Monday, February 21, 2011

காதல் வலி

எத்தனை முறை தான் 
காதலின் 
வலிகளுக்கும் வேதனைகளுக்கும் 
விதவிதமான வார்த்தைகளைத் தேட?
வார்த்தைகள் தீர்ந்தாலும் 
வதைகள் தொடர்கின்றனவே...

Saturday, February 19, 2011

வாழ்தல் ஒரு கலை - IV


      "காரணம் இல்லாமல் காரியமில்லை". நம்முடைய இன்றைய நிலை சரி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்று நமக்கு ஒரு விஷயம் கைவசம் ஆகாமல் போகலாம். அதனால் அது என்றுமே நம் வசம் ஆகாது என்று அர்த்தமாகாது. காலம் தள்ளி போகலாம். ஆனால் மழை பொய்ப்பதில்லை.

     எல்லா விசயங்களும் முதல் முயற்சியிலேயே கைக்கூடிவிடுவதில்லை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நெஞ்சுரம், வேட்க்கை போன்ற சில காரணிகளை  கைவிடாமல் இருந்தாலே நம் நோக்கம் நிறைவேறிவிடும். 
      கடவுள் நம் ஆசைகளை நிறைவேற்றுவதில்லை; நம்முடைய நல்ல நோக்கங்களையே நிறைவேற்றுகிறார். சிலர் சில பல தோல்விகளுக்குப் பின்னர் வெகு எளிதாக நம்பிக்கை இழந்து விடுகின்றனர். நம்பிக்கை இழத்தல் என்பது பிணம் ஆவதற்கு சமானம்.


      அன்று பூலோகமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. காரணம், சொர்க்கத்தில் இருந்து வந்த ஒரு செய்தி - கடவுள் தன் கரங்களாலேயே மக்களுக்கு ஆப்பிள் வழங்கப் போகிறார் என்பதே அது. அந்த ஊரில் உள்ள சிறுமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. கடவுளைப் பார்ப்பதே பேறு என்றால், அவரிடமிருந்து பரிசாக ஒரு கனி பெறுவதென்றால் சொல்ல வேண்டுமா?

     அந்த நன்னாளும் வந்தது. பல கனவுகளுடன் அந்த சிறுமி சொர்கத்திற்கு மக்களுடன் மக்களாக பயணிக்கலானாள். சொர்க்கம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. வரிசை பெரியதாக இருந்தாலும் தூரத்திலிருந்தே சிறுமி கடவுளை ரசித்துக்கொண்டிருந்தாள். சில மணி நேரங்களுக்குள் சிறுமி கடவுளை நெருங்கிவிட்டாள். அவள் தருணம்; விவரிக்க முடியாத மகிழ்ச்சி; ஆசையுடன் சிறுமி கடவுளிடம் கையேந்தி நிற்கிறாள்.

  
     கடவுள் வழங்கும்போது கை இடறி கனி கீழே விழுந்து விட, சிறுமி கடவுளை நோக்குகிறாள், கடவுள் தேவதூதனை பார்க்கிறார். தேவதூதனோ, " தேவனே! மன்னிக்கவும். அந்த சிறுமிக்கு தங்களிடமிருந்து கனி பெற வேண்டுமெனில் மீண்டும் அவள் வரிசையில் தான் வர வேண்டும்" என்கிறார். சிறுமிக்கோ அழுகையே வந்து விடும் போல் இருந்தது. இருந்தாலும் அழுகையை அடக்கிக் கொண்டு வரிசையில் மீண்டும் வரலாம் என பின்னே வந்தால் , வரிசை  முன்பை விட மிக அதிகமாக நீண்டு விட்டது. ஆனாலும், வரிசையில் நிற்கிறாள். அடி அடியாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, கனி வாங்கிச் செல்லும் ஒவ்வொருவரையும் ஏக்கமாக பார்க்கிறாள்.  முன்பை விட கூட்டம்  அதிகமானதால் நாட்கணக்கில் நிற்க வேண்டியதாகிறது. ஆனாலும் அந்த ஒரு தருணத்திற்காக பொறுமைக் காத்து நிற்கிறாள். நாள்பட அந்த ஒரு தருணம் அவளை நெருங்குகிறது. 

