My Vikatan-னில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:
https://www.vikatan.com/oddities/miscellaneous/old-man-who-impressed-the-youngster-with-his-enthusiasm
சில மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி சென்றிருந்தேன். மூன்று நாட்கள் விடுமுறையை நன்றாக செலவழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்கு முன்னதாக இரவு உணவருந்துவதற்காக அந்த உணவகத்துக்குள்
நுழைந்தேன்.
பணம் செலுத்திவிட்டு நாமே சென்று உணவை வாங்கிக்கொண்டு அங்கிருக்கும் ஏதோவொரு இடத்தில் நின்றவாறு சாப்பிடும்படியான அமைப்பைக் கொண்டிருந்தது அவ்வுணவகம். நான் தோசை ஒன்றை வாங்கிக்கொண்டு அந்த அறையின் மையத்தில் இருந்த ஓர் இடத்தில் நின்று சாப்பிடத் தொடங்கினேன்.
திடீரென "பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்ற பாடல் இருக்குரலாக கேட்கத் தொடங்கியது. ஒலிக்கும் பாடலுடன் யாரோ ஒருவர் ஒத்திசைத்து பாடிக் கொண்டிருப்பது நன்கு புலப்பட்டது. யாரது என்றவாறே பார்வையால் அந்த அறையை அளந்துக் கொண்டிருந்த போது சற்றே தளர்ந்த நடையுடன், சிறிய கண்களுடன், கறுத்த முடியுடனும் தனது சட்டைப் பையில் இருந்து பணத்தை தேடிக் கொண்டிருந்தார் ஒரு வயதானவர். அப்போதுதான் அந்த பாடல் அவ்வுணவகத்தில் ஒலிக்கவில்லை; அவரது மேல் சட்டையில் வைத்திருந்த அவரது கைப்பேசியில் இருந்து ஒலிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
வாங்கிய பில்லை கடை ஊழியரிடம் கொடுத்துவிட்டு அருகிலிருந்த குடிநீரை அண்ணாந்து குடித்தவர் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துக் காத்துக் கொண்டிருந்தார் அப்போது தனது கைப்பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த "பொன்மகள் வந்தாள்" பாடலை ஒத்திசைத்து பாடியவாறே...
"முத்துகள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துகள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கும் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழி எல்லாம் நவரசம்"
எனப் பாடிக் கொண்டே இருந்தவர் இடையிடையே வரக்கூடிய மெட்டுகளுக்கு தனது நாவால் குதிரையின் குளம்படி சப்தத்தை எழுப்பி அதன் பின்பு வரக்கூடிய வரிகளுக்குள் தன்னை கரைத்தவாரே "காளான் தோசை"யை வாங்கிக் கொண்டு நானிருந்த இடத்தில் வந்து நின்றார்.
அங்கிருந்த கடிகாரத்தைப் மேலெழும்பி பார்த்தவாரே, "ஐயோ, மணி 8 ஆச்சா!! நேரம்தான் எவ்வளவு சீக்கிரம் போகுது? இப்பதான் எந்திரிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சே!!" என தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கைப்பேசியில் வேறொரு பாடல் மாறி இருந்தது. எந்திரம் போல அவர் கையும் தோசையை இரு பகுதியாகப் பிரித்து ஒன்றை சாம்பாரிலும், மற்றொன்றை சட்னியிலும் மடித்து ஊறவைத்துக் கொண்டே அந்த பாடலில் தன்னையும் கரைத்துக் கொண்டிருந்தார்.
பிறகு தோசையைப் பிரித்து, "என்னது? ஒரே வெங்காயமாதான் கெடக்கு, காளானே காணோம்" என அங்கலாய்த்துக் கொண்டு அதிலிருந்த காளானையும், வெங்காயத்தையும் பிரித்து வைத்து, ஊறிக் கொண்டிருந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தார்.
இதற்கு ஊடாக இரண்டு பாடல்கள் மாறி இருந்தன. ஒரு வாய் தோசை, மறுவாய் பாடல் இடைடையே குளம்படிச் சத்த மெட்டு என எல்லாமே சரியான அலைவரிசையில் அரங்கேறிக் கொண்டிருந்தன - அவரைப் பார்த்துப் புன்னகைத்தவாறே நகர்ந்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களையும் சேர்த்து.
அப்போது அங்கு பணி புரிந்துக் கொண்டிருந்த சிறுவனை நோக்கி, " நீதான் வெங்காயம் அரிஞ்சயோ? பூரா வெங்காயமாதான் கெடக்கு" என பதிலை எதிர்பாராமால் கடிகாரத்தையும், தட்டையும், கைபேசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு சாப்பிட்டு முடித்தார்.
அவர் அங்கிருந்து கை கழுவ நகரவே அச்சிறுவனிடம், "தம்பி, யாரிவரு? ஒங்க ரெகுலர் கஸ்டமரா?" எனக் கேட்டேன். அவன், "ஆமாண்ணா. தெனமும் சாய்ங்காலாம் 6 மணிக்குலாம் வந்துருவாரு. டிபன் சாப்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சு டீ இல்லனா காபி சாப்பிட்டு போவாரு. எல்லாரும் அவர பாத்து சிரிப்பாங்க. ஆனா அவர் பாட்டுக்கு பாடிட்டு இருப்பாரு" என அவன் முடித்த போது அவர் டீ வாங்க நின்றுக் கொண்டிருந்தார்.
இடைப்பட்ட நேரத்தில் அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஓய்வூதியமாக குறிப்பட்ட தொகை வந்துக் கொண்டிருப்பதால் அதை வைத்துக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார் எனவும் அவன் கூறினான்.
திரும்பிப் பார்த்தால், தனது கையில் வைத்திருந்த டீ glass-ஐ ஒரு குழந்தையை தாலாட்டும் லாவகத்துடன் அதை இடம் வலமாக காற்றில் அசைத்துக் கொண்டு "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே. வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்பதை தன்னை மறந்துப் பாடிக் கொண்டிருந்தார்.
வாடிக்கையாளர்களின் தட்டுக்களை எடுக்க அங்கு பணியாளர்கள் இருப்பினும் அவர் தனது தட்டையும், டீ glass-யும் தானே எடுத்துக் கொண்டு வைத்தார்.
எல்லாம் நாடகமென அரங்கேறிக் கொண்டிருக்கும்போது, மிகச் சரியாக அல்லது அனிச்சையாக அப்பாடல் ஒலித்தது - "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது".
அவர் அதைப் பாடியபடியே சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் தனது எல்லாப் பாடல்களையும் சுமந்தபடி மென் அலைவரிசையாய்....
நன்றி: விகடன்.
No comments:
Post a Comment