Saturday, October 16, 2010

எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்

     "ஆனால் , இருந்தால் என்ற வார்த்தைகள் மிகவும் வசீகரமானவை. ஏன் என்றால் அவை தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்ய வைக்கிறது. நாம் பள்ளியில் படிக்கும் போது "நான் முதலமைச்சர் ஆனால்.." என்ற கட்டுரையும் அதே ரகம் தான். இப்படி நம் கற்பனைக் குதிரையை தட்டி விட வைக்கும் தருணங்கள் ஏராளம். ஆனால் எத்தனை பேரால் தங்களுடைய கற்பனையை நிஜமாக்க முடியும். அத்தகைய சிலரில் ஒருவர் தான் ஷங்கர். மாஸ் ஹீரோ பிம்பத்தில் சிக்கித் தவித்த ரஜினிக்கு சரியான தீனி தான் இந்த "எந்திரன்".

     மீண்டும்  If it happens? வகையறா தான் எந்திரனும். ஆனால் டெக்னிக்கலாக இது விஷ்வ ரூபம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

     மனிதனைப் போலவே ஒரு ரோபோவை உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்கினால்  அந்த ரோபோவை எல்லாத் தருணங்களிலும் சரியாக கையாள மனிதனால் (அதுவும் வஞ்சம், பொறாமை,.. நிரம்பிய  இந்த யுகத்தில் ) முடியுமா? அப்படி முடிந்தால் அந்த எந்திரத்தால் மனித உணர்வுகளை புரிந்து சரியாக நடந்து கொள்ள முடியுமா? மனிதனைப் புரிந்து கொள்ள உணர்வுகளை கற்பித்தால் அதனால் அதீத  விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா ? ஏழாம் அறிவு கொண்ட எந்திரம் ஆறாம் அறிவை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால்? இப்படி பல கேள்விகளுக்கு மூன்று மணி நேரத்தில் சுவாரசியமாக பதில் கிடைக்கிறது.



     வசீகரன், மனிதனைப் போலவே ஒரு ரோபவை உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ள ஒரு விஞ்ஞானி. பத்து வருட உழைப்பின் பிரதி பலனாக அவரைப் போலவே ஒரு ரோபோவை (சிட்டி) உருவாக்குகிறார். அந்த ரோபோவிற்கு எல்லா மொழிகளும், கலைகளும் , இத்யாதி இத்யாதிகளும் ப்ரோக்ராம் செய்யப்படுகிறது.  அதை ராணுவத்தில் பயன்படுத்தினால் மனித உயிர் இழப்பு ஏற்படாது என்பது வசீகரனின் கருத்து. ஆனால், அதை உயர் மட்டக்  குழுவில் உள்ள வசீகரனின் குரு ஏற்க  மறுக்கிறார்  ( Dany - யும் மனிதனைப் போலவே ரோபக்களை உருவாக்கி அதை நாசகாரியங்களுக்கு வெளிநாட்டவரிடம் விற்று காசாக்கி கொள்ள முயல்கிறான்).  அதற்கு சொல்லப்படும் காரணம், "அது வெறும் எந்திரம். அதை யார் வேண்டுமானாலும் திசைத் திருப்பி தவறாக பயன்படுத்திவிடலாம்" என்று.



     தன் பத்து வருட உழைப்பு வீண் ஆகிவிடக் கூடாது என்று வசீகரன் அதற்கு உணர்வுகளைக் கற்ப்பிக்கிறார். ஆனால் அதன் விளைவு , சிட்டி வசீகரன் மணந்து கொள்ளப் போகும் பெண்ணை (ஐஸ்-சனா)  காதலிக்க துவங்குகிறது. இது தெரிய வரும் போது அதிர்ச்சியாகும் வசீகரனும்,சனாவும் சிட்டி ஒரு எந்திரம் என்றும், மனிதனும் எந்திரமும் வாழ்நாள் துணையாக வாழ முடியாது என்றும் விளக்குகிறார்கள். தன் காதல் தோல்வியை தழுவதில் வருத்தம் கொண்ட சிட்டி ஆராய்ச்சிக் கூடத்திற்கு சென்று மறு நாள் நடை பெற இருக்கும் ராணுவ பரிசோதனைக்கு தயாராக தன்னை charge - இல் போட்டுக் கொண்டு படுத்திருக்கிறது. அப்போது வசீகரனின் குரு  சிட்டியை   மனிதப் படைப்பின் உச்சம் என்றும் ,  ஆனால் சிட்டியை வீட்டு வேலை செய்பவனாக வசீகரன் பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குழப்புகிறார். காதலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத சிட்டி மறு நாள் பரிசோதனையில் வெடிகுண்டை கையில் வைத்துக் கொண்டு கவிதை சொல்லி சொதப்புகிறது. இதனால் கோபப்படும் வசீகரன், சிட்டியை வெட்டி தூக்கி எறிகிறார்.



     இதை அறிந்து கொள்கிற வசீகரனின் குரு, அந்த ரோபோவின் பாகங்களை எடுத்து வந்து அதை reprogram  செய்து நாச வேலைகளுக்கு பயன்படுத்த நினைக்கிறார்.



