Friday, May 15, 2020

நம் குழந்தைகளை குருடர்களாக்கும் சமூக அந்தஸ்து


     MyVikatan-யில் வெளிவந்துள்ள எனது கட்டுரை:


     இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பிள்ளைகளை படிக்க வைத்தல் என்பது படித்திராத பெற்றோர்களுக்கும், படிப்பைத் தொடர இயலாத பெற்றோர்களுக்கும் வைராக்கியம் சார்ந்த விஷயமாக இருந்தது. இன்று ஒவ்வொரு நிறுவனங்களில் தலைமை இடத்தை வகித்துக் கொண்டிருக்கும் நபர்களில் சரிபாதி அளவில் இருப்பவர்கள்கூட அப்படியான ஒரு குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும். ஆனால் அப்படிப் படிப்படியாக முன்னேறிய நடுத்தர வர்க்கமாகிய நாம் நமது அடுத்த தலைமுறையை சரியாக வழி நடத்துகிறோமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகத்தான் இன்று உள்ளது. இன்னும் நுட்பமாக சொல்லப்போனால் நாம் வளர்ந்த விதத்திற்கும், நம் பிள்ளைகளை வளர்க்கும் விதத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது உலகின் ஏதோவொரு ஏழை நாட்டில் எல்லாவற்றிற்கும் முட்டி மோதி முன்னேறி அதன் விளைவாக வளர்ந்த நாட்டில் குடிபெயர்ந்து  தான் பிறந்து வளர்ந்த நாட்டை ஏளனமான பார்ப்பதற்கு ஒப்பானதொரு உளவியல் நோய்.

     இன்று மெட்ரோ நகரங்களில் குடிபெயர்ந்து அதன் சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ப தங்களது வாழ்க்கை முறையை தகவமைத்துக் கொண்ட பெரும்பாலான (அத்தனை) பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுத்து வைத்திருக்கிற சூழலை தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சமூக சூழலை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் எதிர்வரக்கூடிய சமூக பிரச்சனைகளின் அபாயத்தை உணரக்கூடும்.

     ஆனால், தனக்கு கிடைக்காத ஒன்று தனது அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்கிற கண்முடித்தனமான அன்பினாலும், தனது பிள்ளைகள் எதற்குமே அவதியுறக் கூடாது என்கிற தற்கால  பெற்றோர்களின் சீழ் பிடித்த கற்பிதங்களால் அடுத்த தலைமுறையின் கண்களை சமூக அந்தஸ்து எனும் பெயரில் குருடர்களாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மிக வசதியாக மறந்துவிடுகிறோம்.


     22 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு அரசுப்பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய வகுப்புத் தோழனாகிய ராஜாராம் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. பள்ளி முடித்தவுடன் அவனுடனே சென்று அவன் வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்த எனது பாட புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு நகரத்தின் மையத்தில் இருக்கும் எனது வீட்டிற்கு திரும்புவதாக திட்டம். பள்ளிக்கு வடக்கு திசையில் சற்றே தூரத்தில் வரிசையாக இருக்கும் அந்த ஓட்டு வீடுகள் ஒரு ஓவியத்தின் காட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல. தூரத்திலிருந்து பார்க்கும் போது மிக அழகாக தெரிந்த அவ்வீடுகளை நாங்கள் நெருங்கி செல்ல செல்ல  அதன் சூழலியல் யதார்த்தம் வேறு என்பதை உணர்ந்துக் கொண்டேன். அங்கிருந்த ஒரு குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்றவன் அதுதான் தனது வீடு என்ற போது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மிக குறுகிய பரப்பளவில் இரு அறைகளைக் கொண்ட குடிசை வீடு அது. அதன் இரண்டாம் அறை என்பது அவ்வீட்டின் இடது மூலையில் இரண்டடியிலான மண் சுவரை எழுப்பி அமைக்கப்பட்ட சமையலறை. நாங்கள் வாடகைக்கு அப்போதிருந்த வீடும் இரண்டறைகளைக் கொண்டது எனினும் நகரத்தின் மையத்தில் இருக்கிற எனது வீட்டிற்கும் நகரத்தின் எல்லையில் இருக்கிற நண்பனின் வீட்டிற்குமான வேறுபாடு என்ன என்பதை என்னால் அப்போது சரிவர புரிந்துக் கொள்ள இயலவில்லை.

