ஆங்கிலத்தில் " Empathy " என்றொரு சொல் உண்டு. மிகவும் அர்த்தம் பொதிந்த சொல் - மற்றவர் கண்ணோட்டத்திலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவது. உறவை பேணுவதற்கு சுலபமான வழி. ஆனால் நாம் பெரும்பாலும் அவ்வாறு செய்வதில்லை என்பதே உண்மை.
இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்ததில் இருந்தே இதை பின்பற்றவேண்டும் என்ற ஆவலும் தொற்றிக்கொண்டது. கி.மு, கி.பி என்பது போல என் வாழ்க்கையை இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிவதற்கு முன், பின் எனப் பிரித்துக்கொள்ளலாம். இதை என் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து பல்சுவை அனுபவங்கள் நடந்தன.
குறிப்பாக, ஒருமுறை சென்னையில் இருந்து என் ஊருக்கு செல்ல தாம்பரத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன், முன்பதிவு எதுவும் செய்யாமல். அது வார இறுதி, விழாக் காலம் என எதுவும் அற்ற சாதாரண நாள். எனவே, சொல்லும்படி கூட்டம் எதுவுமில்லை. அதனால், சிறிது பொறுத்தே ஒரு ultra deluxe பேருந்தில் ஏறி, கடைசி வரிசையில் அமர்ந்துக்கொண்டேன். நடத்துனர் அனைவருக்கும் பயணச்சீட்டு தந்துவிட்டு கடைசியாக என் அருகில் வந்து அமர்ந்து கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவராக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் பேச்சு நீண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். பிறகு நான், "ஏங்க! இந்த மாதிரி சாதாரண நேரத்துல எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு passengers - அ ஏத்துறீங்களே, அது ஏன் தீபாவளி, பொங்கல் மாதிரியான நேரத்துல மட்டும் எங்கள மனுஷனாவே மதிக்க மாட்டீங்கறீங்க?" கேட்டதும் வெடிச் சிரிப்பு சிரித்தார். பிறகு அவர், "தம்பி நீங்க சொல்றது வாஸ்தவம் தான். நாங்க சாதாரண நேரத்துல கூப்பிடும் போது நெறைய பேர் சாதாரண பஸ்ல ஒடுங்கி கஷ்டப்பட்டு போய் காச மிச்சப்படுத்தப் பாக்குறாங்க. இதே தீபாவளி, பொங்கல் மாதிரியான நேரத்துல கொஞ்சம் இடம் இருந்தாலும் பரவா இல்லை, கொஞ்சம் ஏத்திக்கோங்க - னு கேப்பாங்க. நாங்க என்ன செய்ய முடியும் சொல்லு ",னு கேட்டார். நியாயம் தான். சில நேரங்களில் சில மனிதர்கள்!!!
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது. பணிக்கு செல்லும் மனைவிக்கு உதவுவது, வயதான பெற்றோர் சொல்லும் விஷயங்களை காது கொடுத்துக் கேட்பது (It is easier to accept her thoughts rather than argue with her - அகவை அறுபதில் இருப்பவர் அவர் தாயைப் பார்த்து அவர் வீட்டிற்கு சென்றிருந்த எங்களிடம் சொன்னது!!!) என எல்லா இடத்திலும் Empathy - ஐ கடைப்பிடித்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
குறிப்பாக காதலில். ஒருதலைக் காதல், இருவரும் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைகூடாமல் போன காதல் என காதலின் ஒவ்வொரு நிலைகளிலும் நம்மை பொறுமையுடன் இருக்கச் செய்வதில் Empathy - யின் பங்கு அதிகம். சில ஆண்கள் காதலில் பொறுமைக் காப்பதில்லை. வெகு சிலரே முதிர்ச்சியோடு காதலை அணுகிறார்கள். ஒரு பறவை பறந்து வந்து எவ்வண்ணம் அமர்ந்ததோ, அவ்வண்ணம் அந்த பறவை பறந்து செல்வதற்கும் சிரமமற்றபடி கிளையாக இருப்பதே ஒரு ஆணுக்கு அழகு! பிரிவு என்பது வலிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை. பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்த்தப்படுத்திவிடும் என்பது என் நம்பிக்கை.
