Thursday, February 17, 2011

வாழ்தல் ஒரு கலை - I I I

      வாழ்வின் சுவாரசியமே அதன் இயல்பை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது தான். இந்த நொடி துக்கம் நாளைய மகிழ்ச்சிக்கு காரணமாகவும், இந்த நொடி மகிழ்ச்சி நாளைய துக்கத்துக்கு காரணமாகவும் இருப்பது அதிசயமே - சோகத்திற்கும், அதீத மகிழ்ச்சிக்கும் கண்ணீரே அடையாளமாய் இருப்பது போல.

     "எல்லாம் நன்மைக்கே" என்பதை மனப்பூர்வமாக நம்புபவன் நான். இன்பம் - துன்பம் இரண்டையும் ஒன்றாக பாவிப்பவன். ஏதோ ஒரு காரணத்துக்காகவே துன்பம் நம்மை அண்டுகிறது. அந்த துன்பம் எந்த காரணத்திற்காக நம்மை அண்டியதோ, அந்த வேலை முடிந்ததும் நாம் அறியாத வண்ணம் நம்மை விட்டு நீங்கி சென்று விடும்.

     இந்த உலகம் மாயை அல்ல; நாம் உலகை பார்க்கும் விதத்தில் தான் மாயை இருக்கிறது.

     அந்த அரசன் இறக்கும் தருவாயில் தனது மூன்று மகன்களையும் அழைத்து,"அமைச்சரிடம் நம் சொத்துக்களை எப்படி உங்கள் மூவருக்கும் பகிர்ந்து அளிப்பது என்பதை கூறியுள்ளேன். என் காலம் முடிந்த பிறகு அதை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்", என்றார். அன்றிலிருந்து  ஓரிரு நாட்களுக்குள்ளேயே அந்த அரசனும் இறந்து போனார்.

     எல்லா காரியங்களையும் முடித்த பிறகு மகன்கள் மூவரும் அமைச்சரை அழைத்து சொத்து பிரிக்கும் விவரம் கேட்டனர். உடனே அமைச்சர், "முதல் மகனுக்கு சொத்தில் 1 / 2   பங்கையும், இரண்டாம் மகனுக்கு சொத்தில் 1 / 3  பங்கையும், மூன்றாம் மகனுக்கு சொத்தில் 1 / 9  பங்கையும் பிரித்து அளிக்குமாறு  அரசன் கூறியுள்ளார்" என்றார். மகன்களும் அரசனது கட்டளைக்கிணங்க சரி என ஒத்துக் கொண்டனர். அப்படி எல்லாவற்றையும் பிரித்த பின்னர் அரண்மனைக்கு சொந்தமான 17 யானைகள் மட்டுமே மீதம் இருந்தன. இதை எப்படி அரசன் கூறிய வகையில் சரியாக பிரிப்பது என திகைத்து நின்றனர்.

       அப்போது அமைச்சர் கோவிலில் உள்ள பாகனை அவன் யானையுடன் வருமாறு ஆணையிட்டார். அந்த ஒற்றை யானையையும் அந்த 17 யானையுடன்  சேர்த்து அரசன் கூறிய கணக்குப் படி பிரித்தார். பிறகு பாகனிடம் அவன் யானையை அழைத்து செல்லும் படி கூறினார்.

      அந்த ஒற்றை யானை தான் மாயை. மாயை தன் வேலையை முடித்துக் கொண்டு  அதன் வழியில் மீண்டும் சென்று விடும்.

     வைரமுத்துவின் கவிதையைப் போல, "ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா? அதில் அர்த்தம் தேடி அலைவது தான் வேட்கையா?"

5 comments:

G.M Balasubramaniam said...

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று உணருவது ஒரு நேர்மறை அணுகல்.துன்பங்கள்தொடரும்பொது துவளாமல் இருப்பதும் அவசியம்.தாமரை இலை மேலுள்ளதண்ணீர்ர் போல் இருக்க முடிந்தால் இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் நாகசுப்ரமண்யன்.

பெரிய பெரிய உயரங்களைத் தொடுகிறீர்கள் இளம் வயதில்.

அடுத்த இடுகையைப் படிக்கக் காக்க வைக்கிறது முந்தைய இடுகை.இப்படித்தான் இருக்கவேண்டும்.

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...

Chitra said...

இந்த உலகம் மாயை அல்ல; நாம் உலகை பார்க்கும் விதத்தில் தான் மாயை இருக்கிறது.



...... மனதில் ஒட்டிக் கொண்ட வரிகளும் - கருத்தும். ...ஆழமான அர்த்தம் உள்ளது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Informative !

Post a Comment