Saturday, February 19, 2011

வாழ்தல் ஒரு கலை - IV


      "காரணம் இல்லாமல் காரியமில்லை". நம்முடைய இன்றைய நிலை சரி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்று நமக்கு ஒரு விஷயம் கைவசம் ஆகாமல் போகலாம். அதனால் அது என்றுமே நம் வசம் ஆகாது என்று அர்த்தமாகாது. காலம் தள்ளி போகலாம். ஆனால் மழை பொய்ப்பதில்லை.

     எல்லா விசயங்களும் முதல் முயற்சியிலேயே கைக்கூடிவிடுவதில்லை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நெஞ்சுரம், வேட்க்கை போன்ற சில காரணிகளை  கைவிடாமல் இருந்தாலே நம் நோக்கம் நிறைவேறிவிடும். 
      கடவுள் நம் ஆசைகளை நிறைவேற்றுவதில்லை; நம்முடைய நல்ல நோக்கங்களையே நிறைவேற்றுகிறார். சிலர் சில பல தோல்விகளுக்குப் பின்னர் வெகு எளிதாக நம்பிக்கை இழந்து விடுகின்றனர். நம்பிக்கை இழத்தல் என்பது பிணம் ஆவதற்கு சமானம்.


      அன்று பூலோகமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. காரணம், சொர்க்கத்தில் இருந்து வந்த ஒரு செய்தி - கடவுள் தன் கரங்களாலேயே மக்களுக்கு ஆப்பிள் வழங்கப் போகிறார் என்பதே அது. அந்த ஊரில் உள்ள சிறுமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. கடவுளைப் பார்ப்பதே பேறு என்றால், அவரிடமிருந்து பரிசாக ஒரு கனி பெறுவதென்றால் சொல்ல வேண்டுமா?

     அந்த நன்னாளும் வந்தது. பல கனவுகளுடன் அந்த சிறுமி சொர்கத்திற்கு மக்களுடன் மக்களாக பயணிக்கலானாள். சொர்க்கம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. வரிசை பெரியதாக இருந்தாலும் தூரத்திலிருந்தே சிறுமி கடவுளை ரசித்துக்கொண்டிருந்தாள். சில மணி நேரங்களுக்குள் சிறுமி கடவுளை நெருங்கிவிட்டாள். அவள் தருணம்; விவரிக்க முடியாத மகிழ்ச்சி; ஆசையுடன் சிறுமி கடவுளிடம் கையேந்தி நிற்கிறாள்.

  
     கடவுள் வழங்கும்போது கை இடறி கனி கீழே விழுந்து விட, சிறுமி கடவுளை நோக்குகிறாள், கடவுள் தேவதூதனை பார்க்கிறார். தேவதூதனோ, " தேவனே! மன்னிக்கவும். அந்த சிறுமிக்கு தங்களிடமிருந்து கனி பெற வேண்டுமெனில் மீண்டும் அவள் வரிசையில் தான் வர வேண்டும்" என்கிறார். சிறுமிக்கோ அழுகையே வந்து விடும் போல் இருந்தது. இருந்தாலும் அழுகையை அடக்கிக் கொண்டு வரிசையில் மீண்டும் வரலாம் என பின்னே வந்தால் , வரிசை  முன்பை விட மிக அதிகமாக நீண்டு விட்டது. ஆனாலும், வரிசையில் நிற்கிறாள். அடி அடியாக நகர்ந்து கொண்டிருக்கும் போது, கனி வாங்கிச் செல்லும் ஒவ்வொருவரையும் ஏக்கமாக பார்க்கிறாள்.  முன்பை விட கூட்டம்  அதிகமானதால் நாட்கணக்கில் நிற்க வேண்டியதாகிறது. ஆனாலும் அந்த ஒரு தருணத்திற்காக பொறுமைக் காத்து நிற்கிறாள். நாள்பட அந்த ஒரு தருணம் அவளை நெருங்குகிறது. 

   
     அவள் கடவுளை நெருங்கியதும், கடவுள் அவளை உற்று நோக்கி புன்னகைக்கிறார். பிறகு," சென்ற முறை உன் தருணம் வரும் போது, என் கையில் இருந்தது அழுகிவிட்டக் கனி. அது எனக்கு மட்டுமே தெரியும். உனக்கு அதைக் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் யாரும் அறியாத வண்ணம் கை இடறியதுப் போல அதைக் கீழே விழ வைத்தேன். ஆனால், நீ அத்துடன் மனம் தளராமல் மீண்டும் என்னை நோக்கி நம்பிக்கையுடன் வந்தாய். அதனால், இதோ பெற்றுக்கொள் இந்த தோட்டத்திலேயே கனிந்த சிறந்தக்  கனியை" என்று சிறுமியிடம் கொடுக்கிறார்.

    
     நாகூர் ஹனிபாவின் பாடலைப் போல், "இறைவனிடம் கை ஏந்துங்கள்; அவர் இல்லை என்றே சொல்வது இல்லை"

 

5 comments:

குறையொன்றுமில்லை. said...

yes nampikkaithaan vazvu. arumaiyana pathivu.

G.M Balasubramaniam said...

முயற்சியின் விளைவான நம்பிக்கை நல்லது. முயற்சியின் தகுதிக்கு ஏற்ப பலன் கிட்டும் எனும் நம்பிக்கை அதனினும் நல்லது. I MEAN YOU WILL GET WHAT YOU DESERVE.

நிலாமகள் said...

//எல்லா விசயங்களும் முதல் முயற்சியிலேயே கைக்கூடிவிடுவதில்லை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நெஞ்சுரம், வேட்க்கை போன்ற சில காரணிகளை கைவிடாமல் இருந்தாலே நம் நோக்கம் நிறைவேறிவிடும்.
கடவுள் நம் ஆசைகளை நிறைவேற்றுவதில்லை; நம்முடைய நல்ல நோக்கங்களையே நிறைவேற்றுகிறார்.//

அற்புதமான கருத்து...! விளக்க வந்த கதையும் அருமை...!! உங்களைச் சுற்றி நேர்மறை எண்ணங்களின் சுகந்தம் பரவிக் கிடக்கிறது நாகா... வாழ்த்துகள்!!

சிவகுமாரன் said...

ஆகா. எவ்வளவு பெரிய தத்துவம். இறைவனின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நம் மீதான அக்கறை ஒளிந்திருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை இழத்தல் என்பது பிணம் ஆவதற்கு சமானம்.//
கருத்தில் ஆழ்ந்து இருத்திக் கொள்ள வேண்டிய அற்புத சிந்தனை.

Post a Comment