Thursday, November 5, 2020

பதற்றம் [சிறுகதை]

   


       காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள். 

        தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை தக்கவைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தருணமாகவும் இருந்ததினால் இரவு-பகல் பாகுபாடின்றி உழைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ரமேஷ் கடந்த மூன்று மாதங்களாகவே. அவ்வகையில் அன்று வீட்டிலிருந்தவாறே நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு அதிகாலை ஐந்து மணிக்குதான் உறங்கச் சென்றிருந்தான். 

        எப்போதும் ரமேஷ் உறங்கச் செல்லும்முன் ரம்யா எழுந்து அவனுக்கு காலை உணவாக இட்லியோ, தோசையோ தயார் செய்துக் கொடுத்து, அவன் உறங்கச் சென்ற பிறகு தனது தந்தையான பாண்டுரங்கனை எழுப்பி அவருக்கு காபி கொடுத்து தனது அன்றாடங்களில் தன்னைக் கரைத்துக் கொள்வாள். ஆனால், கடந்த இரு தினங்களாகவே அவளுக்கு அதிகரித்து வந்த முதுகு வலியால் ரமேஷ் அவனாகவே தனக்கு 'அதிகாலை' உணவை சமைத்து, சாப்பிட்ட பின்பு உறங்கச் செல்வது வழக்கமாயிருந்தது. 

        நிறைமதி பிறந்ததிலிருந்தே அவ்வப்போது வருகிற முதுகுவலிதான் என்றாலும் இம்முறை சற்றே அதிகமாகத்தான் இருந்தது ரம்யாவுக்கு. திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பிறகும், இரண்டு கருச்சிதைவுகளுக்குப் பிறகுமாக தனது கைக்குள் தங்கியவள் நிறைமதி என்கிற நிறைவை, மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாதபடியாக அவளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பதாகவும், அவளது ஐந்து வயதுவரை மிகப்பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அதனாலேயே நிறைமதியை வெகு கவனமாக இருவரும் பார்த்துக் கொண்டனர். வெளியே செல்வதாக இருப்பினும் யாரோ ஒருவரின் முழு கவனமும் அவள் மீதே பதிந்திருக்கும். இரண்டே வயதுடையவளாதலால் நிறைமதிக்கு சிலது பழகியும், பலது புரியாமலும் குழந்தைமையுடன் விளையாட்டின் ஆர்வமிகுதியில் லயித்துப் போவதுண்டு.

       அன்றைக்கு ரம்யா எழும்போது வலி வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், அவள் எழுவதற்கு முன்பாகவே ரமேஷ் வந்து படுத்துறங்கிப் போயிருந்தான். உழைத்த களைப்பு அவன் உறக்கத்தில் தெரிந்தது. நிறைமதி அவனின் மார்புச் சூட்டின் கதகதப்பில் கட்டியணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இருக்கும் வரை தன்பாலும், அப்பா வந்த மறுநிமிடமே தன்னைவிட்டு அவர்வசம் செல்வதும் இப்பெண்பிள்ளைகளின் இயல்பு போலும் என புன்னகைத்தவாறே படுக்கையைவிட்டு எழுந்தாள். தானும்கூட தன் சிறுவயதில் அப்படியிருந்தது  அவள் நினைவுக்கு வந்தது. ஆனால், நிறைமதி தூக்கத்தில்கூட அவளது தந்தையை கண்டறிபவளாக இருப்பதை நினைத்தவாறே சமயலறைக்கு செல்லும்போது வீட்டின் பிரதானக் கதவு பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். பிறகு உட்புறமாக தாளிட்டு தனது தந்தையை எழுப்ப சென்று அவரை அறையில் இல்லாதது கண்டு மீண்டும் வெளிக்கதவை திறந்து பார்த்தபோது அவரது செருப்பு அங்கில்லை என்றபோதுதான் அவளுக்கு பதற்றம் இன்னும் அதிகமாயிற்று.

        பதற்றத்தின் ஒருபாதி அவர் இல்லாததற்கும், மறுபாதி தன் கணவன் எழும் முன் அவர் வந்துவிட வேண்டுமென்பதாக இருந்தது அவளுக்கு. அப்பா இவ்வாறு சொல்லிக்கொள்ளாமல் செல்வது இது முதற்முறையல்ல. இப்போதும்கூட ரமேஷ் வந்து படுப்பதற்கும், தான் எழுவதற்குமான இடைப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள்தான் அவர் சென்றிருக்க வேண்டும் என மனதில் கணக்கிட்டுக் கொண்டாள். அவர் போவதும், வருவதும் பிரச்சனையில்லை. ஆனால், தான் எங்கே செல்கிறார் என சொல்லிக்கொள்ளாமல் செல்வதால் எழுபது வயது முதுமையானவர் வீடுவந்து சேரும்வரை மனம் கொள்கிற பதற்றம் முன்பைவிட ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு அதிகரித்தவண்ணமிருந்தது.

        "ஆனால், சாவி எப்படி அவர் கைக்கு கிடைத்தது?" என சட்டென அவள் மனதில் அந்த கேள்வி விஸ்வரூபமாய் எழுந்தது. அம்மா இறந்த பிறகு தங்களோடு வந்து தங்கிவிட்ட அப்பா கடந்த மூன்றாண்டுகளில் பத்துமுறைக்கும் மேலாக இப்படி சென்றதுண்டு. அதனாலேயே கடந்த முறை அவர் சென்றபோது இனி வீட்டின் நுழைவாயில் கதவை ஒவ்வொரு நாளும் பூட்டி சாவியை தங்கள் அறையில் வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டனர். ஆனால், தொலைக்காட்சி மேசையின் மேலிருந்த பூட்டையும், அதன் வயிற்றில் தனது தலையை சொருகி வைத்திருந்த சாவியையும் பார்த்த போது நேற்று தான் பூட்டாது தவறவிட்டதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள். 

        ரம்யாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பலமுறை வற்புறுத்தியும் வெளியே செல்லும் போது தனது அலைபேசியை தன்னுடன் எடுத்துச் செல்லாமல் இருப்பதால் அவரை தொடர்புகொள்ள முடியாது தவிப்பதை அவளால் இன்றுவரை தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் தளத்தில் இருக்கும் தனது வீட்டின் பால்கனிக்கும், தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில்  தெரிகிற  தனது வீட்டின் வெளிப்புற நடைபாதையின் முன்பகுதிக்கும் மாறி மாறி நடந்துக் கொண்டே இருந்தாள் - அவளது தந்தையின் வருகையை எதிர்பார்த்தபடி. கீழே சென்று குடியிருப்பின் காவலாளியை பார்த்து விசாரிக்கலாமா என அவள் யோசித்தபோதே நிறைமதி "அம்மா..." என அவர்களின் அறையைவிட்டு ரம்யாவை நோக்கி நடந்து வந்தாள். இனி தன் மகளை கவனிப்பதற்குத்தான் சரியாக இருக்குமென அவளை வீட்டின் கூடத்தின் மையத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர வைத்து ஒவ்வொரு வேலையாக பார்க்க ஆரம்பித்தாள்.

        தனது அப்பா வருவதற்கு ஒருவேளை  தாமதமானாலோ அல்லது அவர் வருவதற்குமுன் தன் கணவர் எழுந்துவிட்டாலோ நடக்கக்கூடிய சம்பவங்களை நினைத்துப் பார்க்கவே ரம்யாவுக்கு பயமாக இருந்தது. 

        எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது பாண்டுரங்கன் கடந்தமுறை சொல்லாமல் வெளியே சென்று வரும்வரை. சொல்லப்போனால், ரமேஷுக்கு தனது மாமனாரை வைத்துப் பார்த்துக் கொள்வதிலோ அவர் வயதின் வெளிப்பாடாக செய்கிற காரியங்களிலோ ஒரு புகாருமில்லை. தனது மச்சினன் ஜெகன் உதிர்த்த ஒரு சொல்தான் ரமேஷை இப்போது பிடித்து ஆட்டுகிறது. 

        "என்ன ரம்யா, நீங்க நல்லா பாத்துப்பீங்கதானே உங்க வீட்ல அப்பாவை விட்டுட்டு இப்படி கடல் கடந்து வந்து நாங்க கஷ்டபடுதோம்.  இப்படி ஒவ்வொரு முறையும் அவர் எங்க போனாருன்னே தெரியலைனு சொல்றீங்க? எங்க மனசு இங்க கெடந்து அடிச்சுக்கறது உங்களுக்கு எங்க தெரியப்போகுது?" என அவன் கனடாவிலிருந்து தொலைபேசியில் சொன்ன மறுநிமிடம் ரம்யாவின் அலைபேசியை சுக்குநூறாக ரமேஷ் உடைத்தெறிந்தான் .

        ஆனால், அதே ஜெகன் தனது அம்மா இறந்தபோது நடந்துகொண்ட விதமும், இப்போது நடந்துக்கொள்கிற விதமும்தான் ரமேஷையும், ரம்யாவையும் வெகுவாக காயப்படுத்தியது.  

        மூன்றாண்டுகளுக்கு முன் ரம்யாவின் அம்மா - பகவதி - மாரடைப்பால் இறந்து போன போது  எல்லாவற்றையும் முன் நின்று கவனித்துக் கொண்டது ரமேஷ்தான். கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த ஜெகன் செய்தவை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று இறுதிச் சடங்கு. மற்றொன்று பந்தல் முதல் சுடுகாடுவரை செய்யப்பட்ட செலவுகளை சரியாக இருக்கிறதா என மிகச் சரியாக கணக்குப் பார்த்து செலுத்தியது.

        அப்போதும்கூட தனது மாமனாரின் எதிர்காலம் குறித்த பேச்சை ஆரம்பித்து வைத்தது ரமேஷ்தான். ரமேஷ் பேசாமலிருந்திருந்தால் ஜெகனும் அமைதியாக கனடாவிற்கு திரும்பியிருக்கக்கூடும். அதற்கு வழி வகுக்காமல் இருக்கவே ரமேஷே உரையாடலை தொடங்கி வைத்தான் பதிமூன்றாம் நாள் எல்லா காரிய நிகழ்வுகளும் முடிந்த அன்றிரவே.

        "என்ன மச்சான்? அப்பாவை இப்படியே இங்க தனியா விட்டுட முடியுமா?"

        "ஆமாங்க மாமா, எனக்கும் அதே யோசனைதான்" என்ற போது ஜெகனின் மனைவி சுந்தரி மிக சாதுர்யமாக ரமேஷின் பின்புறமுள்ள கதவுக்கு வெளியே நின்று கொண்டாள் தனது கண் ஜாடைகளுக்கு ஏற்றவாறு ஜெகனை ஆட்டுவிப்பதற்காக.

        அதை எதிர்பார்த்த ரமேஷ் உடனே சமயலறையிலிருந்த ரம்யாவை அழைக்கவும், அவளும் தன் அண்ணி நின்றுக் கொண்டிருந்த கதவின் மறுமுனையில் வந்து நின்றாள்.

        "ம்... என்ன முடிவு பண்ணிருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி பண்ணிட்டு நாங்களும் சென்னைக்கு கெளம்பிடுவோம்"

        "அது வந்து மச்சான்.... நானே உங்கள்ட்டயும், தங்கச்சிட்டையும் பேசணும்னு இருந்தேன். நீங்களே கேட்டுட்டீங்க........"  என இழுத்தவாறே தரையைப் பார்க்கவும் ரமேஷ் தான் எதிர்பார்த்ததுதான் என்பதை உறுதி செய்துக்கொண்டான்.

        "எனக்கு இன்னும் ஆறு மாசத்துல ப்ராஜெக்ட் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் எப்படி பாத்தாலும் இந்தியாவுக்குத்தான் வந்தாகணும். அது வரைக்கும் அப்பாவை இங்க இருக்கிறதைவிட சென்னைல உங்ககூட இருந்தா அவருக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்.  நாங்களும் அங்க கொஞ்ச நிம்மதியா இருப்போம். அப்பறம் நாங்க இங்க வந்த பின்னாடி அப்பாவை எங்களோட கூப்பிட்டுக்கறோம். என்ன சொல்ற ரம்யா?" என லாவகமாக காயை ரமேஷிடமிருந்து தனது தங்கையிடம் நகர்த்தினான்.

        "ஆமாங்க. அண்ணன் சொல்றதும் கரெக்ட்தான். அவரை இங்க தனியா விடறதுக்கு எனக்கும் பயமாதான் இருக்கு" என்ற ரம்யாவை திரும்பி பார்க்காமல் "சரி, அப்ப அண்ணன்-தங்கச்சி நீங்களே பேசி முடிவு பண்ணிக்கோங்க" என அந்த அறையைவிட்டு வெளியேறிய ரமேஷ் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு மூலையில் நின்றவாறே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் - நிலவற்ற வானில் மேகங்கள் அதை தேடி அலைவதைப்  போலிருந்தது அவனுக்கு.

        அரைமணி நேரம் கழித்து மேலே வந்த ரம்யா, "என்னங்க... என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீங்க? கோவமா?" என்றபோது பதிலேதும் பேசாமல் திரும்பிக் கொண்டான்.

        "கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க" என்றவளை பார்க்காமலேயே "ம்ம்ம்...அதான் அண்ணன்-தங்கச்சி நீங்களே பேசி முடிவெடுத்தாச்சுல. இன்னும் என்ன கேக்கறதுக்கு இருக்கு?

