பூச்செண்டு தர வேண்டும். ரஜினி எது செய்தாலும் அது உச்சமாக இருக்கும். முற்பாதியில் சிறு முக அசைவைக் கூட வெளிப்படுத்தாமல் அச்சு அசலாகவே ஒரு ரோபோவாகவே வாழ்ந்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ரோபோ படு அசுரத்தனம். அதிலும்," who is the black sheep? " என்று உறுமும் போதும் , black sheep - ஐ கண்டுபிடித்தவுடன் "மேமே..." என்று ஆடு போல கத்துவதும் கிளாஸ். (தமிழ்த்  திரை உலகம் எப்பேர்ப்பட்ட ஒரு வில்லனை இழந்து இருக்கிறது என்பது தெரிகிறது).கீழே உள்ள உரலியை ( URL ) சொடுக்கவும் , தலைவரின் வில்லத்தனத்தைப் பார்க்க.


   
     வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு  sharp. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ரோபோ அதன் புரிதலுடன் விளக்குவதும், "மனுஷங்க தங்கள காப்பாத்திக்க பொய் சொல்வாங்க-னு புரிஞ்சிக்கிட்டேன்" என சிட்டி சொல்லுமிடம் அவ்வளவு அற்புதம். அதேபோல முற்பாதியில் சிட்டி எதை எடுத்தாலும் literal ஆகவே எடுத்துக்கொள்வதே படத்தின் நகைச்சுவைக்கு துணைப்புரிந்து இருக்கிறது. அதிலும் speaker - இல் "செல்லாத்தா எங்க மாரியாத்தா" எனப் பாடும் போது, "who is that செல்லாத்தா?" எனக் கேட்பது செம timing.
சிட்டி, வசீகரன் மற்றும் சனா காதலைப் பற்றி பேசும் இடத்தில் சிட்டி கேக்கும் கேள்விகள் மற்றும் சொல்லும் பதில்கள் மனிதனை நறுக்கென்று விமர்சனம் செய்கிறது.
சுஜாதாவின் மறைவு ஷங்கருக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது இனி வரும் படங்களில் தான் தெரிய வரும்; அதை அவர் எப்படி ஈடு செய்ய போகிறார் என்பதும் மிகப்
பெரிய கேள்விக்குறியே. 

     பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அத்தனையும் கதையோடு ஒன்றி வருவது கூடுதல் சிறப்பு (கிளிமஞ்சாரோ - வை தவிர). வைரமுத்து அவர்களுக்கு கவிதைக்குள் அறிவியலை புகுத்துவது ஒன்றும் சிரமம் ஆன காரியம் இல்லை. (உ.ம். "சிகரங்களை நோக்கி" - இந்த புத்தகத்தில் அவர் அறிவியலையும் கவிதையும் கையாண்ட விதம் வியப்புக்குரியது!) சிலிகான் சிங்கம், காதல் அணுக்கள் , உயிரூட்டி wire  ஊட்டி என்பதெல்லாம் அவருக்கே உரிய பாணி. "இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ" என்று அவரது மகன் கார்க்கியோ இன்னும் எட்டடி பாய்கிறார்.

      ஒளிப்பதிவில் அவ்வளவு தெளிவு. ஒரு இடத்தில் கூட dual role - இன் பிரதிபலிப்பு தெரியாதது ரத்தினவேலுவின் திறமைக்கு சான்று. சிட்டி dance மற்றும் இறுதியில் சிட்டி பேசிக்கொண்டே தன்னை dismantle செய்துக் கொள்ளும் காட்சிகளும் animatronix - இன் தரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. இத்தனை சிரத்தை எடுத்தவர்கள் அந்த தீவிபத்து காட்சியில்  கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சாபு சிரில், அந்தோனி  மற்றும் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பும் அளப்பரியது!       ஷங்கரின் உழைப்பு பாராட்டுக்குரியது. magnetic mode ஐ சிட்டி பயன்படுத்தி ரவுடிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறித்து அம்மன் போல நிற்கும் இடம் இயக்குனரின் creativity - க்கு ஒரு சின்ன sample. இதே படம் பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால், அது இவ்வளவு பிரமாண்டமாக வந்திருக்குமோ என்பது கேள்விக்குறியே. அப்படி வந்திருந்தால் ஷங்கரின் இன்றைய நிலை யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு இருந்திருக்கும்.

      "இவன் பேர் சொன்னதும், பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்  தட்டும்.
       இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு, நிலவு தலை முட்டும்"
இந்த வரிகள் இந்தப்  படத்தில் பங்காற்றிய கடை நிலை ஊழியரிலிருந்து அனைவருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

Wednesday, October 6, 2010

நன்நம்பிக்கை     மனுஷன் பெரும்பாலான நேரங்களில் நிம்மதியாய் இருப்பதற்கும்,  இல்லாமல் இருப்பதற்கும் நம்பிக்கை மட்டுமே காரணம் என நான் நம்புகிறேன்.

