Saturday, April 25, 2020

வாடகை [சிறுகதை]

     ராகேஷ் அகர்வால் வீடு வந்து சேரும் போது மிகப் பதற்றத்துடன் இருந்தான், முன் எப்பொழுதும் இல்லாத விதமாக. ஒருமுறை தனது தங்கையின் கணவன் அமித் வாங்கிய கடனுக்காக தனது அடக்குக் கடை ஜப்திக்கு சென்ற போதும் கூட அதை மிக இலகுவாக, நிதானமாக சமாளித்து மீண்டுவந்தவனால் இப்போது அப்படி இருக்க இயலவில்லை. காரணம் - தனது அடகுக்கடை இருக்கும் கட்டிடத்தின் சொந்தக்காரரான   எண்பத்தைந்து வயதான ராமலிங்கத்துக்கு வந்த மாரடைப்பு.

     ருபத்தைந்து வருடங்களுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து பிழைக்க கோயம்புத்தூருக்கு குடியேறியது ராகேஷின் குடும்பம். அப்போதுதான் அவனுக்கு திருமணம் ஆகியிருந்தது. எனினும் இடமும், மனிதர்களும் புதிது என்பதனால் முதற்முறை தனியாகவே வந்திருந்தான். தனது குடும்பத்  தொழிலான வட்டிக்கடையைத் தவிர வேறெதுவும் தனக்கு சரிவராது என்பதை மிகத் துல்லியமாக அவன் கணித்து வைத்திருந்ததே அவனது இத்தனையாண்டுகால வெற்றிக்கு முதற்படியாக அமைந்தது.

     தனது சொந்தக்காரரான ஹேம்சந்த் ஏற்கனவே அடகுத் தொழிலை கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடத்திக்  கொண்டிருந்தமையால் அவருக்கு கடிதம் அனுப்பி விவரத்தை சொல்லித் தன்னை அவரிடம் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தான். அது அவர்கள் தொழில் கடைப்பிடிக்கும் மரபு என்பதனால் ஹேம்சந்த் மறுப்பேதுமின்றி அவனை வரச் சொல்லி பதில் கடிதம் அனுப்பினார். தங்களை வேருடன் பிடுங்கி வேறொரு நிலத்தில் மீண்டும் வேரூன்றி, கிளைப்பரப்பி பூத்துக் குலுங்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையாகவே வாய்த்திருக்கிறது போலும்.

     வந்த முதல் நாளன்றே தானிருந்த காந்திபுரத்தை ஒவ்வொரு தெருவாக நடந்தவாறே அவதானிக்கத் தொடங்கினான். தனது கடையை தொடங்குவதற்கு ஏதுவான ஒரு இடத்திற்கான தேடல் படலம் அது. பள்ளிப் படிப்பைத் தாண்டிராதவன் என்பதாலும், திருமணமானவன் என்பதாலும் தனது எந்தவொரு அடியும் தவறிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான்.

     வலுக்கட்டாயமாக கடைக்காரர்களிடமும், ஆட்டோ ஓட்டுநர்களிடமும் பேச்சுக் கொடுத்து ஒருவாறாக தமிழைப் புரிந்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான் இரு மாதத்திற்குள்ளாகவே - மொழி எத்தொழிலுக்கும் அச்சாரம் என்பதனால், குறிப்பாக வட்டித் தொழிலுக்கு. போலவே ஒவ்வொரு மாலையும் வ.உ.சி பூங்காவுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் முதியவர்களிடம் உரையாடுவதன் மூலம் தமிழை இன்னும் சற்று வேகமாக கற்றுக் கொண்டான்.

      மொழி இனி ஒருத் தடையில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு வந்த போது மாதங்கள் ஆறு கடந்திருந்தன. இடைப்பட்ட காலத்தில் ஹேம்சந்திடம் தொழிலை அதன் நெளிவு சுழிவுகளுடன் கற்றுக் கொண்டே தனது தொழிலை எப்படித் தொடங்குவது, எப்படி அபிவிருத்தி செய்வதென காந்திபுரத்தையும்  அவதானித்துக் கொண்டிருந்தான். காலம் மாறுவதை உணர்த்துக் கொண்டவன் அதற்கேற்றாற்போல இத்தொழிலையும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டான்.

     ராண்டுகளுக்குப் பிறகு இதுதான் தொழிலைத் தொடங்குவதற்கு சரியான தருணம் என்பதை மனதில் கொண்டு, தனது தேடல்படலத்தின் விளைவாய் தனது கடைக்குத் தகுந்த ஓர் இடத்தை தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான். எப்போதும் பரபரப்பு மிகுந்த சாலையாக இருக்கும் கிராஸ் கட் ரோட்டை செங்குத்தாக இணைக்கும் ராம்நகரின் ஒரு சாலை. ஏனைய சாலைகளை போலல்லாது அச்சாலையிலிருந்த ஒரு பள்ளி, திருமண மண்டபம், ஓரிரு ஜவுளிக்கடைகள், சிறு அங்காடிகள் மற்றும் கிராஸ் கட் ரோட்டையும் அச்சாலையையும் இணைக்கும் பிராதன இடத்தில் வரப்போகும் மிகப் பெரிய ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் எனத் தனது தொழிலுக்கு உகந்த இடமாக நிச்சயம் உதவக்கூடும் என்பதை உணர்ந்திருந்தான்.

     சற்றே விசாலமாக கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றாக உருக்குலைந்து, சமன் செய்ய முடியாத வருமானத்திற்காக வேறொன்றாக புனரமைக்கப்பட்டு காலத்தின் கோரப்பற்களில் சிக்குண்டு கிடக்கும் வீடொன்றை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். வீட்டின் முன்புள்ள நிலத்தில் பல வருடங்களாக இளைப்பாறிய இரு தென்னை மரங்கள், ஒரு கொய்யா மரம், சீதா மரம் மற்றும் வீட்டின் முன்நிலத்தை தனது பூக்களால் உள்நுழைபவரை வரவேற்கும் பவளமல்லிச் செடியென தான் முதற்முறை பார்த்த காட்சிகள் முற்றிலுமாக மாறித் தொடர முடியாத சூழ்நிலையின் அறிகுறிகளாக நுழைவாயிலின் இருபுறமும் முற்றுப்பெறாத இருக்கட்டிடங்கள் அமைதியாய் அமர்ந்திருந்தன இரு பெரும் முதிர்க்கன்னிகளாக செந்நிற தேகத்துடன்.