        "கொஞ்சம் கோவப்படாம கேளுங்க" என ரமேஷை தன் பக்கம் திருப்பி, "அப்பாவை இங்க தனியா விட்டுட்டு போய் நாளைக்கே ஏதாவது அவசரம்னா சென்னைல இருந்து திருச்சிக்கு நாமதான் கெளம்பி வரணும். அதுக்கு பேசாம அவரை நம்மளோட கூப்பிட்டு போய்ட்டா ஆறு மாசம் கழிச்சு ஒரேடியா அண்ணனோட அனுப்பிச்சிடலாம்"

        "ம்... அதுவும் ஒருவகையில சரிதான். ஆனா, உங்க அண்ணனதான் எப்படி நம்பறதுன்னு மனசு ஓரத்துல ஒரு பல்லி கெடந்து கத்துது" என்ற தன் கணவனை ஒருவழியாக சம்மதிக்க வைத்து அடுத்த வாரத்தில் தன்னுடன் பாண்டுரங்கனை அழைத்துச் சென்றாள். 

       னால், அவர்கள் எதிர்பாராவிதமாக அடுத்த ஆறு மாதத்தில் கனடாவில் தனது குடும்பம் சகிதமாக குடியுரிமைப் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான் ஜெகன். ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வருவதுண்டு. அப்போதும்கூட பெயரளவில் இரண்டு நாட்கள் சென்னையில் தனது தங்கை வீட்டில் தங்கிவிட்டு மீதமிருக்கும் ஒரு மாத விடுமுறையில் பெரும்பாலும் அவன் மனைவியின் வீட்டிலிருப்பதும், ஊர் சுற்றுவதுமாக இருந்துவிட்டு திரும்பி விடுவான். மாதத்தின் முதல்நாள் ரமேஷுக்கு சம்பளம் வருகிறதோ, இல்லையோ விடிவதற்கு முன்பாகவே ஜெகனிடமிருந்து பணம் வந்துவிடும். பணத்தைக் கொண்டு பிறரது வாயடைக்கும் வித்தை தெரிந்தவன் அவன். 

        அதன்பிறகு ரம்யாவால் ரமேஷிடம் தனது அப்பா குறித்தோ, அண்ணன் குறித்தோ ஒன்றும் சொல்ல முடிவதில்லை. அண்ணனுக்கு அவன் பையில் நிறைகிற பணமும், அவனது குடும்பமும், எதற்கும் பொறுப்பேற்காத தான்தோன்றித்தனமும்தான் பிரதானம். 

    ஆனால், அப்பா ஏன் இப்படி இருக்கிறார்? அந்த காலத்திலேயே பொறியியல் படித்தவர். ரயில்வேயில் நல்ல பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். குடும்பத்திற்கு ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தவர். ஆனால், அம்மா இறந்தபின்பு முற்றிலுமாக மாறிப் போயிருந்தார். நேரத்திற்கு தனது வேலைகள் நடக்க வேண்டுமென பெரிதாக எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தார். காபி கொடுக்க பத்து நிமிடங்கள் தாமதமானாலும் தன்னை யாரும் இப்போது கவனித்துக் கொள்வதேயில்லை, "உங்கம்மா இருந்திருந்தா எனக்கு இந்த நெலமை வந்துருக்குமா?"  என ஒவ்வொன்றாக புலம்பஆரம்பிப்பார்.

        கடந்தகால கசப்பின் ஒவ்வொரு துளியையும் தனது நினைவுகளால் மீண்டும் ருசிக்கத் துவங்கியிருந்தார். உடலில் ஏற்படுகின்ற பலவீனம், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஒவ்வொன்றாக தனது மனதில் வைத்து பலசமயங்களில் விஷமாக வார்த்தைகளை வெளிப்படுத்துவதுண்டு. அது அவரை மட்டுமல்லாது வீட்டிலேயே இருக்கும் ரம்யாவையும் வெகுவாக பாதித்தது.  அதுகூட தனது ஒரு கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கக்கூடுமோ என அவள்எண்ணுகிற அளவுக்கு பாண்டுரங்கனின் செயல்களும், சொற்களும் வெகுவாக மாறியிருந்தன பச்சையம் இழந்த முதிர்ந்த செடியொன்றின் சாயலைப் போல.

        இருப்பினும், அவளது தந்தையின் செய்கைகள் குறித்து ரமேஷிடம் எந்த புகார்களும் சொல்லாது தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டாள். ஏற்கனவே அவளது அண்ணனின் செய்கையால் கோபத்திலுள்ள ரமேஷ் இதனால் மேலும் கோபமடையாது நிலைமையை முடிந்தளவு தனது கட்டுக்குள் வைத்திருந்தாள். 

        நிறைமதி பிறந்தபிறகு இவையனைத்தும் வெகுவாக மாறியிருந்தன. அவர் ரம்யாவைப் பார்த்துக் கொண்டதைப் போலவே தனது பேத்தியையும் பார்த்துக் கொண்டார். அதுகுறித்து ரமேஷுக்கும், ரம்யாவுக்கும் பெரும் நிறைவிருந்தது. ஒருவகையில் அவர் இங்கிருப்பதுகூட நல்லதுக்குதான் என அவர்கள் மனம் மாறிக்கொண்டிருந்த தருணத்தில்தான் ஜெகன் சொன்ன அந்தவொரு வார்த்தை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டது.

        இனியொருமுறை பாண்டுரங்கன் சொல்லாமல் அவர் இஷ்டத்துக்கு வெளியே சென்றால் அவருக்கு அந்த வீட்டில் இடமில்லை என ரமேஷ் திட்டவட்டமாக ரம்யாவிடம் எச்சரித்திருந்தான். அதனாலேயே அனுதினமும் மிக ஜாக்கிரதையாக இருந்த ரம்யா  இப்போது செய்வதறியாது தனது தந்தையின் வரவை எதிர்பார்த்து வீட்டின் வாசலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள்.

        ணி பதினொன்று ஆகியிருந்தது. நிறைமதிக்கு இட்லி கொடுத்து இரண்டு மணிநேரமாகியிருந்ததால் அவளுக்காக பால் காய்ச்சிக் கொடுத்தாள். அவ்வப்போது ரமேஷ் எழுகிற அறிகுறி தெரிகிறதா என அறைக் கதவின் இடைவெளியில் எட்டிப்பார்த்துக் கொண்டாள். தொலைக்காட்சியில் ஏதோவொரு கேலிச்சித்திரத்தை மெல்லிய சத்தத்துடன் போட்டுவிட்டு நிறைமதியின் கவனத்தை அதில் குவியச் செய்து சமயலறையில் மத்திய உணவை தயார் செய்தபடியே வெளிப்புற கதவுக்கும், பால்கனிக்கு மாறி மாறி முக்கோண வடிவில் நடந்துக் கொண்டிருந்தாள்.

        நிமிடங்கள் அதிகரிக்க அதிகரிக்க சென்னையின் கோடையைத் தாண்டியும் அவளுக்கு வியர்த்தது . அப்போது எதிர்பாரா விதமாக ரமேஷின் அலைபேசிக்கு அழைப்பு வரவும் ரம்யா பதற்றமானாள். மெதுவாக அவர்களது அறைக்கதவின் இடைவெளியில் எட்டிப்பார்த்தபோது அவன் படுத்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தான். பேசும் தன்மையால் அது அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்பதை இலகுவாக யூகித்துக் கொண்டாள். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அழைப்பு நீடிக்கவே ரமேஷ் நேராக கூடத்திற்கு எழுந்து வரக்கூடும் என நினைக்க அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பேசாமல் தானாகவே ரமேஷிடம் சென்று சொல்லிவிடலாமா என மனம் அழைக்கழிந்த போது  பாண்டுரங்கன் மிகச் சரியாக வீட்டுக்குள் நுழைந்தார்.

        வெடித்துவந்த அழுகையை தனக்குள்ளாக அடக்கிக் கொண்டு, "எங்கப்பா போனீங்க?" என்றவளின் பதற்றத்தை கிரகிக்கத் தெரியாத பாண்டுரங்கன், "இல்லம்மா, ரொம்ப நாளாச்சேன்னு காலைல வாக்கிங் போய்ட்டு அப்படியே கோயம்பேட்டுல காய், பழமெல்லாம் சீப்பா கெடைக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்" என்றவரை அவசரமாக அமரச் செய்து அவர் வாங்கி வந்த பைகளை ரமேஷ் கண்ணுக்கு புலப்படாதபடியாக சமையலறையின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு கூடத்திற்கு வந்து, "நீங்க வெளிய போய்ட்டு வந்தது அவருக்கு தெரிய வேணாம். கொஞ்சம் அமைதியா இங்கேயே உக்காருங்க" என்ற போது மிகச் சரியாக ரமேஷ்," ரம்யா......" என்றழைத்தான்.

        பயந்தபடியே சென்று அறைக்கதவை அவள் திறந்த போது, "சாப்பாடு ரெடியாம்மா. ரொம்ப பசிக்குது" என சோம்பல் முறித்தவாறே கேட்கவும் அவளும் பெருமூச்சுவிட்டபடி, "பல் தேச்சுட்டு வாங்க. எடுத்து வைக்கறேன்" என எல்லாவற்றையும் கூடத்தில் அடுக்கிவைத்தாள்.

       சில நிமிடங்கள் கழித்து வந்த ரமேஷ், "வாங்க மாமா, சாப்பிடலாம்" என பாண்டுரங்கனை பார்த்து அழைத்தவாறே தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தான்.

        "குட்டிம்மா, நீங்களும் வாங்க. தாத்தாவோட சாப்பிடலாம். தாத்தா உங்களுக்கு ஊட்டி விடறேன்" என தனது கையிலிருந்த பருப்பு சாத உருண்டையை நிறைமதியின் வாயில் திணித்த போதுதொலைக்காட்சியில் அச்செய்தி ஒளிபரப்பப்பட்டது.

    "நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் அடுத்தகட்டமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்- தொற்றின் சங்கிலித்தொடராக இருக்கக்கூடுமோ என ஆய்வில் சந்தேகிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் பணியாற்றி வந்த 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்தி விளம்பர இடைவேளைக்குப் பிறகு..."


Thursday, September 24, 2020

90's நினைவுகள் - கிரிக்கெட் கார்டு


My Vikatan-னில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:

        இப்போது நான் அறவே கிரிக்கெட் பார்ப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்தவைக் கூட பத்துக்கும் குறைவான ஆட்டங்களாகவே இருக்கக்கூடும் - அதிலும்  கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதியாட்டம் என மூன்றும் 2011-ன் உலகக்கோப்பைக்கானது. 

        எல்லா ஆண்களின் பால்யம் போலவே எனதும் கிரிக்கெட்டால் நிறைந்ததுதான். அதைத் தவிர வேறொன்றும் ஆடியதாக நினைவில்லை. இருப்பினும் கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வமற்று விளையாடுவதில் மட்டுமே ஆர்வமாயிருந்தேன். 

        அது 1997-98-ன் இடைப்பட்ட காலம் - ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். கைச் செலவுக்கென பெற்றோர்கள் எதையும் தத்தம் பிள்ளைகளுக்கு தந்திராத காலகட்டம். சிலர் அவரவர் பிள்ளைகளுக்கு பிஸ்கட்டையோ, முறுக்கையோ மதிய உணவுடன் கொடுத்து அனுப்புவதுண்டு.

        அப்படியான காலகட்டத்தில் திடீரென அந்தவொன்று பேரலையாக எங்கள் வாழ்வில் பிரவேசித்தது. அதுதான் bubble gum -க்கு இலவசமாக வழங்கப்பட்ட கிரிக்கெட் கார்டுகள்.


        என் நினைவு சரியெனில் அதை அறிமுகப்படுத்தியது big fun ஆக இருக்கக்கூடும். இல்லையெனில் அதன் மூலமாகதான் எனக்கு அறிமுகமாயிற்று. முதன் முதலாக ஏதோவொரு tournament அடிப்படையில் வெளியிடப்பட்டன 
(அநேகமாக சஹாரா அல்லது ஷார்ஜாஹ்). அதன் பின்பாக ஒவ்வொரு chewing gum நிறுவனமும் வெவ்வேறு வகையிலான கார்டுகளை கிரிக்கெட் வீரர்களின் தரவுகளைக் கொண்டு வெளியிட்டன. அதாவது ஒரு bubble gum வாங்கினால் ஒரு கார்டு இலவசம். ஆனால், center fresh மட்டுமே இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என இருந்தது. எனினும் அதற்கும் நல்ல வியாபாரம் இருந்தது.

    
        அப்படியான தருணத்தில் பள்ளியை விட்டு வீட்டிற்குச் செல்கையில் யாரேனும் ஒருவர் கிரிக்கெட் கார்டு வாங்குவதாக இருந்தாலும் அவர்களது நண்பர்கள் புடைச் சூழ கடைக்குச் சென்று ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்தை பரிந்துரைக்க அதற்கு ஏற்றார் போல ஒன்றை தேர்ந்தெடுப்பதுண்டு. அது சந்தைக்குப் புதிது என்பதால் கடைக்காரர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆரம்ப கட்டத்தில் வாங்க வரும் சிறுவனிடமே கொடுத்து அவனது விருப்பம் போல எடுத்துக் கொள்ள அனுமதித்தவர்கள் அதன் பின்பு தாங்கள் கொடுப்பதை வாங்குவதாக இருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதித்தனர். காரணம் என்னவென்று நான் சொல்லி புரிய தேவையில்லை.

        எனக்கு அதன் மீது ஆசை இருப்பினும் வாங்குவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. வீட்டில் கேட்டாலும், "bubble gum -லாம் சாப்பிடக் கூடாது" எனக் கண்டித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக இருக்க "இதுதான் மொதலும், கடைசியும் என அப்பா ஒருமுறை வாங்கித் தந்தார். கைவசம் ராகுல் டிராவிட் - எனது ஆசான்.