   
     அவள் கடவுளை நெருங்கியதும், கடவுள் அவளை உற்று நோக்கி புன்னகைக்கிறார். பிறகு," சென்ற முறை உன் தருணம் வரும் போது, என் கையில் இருந்தது அழுகிவிட்டக் கனி. அது எனக்கு மட்டுமே தெரியும். உனக்கு அதைக் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் யாரும் அறியாத வண்ணம் கை இடறியதுப் போல அதைக் கீழே விழ வைத்தேன். ஆனால், நீ அத்துடன் மனம் தளராமல் மீண்டும் என்னை நோக்கி நம்பிக்கையுடன் வந்தாய். அதனால், இதோ பெற்றுக்கொள் இந்த தோட்டத்திலேயே கனிந்த சிறந்தக்  கனியை" என்று சிறுமியிடம் கொடுக்கிறார்.

    
     நாகூர் ஹனிபாவின் பாடலைப் போல், "இறைவனிடம் கை ஏந்துங்கள்; அவர் இல்லை என்றே சொல்வது இல்லை"

 

Thursday, February 17, 2011

வாழ்தல் ஒரு கலை - I I I

      வாழ்வின் சுவாரசியமே அதன் இயல்பை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது தான். இந்த நொடி துக்கம் நாளைய மகிழ்ச்சிக்கு காரணமாகவும், இந்த நொடி மகிழ்ச்சி நாளைய துக்கத்துக்கு காரணமாகவும் இருப்பது அதிசயமே - சோகத்திற்கும், அதீத மகிழ்ச்சிக்கும் கண்ணீரே அடையாளமாய் இருப்பது போல.

     "எல்லாம் நன்மைக்கே" என்பதை மனப்பூர்வமாக நம்புபவன் நான். இன்பம் - துன்பம் இரண்டையும் ஒன்றாக பாவிப்பவன். ஏதோ ஒரு காரணத்துக்காகவே துன்பம் நம்மை அண்டுகிறது. அந்த துன்பம் எந்த காரணத்திற்காக நம்மை அண்டியதோ, அந்த வேலை முடிந்ததும் நாம் அறியாத வண்ணம் நம்மை விட்டு நீங்கி சென்று விடும்.

     இந்த உலகம் மாயை அல்ல; நாம் உலகை பார்க்கும் விதத்தில் தான் மாயை இருக்கிறது.

     அந்த அரசன் இறக்கும் தருவாயில் தனது மூன்று மகன்களையும் அழைத்து,"அமைச்சரிடம் நம் சொத்துக்களை எப்படி உங்கள் மூவருக்கும் பகிர்ந்து அளிப்பது என்பதை கூறியுள்ளேன். என் காலம் முடிந்த பிறகு அதை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்", என்றார். அன்றிலிருந்து  ஓரிரு நாட்களுக்குள்ளேயே அந்த அரசனும் இறந்து போனார்.

     எல்லா காரியங்களையும் முடித்த பிறகு மகன்கள் மூவரும் அமைச்சரை அழைத்து சொத்து பிரிக்கும் விவரம் கேட்டனர். உடனே அமைச்சர், "முதல் மகனுக்கு சொத்தில் 1 / 2   பங்கையும், இரண்டாம் மகனுக்கு சொத்தில் 1 / 3  பங்கையும், மூன்றாம் மகனுக்கு சொத்தில் 1 / 9  பங்கையும் பிரித்து அளிக்குமாறு  அரசன் கூறியுள்ளார்" என்றார். மகன்களும் அரசனது கட்டளைக்கிணங்க சரி என ஒத்துக் கொண்டனர். அப்படி எல்லாவற்றையும் பிரித்த பின்னர் அரண்மனைக்கு சொந்தமான 17 யானைகள் மட்டுமே மீதம் இருந்தன. இதை எப்படி அரசன் கூறிய வகையில் சரியாக பிரிப்பது என திகைத்து நின்றனர்.

