Saturday, January 1, 2011

எல்லாம் நன்மைக்கே!

   
     இதோ மற்றுமொரு ஆண்டு பிறந்தாகி விட்டது. இத்தனை காலம் தான் அனுபவித்த துயரங்களும் கவலைகளும் ஒரே ஒரு வினாடியில் மாறிவிடும் என மனிதன் எதிர்பார்ப்பது சுத்த மடத்தனமாக இருந்தாலும், அது ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. எத்தனை முறை விரும்பி ஏற்ற பிரமாணங்கள்? தொடர முடியாமல் கைவிடப்பட்ட பிரமாணங்கள் என நம்மை நாமே பார்த்து நகைக்க கூடிய விஷயங்கள் ஏராளம்.

      ஆனால், சிலர் எதிர்மறையான வாழ்கையை மிகவும் நம்பிக்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கவலைகளிலும், விரக்திகளிலுமே வாழ்க்கை முடிந்து போகப் போவது  இல்லை. இன்னும் சிலரோ இறைவன் தனக்கு மட்டுமே துன்பங்களை தருவதாக எண்ணிக் கொண்டிருகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறு. குர்ஆனில் ஒரு வாசகம் உண்டு " உங்களால் தாங்க முடியாத துயரங்களை இறைவன் ஒருபோதும் உங்களுக்கு தருவது இல்லை".

     "எல்லாம் நன்மைக்கே"  என்பதை பலரும் தத்துவரீதியாக நம்பினாலும் நடைமுறையில் பெரும்பாலோனார் அதை நம்புவதில்லை. அவர்களுக்காகவே  பின்வரும் கதை:


     அந்த காட்டில் மூன்று மரங்கள் அடுத்தடுத்து இருந்தன. ஒவ்வொன்றும் தங்கள் ஆசைகளை பகிர்ந்து கொண்டன. முதல் மரம், "நான் விண்ணை முட்டும் அளவிற்கு வளர வேண்டும்." என்றது. இரண்டாம் மரம், " நான் கப்பலாக மாறி பயணம் செய்ய வேண்டும்" என்றது. மூன்றாவது மரம், "நான் வைரம், வைடூரியம் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களை வைக்கும் ஆபரண பெட்டியாக இருக்க வேண்டும்." என்றது.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு சில மரவெட்டிகள் வந்ததனர். அதில் ஒருவன் இரண்டாம் மரத்தை பார்த்து, "இது நன்கு வலுவாக உள்ளது. அதனால் இதை வெட்டி கப்பல் செய்பவர்களிடம் விற்க போகிறேன்" என்றான். அந்த மரம் தன் ஆசை நிறைவேற போவதை நினைத்து மகிழ்ந்தது. மற்றொருவன் மூன்றாம் மரத்தை பார்த்து, "இதை வைத்து ஆபரணப் பெட்டி செய்யாலாம்" என்றான் . அந்த மரமும் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் எந்த ஒரு வார்த்தையும் கூறாமல் இன்னொருவன் முதல் மரத்தை வெட்ட ஆரம்பித்தான். தன் ஆசை நிராசையாய் போகப் போவதை நினைத்து அந்த மரம் வருத்தம் உற்றது.

    ஆனால் இரண்டாம் மரத்தை கொண்டு சென்றவன் அதை கப்பல் செய்ய பயன்படுத்தாமல் அதை படகு செய்வதற்குப் பயன்படுத்தினான். தன் ஆசை நிறைவேறாமல் போனதற்காக அந்த மரம் வருத்தப்பட்டது.
 மூன்றாம் மரத்தை கொண்டு சென்றவனும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அதை மாட்டு தொழுவத்தில் பயன்படுத்துவதற்காக சிறு தொட்டி போல உருமாற்றினான். அந்த மரமும் வருத்தப்பட்டது. ஆனால் அந்த முதல் மரத்தை எடுத்து சென்றவன் அதை உபயோகப்படுத்தவே இல்லை.