    
        நண்பர்கள் அனைவரும் அவரவர் பலத்திற்கு ஏற்ப வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், அதை வைத்து எப்படி விளையாடுவதென யாருக்கும் புரிந்தபாடில்லை. நாங்கள் தமிழ் வழிக் கல்வியில் பயின்று வந்தோம். முதன்முறையாக ஆங்கிலம் அறிமுகமானதே மூன்றாம் வகுப்பில்தான். அப்போதைய வகுப்பாசிரியை பரிமளம் ஒவ்வொரு மாணவர்களின் பெயரையும் சிலேட்டில் ஆங்கிலத்தில் எழுதித் தந்து மறுநாள் எங்களை மனப்பாடம் செய்து சொல்லச் சொன்னது எப்போதும் நினைவில் இருப்பதற்கான எளிய காரணம் - பதினைந்து ஆங்கில எழுத்துக்களாலான எனது பெயர்.

        அப்படியான பின்புலத்தில் இருந்த எங்களுக்கு கிரிக்கெட்டின் பதங்களான  economy என்பதோ, batting/bowling average என்பதோ புரிபடவில்லை. அப்போதுதான் எங்கள் வகுப்பின் ரௌடிகளென பெயரெடுத்த வினோத்தும், பிரபாகரனும் விளையாட்டின் விதிகளை அவர்களாக வரையறுத்தார்கள்.  இருவர் மட்டுமே ஆடுபவர்கள். இருவரிடத்திலும் அவர்கள் சேகரித்த கார்டுகளில் சில. கையில் ஒரு நாணயம். ஒருவர் சுண்டி தனது உள்ளங்கைக்குள் மறைத்து வைத்து, "பட்டா? பொம்மையா?" (பூவா?தலையா? என்பதைத்தான் அப்படி சொல்லிவந்தோம்) எனக் கேட்க, சரியாகச் சொன்னால் கேட்டவனிடம் சுண்டியவனின் கார்டு ஒன்று கொடுக்கப்படும். இல்லையெனில் எதிர்மாறாக கார்டுகள் பயணப்படும். 

    
        நாள்தோறும் அவர்கள் இருவருமே பெரும்பாலும் விளையாடினார்கள். பிரபாகரனுக்கெனவும் , வினோத்துக்கெனவும் நண்பர்கள் இரு அணிகளாக பிரிந்து நின்றோம். ஒவ்வொரு காலையிலும் பள்ளியின் பின்புறமுள்ள சத்துணவுக் கூடத்தின் முன்பாக உள்ள மரநிழலில் ஆட்டம் நடப்பது அன்றாடமாகிப் போனது. அவரவர்களுக்கென தனித்தனியே சுண்டுவதெற்கென நாணயங்களை வைத்துக் கொண்டனர் - அவரவர்க்கு அது ராசியென.  ஒரு நாணயத்தை எத்திசையில் வைத்து சுண்டினால் எது விழுமென அவரவருக்கான கோட்பாடுகளை வைத்திருந்தனர். நாணயத்தின் தலைப்பகுதியை நம் பக்கமாக வைத்து எவ்வளவு முறை சுண்டினாலும் அவர்கள் சொன்னது போல தலைதான் விழுந்தது. ஒரு நாணயத்தை எவ்வளவு முறை எப்படி சுண்டினாலும் தலை அல்லது பூ விழுவதற்கான சாத்தியக்கூறுகள் ஐம்பது சதவிகிதம் இரண்டுக்கும் இருக்கின்றன என்பது போன்ற விதிகளோ, கணிதங்களோ அறியாத வயது அது.

    
        மிகக் குறுகிய காலகட்டத்தில் இன்னும் பலவாறு கார்டுகள் வெளியிடப்பட்டன. தினம் தினம் இதனால் எங்களது ஆட்டமும் சூடுபிடித்தன. காலை நேரத்தில் மட்டும் என இருந்த ஆட்டம் அத்தனை இடைவேளைகளிலும் நடந்தேறின. இருவர் மட்டும் ஆடிய விளையாட்டு இப்போது கிட்டத்தட்ட அனைவராலும் ஆடப்பட்டது. அப்படியான ஒரு மதிய வேளையில் விளையாட்டின் ஊடாக பிரபாகரனுக்கும், வினோத்துக்கு தொடங்கிய சண்டை மைதானத்தில் அவர்கள் இருவரும் கட்டிப் புரண்டு ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி ஏறி அடித்துக் கொள்ளும் அளவுக்கு வலுத்தது. 

        மேலோங்கிய சச்சரவின் பரபரப்பில் தனது அறையைவிட்டு வெளியே வந்த தலைமையாசிரியை இருவரையும் இழுத்துச் சென்றார். பின்பு - விசாரணை, பள்ளி முழுவதிலும் திடீர்ச் சோதனை, கிரிக்கெட் கார்டு வைத்திருந்த அத்தனை பேரையும் மைதானத்தில் மண்டியிட வைத்து என மீதமிருந்த அன்றையப் பொழுது முழுவதையும் ஒரு சூன்யம் விழுங்கிக் கொண்டிருந்தது.

        பள்ளி விடுவதற்கு முன்பாக அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் அணிவகுத்து நிற்கச் சொல்லி சுற்றறிக்கை வந்தது. தலைமையாசிரியை ஆவேசம் கொண்டவராக கத்தினார். இனிமேல் யாரேனும் கிரிக்கெட் கார்டுகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு TC கொடுக்கப்படும் என முடித்த போது ஒன்றும் புரியாத ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் இருவர் அழத்தொடங்கினர்.


        பிற்பாடு கோடை விடுமுறைக்குச் சித்தி வீட்டுக்கு தூத்துக்குடி சென்ற வந்தபோது என்னிடம் இருந்த கார்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தன. ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்ந்த சமயம் உலகக்கோப்பை'99 நெருங்கிக் கொண்டிருந்தது. அதுவரையிலும் இந்திய அணி வீரர்களின் பெயரையே தெரிந்திராத எனக்கு கார்டுகளின் மூலம் எந்த அணியில் யார் நட்சத்திர வீரர், ஒவ்வொரு அணிக்கும் யார் கீப்பர்கள் என எல்லாம் அத்துப்படியாகி இருந்தன. முந்தய நாளின் ஆட்டங்கள் அடுத்த நாளில் வகுப்பறைத் தோழர்களிடம் விவாதிக்கப்பட்டன. வாரயிறுதிகளில் கிரிக்கெட் விளையாடுவதுடன் கார்டுகளும் சேகரிக்கப்பட்டன. அப்போது நகரத்தில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்ததினால் என்னிடமும் எப்போதும் கணிசமாக சில்லறைக் காசுகள் இருந்தன. 

        எந்தக் கடைகளில் என்ன கார்டுகள் இருக்கின்றன? எந்தக் கடைக்காரர் எப்படி? எங்கு சென்றால் நாமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனக் களப்பணிகள் மிகச் செம்மையாக நடந்தேறின. அப்படியானதொரு தேடலில்தான் எங்கள் தெருமுனையின் வலப்புறமுள்ள கவிதா ஹோட்டலின் பெட்டிக்கடைக்காரரை கண்டடைந்தோம் நானும், ரகுமான் அண்ணனும். அப்போதைய தினத்தில் அந்தக் கடை புதிதாக திறக்கப்பட்டது. அதனாலேயே கடைக்காரருக்கு விபரம் போதவில்லை என்பது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு அவர் கடைக்குச் சென்று நாங்களாகவே எங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அக்கடையில் கிரிக்கெட் கார்டுகள் கிடைக்கின்றது என்பதை எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்துக் கொண்டோம். அதற்கு மிக முக்கியமானதொரு காரணமும் இருந்தது. புதிதாக வந்திருந்த கார்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எங்களுக்குத் தேவையான கார்டுகளை தேர்ந்தெடுத்த பின்னர் கடைக்காரரிடம், "அண்ணா, இதோ இதை எடுத்துக்கறோம்" என எங்கள் கையிலிருந்தபடியே அவரிடம் காண்பிக்கும் போது அவர் பார்ப்பது லாரா-வாகவும், நாங்கள் பார்ப்பது அப்ரிடி-யாகவும் இருக்கும். நானும், ரகுமான் அண்ணனும் எங்களுக்குள்ளாகவே அறிவித்துக் கொண்ட "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசத்திட்டம்". சமயங்களில் ஒன்று வாங்க இலவசமாக இரண்டு, மூன்றென நேரமும் கைகூடியது.


        கார்டுகளின் எண்ணிக்கை நாள்பட அதிகரித்துக் கொண்டே போனது. பத்தாம் வகுப்புக்கு சென்ற ரகுமான் அண்ணன் அவர்வசம் இருந்த கார்டுகளை எல்லாம் என்வசம் ஒப்படைத்தார். ஒருகட்டத்திற்குப் பிறகு என்னிடம் இல்லாத கார்டுகளே இல்லை எனும் அளவிற்கு ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்தன. அதை வைத்திருந்த பைகளையும் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே வரும் போது வீட்டிலிருந்தவர்களின் கண்களிலிருந்து அதை மறைத்து வைப்பதென்பது சவாலாகிப்போனது. 

        வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளைகள் சர்வ நிச்சயமாக நாசமாய்ப் போவார்கள் என நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. அவ்வகையில் வீட்டின் கண்கள் என்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

        பத்தாம் வகுப்பில் கடைசி மூன்று மாதங்கள் கட்டாய விடுதி என்பது எங்கள் பள்ளியின் விதிகளுள் ஒன்று. மீண்டும் வீடு வந்தபோது எல்லாம் சரியாக இருந்தன எனது பொக்கிஷத்தைத் தவிர. எத்தனை முறை வீட்டிலிருப்பவர்களிடம் கேட்ட போதிலும், "எங்களுக்கு தெரியாதுடா. நீ எங்க வச்சன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?" என அவரவர் வேலைகளில் கரைத்துக் கொண்டனர். 

        அதன் பின்பு நான்கு ஊர்களும், ஆறு வீடுகளும் மாறியாகிவிட்டது. இன்னமும் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஓர் அட்டைப்பெட்டியினுள்ளே  சென்ற தலைமுறையின் நிகரில்லா கிரிக்கெட் வீரர்கள் உயிர்த்தெழ முடியாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.


நன்றி: விகடன்.

Wednesday, August 19, 2020

தற்கொலை

 


மகன்களின் 
தற்கொலைகள் 
சமயங்களில் அப்பாக்களால் 
நிகழ்த்தப்படும் 
மறைமுக படுகொலைகள்...

Saturday, July 11, 2020

அன்பின் பாசாங்கு


இறந்தவரின் 
உடல் முன் 
அரங்கேறும் பெரும்பாலான 
நிகழ்வுகள் யாவும் 
முகத்திரைப் போர்த்திய 
அன்பின் பாசாங்குகளே!!!




Tuesday, June 16, 2020

வாழ்வின் ரகசிய உடன்படிக்கை


வாழப் பிடிக்கவில்லை 
எனினும் வாழ்தல் 
அவசியமாகிறது -
யாரோ அல்லது ஏதோ 
ஒன்றின் பொருட்டு.
மரணிக்கும் தருவாயில் 
எல்லாம் முழுமையடையும் 
பட்சத்தில் இச்சமரசத்திற்கு 
உடன்படுகிறேன் மிக 
ரகசியமாக...


Friday, May 29, 2020

பாடல்களை சுமந்து திரிபவர்


     My Vikatan-னில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:

     https://www.vikatan.com/oddities/miscellaneous/old-man-who-impressed-the-youngster-with-his-enthusiasm

     சில மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி சென்றிருந்தேன். மூன்று நாட்கள் விடுமுறையை நன்றாக செலவழித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்கு முன்னதாக இரவு உணவருந்துவதற்காக அந்த உணவகத்துக்குள்
நுழைந்தேன்.

     பணம் செலுத்திவிட்டு நாமே சென்று உணவை வாங்கிக்கொண்டு அங்கிருக்கும் ஏதோவொரு இடத்தில் நின்றவாறு சாப்பிடும்படியான அமைப்பைக் கொண்டிருந்தது அவ்வுணவகம். நான் தோசை ஒன்றை வாங்கிக்கொண்டு அந்த அறையின் மையத்தில் இருந்த ஓர் இடத்தில் நின்று சாப்பிடத்  தொடங்கினேன்.

      திடீரென "பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்ற பாடல் இருக்குரலாக கேட்கத் தொடங்கியது. ஒலிக்கும் பாடலுடன் யாரோ ஒருவர் ஒத்திசைத்து பாடிக் கொண்டிருப்பது நன்கு புலப்பட்டது. யாரது என்றவாறே பார்வையால் அந்த அறையை அளந்துக் கொண்டிருந்த போது சற்றே தளர்ந்த நடையுடன், சிறிய கண்களுடன், கறுத்த முடியுடனும் தனது சட்டைப் பையில் இருந்து பணத்தை தேடிக் கொண்டிருந்தார் ஒரு வயதானவர். அப்போதுதான் அந்த பாடல் அவ்வுணவகத்தில் ஒலிக்கவில்லை; அவரது மேல் சட்டையில் வைத்திருந்த அவரது கைப்பேசியில் இருந்து ஒலிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டேன்.

     வாங்கிய பில்லை கடை ஊழியரிடம் கொடுத்துவிட்டு அருகிலிருந்த குடிநீரை அண்ணாந்து குடித்தவர்  மீண்டும் பழைய இடத்திற்கு வந்துக்  காத்துக் கொண்டிருந்தார் அப்போது தனது கைப்பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த "பொன்மகள் வந்தாள்" பாடலை ஒத்திசைத்து பாடியவாறே...