     ஆனால், dany -யின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது சிட்டி. அது தானாகவே அதைப் போலவே உள்ள ரோபக்களை உருவாக்கி, ரோபோ இனத்தை உருவாக்குகிறது. பிறகு மணவறையில் உள்ள சனாவையும் கடத்தி வந்து அவள் கூட வாழ ஆசைப்படுகிறது. தான் மனிதனை விட எந்த விதத்திலும் குறைந்தவனல்ல என்றும், சனாவுடன் சேர்ந்து ஒரு கலப்பினத்தையே உருவாக்க நினைக்கிறது (robosepians  !). பிறகு வசீகரன் சிட்டியை  எதிர்கொண்டு சனாவை எப்படி காப்பாத்துகிறார் என்பதே மீதி திரைக்கதை.





     ரஜினியை இவ்வளவு இளமையாக, இவ்வளவு உருக்கி எடுத்தற்காகவே ஷங்கருக்கு தனி பூச்செண்டு தர வேண்டும். ரஜினி எது செய்தாலும் அது உச்சமாக இருக்கும். முற்பாதியில் சிறு முக அசைவைக் கூட வெளிப்படுத்தாமல் அச்சு அசலாகவே ஒரு ரோபோவாகவே வாழ்ந்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ரோபோ படு அசுரத்தனம். அதிலும்," who is the black sheep? " என்று உறுமும் போதும் , black sheep - ஐ கண்டுபிடித்தவுடன் "மேமே..." என்று ஆடு போல கத்துவதும் கிளாஸ். (தமிழ்த்  திரை உலகம் எப்பேர்ப்பட்ட ஒரு வில்லனை இழந்து இருக்கிறது என்பது தெரிகிறது).கீழே உள்ள உரலியை ( URL ) சொடுக்கவும் , தலைவரின் வில்லத்தனத்தைப் பார்க்க.


   
     வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு  sharp. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ரோபோ அதன் புரிதலுடன் விளக்குவதும், "மனுஷங்க தங்கள காப்பாத்திக்க பொய் சொல்வாங்க-னு புரிஞ்சிக்கிட்டேன்" என சிட்டி சொல்லுமிடம் அவ்வளவு அற்புதம். அதேபோல முற்பாதியில் சிட்டி எதை எடுத்தாலும் literal ஆகவே எடுத்துக்கொள்வதே படத்தின் நகைச்சுவைக்கு துணைப்புரிந்து இருக்கிறது. அதிலும் speaker - இல் "செல்லாத்தா எங்க மாரியாத்தா" எனப் பாடும் போது, "who is that செல்லாத்தா?" எனக் கேட்பது செம timing.
சிட்டி, வசீகரன் மற்றும் சனா காதலைப் பற்றி பேசும் இடத்தில் சிட்டி கேக்கும் கேள்விகள் மற்றும் சொல்லும் பதில்கள் மனிதனை நறுக்கென்று விமர்சனம் செய்கிறது.
சுஜாதாவின் மறைவு ஷங்கருக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது இனி வரும் படங்களில் தான் தெரிய வரும்; அதை அவர் எப்படி ஈடு செய்ய போகிறார் என்பதும் மிகப்
பெரிய கேள்விக்குறியே. 

     பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அத்தனையும் கதையோடு ஒன்றி வருவது கூடுதல் சிறப்பு (கிளிமஞ்சாரோ - வை தவிர). வைரமுத்து அவர்களுக்கு கவிதைக்குள் அறிவியலை புகுத்துவது ஒன்றும் சிரமம் ஆன காரியம் இல்லை. (உ.ம். "சிகரங்களை நோக்கி" - இந்த புத்தகத்தில் அவர் அறிவியலையும் கவிதையும் கையாண்ட விதம் வியப்புக்குரியது!) சிலிகான் சிங்கம், காதல் அணுக்கள் , உயிரூட்டி wire  ஊட்டி என்பதெல்லாம் அவருக்கே உரிய பாணி. "இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ" என்று அவரது மகன் கார்க்கியோ இன்னும் எட்டடி பாய்கிறார்.

      ஒளிப்பதிவில் அவ்வளவு தெளிவு. ஒரு இடத்தில் கூட dual role - இன் பிரதிபலிப்பு தெரியாதது ரத்தினவேலுவின் திறமைக்கு சான்று. சிட்டி dance மற்றும் இறுதியில் சிட்டி பேசிக்கொண்டே தன்னை dismantle செய்துக் கொள்ளும் காட்சிகளும் animatronix - இன் தரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. இத்தனை சிரத்தை எடுத்தவர்கள் அந்த தீவிபத்து காட்சியில்  கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சாபு சிரில், அந்தோனி  மற்றும் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பும் அளப்பரியது!



       ஷங்கரின் உழைப்பு பாராட்டுக்குரியது. magnetic mode ஐ சிட்டி பயன்படுத்தி ரவுடிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறித்து அம்மன் போல நிற்கும் இடம் இயக்குனரின் creativity - க்கு ஒரு சின்ன sample. இதே படம் பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால், அது இவ்வளவு பிரமாண்டமாக வந்திருக்குமோ என்பது கேள்விக்குறியே. அப்படி வந்திருந்தால் ஷங்கரின் இன்றைய நிலை யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு இருந்திருக்கும்.

      "இவன் பேர் சொன்னதும், பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்  தட்டும்.
       இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு, நிலவு தலை முட்டும்"
இந்த வரிகள் இந்தப்  படத்தில் பங்காற்றிய கடை நிலை ஊழியரிலிருந்து அனைவருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.





























2 comments:

Post a Comment