Saturday, January 7, 2012

வாழ்தல் ஒரு கலை - IX

 
     பயணம் வாழ்வில் தவிர்க்க முடியாதது;பலருக்கு தடுக்கப் படக் கூடாதது ! என்னதான் பெரிய குளமாக இருந்தாலும் பயணம் செய்யாததால் அது மாசு படிந்து விடுகிறது. ஆனால், பயணிக்கப்படுகிற சிறு ஓடைக்கூட வெளிச்சத்தில் மிளிர்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" என் வாழ்வில் பயணம் குறித்த பார்வையை விசாலம் ஆக்கியது. ஒரு இடத்திற்கு முன்னேற்பாடோடு செல்வதற்க்கும், பயணம் ஒன்றே காரணமாக கொண்டு செல்வதற்கும்  நிறையவே வித்தியாசம் உள்ளது.

     சென்ற மாதம் சென்னையிலிருந்து பெங்களூர் வருவதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். சற்றே கூட்டம் அதிகமாக இருந்ததால், இடம் கிடைத்தால் போதுமென சாதரண பேருந்தில் ஏறி மூன்று பேர் அமர்கிற இருக்கையின் சன்னலோர இடத்தை தேர்வு செய்து அமர்ந்தேன். சன்னலை திறக்க முடியாததால், அதே இருக்கையின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். பேருந்து 98 சதவிகிதம் நிரம்பி இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு பேர் அமர்கிற இருக்கையில் ஒருவரே உட்காருகிற உடல்வாகு உடையவர் ஒருவர் ஏறி, சுற்றும் முற்றும் பார்த்து என்னருகில் வந்து சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டார். ஆனால் அவர் அந்த சன்னலை இலகுவாக திறந்துவிட்டார்இன்னும் ஒருவர் அமர மட்டுமே பேருந்தில் இடம் இருந்தது (அதுவும் என்னருகில்தான்). சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து என்னருகே அமர்ந்து கொண்டார்.


     விதவிதமான உடல்வாகு உடையவர்கள் அருகருகே அமர்ந்ததால் சற்றே அசௌகரியமான சூழ்நிலை அங்கு நிலவியது. பயணச்சீட்டு வாங்கி விட்டதனால் பேருந்தை விட்டு இறங்க முடியாத நிலைமை வேறு. விதிக்கப்பட்டது இதுதான் என சுயசமாதானம் சொல்லிக்கொண்டு பயணத்தை தொடங்கியாயிற்று.

     பேருந்து சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தது. எனக்கோ உட்காரவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் அவஸ்தையாக இருந்தது. வேலூருக்கு சற்று முன்னர் இருந்த உணவு விடுதியில் பேருந்து நிறுத்தப்பட்டதுஇளைப்பாற இறங்கி அரைமணி நேரமாகியும் பேருந்து எடுத்த பாடில்லை. என்னவென சிலர் இறங்கிப் பார்க்க பேருந்தின் சக்கரம் பழுதாகி இருந்தது தெரியவந்தது. அப்போது மணி பத்து. நடத்துனரிடம் மாற்று வழி செய்யச் சொல்லி எந்த பயனும் இல்லை. ஓட்டுனரோ ஆளையே காணவில்லை.
     சக அரசுப் பேருந்து ஓட்டுனர்களோ/நடத்துனர்களோ அவர்களிடம் இருக்கும் மாற்று சக்கரத்தை தரவும் முன்வரவில்லை. அறுபதுக்கு மேல் அகவை உள்ள ஒருவர், "இவங்கள்ட எல்லாம் பேசி பிரோஜனம் இல்ல. நம்ம எல்லாம் சேர்ந்து நடு ரோட்டுல உட்கார்ந்துடுவோம். அப்பறம் எப்படி வழிக்கு வராங்கனு பாருங்க" னு சொல்லி சிலர் அவருடன் போக, இன்னும் சிலரோ பேருந்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அந்த உணவு விடுதியில் இருந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி இருப்பார்கள் போலும், ஒரு காவலர் அங்கே வந்தார். பயணிகளோ கடுமையான ஆத்திரத்தில் இருந்தோம்.

"என்னப்பா பிரச்சனை?", என வினவினார்.

"சார்! பஸ் பஞ்சர் ஆகி ரெண்டுமணி நேரம் ஆச்சு, இன்னும் எந்த நடவடிக்கையுமே எடுக்க மாட்டீங்கிறாரு...."

