Sunday, November 3, 2013

ரகசியம் கட்டவிழ்க்கும் நேரம் [சிறுகதை]


சுரேஷ், அனிதாவிற்கு திருமணமாகி ஆறு மாதங்களாகியிருந்தன. அவனுக்கு அவளிடம் சொல்ல ஒரு விஷயம் இருந்தது. ஆனால் அதை சொல்ல ஒரு தயக்கம். ஏனென்றால், அது நிச்சயம் ஒரு நாள் அவள் இல்லத்திற்கும் தெரிய வரும். அது குறித்தே அவன் கவலையனைத்தும். இப்பொழுது அதை சொல்லியேயாக வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு.

அனிதா படுக்கை அறையில் துணி மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளை அழைத்த சுரேஷ், மெல்லிய குரலில், "அனிதா, ரொம்ப நாளா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு இருந்தேன். ஆனா, இப்ப தான் அதுக்கு சரியான நேரம் வந்திருக்கு. கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டான்.

அவளும் புன்னகைத்தவாறே,"சொல்லுங்க" என்றாள்.

"அக்ச்சுவலா, இந்த விஷயத்த நமக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி உங்கிட்ட சொல்லைலனாலும், அட்லீஸ்ட் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்லயாவது நான் சொல்லி இருக்கணும், பட் டிலே பண்ணிட்டேன். சாரி"

அவள் சற்றே பயத்துடனும் பதட்டத்துடனும், "என்னங்க? பரவாயில்லை எதுவாயிருந்தாலும் சொல்லுங்க" என்றாள்.

"இந்த விஷயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். ஏன், எங்க சொந்தகாரங்களுக்குக் கூட தெரியும். அவங்க சொல்லி உனக்கு தெரியறத விட நானே சொன்னா பெட்டரா இருக்கும்னு நெனைக்குறேன்"

அவள் சற்றே கலவரமானாள்.

"அது மட்டும் இல்லாம இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரியக் கூடாது. அப்படி தெரிஞ்சா அதை விட ஒரு அவமானம் வேற எதுவுமே எனக்கு இல்லை. அதனால இந்த விஷயத்த யார்கிட்டயும் சொல்ல மாட்ட, குறிப்பா உங்க வீட்டுக்குனு எனக்கு நீ சத்தியம் பண்ணனும்."

அவள் அஞ்சியவளாக,"என்னனுதான் சொல்லித் தொலைங்களேன்" என்று கேட்பதற்கும், அவன் அலுவலக மேலாளரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்றவன் வெளியே சென்று பேசி முடித்து அறை திரும்ப அரை மணி நேரமானது.

திரும்பியவன் அவளைப் பார்த்தான். அழுது அழுது கண் சிவந்தவளாக அமர்ந்திருந்தாள்.

அவன் அவளருகில் சென்று அவள் கன்னத்தை தன் இரு கரங்களால் தாங்கியவாறு," இல்லம்மா, தப்பா நெனச்சுக்காத. எனக்கு பட்டாசுனா ரொம்ப பயம். இந்த வாரம் வேற நம்ம தலை தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு போறோம். எப்படியாவது உங்க வீட்டுக்கு தெரியாம என் மானத்த காப்பாத்திடு, ப்ளீஸ்!" எனக் கெஞ்சினான்.

கண்ணீரைத் தாண்டிய சிரிப்புடன், "ச்சீ.. போடா.." என செல்லமாக அறைந்து அவனைக் கட்டிக்கொண்டாள் அனிதா.




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அலுவலக மேலாளர் நடுவில் வந்து சிறிது நேரம் அனிதா மனதில் வெடி வைத்து விட்டார்...!

தொடர வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா, அணுகுண்டு என்று நினைத்தேன், கடைசியில் புஸ்வானம். அருமை

Post a Comment