     இடத்தை தேர்வு செய்தவுடன் அவ்வீட்டின் நபர்களையும் நன்கு அவதானித்து வைத்திருந்தான். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு மேலாக தட்டச்சு நிலையம் நடத்திவரும் ராமலிங்கத்திற்கு நான்கு பெண்களும் ஒரே ஒரு பையனும் வாரிசுகள். எல்லோருக்கும் திருமணமாகி சில வருடங்கள் கடந்திருந்த நிலையில், அவரது மகனான கணேசனும் தனது தந்தையுடன் சேர்ந்து தட்டச்சு நிலையத்தைப் பார்த்துக் கொண்டான். கால மாற்றத்தில் ஒவ்வொரு தொழிலும் வேறொரு தொழிலின் முன்பாக பலியிடப்பட்டுக் கொண்டிருந்த வரிசையில் தட்டச்சு நிலையம் கணினியின் காலடியில் குற்றுயிராய் வீழ்ந்துக் கிடந்தது உயிர்விடும் மூச்சிரைப்புடன். அதிலிருந்து மீண்டு வரும் முயற்சியாகத்தான் ராமலிங்கம் தனது வீட்டின் முன்பகுதியை கடைகளாக மாற்ற முயற்சித்து அதை முடிக்க இயலாமல் பணப் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருப்பதுவரை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றான்.

     "சார்...."

     "யாருப்பா?" என வெளியில் வந்தார் ராமலிங்கம்.

     "வணக்கம் சார். என் பேரு ராகேஷ். நான் என்னோட கடைக்கு  வாடகைக்கு ஒரு எடத்த தேடிட்டு இருக்கேன். அது விஷயமா உங்ககிட்ட பேசணும்."

     "அப்படியா. உள்ள வாங்க."

      தன் வீட்டின் கூடத்திற்கு அழைத்துச் சென்ற ராமலிங்கம் அவ்வறையின் நுழைவாயிலில் சாலைப்பார்த்து போடப்பட்டிருக்கும் தனது பிரதான சிம்மாசனமான சாதாரண மர நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு ராகேஷையும் எதிரே அமரச் சொன்னார்.

      சற்றே வீட்டை ஒரு சுற்று பார்த்த ராகேஷ் எப்படியும் அவ்வீட்டின்ஆயுள் நாற்பது இருக்கக்கூடும் என்பதை உணர்ந்துக் கொண்டான்.

      "ம்...சொல்லுங்க" என்றார் ராமலிங்கம் ஒரு அதிகாரத் தோரணையில்.

      ஆத்தோரணையை எதிர்பார்க்காத ராகேஷ் மெலிதாக தனது பின்கதையை அவருக்கு ஏற்றவாறு கத்தரித்துக் கூறிவிட்டு தனது கடைக்கு அவர்கள் வீட்டின் முன்புள்ள  இடம் வாடகைக்கு கிடைக்குமா என மிகப் பணிவுடன் கேட்டான்.

      சற்றே பெருமூச்சுவிட்டபடி ராமலிங்கம், "ம்ம்ம்...கொஞ்சம் லேட் ஆகும்ங்களே. இன்னும் வேலை முடியல. ஆறு மாசம் ஆகும்னு நெனைக்கறேன். அப்ப வேணும்னா வாங்க பேசுவோம்" என தனது இயலாமையை மறைத்துப் பேசினார்.

      எல்லாம் அறிந்த ராகேஷ் முழு தயாரிப்புடன் தனது தூண்டிலை ஒவ்வொன்றாக வீசினான். "என்ன சார்? ஆறு மாசமா? இன்னும் சிமெண்ட் பூசி white wash பண்ணா வேலை முடிஞ்சுடும் இல்லையா? அதுக்கு ரெண்டு மாசமே தாராளம். ஏன் சார் எனக்கு கொடுக்க இஷ்டமில்லையா? open-ஆ சொல்லுங்க நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன். உங்க எடம். உங்க இஷ்டம்தானே" என மிக மென்மையாக வார்த்தைகளால் அவரறியாத வண்ணம் தனது துண்டிலுக்கு அவரது வார்த்தைகளை கவர்ந்திழுத்தான்.

      "சே..சே! அப்படிலாம் இல்லைங்க. நாங்க வாடகைக்கு விடத்தானே கட்றோம்" என பட்டும்படாமல் சிரித்து மழுப்ப நினைத்தார்.

     "அப்பறம் என்ன சார்?" என விடாமல் தூண்டிலிட்டான்.

     "அது...வந்து...இப்ப எங்களுக்கு பணம் கொஞ்சம் மொடையா இருக்கு. கடைய கட்டிமுடிக்க கொறஞ்சது ஆறுமாசமாது ஆகும். அதனாலதான்  சொல்றேன்" என அவன் எதிர்பார்த்த பதிலை சொல்லவும் அதற்காகத்தான்  காத்திருந்தவன் போல தொடர்ந்தான்.

     "ஓ!!! என்ன சார்... 80% கட்டி முடிச்சுடீங்க இன்னும் 20% தான அசால்ட்டா பண்ணிடுவீங்க சார்" என நம்பிக்கை ஏற்றினான்.

     உற்சாகமாக சிரித்தார் ராமலிங்கம்.

     தன்னிடம் சிரித்துப் பேசுகிறவர்கள் உண்மையிலேயே தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார்கள் என நம்புகிற பலவீனம் அவருக்கு இருப்பதை உணர்ந்துகொண்ட ராகேஷ், "சார். எனக்கு ஒரு idea. கேக்கறீங்களா?" என்றவனிடம் "சொல்லுங்க" என ஏதுமறியாமல் சொன்னார்.

     "சார். எப்படி பாத்தாலும் கடைக்கு advance வாங்குவீங்கல? எவ்வளவு சார் சொல்லறீங்க?"

     "அது வந்து பத்தாயிரம்"

     " சரி சார். ரெண்டு கடைக்கு இருபதாயிரம் ஆச்சு. வாடகை எவ்வளவு சார்?"

     "ரெண்டாயிரம்"

     தான் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக இருப்பதன் ஆச்சரியத்தை தனது முகபாவனையில் வெளிப்படுத்தாமல், "சரிங்க சார். நீங்க கடை வாடகைக்குனு வெளிய எழுதிப் போடுங்க. இன்னொரு கடைக்கும் கண்டிப்பா சீக்கிரமே ஆளு கெடைச்சிடும். அப்ப இருபதாயிரம் advance கைல இருந்தா உங்களுக்கு மிச்சம் எவ்வளவு தேவைப்படும்?"