     "முத்துகள் சிரிக்கும் நிலத்தில்
       தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
      முத்துகள் சிரிக்கும் நிலத்தில்
      தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
      பாவை நீ வா
      சொர்கத்தின் வனப்பை ரசிக்கும்
      சித்தத்தில் மயக்கும் வளர்க்கும்
      யோகமே நீ வா
      வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
      வீதியில் ஊர்வலம் விழி எல்லாம் நவரசம்"

      எனப் பாடிக் கொண்டே இருந்தவர் இடையிடையே வரக்கூடிய மெட்டுகளுக்கு தனது நாவால் குதிரையின் குளம்படி சப்தத்தை எழுப்பி அதன் பின்பு வரக்கூடிய வரிகளுக்குள் தன்னை கரைத்தவாரே "காளான் தோசை"யை வாங்கிக் கொண்டு நானிருந்த இடத்தில் வந்து நின்றார்.

     அங்கிருந்த கடிகாரத்தைப் மேலெழும்பி பார்த்தவாரே, "ஐயோ, மணி 8 ஆச்சா!! நேரம்தான் எவ்வளவு சீக்கிரம் போகுது? இப்பதான் எந்திரிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சே!!" என தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார்.

     அப்போது கைப்பேசியில் வேறொரு பாடல் மாறி இருந்தது. எந்திரம் போல அவர் கையும் தோசையை இரு பகுதியாகப் பிரித்து ஒன்றை சாம்பாரிலும், மற்றொன்றை சட்னியிலும் மடித்து ஊறவைத்துக் கொண்டே அந்த பாடலில் தன்னையும் கரைத்துக் கொண்டிருந்தார்.

     பிறகு தோசையைப் பிரித்து, "என்னது? ஒரே வெங்காயமாதான் கெடக்கு, காளானே காணோம்" என அங்கலாய்த்துக் கொண்டு அதிலிருந்த காளானையும், வெங்காயத்தையும் பிரித்து வைத்து, ஊறிக் கொண்டிருந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தார்.

     இதற்கு ஊடாக இரண்டு பாடல்கள் மாறி இருந்தன. ஒரு வாய் தோசை, மறுவாய் பாடல் இடைடையே குளம்படிச் சத்த மெட்டு என எல்லாமே சரியான அலைவரிசையில் அரங்கேறிக் கொண்டிருந்தன - அவரைப் பார்த்துப்  புன்னகைத்தவாறே நகர்ந்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களையும் சேர்த்து.

     அப்போது அங்கு பணி புரிந்துக் கொண்டிருந்த சிறுவனை நோக்கி, " நீதான் வெங்காயம் அரிஞ்சயோ? பூரா வெங்காயமாதான் கெடக்கு" என பதிலை எதிர்பாராமால் கடிகாரத்தையும், தட்டையும், கைபேசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு சாப்பிட்டு முடித்தார்.

     அவர் அங்கிருந்து கை கழுவ நகரவே அச்சிறுவனிடம், "தம்பி, யாரிவரு? ஒங்க ரெகுலர் கஸ்டமரா?" எனக் கேட்டேன். அவன், "ஆமாண்ணா. தெனமும் சாய்ங்காலாம் 6 மணிக்குலாம் வந்துருவாரு.  டிபன் சாப்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சு டீ இல்லனா காபி சாப்பிட்டு போவாரு. எல்லாரும் அவர பாத்து சிரிப்பாங்க. ஆனா அவர் பாட்டுக்கு பாடிட்டு இருப்பாரு" என அவன் முடித்த போது அவர் டீ வாங்க நின்றுக் கொண்டிருந்தார்.

     இடைப்பட்ட நேரத்தில் அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஓய்வூதியமாக குறிப்பட்ட தொகை வந்துக் கொண்டிருப்பதால் அதை வைத்துக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார் எனவும் அவன் கூறினான்.

     திரும்பிப் பார்த்தால், தனது கையில் வைத்திருந்த டீ glass-ஐ ஒரு குழந்தையை தாலாட்டும் லாவகத்துடன் அதை இடம் வலமாக காற்றில் அசைத்துக் கொண்டு  "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே. வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்பதை தன்னை மறந்துப்  பாடிக் கொண்டிருந்தார்.

     வாடிக்கையாளர்களின் தட்டுக்களை எடுக்க அங்கு பணியாளர்கள் இருப்பினும் அவர் தனது தட்டையும், டீ glass-யும் தானே எடுத்துக் கொண்டு வைத்தார்.

     எல்லாம் நாடகமென அரங்கேறிக் கொண்டிருக்கும்போது, மிகச் சரியாக அல்லது அனிச்சையாக அப்பாடல் ஒலித்தது - "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது".

     அவர் அதைப் பாடியபடியே சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் தனது எல்லாப் பாடல்களையும் சுமந்தபடி மென் அலைவரிசையாய்....


நன்றி: விகடன்.


Tuesday, May 26, 2020

TRUECALLER எனும் வில்லன்

     My Vikatan-யில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:

     https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-sarath-kumar-fan-and-college-days 

     அன்று அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் எனது கல்லூரியின் வகுப்புத் தோழனான ராஜூ. அதுநாள் வரையிலும் அவனை எப்போதும் அழைத்துப் பேசியிராத மற்றுமொரு வகுப்புத் தோழனான கார்த்திகேயன் அவனது அலைபேசி-க்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்திருக்கிறான். வேலைப் பளுவினால் அதை தொடர்ந்து நிராகரித்துக் கொண்டே இருந்தான் ராஜூ, கார்த்திகேயனின் அவசரத்தையும், அவஸ்தைகளையும் அறியாதவனாக.

      கார்த்திகேயன் - எங்கள் வகுப்புத்தோழன், எங்களுடன் கல்லூரி  விடுதியின்  வேறொரு அறையில் இருந்தவனும் கூட. சென்னையின் புறநகர் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கடலூரின் அருகாமையிலுள்ள ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன். 

     நண்பர்களுடன் மிகப்பரவலான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னரே அவனது அறைத் தோழர்களால் "மொக்கை கார்த்தி" என அழைக்கப்பட்டவன். அதற்கான மிக எளிய காரணங்களில் ஒன்று  - அவன் சரத்குமார் ரசிகன் என்பதும்  கூட.

     முதலாமாண்டு விடுதி மாணவர்கள் தொலைக்காட்சி இருக்கும் அறைக்கு செல்ல அனுமதி இல்லை என்பது அங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. மிக அரிதாக சிலரிடம் மட்டுமே அப்போது செல்போன்கள் இருந்தன, எனினும் அவை நோக்கியா - 1100 காலத்தவை. அதனால் ஓரிரு மாதங்களுக்குள் சிலர் FM radio வாங்கி வைத்துக் கொண்டனர்.

     நாங்கள் கல்லூரிக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் "ஐயா" திரைப்படம் வெளிவந்திருந்தது. அதனால் அடிக்கடி "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்கிற பாடல் ஒலிபரப்பப்படுவதுண்டு. அப்போதெல்லாம் "மொக்கை கார்த்தி" மிகுந்த பரவசத்துடன்," டேய், அந்த பாட்டை வைடா" என சொல்லிவிட்டு அதனுடன் ஒத்திசைத்து பாடுவான். FM -ல் நயன்தாரா பாட, சரத்குமார் பாடும் வரிகளை பெரும் பாவனைகளுடன் பாடிக் கொண்டிருப்பான், மிக குறிப்பாக இவ்வரிகளை-  "நேத்துவரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு. அது இன்றுமுதல் ஆனது எலவம் பஞ்சு" என அவன் பாடும் போது "சின்ராச கைலயே புடிக்க முடியாது" என்கிற வசனம்தான் நினைவுக்கு வரும்.

     ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவனது இம்சையை தாங்க முடியாமல் நண்பர்கள் அவனை வெகுவாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்தோம். FM -ல் சரத்குமார் பாடல் வரும் போதெல்லாம் அவன் காதில் விழாதவாறு மிக வேகமாக வேறொரு FM Station -க்கு மாற்றிக் கொண்டிருந்தோம். அதை கண்டுகொண்டவன், "அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை..." என தன் கண்களை சுருக்கிக்கொண்டு அறையின் மேற்சுவரைப் பார்த்துப் பாடுவான்.

      சில மாதங்கள் கழித்து பத்திரிக்கைகளில் அந்த அறிவிப்பு வந்தது - " சரத்குமார் நடிக்கும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' இயக்கம் கௌதம் மேனன்" (அப்போது கௌதம் மேனன்-தான், GVM  அல்ல). நாங்கள் மிக அதிர்ச்சியானோம் கௌதம் மேனன்-சரத்குமாரா  என. ஆனால் அந்த அறிவிப்பை பார்த்தவுடன் "மொக்கை கார்த்தி" எங்களை பார்த்து சிரித்த அந்த சிரிப்பின் சாயலை "சூப்பர் deluxe" படத்தில் வரும் சிறுவன் அந்த DVD-யை கேட்டவுடன் அந்த அக்கா சிரிக்கும் நக்கலான சிரிப்புடன் தாராளமாக ஒப்பிடலாம்.

      அதன்பின்பு "பச்சைக்கிளி முத்துச்சரம்" பாடல்கள் வெளியாகின. எல்லா FM -களிலும் நேயர் விருப்பமானது. அப்பாடல்கள் ஒளிபரப்பாகாத எந்த நிகழ்ச்சியும் அப்போது இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றையும்  அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மொக்கை கார்த்தி," பாருங்கடா, கௌதம் மேனனுக்கே எங்க தலைவர் தேவைப்படுது" என எங்களை அற்பமாக பார்த்துச் சிரித்தபோது கௌதமின் தீவிர ரசிகனாக இருந்த அருண்,"பாரு, உங்க தலைவன் கௌதம் மேனனுக்கே flop தர போறாப்ல" என்ற போது கார்த்தி மட்டுமல்ல நாங்களுமே சற்று அதிர்ச்சியாகத்தான் செய்தோம்.

      அவனை எல்லோரும் "மொக்கை" எனக் கூப்பிட்டாலும் எனக்கு அவன் ஒரு விசித்திர நாயகன்தான்.  விடுதியில் தங்கியிருந்ததனால் எங்களுக்கு study leave என்பதும் semster holidays தான். அதனால் எல்லோரும் அவரவர்  ஊர்களுக்கு செல்வதில் குறியாக இருக்க அவன் அப்போதும் தனது வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கிவிடுவான். அவனது அலைவரிசைக்கு ஏற்ப இருக்கும் சிலரும் விடுதியிலேயே இருப்பதுமுண்டு. விடுதி என்பது அப்போது கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டவர்களின் சரணாலயம் அல்லது அரசாங்கம்.

     அந்த விடுமுறை நாட்களில் நன்கு உண்டு, உறங்கி, தொலைக்காட்சியில் படம் பார்த்துத் தவறிக்கூட புத்தகங்களைத் தொடாமல் அவனது கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பான்.

      தேர்வுக்கு முந்தையப்  பகல்களில் உறங்கி, பாடல்களில் திளைத்து, கவிதைகளில் மூழ்கி தனது சொர்க்கபுரியிலிருந்து நள்ளிரவில் மிக மெதுவாக நிகழ்காலத்திற்கு வந்திறங்குவான். தனது நண்பர்களிடம் மறுநாளைய தேர்வுக்கு உண்டான முக்கிய கேள்விகளைக் கேட்டறிந்து அதை ஓரளவு படித்துக் கொள்வான். அடுத்த நாள் தேர்வு முடிந்த பிறகு எங்களிடம் வந்து இதற்கு இதுதானே பதில் எனக் கேட்டறிந்து திருப்திக் கொண்டு மீண்டும் அவனது உலகத்தில் உள்புகுந்து தன்னை அரசானாக்கிக் கொள்வான்.

     அதிகம் வாசிப்பு பழக்கமற்ற அவனது எழுத்துக்கள் அத்தனை ஆழமானவை. மேலோட்டமாக படித்தால் புரிந்துக் கொள்ளமுடியாத அவனது எழுத்துக்களை அவன் தரும் தெளிவுரை அவ்வளவு ஆச்சரியப்படுத்தும். 

     ருடங்கள் உருண்டோட பணி நிமித்தமாக நான் பெங்களூரு வந்துவிட இத்தனை ஆண்டுகளில் அவனிடம் நான் இன்னும் பேசவில்லை. ஆனால், அன்று ராஜூவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது," மச்சி! அன்னிக்கு மொக்கை-ட்ட இருந்து contiuous - யா call வந்துட்டே இருந்தது. ஆனா, எனக்கு work load அதிகமா இருந்ததுனால என்னால அவன்கிட்ட பேசமுடியல. அப்பறம் அதை அப்படியே மறந்துட்டு ரூம்-க்கு வந்துட்டேன். உள்ள நுழையும் போதே அருண், "என்னடா, மொக்கை call பண்ணானா-னு கேட்டான். நானும் ஆமா மச்சி. ஆனா, நான் busy -யா இருந்ததுனால பேச முடியல. ஏன் என்னாச்சுன்னு கேட்டேன்".