"சரி, கண்டக்டர் சீக்கரம் சரி பண்ணி ஊருக்கு போய் சேருங்க. உங்கள் பயணம் இனிதே நிறைவேற எல்லா வல்ல இறைவன் அருள் புரிவார்(?!)" , என சொல்லி விட்டு அந்த காவலர் () இறை தூதர் சென்றுவிட்டார்.

     இதற்கிடையில் சிலர் மட்டும் நடத்துனரிடம்,"யோவ்! எனக்கு என் பணத்தை கொடுத்திடு, நான் போய்க்கிறேன்" என அவர்கள் பங்குக்கு நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டிருந்தனர்.

     ஒருவர் மட்டும் நடத்துனரிடம்,"சார், வேலூர் டிப்போ மானேஜருக்குப் ஃபோன் போட்டு சொல்லுங்க சார், அவர் spare பஸ் அனுப்புவாரு" எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

     ஒரு பேருந்து கிளம்பும் போது முன்னேற்பாடாக சக்கரம் என எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டே நிலையத்தை விட்டு புறப்பட வேண்டும். ஆனால், அவர்கள் செய்த தவறால், வேலூர் மேலாளரை அழைக்க அஞ்சி எங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தார்.

     பொறுமை இழந்த பயணிகள், "சார்! நீங்க பேச வேண்டாம், நாங்க பேசறோம். நம்பர மட்டும் கொடுங்க" என கெஞ்சிக் கேட்டும் பயனில்லை.

     நேரம் அப்போது ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் மறுநாள், தங்கள் அலுவலகதிற்கு போக நேருமா என சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலரோ தங்களுக்கு " loss of pay " என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

     பிறகு ஒருவழியாக ஒரே ஒரு அரசு ஓட்டுனர் தன் பேருந்தில் இருந்த மாற்று சக்கரத்தை தர முன்வந்தார். இனியும் தாமதிக்கக் கூடாது என பய்ணிகளே முன் சென்று அந்த சக்கரத்தை கீழிறக்கி, அருகிலிருந்த mechanic -யிடம் பேசி சக்கரத்தை மாற்றினோம்.

     பிறகு நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் "அண்ணா, போய் டீ குடிசுட்டு வாங்க, கிளம்பலாம்" என புறப்பட்ட போது மணி கிட்டத்தட்ட இரண்டு!

மேல் கூறிய சம்பவத்தில் பல விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தன:
1 . வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற ஒரு துன்பத்தை (பெரிய உடல்வாகு கொண்டவரின் அருகில் அமர நேர்ந்ததால் ஏற்பட்ட அசௌகரிய நிலை) பின்வருகிற மற்றொரு துன்பம் ஒன்றும் இல்லாதது போல் ஆக்கிவிடுகிறது.

2 . முன்னேற்பாடின்றி செய்கிற செயல் எத்தனை பெரிய துன்பத்தையும் தர நேரிடும்.

3 . தான் ஒழுங்காக தன் பணியை செய்யாவிடில், தனக்கு உதவும் அதிகாரம் உள்ள அதிகாரியிடம் கூட உதவி கேட்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.

4 . ஒற்றுமை இருந்தால் எந்த நிலைமையையும் எளிதில் சமாளித்துவிடலாம்.

5 . வீரம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு விவேகமும் முக்கியம்.

6 . எந்த ஒரு காரியத்தையும் முன்னிறுத்தி கொண்டு செல்ல சரியான தலைவன் தேவைப்படுகிறான்.

7 . ஒரு வேலையை முடிக்காவிடில் திட்டுகிற அதே வேளையில், அந்த வேலை முடிக்கப்பட்டுவிடால் அதற்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் அவசியம்.

8 . பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவதை விட, அதை எதிர்கொண்டு சமாளித்தலே புத்திசாலித்தனம்.
(The best way to gain self-confidence is to do what you are afraid to do).

9 . ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாவிட்டால், அதை எவராலும் செய்ய முடியாது என்றில்லை.

     எல்லா பயணங்களும் தன் லட்சியத்தை அடைவதில்லை. ஆனால், ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது


3 comments:

ப.கந்தசாமி said...

நல்ல சிந்தனைகள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

Post a Comment