      கணக்குகள் மிகச் சுலபமாக சமன் ஆவதைக் கண்டு குதூகலத்துடன் ராமலிங்கம், "என்ன? ஒரு அம்பதாயிரம் தேவைப்படலாம். அதுக்கு என்ன பண்ண? என அவரே அறியாமல் ராகேஷிடம் கேட்க, அவன் மெலிதான புன்முறுவலுடன், "ஒண்ணும் பிரச்சனை இல்ல சார். நானே அதை உங்களுக்கு கொடுக்கறேன். நீங்க வாடகைல கழிச்சுட்டே வாங்க. நடுவுல கொஞ்சம் கொஞ்சமா கூட கணக்க முடிச்சுக்கோங்க. ஒரு பிரச்சனையுமில்ல" என சொல்லவும் சில நிமிடங்கள் மௌனித்தார் ராமலிங்கம்.

      அதை உணர்ந்த ராகேஷ் இன்னும் சற்றே கவனமாக," புரியுது சார். திடீர்னு ஊரு, பேரு தெரியாதவன் வந்து சொல்றத நம்பி எப்படி எறங்கறதுனு யோசிக்கறீங்க போல. நியாயம்தான்." என சொல்லிக்கொண்டிருக்கும் போதே தனது பையில் கைவிட்டு ஐநூறு ரூபாய் கட்டுகளாக ஐம்பதாயிரம் ரூபாயை அவர் முன்னிருந்த மேசையில் வைத்துவிட்டு,"நீங்க என்னை நம்பலானாலும், நான் உங்களை நம்பறேன், சார். இப்ப போயிட்டு நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன். உங்களுக்கு சரினு பட்டுச்சுனா agreement போட்டுக்கலாம். இல்லனா அப்ப நான் இந்த பணத்தை திரும்பி வாங்கிக்கறேன் சார்" எனப் புறப்படத் தயாரான ராகேஷிடம் மறுதலிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார் ராமலிங்கம்.

     கணக்கிட்டு ஒருவாரம் கழித்தே ராகேஷ் மீண்டும் ராமலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றான். அப்போது அங்கு ராமலிங்கத்தின் மனைவி லட்சுமி, மகன் கணேஷன் மற்றும் அவன் மனைவி ரம்யா என நால்வரும் இருந்தனர் இவன் எதிர்பார்த்ததைப் போலவே.

     "சாரி சார். திடீர்னு ஒரு அவசர வேலை. சென்னை வரைக்கும் போய்ட்டு வரமாதிரி ஆயிடுச்சு. அதான் வர முடியல" எனப் பொய்யான ஒரு காரணத்தை சொன்னவனை அமரச் சொன்ன ராமலிங்கம், தனது குடும்பத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். எல்லாம் கனிந்து வருவதாய் உணர்ந்துக் கொண்டான். எனினும் தனது முகப்பாவனையில் எவ்வித சலனமும் இல்லாதவாறு மிகக் கவனமாக அமர்ந்திருந்தான்.

      "திடீர்னு நீங்க வந்து அய்ம்பதாயிரம் கொடுத்துட்டு போய்ட்டீங்க. எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. சரி ரெண்டு நாள் கழிச்சு வந்துடுவீங்க, உங்கள்ட்ட திருப்பி கொடுத்தாடலாம்னு பாத்தா ஆளைக் காணோம். ரொம்ப பயந்து போய்ட்டேன். அப்பறம்தான் வீட்ல வெவரத்தை சொன்னேன். அவங்களும் பயந்துட்டாங்க. எங்களுக்கு கொஞ்சம் time வேணும். இப்ப இந்த பணத்தை நீங்களே வாங்கிக்கோங்க. ஒரு ரெண்டுநாள் கழிச்சு வாங்களேன். பேசுவோம்" என்ற ராமலிங்கத்தை புன்னகையுடன் ஆமோதித்தான். இது எல்லாவற்றையும் மிக அமைதியாகவும், உன்னிப்பாகவும் கணேஷன் அவதானித்துக் கொண்டிருந்தான்.

     "சரி சார். நான் வரேன்" எனக் கிளம்ப எத்தனித்த ராகேஷை வலுக்கட்டாயமாக அமர்த்தி காஃபி கொடுத்தனுப்பினார்.

      ம்முறை மிகச் சரியாக இரண்டு நாட்கள் கழித்து நல்ல நேரமாக பார்த்து ராமலிங்கத்தின் வீட்டையடைந்தான். இவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை போலவே ராமலிங்கமும் அவரது மகன் கணேசனும் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

      வந்தவனை அமரச் செய்த ராமலிங்கம்,  "வீட்ல பேசினோம்ங்க. எல்லாரும் சரினு சொல்றாங்க. இருந்தாலும் எம்பையந்தான் உங்கள்ட்ட ஒருமொறை பேசிட்டு அப்பறம் செய்யலாம்னு சொல்றாப்ல. என்ன சொல்றீங்க?"

     "கண்டிப்பா சார். நீங்கதானே ஓனர்" என லாவகமா சொல்லிச் சிரித்தவாறே கணேசனைப் பார்த்து, "சொல்லுங்க சார்" என்றான் அச்சிரிப்பை சற்றும் உலராது.

     "ஹ்ம்ம். அப்பா சொன்னாரு. நமக்கு சுத்தி வளைச்சுலாம் பேச வராது. நீங்க தர பணத்துக்கு வட்டி என்ன சொல்றிங்க?" என எவ்வித முகபாவனையுமின்றி சொன்ன கணேஷன் தன்னை ஆழம் பார்ப்பதை புரிந்துக் கொண்டவன்," ஐயோ சார். நான் அடகுக் கடைதான் வைக்க போறேன். அங்க வரவங்களுக்குத்தான் வட்டி. இங்க நான் தானே உங்கள தேடி வந்துருக்கேன்" என மெல்லச் சிரித்தவாறே, "அதுவுமில்லாம நான் மொத மொதலா தொழில ஆரம்பிக்க போறேன். அதை நல்லவிதமா செய்யலாமே? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலைனா நீங்களே agreement ரெடி பண்ணிடுங்க. என்ன நான் சொல்றது?" என ராமலிங்கத்தை ஒரு பார்வை பார்த்தான். அவர் தனது மீட்பரைக் கண்டுகொண்ட ஆனந்தத்தில் அமர்ந்திருந்தார்.