     அருண், " அவனுக்கு வீட்ல பொண்ணு பாத்துருக்காங்க போல. நிச்சயதார்த்தம் அடுத்த வாரமாம். இவன் அந்த பொண்ணோட நம்பரை எப்படியோ வாங்கி call பண்ணிருக்கான். unknown number -ங்கிறதுனால அந்த பொண்ணு யாருடானு truecaller பாத்தா "மொக்கை கார்த்தி"னு போட்ருந்துச்சாம். அதுனாலதான் பயபுள்ள," யாருடா என்னை மொக்கை கார்த்தின்னு save பண்ணிருக்கீங்கனு வெறி புடிச்சு தேடிகிட்டு இருக்கான்" என சொல்லவும் அது தான் என ராஜூ என்னிடம் சொல்லிச் சிரிக்க என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை.


நன்றி: விகடன்.

    

Friday, May 15, 2020

நம் குழந்தைகளை குருடர்களாக்கும் சமூக அந்தஸ்து


     MyVikatan-யில் வெளிவந்துள்ள எனது கட்டுரை:


     இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பிள்ளைகளை படிக்க வைத்தல் என்பது படித்திராத பெற்றோர்களுக்கும், படிப்பைத் தொடர இயலாத பெற்றோர்களுக்கும் வைராக்கியம் சார்ந்த விஷயமாக இருந்தது. இன்று ஒவ்வொரு நிறுவனங்களில் தலைமை இடத்தை வகித்துக் கொண்டிருக்கும் நபர்களில் சரிபாதி அளவில் இருப்பவர்கள்கூட அப்படியான ஒரு குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும். ஆனால் அப்படிப் படிப்படியாக முன்னேறிய நடுத்தர வர்க்கமாகிய நாம் நமது அடுத்த தலைமுறையை சரியாக வழி நடத்துகிறோமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகத்தான் இன்று உள்ளது. இன்னும் நுட்பமாக சொல்லப்போனால் நாம் வளர்ந்த விதத்திற்கும், நம் பிள்ளைகளை வளர்க்கும் விதத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது உலகின் ஏதோவொரு ஏழை நாட்டில் எல்லாவற்றிற்கும் முட்டி மோதி முன்னேறி அதன் விளைவாக வளர்ந்த நாட்டில் குடிபெயர்ந்து  தான் பிறந்து வளர்ந்த நாட்டை ஏளனமான பார்ப்பதற்கு ஒப்பானதொரு உளவியல் நோய்.

     இன்று மெட்ரோ நகரங்களில் குடிபெயர்ந்து அதன் சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ப தங்களது வாழ்க்கை முறையை தகவமைத்துக் கொண்ட பெரும்பாலான (அத்தனை) பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுத்து வைத்திருக்கிற சூழலை தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சமூக சூழலை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் எதிர்வரக்கூடிய சமூக பிரச்சனைகளின் அபாயத்தை உணரக்கூடும்.

     ஆனால், தனக்கு கிடைக்காத ஒன்று தனது அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்கிற கண்முடித்தனமான அன்பினாலும், தனது பிள்ளைகள் எதற்குமே அவதியுறக் கூடாது என்கிற தற்கால  பெற்றோர்களின் சீழ் பிடித்த கற்பிதங்களால் அடுத்த தலைமுறையின் கண்களை சமூக அந்தஸ்து எனும் பெயரில் குருடர்களாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மிக வசதியாக மறந்துவிடுகிறோம்.


     22 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு அரசுப்பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய வகுப்புத் தோழனாகிய ராஜாராம் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. பள்ளி முடித்தவுடன் அவனுடனே சென்று அவன் வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்த எனது பாட புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு நகரத்தின் மையத்தில் இருக்கும் எனது வீட்டிற்கு திரும்புவதாக திட்டம். பள்ளிக்கு வடக்கு திசையில் சற்றே தூரத்தில் வரிசையாக இருக்கும் அந்த ஓட்டு வீடுகள் ஒரு ஓவியத்தின் காட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல. தூரத்திலிருந்து பார்க்கும் போது மிக அழகாக தெரிந்த அவ்வீடுகளை நாங்கள் நெருங்கி செல்ல செல்ல  அதன் சூழலியல் யதார்த்தம் வேறு என்பதை உணர்ந்துக் கொண்டேன். அங்கிருந்த ஒரு குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்றவன் அதுதான் தனது வீடு என்ற போது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மிக குறுகிய பரப்பளவில் இரு அறைகளைக் கொண்ட குடிசை வீடு அது. அதன் இரண்டாம் அறை என்பது அவ்வீட்டின் இடது மூலையில் இரண்டடியிலான மண் சுவரை எழுப்பி அமைக்கப்பட்ட சமையலறை. நாங்கள் வாடகைக்கு அப்போதிருந்த வீடும் இரண்டறைகளைக் கொண்டது எனினும் நகரத்தின் மையத்தில் இருக்கிற எனது வீட்டிற்கும் நகரத்தின் எல்லையில் இருக்கிற நண்பனின் வீட்டிற்குமான வேறுபாடு என்ன என்பதை என்னால் அப்போது சரிவர புரிந்துக் கொள்ள இயலவில்லை.

     எனது புத்தகத்தை வாங்கிக் கொண்டு அவனை விளையாட அழைத்த போது, "கொஞ்சம் இரு டா. நான் வீட்டுப்பாடம் எழுதிட்டு வந்துடறேன்" என்றவனை "டேய். அதை நான் வீட்டுக்கு போனதுக்கப்பறம் எழுதேண்டா" என குரலுயர்த்தி சொன்னபோது, "இல்லடா. எங்க வீட்ல கரண்ட் வசதி கெடையாது. அதுனால வெளிச்சம் இருக்கும் போதே பண்ணாதான் உண்டு" என்றவனை ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தேன். எனது வாழ்விற்கும், அவனது வாழ்விற்குமான வித்தியாசத்தையும் கண்டுணர்ந்தது கிட்டத்தட்ட என் வாழ்வின் முதல் போதி நிழல்.

     அந்த சம்பவத்திற்கு பிறகு எனது வாழ்வில் நான் இருக்கக்கூடிய இடம் எத்தனை வசதியானது, ஆனால் நாம் இதற்கே இத்தனை புகார்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என புரிந்தது.

     அநேகமாக முப்பது வயதிற்கு மேல் இருக்கக்கூடிய இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் ஒன்று எனது பிரதிநிதியாகவோ அல்லது ராஜாராமின் பிரதிநிதியாகவோ இருக்கக்கூடும். ஆனால், அங்கிருந்து நம் வாழ்வை தொடங்கியவர்கள் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதை கடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பெரும் அதிர்ச்சியாகவும், சமூக அச்சமாகவும் இருக்கின்றன.

     பெரு நகரங்கள் மட்டுமல்லாது இப்போது சிறு நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது பரவலாகவும், அதை வாங்குவது பலரின் கனவாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்களாகவே இருக்கக்கூடும். அதனால் அங்கு வளரக்கூடிய பிள்ளைகளின் கண்களுக்கு இச்சமூகம் என்பது வசதிப்படைத்தாகவே தெரியக்கூடும். இந்த பார்வைக் குறைபாடு என்பது அங்குமட்டுமல்லாமல் அவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகளிலும், அவர்களை பொது போக்குவரத்துக்களான பேருந்துகளுக்கோ, இரயில்களுக்கோ பழக்காதவாறு நம் சமூக அந்தஸ்தை நிரூபிக்க கடனில் நாம் வாங்கி வைத்திருக்கும் கார்களில் அவர்களை அழைத்துச் செல்வதென ஒவ்வொன்றிலும் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம்.

     இவ்வாறு நமது ஒவ்வொரு செய்கைகளிலுருந்தும், அன்றாடங்களிலிருந்தும் நமது குழந்தைகளை நமக்கு கீழே பொருளாதாரத்தில் அடுக்கடுக்காக இருக்கும் பல சமூகத்திடமிருந்து பிரித்தே வைத்திருக்கிறோம். ஒருமுறை இதைப்பற்றி எனது அலுவலக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த பெண் தோழி ஒருவர், "Hey, I do not want my kids to to mingle with those people in the society" என்ற போது மிக அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. அப்போது அவரவர் பால்யம் பற்றி ஒவ்வொருவரும் சொல்லும் போது எங்களுக்குள் பெரிதாக எந்தவொரு வித்தியாசமும் இல்லை அவரவர் ஊர்களைத் தவிர.

     நமது பால்ய காலத்தில் வசித்து வந்த தெருவில் பொருளாதாரத்தின் எல்லா அடுக்குகளில் இருந்தவர்களும் பெரும்பாலும் ஒன்றாகவே வசித்து இருந்தோம் (கிராமங்களின் நிலை வேறாக இருக்கக்கூடும்). அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பவரும், பூக்கடை வைத்திருப்பவரும், ஆட்டோ ஓட்டுபவரும், கடைகளில் பணி செய்பவர்களும், பேருந்து ஓட்டுநர்/நடத்துனர்களும், தள்ளு வண்டி வைத்து பிழைப்பவரும், நகலகத்தில் வேலை செய்பவரும், தச்சர், கொல்லர், மிதிவண்டிகளை வாடகைக்கு விடுபவர் என ஒரு தெரு என்பது கூடி வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கிருந்துதான் இன்றைய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பேராசிரியர்களும்,
மென்பொருள் வல்லுனர்களும் இன்னபிற நிபுணர்களும் வந்திருக்கிறோம்.


     நடுத்தர வர்க்கத்துக்கும் அதற்கு கீழேயுள்ள சமூகத்திற்கும் உண்டான உறவென்பது முன்னேற்றத்திற்கான உந்துசக்தி. அது சமூகத்தை முன்னேற்றும், போலவே அவரவர் நாட்டையும். இங்கே தனிமனித வெற்றி ஒருவகையில் சாத்தியம், ஆனால் ஒரு தனிச் சமூக வெற்றி என்பது எப்போதும் சாத்தியமற்றது.

நன்றி விகடன்.

Tuesday, April 28, 2020

அந்த ஒரு நாள் [சிறுகதை]

     "சார், கொஞ்சம் wait பண்ணுங்க. வயசானவங்களுக்கு மொதல்ல பண்ணிடறோம். காலைல இருந்து சாப்பிடாம வந்துருப்பாங்க. சுகர் பேஷண்ட்ஸ் வேற. அதுக்கப்பறம் உங்களுக்கு டெஸ்ட் பண்ணறோம். ஓகே-வா?" என அந்த மலையாள நர்ஸ் சொன்னபோது மறுப்பேதும் சொல்ல மனம்  வரவில்லை. அழகிகள் என்ன சொன்னாலும் அதை மறுப்பேதுமின்றி கேட்டுக்கொள்கிற இயல்புடையவன் என்பதால்.   

     இன்னும் ஒரு மாதத்தில் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும். அதன் பொருட்டு அவர்கள் தந்த மருத்துவமனைப் பட்டியலில் இருக்கும் ஏதோவொன்றில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமாதலால் காலை ஏழரை மணிக்கே பெங்களூரு old Airport road-ல் இருக்கக் கூடிய அந்த பெரிய மருத்துவமனைக்கு வந்தாயிற்று. கிட்டத்தட்ட எங்கள் வீட்டிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரம். வந்து போவதற்கு சற்றே எளிதான இடம் என்பது இது மட்டுமே. காலை நேரம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சாலையில் உதிர்ந்து கிடந்த இலைகளும், பூக்களும் இன்னும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன.

     வயதானவர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு என் சுற்று வரவும், எல்லா பரிசோதனைகளையும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முடித்தனர். ஆனால் அதற்குள்ளாகவே மணி பத்தாகியிருந்தது. அதனால் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் உணவகத்திலேயே காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றால் சரியாக இருக்குமென அங்கு சென்று ஒரு தோசை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன்.

     ந்த வேலை முடிந்து விட்டது. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவதாக மனைவிக்கு அலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு நிமிர்ந்த போது, "ஹே, நீ அரவிந்த் தானே?" என ஒரு பெண் கேட்க, "ஆமா,  நீங்க?" என என் ஞாபக அடுக்குகளில் ஒரு கன நொடி சல்லடையிட்ட போதும் கிடைக்காத பதிலை அவராகவே, "தெரியலையா? சரண்ய ப்ரியா" என்ற போது இருபது வருடங்களுக்கு முன்பான அந்த ஒரு நாள் சட்டென குமிழி போல மேலெழுந்து உடைந்தது. ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், பல வருடங்கள் கழித்து சந்திக்கும் தெரிந்த ஒரு நபரை நோக்கி ஏற்படும் மகிழ்ச்சியை எவ்வளவோ முயன்றும் என் முகத்தில் கொண்டு வர இயலாமல் தடுமாறினேன். அதை அவளும் கண்டு கொண்டதாகவே மனதிற்கு பட்டது. ஆனாலும் நான் இயல்பாக பேச முயற்சித்தேன்.

     "நீ, நம்ம ஸ்கூல்ல விட்டு போனதுக்கு அப்பறம் நாம பாக்கவே இல்ல-ல?" என நன்கு தெரிந்த ஓர் உண்மையை தெரியாதது போல கேட்டாள். அவளும் என்ன செய்வாள்? பாவம் என நினைத்துக் கொண்டு ஒருவாறாக இயல்பாய் பேச ஆரம்பித்தேன்.

     "இங்க, பெங்களூரு-ல தான் இருக்கியா? இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சு? கல்யாணம் ஆயிடுச்சா? எத்தனை கொழந்தைங்க" என ஒரு கேள்விக்குப் பின் மற்றுமொரு கேள்வியாக தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.

