Wednesday, April 10, 2013

சந்தியாராகம் - முதுமையும் முதுமை நிமித்தமும்


      ஒருநாள் அம்மா என்னிடம் கீழ் வீட்டுக்கு ஓட்டு  கேட்டு வந்தார்கள். அந்த தாத்தா தனக்கு ஓட்டு  போட விருப்பம் இல்லை எனவும், தன்  மனைவி இறந்த பின் வாழ்க்கையில் பற்றுதல் இன்றி இருப்பதாகவும் சொல்லி அனுப்பிவிட்டதாக கூறினார். எனக்கு சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மூப்படைந்து இறந்துபோவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அது வெறும் மரணம் என நினைத்திருந்தேன். ஆனால், அது ஒரு பிரிவு என்ற கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை.

     காதல் பிரிவைவிட, திருமணம் செய்து அதன் பிறகு  வருகிற  பிரிவின்  அடர்த்தி சற்றே அதிகம் என பிறகுதான் உணர முடிந்தது.

 
     "சந்தியாராகம்" - ஒரு நாவலுக்கான கதைக்களம். அதை படமாக்கிய விதம் அசாத்தியமானது. வணிக காரணத்திற்காக எந்தவித சமரசமும் இன்றி இப்படி ஒரு படைப்பை உருவாக்கியது பாலுமகேந்திராவுக்கே உண்டான துணிச்சல்.

     கிராமத்தில் வாழ்கின்றனர் பிள்ளைகளற்ற ஒரு மூத்த தம்பதி. தனது மனைவி இறந்த  காரணத்தால், ஆதரவற்ற முதியவர் சென்னையில் இருக்கும் தனது தம்பி மகன் வீட்டிற்கு செல்கிறார். பெற்றோர் இறந்த பிறகு தனக்கு சோறிட்டு வளர்த்த தன் பெரியப்பாவை நன்றியுடன் வரவேற்று உபசரிக்கிறான். மூன்றுநாள் கழித்த பிறகும் தன்  பெரிய மாமனார் அதே  வீட்டில் இருப்பதைக் கண்டு, கணவனிடம் வருந்துகிறாள். அதனால் அந்த தம்பதிக்குள் சின்ன சண்டை நடக்கிறது. வீட்டின் வெளியே  படுத்துக்கொண்டிருக்கிற முதியவர் காதில் அச்சண்டை விழவே அவர் பெரிதும் வருந்துகிறார்.

     எப்போதும் போலவே, அன்றும் முதியவர் தன் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், மதியமே அக்குழந்தை மூன்று முறை வாந்தி எடுத்துதனால், அவளை வீட்டுக்கு வந்து சேர்ப்பிக்கின்றார் பள்ளியில் பணி  புரிகிற ஆயா. குழந்தையை விசாரிக்கும் போது,  தான் காலை வடை தின்றதாக சொல்ல, அதை வாங்கிதந்தவர் முதியவர்தான் என அறிந்ததும்  அவரின் தம்பி மருமகள் அவரை திட்டுகிறார். மனம் வருந்தும் பெரியவர்  என்ன முடிவு எடுத்தார் என்பதுதான்  மீதிக் கதை.


     சொக்கலிங்க பாகவதர் - அந்த முதியவர் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அத்தனை கச்சிதம். பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தியதாக தெரியவில்லை. அவரது நடிப்பு ஆகச் சிறந்ததாக இருந்தது. ஆனால் தமிழ் திரையுலகம் இப்படிப்பட்ட ஒரு கலைஞனை வீணாக்கிவிட்டது. குறிப்பாக அவர், தான் சிறு வயதில் நடித்த நாடகத்தை நடித்துக் காட்டுவது - மகாநடிகன்!!!


     கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அதற்கு நேரெதிரான நகரத்து வாழ்க்கை, மனிதர்கள், வாழ்க்கைச் சிக்கல், கிராமத்து மனிதர் நகரத்தில் ஒன்றிப்போக முடியாத தவிப்பு, சக முதியவர்களின் புரிந்துணர்வு என ஒவ்வொரு விசயமும் அவ்வளவு அழகு; அற்புதம்.

    கிராமத்தில் குளத்தில் நிதானமாக குளித்த பெரியவர், நகரத்தில் ஒரு வாளித் தண்ணீரில் எப்படி குளிப்பது என யோசிப்பது, தன் தம்பி மகன் வீட்டு உரிமையாளரிடம் வாங்கிய ஐம்பது ரூபாயை அவர்கள் தெரியாத விதம் முதியவர் உரிமையாளரிடம் அவர்கள் தந்ததாகவே ஒப்படைப்பது, முதியவர்களுக்கே உண்டான கிண்டல் என ஒவ்வொன்றயும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் பாலுமகேந்திரா!

    தமிழ் திரை உலகில் கண்டுகொள்ளப்படாத ஆகச் சிறந்த  கலைஞன் - சொக்கலிங்க பாகவதர் என்றால், கண்டுகொள்ளப்படாத படம் - சந்தியாராகம்.

 

1 comment:

G.M Balasubramaniam said...


அது ஒரு பழையப் படம் அல்லவா.?நுட்பமான ரசிப்புத் திறன்.பாராட்டுக்கள்.

Post a Comment