      கணேசனுக்கும், "சரி. பிடி நம்ம கைலதானே இருக்க போகுது" என்ற நம்பிக்கை வந்த போது தனது அப்பாவை தனியே அழைத்துச் சென்று அதில் தனக்கு முழு சம்மதமில்லை என்றாலும் அவர்கள் வீட்டின் பத்திரம் தனது சகோதரிகளின் திருமணத்திற்காக அடமானம் வைப்பதும், மீட்பதுமான கால சுழற்சியில் இம்முறை தனது தங்கை பூமாவின் முறையாக அடமானத்தில் இருப்பதால் வேறு வழியின்றி  சம்மதம் சொன்னவன் agreement -யை தானே தயார் செய்வதாய் சொல்லி வெளியே சென்றான்.

     று மாதங்களுக்குப் பிறகு, எல்லாம் சரியான திசையில் தான் கணித்தவாறே செல்வதில் மகிழ்ச்சியடைந்த ராகேஷ், ஹேம்சந்த் மற்றும் ராமலிங்கத்தின்  குடும்பத்தினரை அழைத்து  தனது அடகுக் கடைக்கு பால் காய்ச்சினான். அதே நேரத்தில் அப்பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரும் திறக்கப்பட்டது. நான்கு தளங்களைக் கொண்ட அதன் அமைப்பும், ஒரே இடத்தில் எல்லாவற்றையும் வாங்க ஏதுவான வசதியும், அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய சிறு அங்காடிகளை ஒரே நேரத்தில் அடித்து நொறுக்கப் போவதையும், மிக நிச்சயமாக கோவையின் அடையாளமாக மாறக்கூடிய சாத்தியங்களையும் அப்போதே கணித்துவிட்டான் ராகேஷ்.

     தனது கடை திறக்கும் முன்பாக நடைப்பயிற்சி செல்லும் ராகேஷ் காணும் காட்சிகள் அப்போது சற்று மாறியிருந்தன. எப்போதும் அமைதியாய் இருக்கும் எட்டு மணியளவில் பல இளைஞர்களும், சில இளைஞிகளும் சற்றே உலர்ந்த நீல நிற சீருடைகளுடன் அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பணிபுரிய சென்று கொண்டிருப்பதும், எட்டே முக்காலுக்கு பின்னர் மித வேகத்துடன் ஓடுவதும் அத்தெருவின் அன்றாடங்களில் ஒன்றாகிப் போனது. காரணம், ஒன்பது மணிக்குள்ளாக வருபவர்களுக்கு மட்டுமே முழுநாள் சம்பளம் கணக்கில் வைக்கப்படுவதும் இல்லையெனில் அவர்களது கணக்கில் அரைநாள் சம்பளம் மட்டுமே குறித்துக் கொள்ளப்படுவதாகவும் தெரிந்துக்கொண்டவன் அவர்களின் வியர்வையில் ஓர் அறுவடைக்குத் தயாரானான்.

     இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அக்கடைக்கு செல்வதை வழக்கமாகிக் கொண்டவன் அங்கு பணிபுரியும் செல்வத்தை தனது நட்பு வட்டத்தில் இழுத்துக் கொண்டான். செல்வத்தின் சொந்த ஊர் மற்றும் அக்கடை நடைபெறும் விதம் என பேச்சினூடாக தெரிந்துக் கொண்டவன் அன்றிரவு செல்வம் சோர்ந்து வருவதைக் கண்டு என்ன என்று கேட்டான்.

     "ஒண்ணுமில்லண்ணா." என சொன்னவனிடம் "அட! சொல்லு செல்வம்." என தனது கடையை மூடியவாறே ராகேஷ் கேட்டான்.

     "நமக்கு இங்க தங்கறதுக்கும், திங்கறதுக்கும் மொதலாளியே வசதி பண்ணிருக்காங்க. ஆனா, சம்பளம் பத்தாந்தேதிதான் தராங்க. ஆனா, ஊர்ல பத்தாந்தேதி வரைக்கும் அவங்களால சமாளிக்க முடியலன்னு அம்மா சொல்லிச்சு. அதான் என்ன பண்றதுனு தெரியலண்ணா"

      அமைதியாக கேட்ட ராகேஷ், "புரியுது செல்வம். உனக்கு இப்ப சம்பளம் வருதுல்ல. அதை சொல்லி மளிகை கடை, பால்காரங்கிட்ட சொல்லலாம்ல?"

      "சொல்லலாம்ண்ணா, ஆனா ஏற்கனவே எல்லார்ட்டயும் கொஞ்சம் கடனிருக்கு, அதுனால அவங்கள்ட்ட சொன்னாலும் பிரோஜனமில்ல. இங்க சம்பளம் முன்னாடியே கொடுத்தா கூட சமாளிச்சுடலாம். ஆனா, அதுக்கும் வழியில்ல" என சோடியம் விளக்கில் தரையில் விழும் தனது நிழலைப் பார்த்தவாறே பேசி அமைதியானான்.

      "அட. இவ்வளவுதானா. நான் ஒரு ஐடியா சொல்றேன். உனக்கு ஓகேனா பண்ணலாம்" என தான் நினைத்த இடத்தில் அவன் வந்து நிற்பதைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தான்.

      "என்னண்ணா?" என ஆர்வமின்றி  செல்வம் கேட்க, "நான் உனக்கு மாசா  மாசம்  ஒண்ணாந்தேதி உன்னோட சம்பள பணத்தை தரேன். பத்தாந்தேதி நீ எனக்கு திருப்பி கொடு. என்ன சொல்ற?" எனக் கேட்க, "வேணாம்ண்ணா." என தயங்கிய செல்வத்திடம், "ஏன், உனக்கு நான் கைமாத்தாதான் தரேன். இதே மாதிரி உன்னோட வேலை பாக்கிறவங்களுக்கு தேவைப்பட்டாலும் சொல்லு, பண்ணிக்கலாம். உனக்கு எப்பவுமே அசல் மட்டும்தான். மத்தவங்களுக்கு கமிஷன் மாசத்துக்கு இருவது ரூபா மட்டும் கொடுத்தா போதும்" என அவர்களது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தனது தொழில் புத்தியை பயன்படுத்திக் கொண்டான்.

      உள்ளூரில் குடும்பம் படுகிற அவமானத்திற்கு இது எவ்வளவோ மேல் என செல்வம் சம்மதித்த மறுகணமே ராகேஷ் அவனுக்கு இரண்டாயிரத்து ஐநூறை கொடுத்து,"இந்தா செல்வம், சீக்கிரம் நாளைக்கே வீட்டுக்கு மணி ஆர்டர் பண்ணிடு" என்றவாறு இருவரும் தங்களது வீட்டிற்கு சென்றனர்.