     நம் கருத்து வலுக்க வேண்டும் என்பதில் அனைவருக்குமே ஒரு ஆர்வம் உண்டு. ஆனால் நம் நம்பிக்கையின் மீது நாம் கொண்டுள்ள ஆர்வம் மற்றவர்களின் நம்பிக்கையை உடைக்கிறதா என்று என்றாவது சிந்தித்து உள்ளோமா என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பது கூடவாக இருக்காது  வெறும் மௌனமே பதிலாக இருக்கும்.

     நானும் பல சமயங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு கதை என் எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி விட்டது.     "அவன் ஒரு தொல்பொரு ஆய்வாளன். நாட்டில் உள்ள பல்வேறு  கோவில்களுக்கு  சென்று அதை ஆய்வதே அவன் பணி. அப்படி அவன் ஒரு ஊருக்கு செல்லும் போது, அந்த ஊரில் உள்ள ஒரு முதியவர் அவனை தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு சொல்கிறார் அவனும் மறுக்க முடியாமல் ஒத்துக்கொள்கிறான்.

     முதல் நாள் அவன் அலுவல் முடிந்து வீடு திரும்பிய போது அந்த வீட்டு தோட்டத்தில் ஒரு பெண் செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருப்பதை பார்க்கிறான்; காமம் தலைக்கு ஏறுகிறது. அப்போது அந்த வீட்டுக்குள் நுழையும் முதியவர் அதை பார்த்துவிடுகிறார் . அவர் வரவை சற்றும் எதிர் பாராத அவன் அதிர்சிக்குள்ளாகிறான்; தன் தவறை உணர்கிறான்.

     அன்றிரவு யாரோ கதவு தட்டும் ஓசை கேட்க, போய் திறக்கிறான். திறந்தவனுக்கோ பேரதிர்ச்சி. அந்த முதியவரின் மகள் புது மணப்பெண் மாதிரி  ஏதோ முதலிரவுக்கு வருவது போல வந்தி்ருந்தாள். உள்ளே நுழைந்த அவள், அவனின் முகத்தைப்  பார்த்த உடனேயே அவன் எழுப்ப வந்த கேள்வியை புரிந்து கொண்டு அவனிடம்," இல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப வருஷம்மா குழந்தையே இல்லாம இருந்தாங்க. அப்ப, எங்க அப்பா வேண்டிக்கிட்டராம் இத மாதிரி ஆம்பள குழந்த பிறந்தா அவன கோவிலுக்கே நேர்ந்து விட்டுரராதவும், பொண்ணு பிறந்தா அவள தேவதாசியா ஆக்கிரராதவும் வேண்டிக்கிட்டார். அதனால என் மேல ஆசைபட்டவர்களை திருப்தி படுத்தறது தான் என் கடமை."
 
     இதை கேட்டதும் அவன், "இதெல்லாம் ஒரு பொழப்பா? உங்க அப்பனுக்கு தான் புத்தி இல்ல , உனக்கும்மா இல்ல? ....................." என்று திட்டினான். உடனே அவளும் அழ ஆரம்பித்தவள்,  இரவு முழுவதும்  அழுது கொண்டே இருந்தாள். சரி, இதுக்கு மேலேயும் அவளை திட்ட வேண்டாம் என கருதி அவன் தூங்க செல்கிறான். காலையில் விழித்து பார்த்தால் அவள் தூக்கில் தொங்கி கொண்டிந்தாள் என கதை முடியும்.     அவளோட நம்பிக்கைய சுலபமா உடைக்க முடிஞ்ச அவனுக்கு அதுக்கு பதிலா வேற ஒரு நம்பிக்கைய அவளுக்கு ஏற்படுத்தி    கொடுக்கத் தெரியல. அப்படி அவன் வேற ஒரு ஒரு சரியான நம்பிக்கைய கொடுத்திருந்தா அவளும் நம்பிக்கையா வாழ்கையை  வாழ்ந்திருப்பாள்.

     இந்த கதைல மட்டும் இல்ல , நிஜத்திலையும் பல பேர் அப்படித் தான் இருக்காங்க. தன் கோபங்களை, ஆசைகளை, ஏக்கங்களை மற்றவர்களின் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவனை/அவளை அவர்களுக்காகவே நேசிப்பவர்கள் சிலரே. கணவன் மனைவின் மீது, பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது, காதலன் காதலியின் மீது இப்படி பலரும் பலரது நம்பிக்கையின் உடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

     என் நம்பிக்கைகளிலும் பல பேர் பல தருணங்களில் கை வைத்திருக்கிறார்கள். அதனால் நான் பாதித்தும் உள்ளேன். அப்போது தான் யோசித்தேன்,  இந்த விசயத்தில் மட்டும் இனி எதற்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்று. அதனால் மற்றவர்களிடம் நான் வாங்கிய பெயர் "திமிர் பிடித்தவன்" என்று.

     ஆமாம் நான் திமிர் பிடித்தவன் தான். ஆனால் திமிர் என் ஆயுதம் அல்ல கேடயம்!

