Wednesday, February 1, 2012

வாழ்தல் ஒரு கலை - X
     உலகமயமாதலின் விளைவாக இன்று நம் கைக்குள் உலகம் வந்துவிட்டது. மறுபுறம் மற்றவர்களை தொடர்புகொள்ளும் தூரம், நேரம் போன்ற காரணிகளும் காலவதியாகிவிட்டன. நினைத்தவுடன் நினைத்த நபரை தொடர்புகொள்ளுதல் என்பது இன்று சர்வசாதாரண விஷயம். தொலைத்தொடர்பு வசதி குறைந்து இருந்த நாட்களில் ஊரில் இருப்பவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல் என்பது எவ்வளவு அலாதியானது என்பது இனி வரும் தலை முறைக்கு புரியாத/புரிய வைக்க முடியாத விஷயம். 

     இந்த தொலைபேசுதல் என்பது நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது சமீபத்திய நாட்களில் சில அனுபவங்கள் வாயிலாக புரிந்துக் கொள்ள நேர்ந்தது. எதிர்முனையில் இருப்பவரின் மனநிலையை அவரிடம் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் புரிந்துக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமான விஷயம். குறிப்பாக நண்பர்களிடம் பேசும் போது உரையாடல் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அங்கே சம்பிரதாயங்களுக்கு என்றுமே இடமில்லை. அதனால் அங்கே எதிர்முனையில் இருப்பவரின் மன நிலையை புரிந்துகொள்ளுதலில் நம் உரையாடல் தொடங்கும் விதத்தைப் பொறுத்து சில தர்மசங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.     சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். சென்னையிலிருந்து ஒரு மாற்றத்திற்காக கோயம்புத்தூரில் வேலை தேடலாம் என ஒரு வாரம் அங்கு தங்கி தேடிக் கொண்டிருந்தேன். ஒரு மாலை, என் உயிர் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்திருந்தான். நான் எடுத்தவுடனேயே, "என்ன மச்சி! எப்படி இருக்க? ஒரு வாரமா போன் - ஐயே காணோம். என்ன ஆச்சு ?" என்று ஒரு அரை நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சற்று நிதானித்து, "இல்ல டா, அப்பா இறந்துட்டாரு. எங்களுக்கெல்லாம் என்ன பண்றதுனே தெரியல. நம்ம பிரண்ட்ஸ்ட யார்கிட்டயும் சொல்லல. நீ கொஞ்சம் சொல்லிடிரியா" என்றான். என்னால்  பதில் ஏதும் பேச முடியவில்லை. அந்த ஒரு நிமிட மௌனம் என் வாழ்வின் தீராக் குற்றவுணர்வில் கொண்டு தள்ளியது. இப்படி ஒரு அனுபவம் என்றால் இதற்கு சற்றே மாறான  இன்னொரு அனுபவமும் சமீபத்தில் நிகழ்ந்தது.

      இன்னொரு நண்பன். அவன் தொலைபேசியில் எங்களை அழைப்பதே அரிது. நாங்கள் அழைத்தாலும் அவனைத் தொடர்பு கொள்ளுதல் அதைவிட அரிது. ஆனால், அந்த மாதத்தில் இந்த நிலை சற்றே உச்சத்தில் இருந்தது. அவனது தந்தை சற்றே உடல்நிலை குன்றி இருந்ததால், அவரின் தொழிலை இவன் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமின்மை மற்றும் சோர்வு காரணமாக அவனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என எண்ணி இருந்தேன். ஒரு மாதம் கழித்து என்னை அழைத்தான். "எப்படி இருக்க டா?" போன்ற வழக்கமான விசாரிப்புகளுடன் (முன் அனுபவம் காரணமாக) பொறுமையாக தொடங்கிற்று அந்த உரையாடல். பின் நான் சற்றே மகிழ்ச்சியான தொனியில் பேச அரைமணி நேரம் பேசி இருப்போம். பிறகு ஒரு வாரம் கழித்து எங்கள் (நாங்கள் மூவர் ஒரு நண்பர் குழு) நண்பன் இன்னொருவன் என்னை அழைத்தான். "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமாடா?" என்று கேட்டான். "என்னடா விஷயம்? எதை பத்தி கேக்குற?", என்று கேட்டேன். "இல்லடா, அவனோட அப்பா இறந்துட்டாராம். அதை உன்கிட்ட சொல்லலாம்னு அன்னிக்கு அவன் போன் பண்ணிருக்கான். நீ ஏதோ சந்தோசமா பேசிட்டு இருந்ததுனால உன் mood - அ கெடுக்க வேண்டாமேன்னு  அவன் சொல்லலையாண்டாம்". நான் விக்கித்து நின்றேன். 


     ஒரே அனுபவம். ஆனால் இரு விதமான படிப்பினைகள். வாழ்க்கை ஒருபோதும் கற்பித்தலை நிறுத்துவதில்லை, நாம் கற்க விரும்பா விடினும்!

 

2 comments:

albert wilson said...

Thank you for sharing a very important knowledge and experience

G.M Balasubramaniam said...

இந்த நிலையும் சீக்கிரமே மாறலாம். பேசுபவரின் முகம் பார்க்கும் வசதியும் வந்துவிட்டதே.

Post a Comment