Saturday, May 21, 2011

வாழ்தல் ஒரு கலை - VII

     
     இங்கே யாரும் தனி மனிதர்கள் இல்லை. ஆனால், தனி மனிதர்களாகிய சிலருக்கு தேவை சிறு மனிதம். இந்த பரந்த விரிந்த உலகில் நாம் தினமும் பலரைக் கடக்கிறோம். அவர்களுள் சிலருக்கு நம் இருப்பு அல்லது உதவியோ தேவைப்படும். நம் வாழ்கைப் பயணம் என்பது நம்முடையதாய் மட்டும் இருக்கலாம். ஆனால், நம் ஊர்தியில் வேறு சிலரும் பயணம் செய்யக் கூடும். அல்லது அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு நாம் உதவ வேண்டும்.
      "உதவின்னு கேட்டா இன்னிக்கு எவங்க செய்யறான்?" - நாம் பலரும்  கடந்து வந்த கேள்வி. உண்மைதான். சில உதவிகள் மற்றவர் கேட்க நாம் செய்வது. மற்றும் சிலதோ மற்றவர்கள் கேட்காமலே நாமாக முன் சென்று செய்வது. 
"தன்னை அறிதல் தான் -ஜென் தத்துவம்-னு" சொல்வார்கள். என் சென்னை வாழ்க்கையும் அப்படிதான். கூட்டை பிரிகிற பறவைக்குத்தானே வானம் சொந்தம். அதுபோல கல்லூரியில் சேர்வதற்காக என் மண்ணை  விட்டு சென்னை வந்தேன். சென்னை - ஒரு விசித்திர நகரம். ஒரு மனிதனை  சாமரம் கொண்டு   வரவேற்கும். மற்றொருவனை காட்டில் வாழும்  உயிர் பயம் கொண்ட தாவர உண்ணி போல அலைக்கழிக்கும். மாணவன் ஆனதால் முதல் பிரிவில் சென்னை என்னை சேர்த்துக் கொண்டது. 

      
     அங்கே நான் இருந்த ஒவ்வொரு நாளும் என்னை நானே  வேறு கோணத்தில் உணர ஆரம்பித்தேன். அந்த ஊரில் தான் எத்தனை எத்தனை மனிதர்கள். தேடல் பொருட்டு சிலர், தேவை பொருட்டு சிலர், வாழ பொருட்டு சிலர், வாழ்கையை தொலைத்து சிலர் என அது ஒரு தனி உலகம். அங்கே உள்ள மின்சார ரயில் என்பது வெறும் ஊர்தி அல்ல; போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் வாழ்வின் ஏதோ ஒரு அர்த்தத்தை உணர்த்திச் செல்லும். "எல்லா பயணங்களும் தன் லட்சியத்தை  அடைவதில்லை. ஆனால் - ஏதோ  ஒன்றை கற்றுத்தரும்.

      "எது உதவி?". ஒருவர் தேவை பொருட்டு மற்றொருவர் மனமுவந்து அவருக்கு உதவுவது. எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது ஒருவர் என்னை நாடி உதவி என்று கேட்டால், அவர் மறைபொருளாக என்னை நம்புகிறார் என்று. அதற்காகவே என்னை நாடி வந்தால் மறுயோசனை இன்றி உதவ முற்படுவேன். ஆனால் - சிலரோ உதவி கேட்க தயங்கி நிற்பார்கள். நாமாக முன் சென்று உதவ வேண்டும் - பேருந்தில் பெரியவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கை தருவது போல. தெரு ஓரத்தில் சாப்பாடு விற்கும் சாமானியனின் சோற்றின் தரம் மேல் எனக்கு ஆயிரம் கேள்வி இருந்தது (தரத்திற்கு ஏற்ற விலை குறித்தும்). சென்னை எனக்கு சொன்னது, "அது ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு செய்யும் சேவை!" என்று.

      
     ஒரு பெரியவர் கலிபோர்னியா கடற்கரையின் வழியாக வண்டியில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு சிறுவன் கடலினுள் ஏதோ ஒன்றை கீழிருந்து எடுத்து தூக்கி எரிந்துக் கொண்டிருந்தான். அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வரும் போதும் அந்த சிறுவன் அவ்வாறே செய்துக் கொண்டிருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை. உடனே, வண்டியில் இருந்து இறங்கி அவனிடமே சென்று, "என்ன செய்கிறாய்?" எனக் கேட்டார். அவன்," இதோ இந்த உடுமீன்கள் (star fishes) வழி தவறி கரைக்கு வந்து விட்டன.அதனால் அவற்றை கடலிடமே எரிந்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். பெரியவர் சிரித்துக் கொண்டே, "இந்த உலகில் எவ்வளவோ உடுமீன்கள் உள்ளன. நீ எரியும் சில மீன்களால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?" என்றார். சிறுவனோ மென்மையாக, "உண்மைதான். ஆனால் நான் எரியும் இந்த ஒரு மீனின் வாழ்விலாவது மாற்றம் நிகழும்" என்று தன் பணியை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
       
      நாம் அனைவரும் முழு நேர அன்னை தெரேசா ஆக முடியாது என்பது உண்மை தான்.ஆனால், பகுதி நேர தெரேசா ஆக வழ முடியுமே!

8 comments:

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் பதிவு நண்பா..

Chitra said...

சிந்திக்க நிறைய கருத்துக்களைத் தந்து இருக்கீங்க.

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு வரியிலும் உண்மை புதைந்துள்ளது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வாழ்க்கையினைப் புரிய வைக்கும் ஒரு தத்துவார்த்தப் பதிவினைத் தந்திருக்கிறீர்கள்.

G.M Balasubramaniam said...

எது எப்படியோ, சென்னை வாழ்க்கை உங்களுக்கு சீரிய எண்ணங்களை கற்றுத் தந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இங்கிருக்கும் சொற்கள் அனைத்தும் உங்கள் மனதின் ஈரத்தையும் முதிர்ச்சியையும் காட்டும் சுவடுகள். பெருகட்டும் பிறர் மீதான அக்கறை இவ்வாசிப்பின் மூலமாக.

வாழ்த்துக்கள் நாக்ஸ்.

நிலாமகள் said...

என்ன‌வொரு ப‌க்குவ‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌தோடிருக்கிறீர்க‌ள்...! உங்களைப் பெற்ற‌வ‌ர்க‌ளின் திக்கு நோக்கித் தொழுகிறேன். சிலிர்ப்பாயிருக்கிற‌து. இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ளும் என்னுட‌ன்...!வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

Post a Comment