       அப்போது அமைச்சர் கோவிலில் உள்ள பாகனை அவன் யானையுடன் வருமாறு ஆணையிட்டார். அந்த ஒற்றை யானையையும் அந்த 17 யானையுடன்  சேர்த்து அரசன் கூறிய கணக்குப் படி பிரித்தார். பிறகு பாகனிடம் அவன் யானையை அழைத்து செல்லும் படி கூறினார்.

      அந்த ஒற்றை யானை தான் மாயை. மாயை தன் வேலையை முடித்துக் கொண்டு  அதன் வழியில் மீண்டும் சென்று விடும்.

     வைரமுத்துவின் கவிதையைப் போல, "ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா? அதில் அர்த்தம் தேடி அலைவது தான் வேட்கையா?"

Wednesday, February 16, 2011

உன் இதயம் என்னும் 'வெற்றி'டம்

உன் இதயம் 
எப்போதுமே வெற்றிடம் தான்.
அது - என் காதலுக்கான 
வெற்றி இடம் ஆவது எப்போது?
 

Saturday, February 5, 2011

என் இலையுதிர்க்காலம்


என்னிடம் கிடைக்கப் பெறாத 
நிழலைப் பற்றியே 
எல்லோரும் பேசுகிறார்கள்.
என் கிளை மேல் 
அமர்ந்து இளைப்பாற 
ஏனோ அவர்கள் யோசிப்பதேயில்லை.


Tuesday, February 1, 2011

காதல் என்றால் என்ன?

     ஒரு பையன் அவன் அப்பாவிடம், "அப்பா, காதல்னா என்னப்பா?" என்று கேட்டான்.

      உடனே அவனது அப்பா,"சரி, நான் சொல்ற மாதிரி செய். நம்ம வயலுக்கு போ. அங்க இருக்கறதுலேயே பெரிய நெல்லா பார்த்து கொண்டு வா. ஆனா ஒரே ஒரு கண்டிஷன். நீ ஒரு நெல்லை கடந்து போய்டா அந்த நெல்லை மறுபடியும் திரும்பி வந்து பார்க்க கூடாது."

     பையனும் சரின்னு போனான். அப்படியே ஒவ்வொரு நெல்லா பார்த்துட்டே வந்தான். அப்படி ஒரு பெரிய நெல்லை பார்த்ததும், "ஏன் இதைவிட பெரிய நெல் நமக்கு கிடைக்குமே "னு அடுத்தடுத்து பார்த்துட்டே போனான். கடைசி நெல்லை அவன் பார்க்கும் போது," அட இத விட பெரிய நெல்லை எல்லாம் விட்டுடேமே" னு வருத்தத்தோட கிடைச்ச சின்ன நெல்லோட வீட்டுக்கு வந்தான்.

     அவனை பார்த்த உடனே அப்பா,"என்ன?"னு கேட்டார்.
   
     மகன்,"அப்பா, எனக்கு காதல்னா  என்னனு புரிஞ்சிடுச்சு. அப்ப கல்யாணம்னா என்ன?" னு கேட்டான்.

     அப்பா,"சரி! இப்ப நீ நம்ம சோளக்காட்டுக்கு போ. அங்க இருக்கறதுலேயே பெரிய சோளமா பார்த்து எடுத்துட்டு வா. ஆனா நீ ஒரு சோளத்தை கடந்து போய்டா அந்த  சோளத்தை மறுபடியும் திரும்பி வந்து பார்க்க கூடாது."

     இந்த முறை பையன் கொஞ்சம் தெளிவோட தனக்கு கிடைச்ச ஓரளவுக்கு பெரிய சோளத்தையே முழு திருப்தியுடன் கொண்டு வந்தான்.

     வீடு திரும்பிய மகனைப் பார்த்ததும் ,"என்ன?" னு கேட்டார்.

     "அடுத்து ஏதோ ஒண்ணு பெருசா கெடைக்கும்னு மனசு அலைபாயறது காதல், கிடைச்ச சின்ன விஷயத்துலையே திருப்தி அடையறது தான் கல்யாணம்"

     "ஹ்ம்ம்..."