       தான் எதிர்பார்த்த மாதிரியே செல்வம் மூலமாக அவனுடன் பணிபுரிபவர்களில் நூற்றுக்கும் மேலானவர்கள் ராகேஷின் இப்புதிய திட்டத்தில் இணைந்தனர். கொடுப்பதும், வாங்குவதும் அதில் மாதம் நபர் விதம் இருபது ரூபாயை பிடித்துக் கொள்வதும் அவர்கள் வாழ்வின் அன்றாடங்களாகின. ஒரு ருபாய் போட்டால் குறைந்தது ஒரு பைசாவது வட்டி வர வேண்டும் என்ற தன் கணக்கு ராமலிங்கத்துக்கு கொடுத்த ஐம்பதாயிரத்தில் தவறிப்போனதை இம்மாத சுழற்சியில் பன்மடங்கு அறுவடை செய்து கொண்ட ராகேஷ் அன்றைய நாள் தனது கடையின் வாசலில் ஓர் அறிவிப்பு பலகையை வைக்க அது காட்டுத்தீ போல அங்கிருந்த சிறு வணிகர்களிடமும், தினக்கூலிகளிடமும் பரவியது.

     "வட்டியில்லாக் கடன்" என்பதுதான் அது. நம்ப மறுத்தாலும் அந்த விளம்பரம் மூலம் அவனது கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் பன்மடங்கு அதிகமாயினர். வருபவரிடம் மிக மென்மையாக, நாகரிகத்துடன் நடந்து கொண்டது மட்டுமல்லாது வட்டியில்லாக் கடன் என்பது சிறு நிபந்தனைக்கு உட்பட்டது என தெளிவாக விவரித்தான். அஃதாவது கடன் வாங்கும் பணம் ஐயாயிரத்துக்குள் என்றால் மூன்று மாதங்களுக்கும், பத்தாயிரம் வரை என்றால் ஐந்து மாதங்களுக்கும், இருபதாயிரம் வரை என்றால் ஆறு மாதங்களுக்கும் வட்டியில்லை என தொகைக்கு ஏற்ப வட்டியற்ற காலத்தை வகுத்திருப்பதை மிகத் தெளிவாக வெளிப்படைத்தன்மையுடன் அவன் தெரிவித்தது வாடிக்கையாளர்கள் அதிகமாக உதவியது. அதே வேளையில் இதைக் கேள்விப்பட்ட ஹேம்சந்த் அதிர்ச்சியுடன் ராகேஷை சந்தித்து பேச வந்தார். அப்போது மக்கள் கூட்டம் வெல்லக்கட்டியை மொய்க்கும் எறும்புச் சாரையாக இருப்பதைக் கண்டு ராகேஷை தனது இல்லத்தில் வந்து அன்றிரவு சந்திக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.

     கடையடைக்க பதினோரு மணி ஆன போதிலும் ஹேம்சந்த் அழைத்த மரியாதைக்கு அவர் இல்லத்திற்கு விரைந்து சென்றான். அவனது வருகைக்காகவே காத்திருந்தது போல அவர் வாசலில் அமர்ந்திருந்தார். வந்தவனை அவசரம் அவசரமாக தனது வீட்டின் பக்கவாட்டிலுள்ள மாடிப்படியின் வழியாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவர் சற்றே கோபத்துடன்," ஹரே முட்டாள். நீ என்ன பண்றனு தெரிஞ்சுதான் பண்றியா?" எனக் கேட்கவும் அவர் தனது வட்டியில்லாக் கடன் திட்டத்தை பற்றித்தான் பேசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ராகேஷ் மிக நிதானமாக, "சாச்சா, நீங்க கேட்கறது புரியுது. ஆனா, இது கண்டிப்பா நமக்கு பலன் கொடுக்கும்" என சொன்னவனை ஒன்றும் புரியாதவராக பார்த்தார்.

     "வட்டிதான் நமக்கு சோறு. அது இல்லன்னா பட்டினிதான். புரியுதா?"

     "அதையேதான் சாச்சா நானும் சொல்றேன். வட்டிதான் நமக்கு சோறு. அது இப்ப கெடைக்கறத விட கொஞ்சம் அதிகமாவே இனி கெடைக்கும்" என்றவனை, "எப்புடி?" எனக் கூர்மையாக பார்த்தார் தேர்வெழுதும் மாணவனை அவன் பின்னாலிருந்து அவதானிக்கும் ஓர் ஆசிரியரைப் போல.

     "சாச்சா, நீங்களே நல்லா யோசிச்சுப் பாருங்க. இத்தன  வருஷ அனுபவத்துல நம்மள்ட்ட சொன்ன தேதிக்கு கடனை சரியா திருப்பி கொடுக்கறவன் எத்தன  பேரு? நூத்துல பத்துகூட தேறாது. அதே மாதிரி இந்த மனுஷங்களுக்கு கொஞ்சூண்டு ஆசைய துண்டினாலே போதும் அவங்களா வந்து விழுந்துடுவாங்க. அதேமாதிரி அவங்கள்ட்ட இலவச தவணை காலம் முடிஞ்சதுனா நாம பொதுவா வாங்கற வட்டியை விட கொஞ்சம் அதிகமாதான் வாங்கறேன். ஆனா அவங்க யோசனைலாம் எப்படியும் அந்த டைத்துக்குள்ள கட்டிடலாம்னுதான் இருக்கும். நீங்களே சொல்லுங்க அப்படி எத்தனை பேரால கட்ட முடியும்னு. Terms and conditions -ய அவங்கள்ட்ட தெளிவா சொல்லி நல்ல பேரை வாங்கின மாதிரியும் ஆச்சு. நமக்கு தேவையான வட்டியை வாங்கின மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லுல நெறைய மாங்கா அடிக்கற வித்தை" என ராகேஷ் சிரிக்கவும் "இது சரியா வரும்னு நெனைக்கற?" என ஹேம்சந்த் வியந்து கேட்க, "சாச்சா, இது சின்ன சாம்பிள்தான். நான் நெனைக்கற மாதிரி நடந்துச்சுனா என்னோட அடுத்த கட்டம் இதுவரைக்கும் நம்ம பிஸினெஸ்ல யாரும் பண்ணாத ஒரு வேலைய பண்ண போறேன்" என ஆகாயத்தைப் பார்த்தவனை "நீ இப்ப பண்றதையே இது வரைக்கும் எவனும் பண்ணதில்ல" என தன் நெஞ்சில் கைவைத்தார். வெடித்துச் சிரித்த ராகேஷ் விடைபெற்று தன் வீட்டுக்குச் சென்றான்.

