Friday, January 11, 2013

மரணத்தைக் கொண்டாடும் இலை


காற்றின் இசைக்கு
நடனமாடியபடியே
உதிரும் ஒரு
பழுப்பு இலை
உணர்த்துகிறது
மரணம்கூட
கொண்டாட்டம்தான் என்று!




Tuesday, January 1, 2013

காயம்படும் நெஞ்சம்



அன்பு நிறைந்த
நெஞ்சமே அதிகம்
காயம்படுகிறது.
கனிகள்
அதிகம் கொண்ட  மரம்
கல்லடி படுவதைப்போல!



Tuesday, December 11, 2012

அக்கா பாப்பா


தம்பி பாப்பாவோ
தங்கை பாப்பவோ
பிறந்த மறுகணத்தில்
அம்மா பாப்பா
அவதாரம் எடுக்கிறார்கள்
அக்கா பாப்பாக்கள்!




Thursday, December 6, 2012

அம்மாவும் என் காதலிகளும்...


சிறு வயதில்
என்னவென்றே
தெரியாமல்
நான் நடித்த நாடகத்தில்
என் மனைவியாக
நடித்த
ரசிதா
இன்றும் கனவில் வந்து
கேலி பேசுகிறாள் -
இப்போது வரை அவளிடம்
பேசியதில்லை என்று.
ஒரே தெருவில்
வசித்திருந்தாலும்
ஒருவருக்கு ஒருவர் 
பிடித்து 
இருந்தாலும்
காதல் சொல்லாமலே
விலகி சென்ற என்னை
கேள்வி கேட்டு
கனவில் துரத்திக்
கொண்டிருக்கிறாள்
தோழி காவ்யா.
என் காதலை ஏற்காமல்
நிராகரித்த கல்லூரி தோழி
லக்ஷ்மி நிதம் கனவில்
வந்து காதல் பேசுகிறாள்.
ஆனால் -
இத்தனை ஆண்டுகள்
சேர்ந்து இருப்பினும்
வார்த்தைகளால்
அன்பை பரிமாறிக்கொள்ளவில்லை
நானும் என் அம்மாவும்
கனவிலும் கூட!  


Wednesday, December 5, 2012

உதிரும் இலை


உதிரும் இலை
கூட்டுகிறது 
காற்றின் சுமையை!