     எல்லாவற்றிற்கும் மிகவும் பிரக்ஞையுடன் நேர்மறையாக பதிலளித்தேன். பின்பு கேட்கலாமா, வேண்டாமா என மிகவும் தயங்கி தயங்கி, "ஜெயராமன் சார் எப்படி இருக்காரு" எனக் கேட்கவும் அதற்குத்தான் அவள் காத்திருந்தது போல, "ஹப்பாடா, இப்பவாது கேட்டியே" என்ற போது  இயல்பாகவே அவளுக்கு கண்களில் கண்ணீர் வலை  பின்னியது. 

      எதற்காக இவள் அழுகிறாள் என ஒன்றும் புரியாதவனாக தலை சாய்த்துப் பார்க்கும் ஒரு குருவி போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

      கைக்குட்டையால் தனது விழிகளின் ஓரத்தை துடைத்துக் கொண்டவள், "ஒண்ணுமில்ல, அப்பா ஒண்ண ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைபட்டாரு. ஆனா, நீ எங்க இருக்கன்னு ஒன்னும் தெரியல. Facebook-ல நீ இல்லையோ?"  என கேட்டவளை ஆமோதிப்பதைப் போல தலையசைத்தேன்.

      "படிப்ஸ்லாம் இப்படித்தான். மெண்டலா திரிவானுங்க" என சொல்லி சிரித்துக் கொண்டாள்.

       எனக்கும் சிரிப்பு வந்துவிடவே வாய்விட்டு சிரித்தேன். 

        "அக்காவுக்கு ரெண்டாவதா பையன் பொறந்துருக்கான். நேத்து நைட்தான். அதான் நாங்க பாக்க வந்தோம். அப்பாவும் வந்துருக்காரு. ஒண்ண பாத்தா ரொம்ப சந்தோசப்படுவாரு. வாயேன்" என்ற போது மறுப்பதற்கான காரணத்தை மனதில் தேடிக் கொண்டிருக்கும் போதே, "நீ என்ன காரணம் சொன்னாலும் நான் விடமாட்டேன். ஒழுங்கா வந்துட்டு போ" என மனதைப் படித்தவளாக சொன்னவளிடம் இனி ஒன்றும் சொல்லிவிட முடியாது என்பதனால், " சரி. நீ போ. நான் சாப்டுட்டு வரேன்" என்றேன்.

      "சத்தியமா?" என அவள் கேட்டபோது ஒவ்வொரு உரையாடலுக்கும் அவள் சொல்லக்கூடிய வார்த்தையது என்பது நினைவுக்கு வந்தவனாக "சத்தியமா வரேன், நீ போ" என்றேன்.

       "B - Block. 3rd Floor. Room number - 310" என சொல்லிச் சென்றாள் பெரும் ஆசுவாசத்துடன். 

        கொண்டுவரப்பட்ட தோசையை சாப்பிட்டு விட்டு, தேநீர் கோப்பையுடன் அந்த குல்முஹர் மரத்தடியில் நின்று கொண்டிருந்த போது அதே குல்முஹர் மரங்கள் நிறைந்த எங்கள் பள்ளி நினைவுக்கு வந்தது  - ஆயுளுக்கும் நான் மறக்க முடியாமல் தவிக்கும் அந்த ஒரு நாள்.

      காலை ஒன்பது மணிக்கு சரியாக நிகழும் அசெம்பிளியில் ஒவ்வொரு நாளும் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒவ்வொரு வகுப்பின் தரவரிசைப் பட்டியலில் இருக்கும்  முதல் ஐந்து மாணவர்களின் பெற்றோரை ஒருவர் ஒருவராக அழைத்து நாளொன்றாக அவர்களை கொடியேற்ற வைத்து கௌரவிப்பது வழக்கம். அவர்களுக்கான வரவேற்புரையை வழங்குவது தலைமையாசிரியர் சக்திவேல் அய்யா. அவர் வராத நாட்களில் உதவி தலைமையாசிரியர் லோகநாதன் சார் பொறுப்பேற்றுக் கொள்வார். ஆனால், அன்றைக்கு அதுநாள் வரை இல்லாத வகையில் ஜெயராமன் சார் பொறுப்பேற்றிருந்த போதே அவர்கள் இருவரும் விடுப்பில் இருந்ததை புரிந்துக் கொண்டோம். ஆனாலும், அவர்கள் இருவர் வராத ஒரு நாளில் அனந்த கிருஷ்ணன் சார் பொறுப்பேற்றிருந்ததும் ஏனோ தற்செயலாக நினைவுக்கு வந்தாலும் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

     அது ஆகஸ்டு எட்டாம் தேதி என்பது இப்போதும் நினைவிருக்கிறது. ஒவ்வொரு மாதத்தின் எட்டாம் தேதியன்றுதான் அதற்கு முந்தைய மாத இறுதியில் நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண்களை வழங்குவது எங்கள் பள்ளியின் வழக்கம். படிப்பிற்கும், மேலாக ஒழுக்கத்திற்கும் மிக கண்டிப்பான பள்ளி என்பதனால் எட்டாம் தேதி என்பது பலரையும் பயம் கொள்ள வைப்பதுண்டு. ஒட்டுமொத்த பள்ளியிலும் பிரம்படிச் சத்தம் மட்டுமே கேட்கும், கூடவே உயிர் அலற துடிக்கும் சிறுவர்களின் கதறல்களும். ஆரை நூற்றாண்டுப் பழமையான பள்ளி என்பதனால் ஓடு வேயப்பட்டு ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையேயான தடுப்புச் சுவர் என்பது முக்கால்பங்கு மட்டுமே இருக்கும். அதனால் அருகாமை வகுப்பில் அடி தாளாத சிறுவர்களின் கதறல்கள் மற்ற வகுப்பில் இருப்பவரையும் நடுநடுங்க வைக்கும். ஆனால், அப்பிரம்படி என்பது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டுமே என்பதனால் வகுப்பில் எங்களைப் போன்ற சிலர் நிம்மதியாக இருப்பதுண்டு.  

      அன்றைய தினத்தன்று தாங்கள் திருத்திய விடைத் தாள்களை வகுப்பு மற்றும் பாடங்கள் வாரியாக தலைமை ஆசிரியரின் பார்வைக்கு அவரது மேசை மேல் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வைத்து விடுவர், ஆசிரியர்கள் . அசெம்பிளி முடிந்து முதல் இரு பாட வேலைகளுக்குள்ளாக ஒவ்வொரு கட்டுக்குள் இருந்தும் தலா இரண்டு விடைத்தாள்களை பார்வையிட்டு அதில் தேர்ச்சி பெறாத மாணவனை தன்னை வந்து சந்திக்குமாறு கையொப்பமிட்டுருப்பார். அப்படி தலைமையாசிரியரிடம் அனுப்புவதற்கு முன்னதாக ஆசிரியர்களும் அவர்கள் பங்குக்கு கொடுக்க வேண்டிய பிரம்படிகளை கொடுத்தே அனுப்புவார்கள்.

      அன்று, காலை இடைவேளை முடிந்து எங்களுக்கு கணித பாடவேளை. விடைத்தாள்களுடன் வந்த மகேஷ் சார் இன்ன இடத்தில்தான் அடிக்க வேண்டும் என்கிற நாகரிகம் அறியாதவர். முதல் இரண்டு விடைத்தாள்கள் தலைமையாசிரியர் கையொப்பமிட்டவை என்பதனால் எல்லா வகுப்புகளிலும் அந்த முதல் இரண்டு நபர் யாரென மிகுந்த அச்சத்துடன் காத்திருப்பர். 

      முதலாவதாக "ராஜேஷ் கண்ணா" என்ன அழைக்கும் போதே அங்கு நடக்கப் போவது என்ன என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றவனை தன் பலம் கொண்ட மட்டும் அடித்து நொறுக்கியவர், "அய்யா, meet me -னு போட்ருக்காரு. போ" எனத் அன்றைய தலைமையாசிரியரான ஜெயராமன் சாரிடம் அனுப்பி வைத்தார். அடுத்து, "அரவிந்த்" என அழைக்கவும் நான் மிக நிதானத்துடனும், பொறுமையாகவும் செல்ல, "ninety five" என்றவர் விடைத்தாளை கொடுக்க என்னிடம் நீட்டிவர் மீண்டும் அவசரமாக அவர் வசம் இழுத்து ஒருமுறை மேலும் கீழும் பார்த்தவர், "என்னடா, meet me-னு போட்ருக்கு" என அவரே குழம்பி போயிருந்தார். வகுப்பில் ஒரு அசாதாரண சூழல் நிலவியது. "ஒரு நிமிஷம் இரு" என வெளியே சென்றவர் பக்கத்து  வகுப்பாசிரியரிடம் விசாரிக்க அவரும், "ஆமா சார். இந்த பையன் science -ல எண்பத்து ஏழு வாங்கிருக்கான். இவனுக்கும் meet me -னு போட்ருக்காரு" என சொல்லவும் அதே குழப்பத்துடன் எங்கள் வகுப்பை பார்த்து வந்த கவிதா மேடமும் அவர் வகுப்பின் விடைத்தாள்  ஒன்றைக் கொண்டு வந்தார்.

     "டேய், என்னனு தெரியல. எதுக்கும் போய் பாத்துட்டு வந்துருங்க" என என்னையும் பக்கத்து வகுப்பில் எண்பத்து ஏழு மதிப்பெண்கள் பெற்ற  சபரியையும் தலைமையாசிரியர் அறைக்கு அனுப்பினார்கள். நாங்கள் தலைமையாசிரியர் அறையை அடைந்த போது அங்கு எங்கள் வகுப்பைச் சேர்த்த ராஜேஷ் கண்ணாவை  ஜெயராமன் சார் அடித்த அடி இதுவரை அவன் வாங்கியிராததும், அவர் அடித்திராததும்.

      எங்கள் பள்ளி எவ்வளவு கண்டிப்பானதாக இருப்பினும், சில ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணக்கமாகவும், மற்ற ஆசிரியர்களைப் போல அடித்து துன்புறுத்தாதவர்களாகவும் இருந்தனர். அதில் ஜெயராமன் சாரும் அடக்கம். அவர் மேல்நிலை வகுப்புகளுக்கு கணித ஆசிரியர். ஒரு கணக்கு ஒரு மாணவனுக்கு புரியவில்லை எனில் அவனுக்கு கணிதம் எந்தளவு தெரியும் என ஆராய்ந்து , தேவைப்பட்டால் அவன் சந்தேகம் கேட்ட கணக்கின் தொடர்புடைய ஆரம்பப்புள்ளி ஒன்பதாம் வுகுப்புடையது என்றாலும் மிகப் பொறுமையாக படிப்படியாக பாடம் நடத்தக் கூடியவர். அவர் இத்தனை மூர்க்கமாக ஒரு மாணவனை அடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே நம்ப முடியாமல் நான் வெளியில் நின்றுக் கொண்டிருக்க, "next" என அழைக்கவும் நான் உள்ளே சென்றேன்.

      விடைத்தாளை என்னிடம் இருந்து வாங்கியவர், "அரவிந்த், 9th  Standard, Mathematics  - 95 marks" என என்னை மேலும் கீழும் பார்த்தவர், "ஏன் சென்டம் வாங்க மாட்டியா? " என பிரம்பால் என் மண்டையில் இரண்டு அடி அடித்தார். அப்பள்ளியில் நான் வாங்கிய முதல் அடி. நிலைக் குலைந்து போனேன். அதுநாள் வரையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டுமே விழுந்த பிரம்படிகள் இப்போது வகுப்பில் முதல் தரவரிசை மாணவனுக்கும் விழுவது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கையில் விழுந்த இரண்டு பிரம்படிகளுள் ஒன்று எனது இடது சுண்டுவிரலின் நுனியை கொஞ்சம் பலி கேட்டது.

     நான் வெளியே வரும் போது வகுப்பிற்கு இருவராக கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்கள் வெளியே நின்றுக் கொண்டிருந்தனர் அவர்களது சுற்றுக்காக. தாங்க முடியாத அழுகையுடன் எங்கள் வகுப்புக்கு சென்ற போது எல்லா விடைத்தாள்களையும் கொடுத்துவிட்டு மதிப்பெண்களை தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொண்டிருந்தார் மகேஷ் சார். நான் அழுது கொண்டே உள்நுழைவதை பார்த்தவர், "ஏன்டா, என்னாச்சு" எனவும் எனது இடக்கையை வலக்கைக்கு உள்ளாக வலிக்கு தாங்கிப் பிடித்துக் கொண்டே நடந்தவற்றை சொல்லி முடித்தேன். பெரும் அதிர்ச்சிக்குள்ளானவர் முன்பு போலவே பக்கத்து வகுப்பில் சென்று விசாரிக்க அவர்கள் வகுப்பில் அறிவியலில் 87%  வாங்கிய சபரிக்கும் அதே நிலைதான் என அந்த ஆசிரியர் சொன்னபோது ஒரு பெரும் நிசப்தம் ஒவ்வொரு வகுப்பாக உருவாகுவதை உணர்ந்தோம்.

     சரியாக மணி ஒலிக்கவே அடுத்த பாடவேளைக்கு தமிழாசிரியை கங்கா வந்தார். இம்முறை முதல் இரண்டு விடைத்தாள்கள் யாருடையவை என்பது எல்லோரும் எதிர்பார்க்கிற மர்மமாக இருந்தது. ஆனால், இம்முறை முதல் இரண்டு பேருமே தேர்ச்சியடையாததனால் அதில் பெரிய வித்தியாசமில்லாமலும் இருந்தது. ஆனாலும் எல்லோருக்குள்ளும் ஒரு கேள்வி புதிதாக எழுந்திருந்தது. அதன் காரணமாக எங்கள் வகுப்பிலிருந்த ஜெயராமன் சாரின் மகள் சரண்யா ப்ரியாவை அவளது சிநேகிதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள். இருப்பினும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

     உணவு இடைவேளையின் போது ஜெயராமன் சாரின் முற்றிலும் மாறிய நடவடிக்கைகள்தான் ஒட்டு மொத்த பள்ளியின் பேசுபொருளாக இருந்தது. தன்னிடம் படிக்கும் மாணவர்களைக் கூட இப்படி அடித்திராதவர் இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். அதிலும், வழக்கத்திற்கு மாறாக. கண்டிப்புக்கு பெயர் போன தமது தலைமையாசிரியர் சக்திவேல் அய்யா கூட ஒருநாளும் தேர்ச்சி பெற்றவர்களை அடித்ததில்லை - அவர்கள் 35% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட. 