     ல்லாம் தான் கணித்தவாறே செல்ல ஆறு மாதங்களுக்குப் பிறகு தனது அடுத்த திட்டத்தை செயல் வடிவமாக்க ஆரம்பித்தான். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் தங்க நகைகள் வங்கிகளில் இருப்பதும் அதை திருப்பி எடுக்க இயலாமல் தவிக்கும் அவர்களது நிலைமையை  ஆதாயமாகக் கொண்டும், தனது முந்தய வட்டியில்லாக் கடன் மூலமாக ஈட்டிய நற்பெயரையும் பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் வரும்போது தனது அடுத்த திட்டத்தை ஒவ்வொருவராக  விவரித்தான்.

      வங்கியில் பெற்ற நகைக்கடனை அடைக்க முடியாதவர்களுக்கும், நிலைமை கை மீறி ஏலத்துக்கு செல்லும் நகைகளுக்கு தான் கடன் தருவதாகவும், அதற்கு அடமானமாக அதே நகைகளை வாங்கிக் கொள்வதாகவும், கடன் பெற்ற ஓராண்டுக்குள் வங்கியை விட குறைவான வட்டியையும், அதற்கு மேலானால் வங்கியின் வட்டி விகிதமும், இரண்டாண்டுகளுக்கு மேலானால் ஒன்று முழுவதுமாக வட்டியை அசலுடன் சேர்த்துக் கட்டி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அசலுக்கும், வட்டிக்குமான தொகைக்கு ஈடாக நகையை தனது அடக்குக் கடையே சொந்தமாக்கிக் கொள்ளும் என்ற திட்டமும் மிகுந்த பலனை தந்தது.

     ஆனாலும், மற்ற அடக்குக் கடையை போலல்லாது மிக மென்மையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் ஆரம்பம் முதலே நடந்துக் கொண்டான். அதனாலேயே அவனது பெயர் ராம் நகர் முழுவதும் பிரபலமானது.

      தற்கிடையே ராமலிங்கத்துக்கு, கணேசனுக்கும் இடையே உண்டான குடும்பத் தகராறில் கணேஷன் தனது மனைவியையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட ராமலிங்கம் சற்றே துவண்டு போயிருந்தார். அதை வைத்து மற்றுமொரு புதுக் கணக்கை தொடங்க ராகேஷ் திட்டமிட ஆரம்பித்தான்.

     ஓரிரு மாதங்கள் கழித்து காலாவதியான தனது வாடகை ஒப்பந்தத்தை தானாகவே புதுப்பித்து, பழைய வாடகையுடன்  ஐநூறு ரூபாயை அதிகரித்து புது வாடகையாக மாற்றி அவரிடம் கொடுக்க சென்றான்.

    எப்போதும் போல வீட்டின் கூடத்தில் இருக்கும் தனது பிரதான இருக்கையில் அமர்ந்திருந்த ராமலிங்கத்தை பார்த்து வணக்கம் வைத்தவனை உள்ளே வரச் சொன்னார்.

    "சார், நேத்தோட நம்ம rental agreement முடிஞ்சுடுச்சு. இந்தாங்க சார் அதோட renewal copy. இந்த மாசத்துல இருந்து ஐந்நூறு ரூபாய் அதிகம். நீங்களும் பாத்துக்கோங்க சார்" என அவன் கொடுத்த காகிதங்களை துளியும் பொருட்படுத்தாமல் தன்  முன்னிருந்த மேசையில் போட்டவர் பெருமூச்சு விட்டவாறு தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

    "என்ன சார்? உடம்பு எதுவும் சரியா இல்லையா? ஆஸ்பத்திரி வேணா போய்ட்டு வரலாங்களா? எனக் கேட்கவும் "அதுலாம் ஒண்ணுமில்லப்பா. இந்த கணேஷன் இப்படி வீட்டை விட்டு போயிட்டானே. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மத்தபடி ஒண்ணுமில்ல." என அதே உடல் மொழியுடன் அமர்ந்திருந்தார்.

     "ஏன் சார்? என்ன பிரச்சனைனாலும் பேசி தீர்த்திருக்கலாமே சார்" என சொன்னவனை ஏறெடுத்து பார்த்தவர்,"ஒரே ஒரு வார்த்தை தான்பா. எதுக்குடா இப்படி செலவு பண்ற. முன்ன மாதிரி நமக்கு typewriting institute -ல இருந்து வருமானமில்ல. வெறும் வாடகையை நம்பித்தான் இருக்கோம். அதுவும் உனக்கு பொட்ட புள்ளையா போச்சு. நாளைக்கு அதுக்கு ஏதாவது சேத்து வைக்கலாம்ல-னு தான் கேட்டேன். அன்னிக்கே சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போய்ட்டான்" என கண்ணோரம் கசிந்த கண்ணீரை தனது வேஷ்டியால் துடைத்துக் கொண்டார்.

      "புரியுது சார். கவலைபடாதீங்க. கொஞ்ச நாள் போனா அவரே உங்கள்ட்ட திரும்பி வந்துடுவாரு" என ஆறுதல் சொல்லிவிட்டு கடைக்குத் திரும்பினான்.

      பிற்பாடுதான் ராகேஷுக்கு முழு விவரமும் தெரியவந்தது. கணேஷன் தனியாக தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு தனது வட்டிக்கடையின் இடத்தை காலி செய்து தருமாறு ராமலிங்கத்திடம் கேட்க அதற்கு அவர் மறுதலித்துள்ளார். அதன் நீட்சியின் ஒரு புள்ளியில்தான் ராமலிங்கம் கணேஷனின் சுயமரியாதையை உரசும் விதமாக அவனை கையாலாகாதவன் எனக் கூறிய உச்ச தருணமொன்றில் வெளியேறியதாக அறிந்துக் கொண்டான்.

       அதனால் எந்த நொடியிலும் தனக்கு கீழே கணேஷன் குழி பறிக்கக் கூடுமென அவ்வப்போது ராமலிங்கத்துக்கும் அவரது மனைவிக்கும் தேவையானவற்றை ராகேஷ் கவனித்துக் கொண்டான். சில மாதங்கள் கழித்து அதன் ஊடாக ராமலிங்கத்திடம் அவ்வளவு பெரிய வீட்டை அவர்களது தேவைக்கேற்ப சுருக்கிக் கொண்டு உபரி இடத்தை வீட்டு வாடகைக்கு விட்டால் அது இன்னும் உதவக்கூடுமே என தன் எண்ணத்தை சொல்ல ராமலிங்கத்துக்கு அந்த யோசனை பிடித்துப் போனது. அதன் விளைவாக வீட்டின் பக்கவாட்டிலும், பின்புறமும், முதற் தளத்திலேயும் மூன்று குடும்பங்களுக்கு வாடகைக்கு அமர்த்தினார். அதற்கு ஒத்தாசையாக இருந்த ராகேஷிடம் அவ்வப்போது நன்றி தெரிவித்துக் கொண்டார்.