     எனது புத்தகத்தை வாங்கிக் கொண்டு அவனை விளையாட அழைத்த போது, "கொஞ்சம் இரு டா. நான் வீட்டுப்பாடம் எழுதிட்டு வந்துடறேன்" என்றவனை "டேய். அதை நான் வீட்டுக்கு போனதுக்கப்பறம் எழுதேண்டா" என குரலுயர்த்தி சொன்னபோது, "இல்லடா. எங்க வீட்ல கரண்ட் வசதி கெடையாது. அதுனால வெளிச்சம் இருக்கும் போதே பண்ணாதான் உண்டு" என்றவனை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தேன். எனது வாழ்விற்கும், அவனது வாழ்விற்குமான வித்தியாசத்தையும் கண்டுணர்ந்தது கிட்டத்தட்ட என் வாழ்வின் முதல் போதி நிழல்.

     அந்த சம்பவத்திற்கு பிறகு எனது வாழ்வில் நான் இருக்கக்கூடிய இடம் எத்தனை வசதியானது, ஆனால் நாம் இதற்கே இத்தனை புகார்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என புரிந்தது.

     அநேகமாக முப்பது வயதிற்கு மேல் இருக்கக்கூடிய இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் ஒன்று எனது பிரதிநிதியாகவோ அல்லது ராஜாராமின் பிரதிநிதியாகவோ இருக்கக்கூடும். ஆனால், அங்கிருந்து நம் வாழ்வை தொடங்கியவர்கள் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதை கடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பெரும் அதிர்ச்சியாகவும், சமூக அச்சமாகவும் இருக்கின்றன.

     பெரு நகரங்கள் மட்டுமல்லாது இப்போது சிறு நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது பரவலாகவும், அதை வாங்குவது பலரின் கனவாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்களாகவே இருக்கக்கூடும். அதனால் அங்கு வளரக்கூடிய பிள்ளைகளின் கண்களுக்கு இச்சமூகம் என்பது வசதிப்படைத்தாகவே தெரியக்கூடும். இந்த பார்வைக் குறைபாடு என்பது அங்குமட்டுமல்லாமல் அவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகளிலும், அவர்களை பொது போக்குவரத்துக்களான பேருந்துகளுக்கோ, இரயில்களுக்கோ பழக்காதவாறு நம் சமூக அந்தஸ்தை நிரூபிக்க கடனில் நாம் வாங்கி வைத்திருக்கும் கார்களில் அவர்களை அழைத்துச் செல்வதென ஒவ்வொன்றிலும் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம்.

     இவ்வாறு நமது ஒவ்வொரு செய்கைகளிலுருந்தும், அன்றாடங்களிலிருந்தும் நமது குழந்தைகளை நமக்கு கீழே பொருளாதாரத்தில் அடுக்கடுக்காக இருக்கும் பல சமூகத்திடமிருந்து பிரித்தே வைத்திருக்கிறோம். ஒருமுறை இதைப்பற்றி எனது அலுவலக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த பெண் தோழி ஒருவர், "Hey, I do not want my kids to to mingle with those people in the society" என்ற போது மிக அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. அப்போது அவரவர் பால்யம் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும் போது எங்களுக்குள் பெரிதாக எந்தவொரு வித்தியாசமும் இல்லை அவரவர் ஊர்களைத் தவிர.

     நமது பால்ய காலத்தில் வசித்து வந்த தெருவில் பொருளாதாரத்தின் எல்லா அடுக்குகளில் இருந்தவர்களும் பெரும்பாலும் ஒன்றாகவே வசித்து இருந்தோம் (கிராமங்களின் நிலை வேறாக இருக்கக்கூடும்). அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பவரும், பூக்கடை வைத்திருப்பவரும், ஆட்டோ ஓட்டுபவரும், கடைகளில் பணி செய்பவர்களும், பேருந்து ஓட்டுநர்/நடத்துனர்களும், தள்ளு வண்டி வைத்து பிழைப்பவரும், நகலகத்தில் வேலை செய்பவரும், தச்சர், கொல்லர், மிதிவண்டிகளை வாடகைக்கு விடுபவர் என ஒரு தெரு என்பது கூடி வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கிருந்துதான் இன்றைய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பேராசிரியர்களும்,
மென்பொருள் வல்லுனர்களும் இன்னபிற நிபுணர்களும் வந்திருக்கிறோம்.


     நடுத்தர வர்க்கத்துக்கும் அதற்கு கீழேயுள்ள சமூகத்திற்கும் உண்டான உறவென்பது முன்னேற்றத்திற்கான உந்துசக்தி. அது சமூகத்தை முன்னேற்றும், போலவே அவரவர் நாட்டையும். இங்கே தனிமனித வெற்றி ஒருவகையில் சாத்தியம், ஆனால் ஒரு தனிச் சமூக வெற்றி என்பது எப்போதும் சாத்தியமற்றது.

நன்றி விகடன்.

No comments:

Post a Comment