     சில தினங்கள் கழித்து படகாக மாறிய மரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக அது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்த அனைவரும் கத்திக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு முனிவர் மட்டும் எழுந்து, "நில்" என்றார். உடனே வெள்ளமும் நின்றது. படகாக மாறிய மரம்," ச்சே!இப்பேர்ப்பட்ட முனிவரை சுமந்து செல்ல நான் என்ன பாக்கியம் செய்து இருக்க வேண்டும். கப்பலாய் மாறி இருந்தால் கூட நமக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!" என சந்தோஷப்பட்டது. சிறு தொட்டியாக மாறிய மரமோ தன்னை இப்படி மாட்டு தொழுவத்தில் பயன்படுத்தி விட்டனரே என வருத்தம் கொண்டது. அப்போது அங்கே கருவுற்ற ஒரு பெண்ணும் , அவள் கணவனும் அந்த தொழுவத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த ஓரிரு நிமிடங்களிலேயே அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட அங்கேயே ஒரு குழந்தையை பிரசவித்தாள். அந்த குழந்தையை அவர்கள் அந்த தொட்டியில் வைத்து அழகு பார்த்தனர். மூன்றாம் மரமோ," நாம் என்னவோ பொருளை பாதுகாக்கும் பெட்டியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், இப்பொழுது இப்பேர்பட்ட  அப்பழுக்கற்ற ஒரு குழந்தையை  சுமக்கும் புண்ணியம் யாருக்கு கிடைக்கும்" என மகிழ்ச்சியில் திளைத்தது.

     ஆனால் ஆண்டுகள் பலவாகியும் அந்த முதல் மரம் வெட்டப்பட்டு இருந்த அறையை விட்டு வெளியே கொண்டு வந்து பயன்படுத்த எவரும் வரவி்ல்லை. சில தினங்கள் கழித்து அந்த முதல் மரத்தை ஒருவன் வெளியே எடுத்து வந்து அவசர அவசரமாக உருமாற்றிக் கொண்டிருந்தான். பிறகு அந்த மரத்தை சுமந்து செல்லும் படி ஒருவனிடம்  சிப்பாய் ஆணையிட்டான். பிறகு தான் அந்த மரத்திற்கு தெரிந்தது தன்ன சுமப்பவர் ஏசுபிரான் என்று. அதன் பிறகு அது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


     இந்த கதையில் வரும் மூன்று மரங்களும் தங்கள் ஆசையை அடைந்ததன. ஆனால் தாங்கள் நினைத்த பாதையில் அல்ல; இறைவன் விரும்பிய பாதையில்!

    ஓஷோ சொன்னதைப் போல் "வாழ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அதனால் நாம் இழக்கப் போவது ஒன்றும் இல்லை."

4 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான கதை நண்பரே ! வாழ்த்துக்கள் !

G.M Balasubramaniam said...

Can I say, hope for the best and be prepared for the worst. Wishing you all the best.

ஹ ர ணி said...

நாகாசுப்பிரமணியன்...

கடிக்கும் எறும்பையும் நேசித்து அதன் வலியையும் நேசிக்கும் மனோபாவம் இந்த சிறுவயதில் (புகைப்படத்தை வைத்து) இருப்பது நலமே. பக்குவத்தை முதிர்விப்பது. இது வாழ்வில் எல்லா வளங்களையும் தரும்.

எல்லாம் நன்மைக்கேதான். கதை சொல்லும்முறை வெகு நேர்த்தி. ஒரு நெசவாளன் சீராக ஆடை நெய்வதைப்போல. சுவையும் அற்புதம். நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை அதன் மேடு பள்ளங்களுடன் நல்லது கெட்டதுடன் இன்ப துன்பங்களுடன் வலி பொறுதது எல்லாம் சகித்து விதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இது நாம் வாழ்வதல்ல. அவன் இயக்குகிற நிலைக்கு நாம் உட்பட்டு வாழவேண்டும். புத்தாண்டில் வெகு இயல்பாய் எதார்த்தம் உரைக்கும் கதை.

சுந்தர்ஜி பக்கங்கள் வழியாக வந்தேன்.

வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

நேர்மறை எண்ணங்கள் நிறைந்த உங்களுக்கு எனது வாழ்த்துகள் நண்பரே.

Post a Comment