        தினங்கள் செல்ல தனது அடக்குக் கடையை விரிவாக்கம் செய்ய ராமலிங்கத்துக்கு சொந்தமான மற்றுமொரு கடையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்ட ராகேஷ், வருடா வருடம் தானே இரண்டு கடைகளின் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பித்து பழைய வாடகைக்கு மேல் ஐநூறு ரூபாயை அதிகரித்துக் கொண்டே வந்தான். தனக்கு வாடகை சரியாக வருவதாலும், ராகேஷே முன்னின்று வாடகை ஒப்பந்தம் உட்பட எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதாலும் மாற்றுச் சிந்தனையின்றி இருந்தார் ராமலிங்கம். போலவே வெளியுலகம் அறியாத ராமலிங்கத்தின் அப்பாவித்தனத்தை இருபத்தி ஐந்தாண்டுகளாக அனுபவித்து வந்தவனுக்கு அவரது மாரடைப்பு பெரும் அதிர்ச்சியை தந்ததனால் தூக்கமற்று தனது படுக்கையில் கிடந்தான் கொழுத்த தேகத்துடன்.

     வீட்டுக்கு வந்து இதனை நேரமாக சாப்பிட வராமல் இருக்கவும் ராகேஷை அழைக்க அவனது மகன் அனில் படுக்கை அறைக்குள் நுழைந்து, "ப்பா. வாங்க சாப்படலாம். மணி பதினொண்ணு ஆயிடுச்சு. அம்மாவும் wait பண்றாங்க" என்றவனை முகம் காணாது, "நீ போய் சாப்டு. எனக்கு வேணாம்" என சொல்லவும் "ஏன்  என்னாச்சு? முகமே சரியில்லையே" எனக் கேட்டான்.

      கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் அனில்  இன்னும் இரண்டாண்டுகளில் தனது தொழிலை பார்க்க வேண்டிவரும் என்பதனால் அவனிடம் சொல்வதில் தவறேதுமில்லை என அவன் வசம் திரும்பி,"நம்ம ஓனர் ராமலிங்கத்துக்கு இன்னிக்கு சாயங்காலம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு" என சொல்லவும்,

      "ஐயையோ. அப்பறம் என்னாச்சு?"

       "நானும், அவங்க வீட்ல குடியிருக்கற சிவராமனும் அவசரம் அவசரமா பக்கத்துல இருந்த ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனோம். அப்பறம் அவரோட பையன் கணேசனுக்கு தகவல் சொல்லி வரச் சொன்னோம். சிவராமன், கணேஷன் வர வரைக்கும் இருக்கேன்னாரு. கடைய தொறந்து போட்டே வந்துட்டோமேன்னு நான் உடனே திரும்பி வந்துட்டேன்" என்ற போது ராகேஷின் மனைவி ஷைலஜாவும் உள்நுழைந்து எப்போதும் போலவே அமைதியாக சொல்பவற்றை கேட்டுக் கொண்டவாறு நின்றுக் கொண்டிருந்தார் அவ்வறையின் நுழைவாயிலிலேயே.

     "ஓ!!! இப்ப எப்படி இருக்காராமாம். ஒண்ணும் பிரச்சனை இல்லையே? என்ற அனிலை நன்கு கூர்ந்து பார்த்தபடி "எப்படி இருக்காருனு தெரியல. ஆனா நமக்கு தான் இப்ப பிரச்சனை" என்ற போது ஒன்றும் புரியாமல் அனிலும் , ஷைலஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

     பின்பு மெதுவாக அனில்,"நமக்கா? ஏன் ?" என ராகேஷ் படுத்திருந்த கட்டிலில் அவனின் காலடியில் அமர்ந்த போது அவன் நின்றுக் கொண்டிருடந்த இடத்தை ஷைலஜா ஆக்கிரமித்துக் கொண்டாள்.

      "சரி...நம்மளோட ரெண்டு கடைக்கும் சேர்த்து எவ்வளவு வாடகை கொடுக்கறோம்னு தெரியமா?" எனக் கேட்ட ராகேஷை மலங்க மலங்க பார்த்தான் அனில்.

     அமைதியாக இருந்த இருவரையும் இடமும், வலமும் பார்த்த ராகேஷ் தனது தலையில் அடித்துக் கொண்டு, "எல்லாம் என் தப்பு. ஒன்ன முன்னாடியே தொழில்ல விட்ருக்கணும்" என அனிலைப் பார்த்து சொன்னவன், "ரெண்டு கடைக்கும் சேர்த்து இருபதாயிரம் வாடகை" என சொல்லவும் "சரி அதுக்கென்ன இப்ப?" என்ற அனிலை பார்த்து முறைத்தவாறே, "டேய், நம்ம கடைக்கு எதிர்த்தாப்புல இப்ப புதுசா ஒரு toy shop ஆரம்பிச்சுருக்கானே அதோட வாடகை என்னனு தெரியமா?" என்ற போது  சற்றே நிலைமையை ஊகித்துக்  கொண்ட அனில் தயங்கியவாறே," என்ன ஒரு முப்பதாயிரம் இருக்குமா?" என்றபோதே இடைமறித்த ராகேஷ்," ஆங்....எழுபதாயிரம்டா. அந்த ஒரு கடைக்கு மட்டும். நாம ரெண்டு கடைக்கும் சேர்த்தே இருபதாயிரம்தான் தரோம்" என மீண்டும் விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான்.

      "சரி, இப்ப நமக்கு லாபம் தான? என்ன பிரச்சனை" என்ற அனிலை படுத்தவாறே எட்டி உதைத்து, "முட்டாப்பயலே...முட்டாப்பயலே. நான் சொல்றது ஒனக்கு இன்னும் வெளங்கலையா?" என்றபடியே தனது மனைவியை பார்த்தார் அவள் ஏதோ ஒரு நாடகத்தை பார்க்கும் பாவனையில் இருக்க இன்னும் சற்றே சினங்கொண்டு,"அடேய், பெருசுக்கு 85 வயசு. இது மொத அட்டாக்தானாலும் பொழைக்கறது கஷ்டம். அப்படி அவரு போயிட்டார்னா அவரோட மகன் கணேஷன்தான் இனிமே ஓனர். இவரை இத்தனை வருஷம் ஏமாத்தின மாதிரி அவன ஏமாத்த முடியாது. அவன் ஊதாரினாலும், கெட்டிக்காரன் குறிப்பா பணம் விஷயத்துல. அப்படி பாத்தா, ஒண்ணு நாம இப்ப கொடுக்கற வாடகையை விட ஏழு மடங்கு அதிகமா கொடுக்க வேண்டி வரும். இல்ல கடைய காலி பண்ண வேண்டி வரும். எப்படி பாத்தாலும் எழப்பு நமக்குத்தான்" என விவரித்த போதுதான் அனிலுக்கு உறைத்தது.