     மைதானத்தில் உணவு உட்கொள்ளும் போது அருகருகே இருக்கும் மற்ற வகுப்பு மாணவர்களிடம் என்ன நடந்தது என ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். எனக்கு நடந்ததைப் போலவேதான் எல்லா வகுப்பிலும் நடந்திருந்தன என்ற போது பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மீதமிருக்கும் நான்கு மணி நேரத்தில் இன்னும் என்னென்ன நடக்கக்கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருந்தது.

    ஒரு மணிக்கு மேலாக - உணவு இடைவேளையின் போது - எப்பொழுதும்  பிரம்பின் சகிதம் பள்ளியை வலம் வரும் சக்திவேல் அய்யா, ஒழுங்கை மீறி வகுப்பில் கத்திக் கொண்டிருக்கும் மாணவர்களை அடிப்பது எங்கள் அன்றாடங்களில் ஒன்று. அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு சாரார் வகுப்பறையின் வெளியே புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டு படிப்பது போல தரையில் அமர்ந்துக் கொண்டு அமைதியாக இருப்போம். அன்றும் அது போல இருப்பதுவே அனைத்து வகையிலும் தப்பிப்பதற்கான வழி என்பதை உணர்ந்து கிட்டத்தட்ட வகுப்பின் பெரும்பாலான மாணவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தோம். 

    வீசிய தென்னைக் காற்றுக்கும், தின்ற தயிர் சோற்றுக்கும் கண் சிறிது அசந்த போது, திடீரென பிரம்படி ஓசைகள் கேட்ட திசையப் பார்த்த போது ஜெயரமான் சார் எங்கள் கட்டிட வரிசையில் இருந்த முதல் வகுப்பு மாணவர்களை மண்டியிட வைத்து வரிசையாக அடித்துக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என புரியாமலும், அடுத்து என்ன செய்வது என தெரியாமலும் புத்தகத்தை உற்று நோக்குவது போல ஓரக்கண்ணால் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தோம் வியர்வை ஒழுக. 

    "lunch break -ல சாப்டுட்டு ஒழுக்கமா class -ல ஒக்காந்து படிக்காம எதுக்குடா எல்லாரும் கூட்டமா வெளிய ஒக்காந்துட்டு இருக்கீங்க" என அவர் வரிசையாக அவர் கைக்கு வந்தது போல அடித்துக் கொண்டே வந்தபோதுதான் எங்களுக்கு காரணமே புரிந்தது. பாதிவரை அடித்துக் கொண்டே வந்து திடீரென நிறுத்தியவர், "ஒடுங்கடா உள்ள" என சினங்கொண்டு கர்ஜித்தது  எங்களை இன்னும் பயமுறுத்துவது போல எங்கிருந்தோ எதிரொலித்தது.

   சிதறி ஓடிய நாங்கள் எங்கள் வகுப்பில் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்துக் கொண்டோம். மீதமிருக்கும் நான்கு பட வேளைகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு முகங்களிலும் தெரிந்தன. ஆசிரியர்களுக்குகூட அவரின் இச்செய்கைகள் ஆச்சரியப்படுத்தின.

   ஆனாலும், நாங்கள் பயந்தது போலல்லாது எங்கள் தாளாளரின் வருகையால் ஜெயராமன் சார் ஓய்வின்றி இருக்க, மீதமிருந்த மூன்று மணிநேரத்தை இலகுவாக கடந்தோம்.

    அன்றைய தினத்தின் இறுதி மணி ஒலிக்கவே நிம்மதிப் பெருமூச்சுடன் எங்களது புத்தகப்பையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமாய் எப்போதும் போல  இருவர் இருவராக அசெம்பிளி மைதானத்தில் அணிவகுத்து நிற்பதற்கு முன்பாகவே ஜெயராமன் சார் பிரம்புடன் பள்ளியின் நுழைவாயிலில் நின்றுக் கொண்டிருந்தார். எப்போதும் அணிவகுத்து நிற்பவர்கள் சிறிது கூட்டம் சேர்ந்தவுடன் மென்னோட்டத்துடன் வெளியே செல்வது வழக்கம். ஆனாலும் அன்று நிலவி  வந்த அசாதாரண சூழலில் என்ன செய்வதென தெரியாமல் முதலில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தனர்.

      பிரம்பை நாங்கள் இருந்த திசையைப் பார்த்து அசைத்தவாறே, "வாங்கடா" என பச்சைக் கொடி காட்டுவது போல கையசைக்க எல்லோரும் மெதுவாக நுழைவாயிலை நோக்கி நகர்ந்தோம். 

      கண்டிப்பான பள்ளி என்பதனால் பெரும்பாலானோர் அந்த சிறுநகரத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தோம். 4.30 மணிக்கு முடியும் பள்ளி என்பதனால், திரும்பிச் செல்கையில் 4.45 மணி அரசாங்க பேருந்தில் ஒரு சாராரும், 5.30 மணிக்கு வருகிற மற்றுமொரு அரசாங்க பேருந்தில்  மறுசாராரும் இலவச பயணம் மேற்கொள்வதுண்டு. 

     முதல் பேருந்தில் எப்போதுமே கூட்டம் அதிகாமாக இருக்கும் என்பதனால் அதை தவிர்த்துவிட்டு 5.30 மணிக்கு செல்வது எனது வழக்கம். அன்றும் அது போலவே வெளியே வந்து எனது புத்தகப் பையை வரிசையில் வைத்து விட்டு பள்ளியின் மதில் சுவரை ஒட்டி நின்றுக் கொண்டேன். 

      4.45 மணிக்கு வந்த பேருந்தில் எல்லோரும் வரிசையாக ஏறுவதைக் கவனித்த ஜெயராமன் சார், பேருந்தின் கடைசிப்படி வரை மாணவர்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். ஏதோவொரு அசம்பாவிதம் இப்பொழுதும் கூட நிகழக்கூடும் என்பதாக எங்கள் மனதிற்குபட்டது. பள்ளியின் உள்பக்கம் பார்த்தவர் கைதட்டி அழைத்தவரின் திசை நோக்கி மேல்நிலை மாணவர்கள் இருவர் வரவே அவர்களிடம் பேருந்தைப் பார்த்து ஏதோ சொன்னதும் அவர்கள் நின்றுக் கொண்டிருந்த பேருந்தின் கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள் இருப்பவர்களை நகரச் சொல்லி, கடைசிப் படிக்கட்டுகளில் இருந்தவர்களையும் நன்கு மேலே உட்புறமாக போகச் செய்யவும் பேருந்து கிளம்பவும் சரியாக இருந்தது, அதன் படிகளில் மட்டும் யாரும் நிற்காதவாறு.

      எதிர்பார்த்தது போல ஏதும் நடக்காமல் இருக்கவே சிறிது ஆசுவாசப்பட்ட எங்களை ஜெயராமன் சார் அழைத்த போதுதான் ஒரு திகில் உள்ளுக்குள்ளாக வேகமாக பரவியது. எங்களை அழைத்த போதே அடுத்த பேருந்திற்கு எங்களைப் போல காத்திருந்த இரண்டு மாணவர்கள் பள்ளியின் பக்கவாட்டிலிருந்து பின்புறம் ஓட, அவரருகில் இருந்த இரண்டு மேல்நிலை வகுப்பு மாணவர்களிடம் அவர்களைப் பிடித்து வரச் சொன்னார்.

      யார் முன் செல்வது எனதறியாது ஒவ்வொரு அடியாக முன் நகர்ந்துக் கொண்டிருந்த எங்களை, "வாங்கடா வேகமா" எனவும் பயந்துபோய் அவர் முன்பாக நின்றோம்.

      "எல்லாரும் அங்க போய் நில்லுங்கடா" என தலைமையாசிரியர் அறையை நோக்கி அவர் கை காட்டவும் ஏதோ  பெரிதாக ஒன்று நடக்கப் போகிறது என்பதை புரிந்துக் கொண்டோம். எங்களுடன் இருந்த இளையோர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழத் தொடங்கியிருந்தனர். அதுநாள் வரையில் சத்திவேல் அய்யாதான் அப்பள்ளியின் கண்டிப்பானவர் என்கிற எங்கள் நம்பிக்கையை வெறும் ஒற்றை நாளில் மாற்றியிருந்தார்.

      "ராமசாமி! அந்த பிரம்பை கொண்டு வா" என எங்கள் பள்ளியின் பணியாளை அழைத்த போதும்கூட எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அம்மைதானத்தில் வரிசையாக எல்லோரையும் மண்டியிட வைத்தவர் சரமாரியாக பிரம்பால் விளாசிய போது வயது வித்தியாசமின்றி அழத் தொடங்கினோம்.

     "ஸ்கூல் முடிஞ்ச ஒடனே வூட்டுக்கு போகாம இங்க எதுக்குடா ஆட்டம் போட்டுட்டு இருக்கீங்க? என அடுத்த பேருந்துக்கு காத்திருந்தவர்களை தயவு தாட்சண்யமின்றி அடித்தார். ஊழியர்கள் அறையில் இருந்த அத்தனை ஆசிரியர்களும் சத்தம் கேட்டு வெளியே வந்து அதிர்ச்சியுடன் பார்த்தனர் இதுவரை தாங்கள் பார்க்காத நிகழ்வொன்று அரங்கேறுவதை. இருப்பினும் எவரும் எங்களுக்காக பரிந்து பேச முன்வரவில்லை.

      அடி பொறுக்க முடியாத மாணவன்களில் ஒருவன், "சார், அந்த பஸ்ல கூட்டமா இருந்துச்சு சார். எடமே இல்ல. அதுனாலதான் அடுத்த பஸ்ல போலாம்னு இருந்தேன் சார்" என்றவனின் மயிரை இழுத்துப் பிடித்து மண் தரையில் தள்ளியவர், "அதான், அவ்வளவு எடம் இருந்துச்சே. அப்பறம் ஏண்டா போகல" என அவர் சொன்னது அப்பேருந்தின் மூன்று படிகளைத்தான். அதற்காகத்தான் வெறிக்கொண்டு அடித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்தபோது கிட்டத்தட்ட எல்லோரும் மனம் உடைந்து போனோம். 

       "உங்க பஸ் வர வரைக்கும் இங்கயே முட்டி போடுங்கடா" என சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்று விட்டார். ஆனால், பேருந்து வரும்வரையிலான அரைமணி நேரத்தை கடக்கவியலாது நாங்கள் அனைவரும் தகித்துக் கொண்டிருந்தோம்.

      வீட்டுக்குள் நுழையும் போதே பெரும் அழுகையுடன் நுழைந்தவனை ஒன்றும் புரியாமல் பார்த்த எனது பெற்றோரிடமும், "இனிமே நான் அந்த ஸ்கூலுக்கு போக மாட்டேன். நாளைக்கே எனக்கு TC வாங்கி கொடுங்க" என்ற போது என் அப்பா அதிர்ந்து போனார்.

      "என்னடா ஆச்சு. திடீர்னு வந்து சொன்னா எப்படி?" 

      "அதுலாம் எனக்கு தெரியாது. இனிமே நான் அந்த ஸ்கூல்ல படிக்க மாட்டேன். அங்கதான் நான் படிக்கணும்னு நெனச்சீங்கனா இனிமே நான் படிக்கவே போகல. என்னை எங்கயாவது mechanic shop - ல சேத்து விடுங்க" என்ற போது எனது மொத்த குடும்பமும் ஒன்றும் விளங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அழுகிறேன் என எனது அக்காவும் அழுது கொண்டிருந்தாள் காரணமே தெரியாமல். 

      இன்றொரு நாள் கடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்த அப்பா, "சரிடா. நீ அந்த ஸ்கூலுக்கு ஒன்னும் போக வேணாம். ஆனா, திடீர்னு வேற ஸ்கூல்ல சீட் எப்படி கெடைக்கும். எல்லாம் பாக்கணும்ல" என்பது எனக்கு புரிந்தது. ஆனாலும் எனது பிடிவாதத்தை நான் தளர்த்திக் கொள்ளப் போவதில்லை என்பதில் திடமாக இருந்தேன்.

    அடுத்தநாள் வெள்ளிக் கிழமை. இனிமேல் அந்தப் பள்ளிக்குச்  செல்வதில்லை என்பதில் திடமாக இருந்த அதே சமயம், பள்ளியில் நடந்தவற்றையும் எங்கள் வீட்டில் சொல்வதற்கில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன். அப்படி அவர்களிடம் சொன்னாலும்கூட அவர்களுக்கு என் வலி புரியப் போவதில்லை. எனது அன்றாடங்கள் அவர்களுக்கு வெற்றுக் கதைகள் மட்டுமே.  

     அடுத்த நாள் சனிக்கிழமை, எனது வகுப்புத்தோழன் செந்தில் வீட்டுக்கு சென்ற போதுதான் வியாழக்கிழமையின் உண்மைகளை தெரிந்துக் கொள்ள நேரிட்டது.