ஒரு உண்மைச் சம்பவம் ஒரு பெரியவர் அவர் 25 வயது மகனுடன் இரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அவர்கள் இருக்கைக்கு எதிரே இளவயது தம்பதி அமர்ந்திருந்தனர். இரயில் பயணிக்க ஆரம்பித்ததும் அந்த இளைஞன் ரொம்பவும் உற்சாகமாக தன் தந்தையை பார்த்து,"அப்பா! மரம், செடி எல்லாம் பின்னாடி போகுது" என்றான். தந்தை அவனைப் பார்த்து புன்னகைத்தார். அந்த தம்பதிகள் விசித்திரமாக அவர்களைப் பார்த்தனர். இப்படியே ஒவ்வொன்றாக அந்த இளைஞன் சொல்வதும் அவனது தந்தை புன்னகைப்பதுமாக சென்றுக் கொண்டிருந்தது. இது அந்த தம்பதிக்கு சற்று எரிச்சலைத் தந்தது. சிறிது நேரம் கழித்து, மழைத் தூறல் விழத் துவங்கியது. சன்னலின் வழியே கையை வெளியே நீட்டி, கண்களை மூடிக்கொண்ட இளைஞன், பிறகு தன் தந்தையைப் பார்த்து,"அப்பா மழை! மழை!" என பெருமிதத்துடன் கூறினான். தங்கள் பொறுமையை இழந்த அந்த தம்பதி, "உங்க பையன ஹாஸ்பிடல்ல காமிக்கணும்னு நெனைக்கிறேன்"-னு சொன்னார்கள். இதைக் கேட்ட அவனது தந்தை ஒரு புன்முறுவலுடன் பதில் அளித்தார். ""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வரோம். இவனுக்கு சின்ன வயசுலேயே பார்வை போய்டுச்சு. இப்ப தான் ஆபரேஷன் பண்ணி பார்வை கெடைச்சுருக்கு".
10 comments:
""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வரோம். இவனுக்கு சிஓட வயசுலேயே பார்வை போய்டுச்சு. இப்ப தான் ஆபரேஷன் பண்ணி பார்வை கெடைச்சுருக்கு".
/// அந்த பையனோட சந்தோசம் சரியே..
பகிவுக்கு நன்றி..
அருமையான விஷயம் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி
ஒரு உண்மை சம்பவம் பொட்டில் அடித்தது.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
கடைசியில் சொன்ன சம்பவம் உருக்குகிறது..
ஒரு பறவை பறந்து வந்து எவ்வண்ணம் அமர்ந்ததோ, அவ்வண்ணம் அந்த பறவை பறந்து செல்வதற்கும் சிரமமற்றபடி கிளையாக இருப்பதே ஒரு ஆணுக்கு அழகு! பிரிவு என்பது வலிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை. பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்த்தப்படுத்திவிடும் என்பது என் நம்பிக்கை.
சகா உன்மையான வரிகள் அருமை அருமை
பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை. உன்மைதான் ஆனால் இதில் நம் கடமை என்ன தெரியுமா, நம் அன்பின் ஆழத்தை முழுவதுமாக அவர்களுக்கு புரியவைப்பது. நீயில்லாமல் நான் எப்படி, நான் இல்லாமல் நீ எப்படி, என்பதை அவர்கள் நன்கு புரிந்துவைத்திருந்தார்கள் எனில் மரணம் மட்டுமே அவர்களுக்கு பிரிவைத் தந்திர முடியும்.
பிரிகிற காரணத்தை விட பிரிகிற விதம் அந்த பிரிவை அர்த்தப்படுத்திவிடும் என்பது என் நம்பிக்கை. சகா பிரிவென்றாலே கஷ்டம் தான் சகா......உன்மையான அன்பு பிரிதலின் போது ஏற்படுத்துகின்ற வலி இருக்கே. . .எப்படி சொல்ல. . . நல்ல படைப்பு சகா வாழ்த்துக்கள். . .
பிரிவு ஏற்படும் வரை அன்பு தன் அடியாழத்தை உணர்வதில்லை//
கலீல் கிப்ரானின் வரிகளை பொருத்தமான இடத்தில் பொருத்தியமை அழகு.
...அந்த பறவை பறந்து செல்வதற்கும் சிரமமற்றபடி கிளையாக...//
கி.மு, கி.பி என்பது போல என் வாழ்க்கையை இந்த வார்த்தையின் அர்த்தம் தெரிவதற்கு முன், பின் எனப் பிரித்துக்கொள்ளலாம்//
சொல்ல வந்ததை முறைப்படுத்தி நளினமாக சொல்லிச் செல்லும் உங்கள் நடையும்... அழகுதான்!
மீண்டும் வருகிறேன்
அழகான பதிவு
ப்ளாக் டேம்ப்லடே அருமை
""ஆமாங்க, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வரோம். இவனுக்கு சின்ன வயசுலேயே பார்வை போய்டுச்சு. இப்ப தான் ஆபரேஷன் பண்ணி பார்வை கெடைச்சுருக்கு"..
மனதை நெருடிவிட்ட உண்மைச்சம்பவம்.இருப்பினும் அந்தப் பெரியவரின் பொறுமையைக்கண்டு
பெருமிதம் அடைந்தேன் .பொறுமை அனைவரையும் வாழவைப்பதோடு சில சமையம் பிறரை
அளவும் வைத்துவிடும்.நல்ல பகிவினைத் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்........
Post a Comment