Thursday, September 23, 2010

கூடல்


குழந்தையாகிறாய்
என்னை கொஞ்சச்  சொல்லியே!
பொம்மையாகிறேன்
 நீ என்னை கொஞ்சிக் கொல்லவே!

ஆன்மிகமும் அறிவியலும்

  
 
    ஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே! சமீபத்தில் நான் படித்த கட்டுரை அதை பூரணமாக நிரூபித்தது.

     நம் வாழ்வு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. அதில் நீரின் பங்கு மற்றவையை விட சற்று அதிகம். அத்தகைய நீருக்கும் நம் எண்ணங்களுக்கும் தொடர்புண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

     ஆம். ஜப்பானிய அறிஞர் ஒருவரின் ஆய்வுக்கட்டுரை அதனை நிரூபணம் செய்கிறது.

ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி, "உன்னால் தான் நான் நலமாக இருக்கிறேன். நன்றி!" எனக் கூறி, அதை உறைய வைத்து microscope - இன் வழியே பார்க்கிறார். அதன் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது. பிறகு சிறிது நீரை எடுத்து , "நீ என்னை பலவீனப்படுத்திவிட்டாய்" எனக் கூறி முடிவைப் பார்த்தால், வடிவம் மோசமாய் இருக்கிறது.

     அதன் பின்னர், நீர் உள்ள பாத்திரத்தில்  "அன்பு" என எழுதி முடிவை பார்த்தால், ஆச்சர்யம் - வடிவம் அவ்வளவு அழகாம்! அதே முடிவு அசுத்த நீரில் பார்த்தால் மிக அகோரமாய் இருந்திருகிறது.    அவர் அளித்த பேட்டியாவது, " நான் ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டது சிறிதளவு தண்ணீரே. அப்படி என்றால் நம் உடலில் உள்ள நீரின் அளவு எத்தனை, நம் சொற்களும் எண்ணங்களும் அதை எந்த அளவு பாதிக்கும்!  எனவே  நேர்மறை எண்ணம் கொண்டவராகவே இருங்கள்; அவை உங்களை வளப்படுத்தும்."  
    இதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா முக்கிய வைபோகங்களிலும் நீரை சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். பிராமணர்களில் சந்தியாவந்தனம் என்றொரு வழக்கம் உண்டு. அது அனைத்து பிராமணர்களும் பின்பற்ற
வேண்டியது. அதில், மந்திரத்தை மனதில் உச்சரித்துக்கொண்டே நீரையும் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இதை முன்னோர்கள் அறிவியல் ரீதியாக விளக்காமல் ஆன்மிக முறையாகவே கடைபிடித்து வந்துள்ளனர். இதை அவர்கள் அறியாமல் செய்யவில்லை. அவர்களுக்கு பிறகு வந்த வம்சாவளிகள் பலரும் அதன் காரணத்தை அறிய விருப்பம் இல்லாமலோ அல்லது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமலோ போனதன் விளைவு இன்று நம்மிடம் எஞ்சி இருக்கும் அறியாமை.

     இந்த ஆய்வும் (அதாவது அறிவியலும்) ஆன்மிகமும் ஒரே திசையில், ஒரே இலக்கை நோக்கிச்  செல்லும் இரு வேறு  பாதைகள் என்பதை நிரூபணம் செய்கிறது.

Sunday, September 19, 2010

எதற்காக இந்த ப்ளாக்?

நண்பர்களே,
       ஒரு ஓவியத்தை எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்கும் ஓவியனைப் போல தான் நானும் யோசித்து கொண்டிருக்கிறேன், இந்த ப்ளாக்-ஐ  எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று.

       ஒரு ப்ளாக்-ஐ தொடங்க வேண்டும் என்று நான் எண்ணிய பொழுதில் இருந்தே சில ப்ளாக் - களை வாசித்தேன்.ஆனால் பெரும்பாலும் அவை தனி மனிதனின் வாழ்கை குறிப்பு போலவே இருந்தன.

        அப்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்னுடையதும் அப்படி இருக்க கூடாது என்று. ஆனாலும் அனுபவங்கள் அன்றி ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவும், புரிய வைக்கவும் முடியாது. அதனால் என் வாழ்வின் சில துளிகள் மட்டும் அங்கங்கே சாரல் போல பெய்யும்.

                                                      
         சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" போல தான் இந்த ப்ளாக்கும். 
நான் கற்ற , சந்தித்த மனிதர்கள், மேற்கொண்ட பயணங்கள், பாதித்த சம்பவங்கள், பார்த்த சினிமா,  படித்த புத்தகம் மட்டுமே...

         
         என் வாழ்கை "நதியில் விழுந்த  இலை" போல தான்.....
             வாழ்கையின் ஒரு கரை அழகாய் இருக்கிறது;
             மறுகரை அழகற்றதாய் இருக்கிறது.ஆனால்-
            அதனதன் இயல்பில் செல்வது தானே நதியின் அழகு!