Tuesday, April 5, 2011

வாழ்தல் ஒரு கலை - V

     மனிதனால் தாங்க முடியாத துயரங்களுள் ஒன்று, தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம்  என்பதும். ஏமாற்றுதலும், ஏமாறுதலும் நபர் சார்ந்த விஷயம் மட்டும் அன்று; அது பெரும்பாலும் சமய, சந்தர்ப்ப சார்ந்த விஷயமும் கூட. நாம் அலட்சியப்படுத்தும்  விஷயங்களே நம்மை ஆட்டிப்படைக்கக் கூடியவையாகக் கூடும். நாம் ஏமாற்றத்தையும், ஏமாறுதலையும் அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறோம், நாம் பார்வையாளனாக இருக்கும் வரையில்.

     அந்நாளில் சென்னையில் ஒரு புத்தகம் விற்கப்படுமாம் - எப்படியெல்லாம் சென்னையில் ஏமாற்றுவார்கள் என்பதை உள்ளடக்கியது. சாதாரண ஊர்களைக் காட்டிலும் சுற்றுலாத் தளங்களில் ஏமாற்று வேலைகள் அதிகம் என்பதை அறிவோம். அங்கு யாரோ தான் ஏமாற்றப்பட்டதை பகிர்ந்துக் கொண்டிருக்கும் வேலையில் நம் மனப் புத்தகம் ஒன்று குறிப்பெடுத்துக் கொள்கிறது அல்லது நாம் இவ்வாறு ஏமாற்றப்பட்டோமா என சரிப்பார்த்துக்  கொள்கிறது.

     ஆனால், நாம் நினைப்பது போல ஏமாறுபவனும், ஏமாற்றுபவனும் இரு வேறு நபர் அல்லர். ஒரு மனிதன் ஒரு நிலை வரைக்குமே ஏமாறுபவனாக இருக்கிறான். பிறகு அவனும் ஏமாற்றத் தொடங்குகிறான். ஒவ்வொருவரின் மனதிலும் இரு வேறு ஓநாய்கள் இருக்கின்றன. ஒன்று நல்லெண்ணம் கொண்டது. மற்றொன்று தீய எண்ணம் கொண்டது. எதற்குத் தீனி போடுகிறோமோ  ஆதுவே வளரும்.

  
     எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "கேள்விக்குறி" புத்தகத்தில் அவர் பகிர்ந்துக் கொண்ட கதை :-
அவன் மூர்க்கமானவன்; தன சுயநலத்துக்காக எவரையும் ஏமாற்றக் கூடியவன். ஆனால் அவன் தந்தையோ அந்த ஊரே போற்றும் அளவுக்கு நல்லவர்; நேர்மையானவர். அவர் எவ்வளவோ முறை சொல்லியும் அவன் ஏமாற்றுவதை நிறுத்துவதாக இல்லை. கடைசியில் ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, "நான் உன்னிடம் எவ்வளவோ முறை கூறிவிட்டேன் ஆனாலும் நீ திருந்துவதாகயில்லை. இருக்கட்டும். இனி நீ ஒவ்வொரு முறை ஏமாற்றும் போதும் நம் வாசல் கதவில் ஒவ்வொரு ஆணியாக அடி. அது போதும் எனக்கு" என்றவாறு கூறிச் சென்றார்.



      அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை இனி கேள்வி கேட்ப்பாரில்லை  என சுதந்திரமாக சுற்றித் திரிந்தான். சில மாதங்கள் கழித்து இரவு வீட்டுக்கு வந்தவுடன் அந்தக் கதவைப் பார்த்து அதிர்ச்சியுற்றான். காரணம், சிறிது கூட இடைவெளி இல்லாமல் அதில் ஆணி அறையப்பட்டிருந்தது. அவனுக்கு மனசு வலித்தது. ஏனோ தான் செய்த ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்கள் முன் நிழலாடின. வீறிட்டு அழத் தொடங்கினான். பிறகு தன் தந்தையிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் தான் எவருக்கும் துன்பம் அளிக்காத வண்ணம் வாழப் போவதாகவும் சத்தியம் செய்தான்.

     அதைக் கேட்ட அவன் அப்பா சிறிய புன்முறுவலுடன், "நல்லது. இனி மக்களுக்கு உன்னாலான நல்லதை செய். நீ செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும்  நம் கதவில் அறையப்பட்ட ஆணிகளை ஒவ்வொன்றாக  நீக்கிவிடு" என்றார். 

     மகன் சிறிது நிம்மதி அடையலானான். ஆனால் மற்றவர்களை ஏமாற்றுவதைப் போல நன்மை செய்வது அவ்வளவு சுலபமாய் இல்லை. ஒவ்வொரு நாளும் அவன் தன் வீட்டுக் கதவின் முன் நின்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆயின. 

     அவனது தந்தையும் மூப்பு காரணமாக படுத்த படுக்கையானார். அன்றொரு நாள், அவன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம் வந்து தான் கதவில் அறையப்பட்ட எல்லா ஆணிகளையும் எடுத்து விட்டதாகவும், இதோ தன் கையில் இருப்பது தான் கடைசி ஆணி என்றும் காண்பித்து, தான் இப்போது நல்லவனா என தந்தையிடம் வினவினான். தந்தை புன்னகைத்துக் கொண்டே மீண்டும் கதவை சென்றுப் பார்க்குமாறு கூறினார். திரும்பி வந்த மகனிடம் என்ன தெரிந்தது எனக் கேட்டார். அதற்கு மகனோ, "கதவு முழுவதும் சிறு சிறு ஓட்டைகளாக உள்ளன" என்றான். தந்தை மென்மையாக, " நீ செய்த தவறுகள் தான் அந்த கதவில் அறையப் பட்ட ஆணிகள். நீ திருந்துவதன் மூலம் அந்த ஆணிகள் பிடுங்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் நீ அறைந்ததன் விளைவுகளான ஓட்டைகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.   

9 comments:

Chitra said...

அருமையான கதையும் கருத்தும். பகிர்வுக்கு நன்றிங்க.

தமிழ் உதயம் said...

தவிர்க்கப்பட வேண்டிய இரண்டு... ஏமாறுவது, ஏமாற்றுவது.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல எழுத்தும் வாசிப்பனுபவமும் தங்களுக்கு..!

G.M Balasubramaniam said...

நல்ல கருத்து அழகாக சொல்ல்ப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் நாகசுப்பிரமணியம்.

arasan said...

நல்ல கருத்தை அழகாய் கூறி இருக்கின்றீர் ...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நல்ல காத்திரமான சிந்தனையும் எழுத்தும். அற்புதம் நாக்ஸ்.

CS. Mohan Kumar said...

அருமை. கதை சொல்லும் நீதியும் நன்று

குறையொன்றுமில்லை. said...

ஏம்மாற்றுவதால் விளையும் தீமைகளை நன்றாகச்சொல்லி இருக்கிரீர்கள்.

சமுத்ரா said...

good one

Post a Comment