      "சரி. சாப்பிட வாங்க" என இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல அழைத்த ஷைலஜாவை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட ராகேஷ், "எனக்குன்னு வந்து சேர்ந்துருக்கு பாரு" என்றவாறே அனிலைப் பார்த்து, "நீ போய் சாப்டுடா" என்றவாறே அறையின் விளக்கை அனைத்துவிட்டுச் செல்லுமாறு சுவரைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக்க கொண்டான்.

      அறையின் கதவருகே சென்று விளக்கை அணைக்க கையை உயர்த்திவாறே அனில்,"இப்ப என்னப்பா பண்றது?" என்றவனை திரும்பிப் பார்க்காமல் ஒரு பெருமூச்சுடன், "வாழ்க்கை பாலைவனமா மாறுச்சுனா நாமளும் ஒட்டகமா மாறிக்கணும்" என்ற போது சரியாக விளக்கும் அணைக்கப்பட்டது.

      இரு மாதங்கள் கழித்து-

      பெய்து ஓய்ந்த மழையினால் மரக்கிளையிலிருந்து நீர்த்துளிகள் இடைவெளிவிட்டு அந்த சாலையில் விழுந்துக்கொண்டிருந்தன. அதை தொந்தரவு செய்வது போல மரக்கிளைக்கும் சாலைக்கும் நடுவே ஓர் ஆட்டோ வந்து நின்றது. வீட்டின் முகப்பில் அமர்ந்து கணக்குகளை ஆராய்ந்துக் கொண்டிருந்த அனில் கதவை யாரோ தட்டும் ஓசையை கேட்டு எதிர் திசையில் தலை தூக்கிப் பார்த்தவன் கொஞ்சம் அதிர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்," வாங்க. உக்காருங்க." என்றவாறே "அம்மா" என அழைத்தபடி உள்ளே சென்று ஷைலஜாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

      தலை முழுவதும் முக்காடிட்டுக் கொண்டு பரபரக்க வந்தவள் ராமலிங்கத்தைப் பார்த்து வணங்கி கதவின் ஓரம் நின்று கொண்டாள்.

     மிகத் தயங்கி தலை குனிந்தவாறே அமர்ந்திருந்த ராமலிங்கம் மிக நிதானித்து,"எல்லாம் கேள்விபட்டேன்ம்மா. என்ன சொல்றதுனே தெரியல. இந்த பாவி மனுஷன் சாக வேண்டிய வயசுல இப்படி உக்கார்ந்துட்டு இருக்கேன். ஆனா, இந்த ராகேஷ் பைய நம்மளை எல்லாம் விட்டுட்டு இப்படி போய்ட்டானே" என்ற போது ஷைலஜாவை மீறி வந்த அழுகையை தனது சேலையில் அடக்கிக் கொண்டாள்.

     சற்றே இடைவெளி விட்டு, "இனிமேதான்மா  நீங்க ரெண்டு பேரும் தைரியமா இருக்கணும். அவன் தனி மனுஷனா இந்த ஊருக்கு வந்து பாஷை தெரியாம, மனுஷங்களை தெரியாம இவ்வளவு பெரிய ஆளாகிருக்கான். அப்படி ஒரு உழைப்பாளி. சேட்டுனாலே கெட்டவங்கனு நம்பி கெடந்த இந்த மனுஷங்கட்ட நல்ல பேரு வாங்கி ஒரு ஆலமரமா வளந்து நின்னதுலாம் சாதாரணமில்லப்பா" என சொல்ல சொல்ல அனிலாலும் தாங்க முடியவில்லை.

     தான் அவர்களை தொந்தரவு செய்வதாக நினைத்துக் கொண்ட ராமலிங்கம் வந்த வேலையை முடித்துவிட நினைத்தவர், தனது கையில் உள்ள மஞ்சப்பையில் கைவிட்டு ஒரு காகித பொட்டலத்தை அனிலிடம் நீட்டி அதை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லவும் என்னவென்று விளங்காமல் அதைப் பிரித்துப் பார்த்தவன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க ராமலிங்கம் கண்ணீருடன்,"ஒங்கப்பாட்ட ஆறு மாசம் முன்னாடி பத்தாயிரம் கடன் வாங்கியிருந்தேன். அதை திருப்பிக் கொடுக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலதான் எனக்கு மாரடைப்பு வந்துடுச்சு. ஒங்கப்பா என்னை ஹாஸ்பிடலுக்கு கூப்புட்டு போகும்போது கூட மனசுல ஒரு ஓரத்துல கெடந்து அடிச்சுக்குது. ஐயோ இந்த பயலுக்கு இன்னும் பணத்தை திருப்பி தரலையே. பணத்தை வாங்கின விஷயத்த என் பொண்டாட்டிட்டையும் சொல்லலேயேன்னு. உசுரு பொழச்சு வீட்டுக்கு வந்து பொறவு கூட என்னடா தெனமும் காலைல சரியா ஒம்பது மணிக்கு கடை தெறக்க வருவாப்ல. ஒரு வாரமா வரதில்லையேனு வூட்ல கேட்கவும் தயங்கி தயங்கி சொன்னாங்க நான் ஹாஸ்பிட்டலுக்கு போன அன்னிக்கு ராத்திரியே மாரடைப்புல போய்ட்டாருனு. தூக்கி வாரி போட்டுச்சு. அப்பவே வரணும்னு நெனச்சேன். ஆனா வூட்ல விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் கடன்காரன் வேற. மனசு கேக்கல. அதான் பக்கத்துல இருந்த ஆட்டோவ புடிச்சு வூட்டுக்கு தெரியாம வந்துட்டேன்" என எழுந்து வெளியில் வந்தபோது ஷைலஜாவின் அழுகைச் சத்தம் அவ்வீடு அதிர கேட்டது.

     ராமலிங்கம் அது அவளது கணவனின் இறப்பிற்கான அழுகை என்றே கற்பிதம் செய்து கொண்டார்.


     

No comments:

Post a Comment