      எங்கள் வகுப்பில் இருக்கும் ரேகா, சரண்யப்ரியாவின் நெருங்கியத் தோழி. அவள் மூலமாகத்தான் அந்த உண்மைகசிந்திருந்தது. சக்திவேல் அய்யா இன்னும் இரண்டு வருடங்களில் ஒய்வு பெறுவதால், அவருக்கடுத்து லோகநாதன் சார்தான் தலைமையாசிரியர் என்பது உறுதியாகிருந்தது.  ஆனால் துணை தலைமையாசிரியர் பதவிக்கு  ஜெயராமன் சார் அல்லது  அனந்த கிருஷ்ணன் சாரை நியமிக்க வேண்டும். அங்குதான் யாரும் எதிர்பாராத சிக்கல் இருந்தது. இருவரும் ஒரே நாள் பணிக்கு சேர்ந்தவர்கள். அதனால் அனுபவத்தில் மூத்தவர் யார் என்பதில் குழப்பம் வரவே, அவர்களது பிறந்த நாளை கணக்கில் கொள்ளலாம் என பார்த்தபோது இருவரும் ஒரே நாளில்தான் பிறந்திருக்கிறார்கள். அதன் பிறகே, நிர்வாகத் திறமை யாரிடம் சிறந்து இருக்கிறது எனப் பார்ப்பதற்காக அவரிடம் கொடுக்கப்பட்டதுதான் அன்றைய தினம்.

     இதை எல்லாம் கேட்ட போது இன்னும் நொறுங்கிப் போனேன். எக்காரணத்தைக் கொண்டும் எனது முடிவில் இனி பின்வாங்கக் கூடாது என்பதில் இன்னும் உறுதியாக இருந்தேன்.

     மறுநாள், வேறெந்த பள்ளியிலும் இடமில்லை. அரசாங்கப் பள்ளியில் மட்டும் இடமிருக்கிறது. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என்பதை அப்பா தெரிவித்தார். அப்படியானால், நானும் படிப்பை தொடரப்  போவதில்லை என சொல்லவும் நீடித்த பெரும் வாக்குவாதத்தில், என்னை வீட்டருகில் இருக்கும் அரசாங்கப் பள்ளியில் சேர்க்க ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் ஒருவேளை பத்தாம் வகுப்பில் 475-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றால் மீண்டும் இப்போதிருக்கிற பள்ளியிலேயே சேர்த்துவிடுவார்கள் என்கிற உடன்படிக்கையில் சமரசத்திற்கு வந்தோம்.

     அதன் விளைவாக, SSLC -ல், 488 பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகவும், மாநிலத்தில் ஐந்தாமவனாகவும் தேர்ச்சி பெறவே அப்பாக்கும், அம்மாக்கும் அத்தனை அதிர்ச்சி, ஆனாலும் பேரானந்தம்.

       எனக்கு TC தர மறுத்த சக்திவேல் அய்யாவிடம் தனக்கு மதுரைக்கு பணி மாற்றம் காரணமாக குடும்பம் சகிதமாக இடம் பெயரப் போவதாக பொய் சொல்லிருந்தார் அப்பா. வெளிவந்த தேர்வு முடிவுகளைப் பார்த்து அதிர்ந்த சக்திவேல் அய்யா எங்கள் வீடு தேடியே வந்துவிட்டார். எல்லாவற்றையும் கேட்டறிந்தவர் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டவர் மீண்டும் என்னை தங்கள் பள்ளியில் சேருமாறு கேட்டுக் கொண்டார்.

    அடுத்து நான் டிப்ளமோ பண்ணப்போவதாக சொன்னபோது அப்பாவும் அதிர்ந்து போனார். காரணம், மருத்துவர் ஆவதுதான் எனது கனவு என அதுநாள் வரையிலும் சொல்லிக் கொண்டிருந்தவன் இந்த அற்ப காரணத்திற்காக ஒரு முக்கிய முடிவை நொடிப்பொழுதில் எடுத்ததை அவரால் தாங்கிக் கொள்ளவில்லை. இருந்தாலும் என் மனதை புரிந்துக் கொண்டவரான சக்திவேல் அய்யா மேலும் வற்புறுத்தாமல் விடைப்பெற்றுச் சென்றார்.

     ன் கனவுகளையும், என் உளவியலையும் அந்த அற்ப பதவி உயர்வுக்காக ஒற்றை நாளில் சிதைத்துச் சென்ற  அந்த மனிதனை அவசியம் சந்திக்க வேண்டுமா என யோசித்த போது எதிர்பாராவிதமாக சரண்யாவே நானிருந்த இடத்திற்கு மீண்டும் வந்துவிட்டாள்.

    வேறு வழியின்றி அவளுடன் செல்ல வேண்டியதாக இருந்தது. செல்லும் வரையிலும் எனது தற்கால வாழ்வில் நான் நலமாக இருக்கிறேனா என்பதை தெரிந்துக் கொள்வதற்கான கேள்விகளை பல வழிகளில் கேட்டுக் கொண்டே வந்தாள். 

     மூன்றாவது தளத்தில் நுழைந்து அந்த அறையின் கதவருகில் இருந்த இருக்கையில் என்னை அமரச் சொன்னவள், உள் சென்று தனது தந்தையை அழைத்து வருவதாக சொல்லிச் சென்றாள். 

     என்ன செய்வதென தெரியாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, "அரவிந்த்தே...." என ஒரு நடுங்கும் குரல் மிக மெலிதாக கேட்க தலை நிமிர்ந்த  போது ஒடுங்கிய உடலுடனும், வாயில் வெளியே வந்து வந்து செல்லும் நாக்குடனும், மடித்தே வைக்கப்பட்ட வலது கை அசைவு ஏதுமின்றி, தரைகள் உரசும் பிறழ்ந்து போன வலது காலுடன் தனது மொத்த தேகத்தின் எடையையும் இடப்பக்க உடலில் அசைவால் மட்டுமே நகர்த்திக் கொண்டு என் முன்னால் வந்து நின்றார் ஜெயராமன் சார்.

      மனம் அதிர எழுந்து நின்ற என் தலை முடியை வருடியவர், "நல்லா இருக்கியாப்பா?" என்றார். பதிலேதும் பேச முடியாமல் குரல்வளையை யாரோ நெருக்குவது  போலிருந்து.

    என்னை உற்றுப்பார்த்தவர் எனது வலக்கையை அவரது இடக்கையால் இறுகப் பற்றிக்கொண்டவர், "எல்லாம் என்னாலதான?" என்ற போது அவரது கண்ணீரின் முதல் துளி எனது கரங்களில் விழுந்தது.

     அடக்க முடியாமல் பொங்கி எழுந்த எனது கண்ணீர்த் துளி ஒன்று அவரது உள்ளங்கையில் வழிந்தோடியது - அவர் சொன்ன "எல்லாம் என்னாலதான" என்பதை என்னால் சொல்ல இயலாமல். 

    எல்லாம் முடிந்த அன்றைய பள்ளிக்கூட தினத்தின் நள்ளிரவில் எங்கள் வீட்டின் மொட்டை மாடியின் மேல் கவிந்த வானம் அதிர நான் கத்தியது - "...த்தா, உனக்கு கை கால் வெளங்காம போகும்டா. தாயளி"  என்பதை நினைத்து.

     

       

Saturday, April 25, 2020

வாடகை [சிறுகதை]

     ராகேஷ் அகர்வால் வீடு வந்து சேரும் போது மிகப் பதற்றத்துடன் இருந்தான், முன் எப்பொழுதும் இல்லாத விதமாக. ஒருமுறை தனது தங்கையின் கணவன் அமித் வாங்கிய கடனுக்காக தனது அடக்குக் கடை ஜப்திக்கு சென்ற போதும் கூட அதை மிக இலகுவாக, நிதானமாக சமாளித்து மீண்டுவந்தவனால் இப்போது அப்படி இருக்க இயலவில்லை. காரணம் - தனது அடகுக்கடை இருக்கும் கட்டிடத்தின் சொந்தக்காரரான   எண்பத்தைந்து வயதான ராமலிங்கத்துக்கு வந்த மாரடைப்பு.

     ருபத்தைந்து வருடங்களுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து பிழைக்க கோயம்புத்தூருக்கு குடியேறியது ராகேஷின் குடும்பம். அப்போதுதான் அவனுக்கு திருமணம் ஆகியிருந்தது. எனினும் இடமும், மனிதர்களும் புதிது என்பதனால் முதற்முறை தனியாகவே வந்திருந்தான். தனது குடும்பத்  தொழிலான வட்டிக்கடையைத் தவிர வேறெதுவும் தனக்கு சரிவராது என்பதை மிகத் துல்லியமாக அவன் கணித்து வைத்திருந்ததே அவனது இத்தனையாண்டுகால வெற்றிக்கு முதற்படியாக அமைந்தது.

     தனது சொந்தக்காரரான ஹேம்சந்த் ஏற்கனவே அடகுத் தொழிலை கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடத்திக்  கொண்டிருந்தமையால் அவருக்கு கடிதம் அனுப்பி விவரத்தை சொல்லித் தன்னை அவரிடம் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தான். அது அவர்கள் தொழில் கடைப்பிடிக்கும் மரபு என்பதனால் ஹேம்சந்த் மறுப்பேதுமின்றி அவனை வரச் சொல்லி பதில் கடிதம் அனுப்பினார். தங்களை வேருடன் பிடுங்கி வேறொரு நிலத்தில் மீண்டும் வேரூன்றி, கிளைப்பரப்பி பூத்துக் குலுங்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையாகவே வாய்த்திருக்கிறது போலும்.

     வந்த முதல் நாளன்றே தானிருந்த காந்திபுரத்தை ஒவ்வொரு தெருவாக நடந்தவாறே அவதானிக்கத் தொடங்கினான். தனது கடையை தொடங்குவதற்கு ஏதுவான ஒரு இடத்திற்கான தேடல் படலம் அது. பள்ளிப் படிப்பைத் தாண்டிராதவன் என்பதாலும், திருமணமானவன் என்பதாலும் தனது எந்தவொரு அடியும் தவறிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான்.

     வலுக்கட்டாயமாக கடைக்காரர்களிடமும், ஆட்டோ ஓட்டுநர்களிடமும் பேச்சுக் கொடுத்து ஒருவாறாக தமிழைப் புரிந்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான் இரு மாதத்திற்குள்ளாகவே - மொழி எத்தொழிலுக்கும் அச்சாரம் என்பதனால், குறிப்பாக வட்டித் தொழிலுக்கு. போலவே ஒவ்வொரு மாலையும் வ.உ.சி பூங்காவுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் முதியவர்களிடம் உரையாடுவதன் மூலம் தமிழை இன்னும் சற்று வேகமாக கற்றுக் கொண்டான்.

      மொழி இனி ஒருத் தடையில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு வந்த போது மாதங்கள் ஆறு கடந்திருந்தன. இடைப்பட்ட காலத்தில் ஹேம்சந்திடம் தொழிலை அதன் நெளிவு சுழிவுகளுடன் கற்றுக் கொண்டே தனது தொழிலை எப்படித் தொடங்குவது, எப்படி அபிவிருத்தி செய்வதென காந்திபுரத்தையும்  அவதானித்துக் கொண்டிருந்தான். காலம் மாறுவதை உணர்த்துக் கொண்டவன் அதற்கேற்றாற்போல இத்தொழிலையும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டான்.

     ராண்டுகளுக்குப் பிறகு இதுதான் தொழிலைத் தொடங்குவதற்கு சரியான தருணம் என்பதை மனதில் கொண்டு, தனது தேடல்படலத்தின் விளைவாய் தனது கடைக்குத் தகுந்த ஓர் இடத்தை தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான். எப்போதும் பரபரப்பு மிகுந்த சாலையாக இருக்கும் கிராஸ் கட் ரோட்டை செங்குத்தாக இணைக்கும் ராம்நகரின் ஒரு சாலை. ஏனைய சாலைகளை போலல்லாது அச்சாலையிலிருந்த ஒரு பள்ளி, திருமண மண்டபம், ஓரிரு ஜவுளிக்கடைகள், சிறு அங்காடிகள் மற்றும் கிராஸ் கட் ரோட்டையும் அச்சாலையையும் இணைக்கும் பிராதன இடத்தில் வரப்போகும் மிகப் பெரிய ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் எனத் தனது தொழிலுக்கு உகந்த இடமாக நிச்சயம் உதவக்கூடும் என்பதை உணர்ந்திருந்தான்.

     சற்றே விசாலமாக கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றாக உருக்குலைந்து, சமன் செய்ய முடியாத வருமானத்திற்காக வேறொன்றாக புனரமைக்கப்பட்டு காலத்தின் கோரப்பற்களில் சிக்குண்டு கிடக்கும் வீடொன்றை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். வீட்டின் முன்புள்ள நிலத்தில் பல வருடங்களாக இளைப்பாறிய இரு தென்னை மரங்கள், ஒரு கொய்யா மரம், சீதா மரம் மற்றும் வீட்டின் முன்நிலத்தை தனது பூக்களால் உள்நுழைபவரை வரவேற்கும் பவளமல்லிச் செடியென தான் முதற்முறை பார்த்த காட்சிகள் முற்றிலுமாக மாறித் தொடர முடியாத சூழ்நிலையின் அறிகுறிகளாக நுழைவாயிலின் இருபுறமும் முற்றுப்பெறாத இருக்கட்டிடங்கள் அமைதியாய் அமர்ந்திருந்தன இரு பெரும் முதிர்க்கன்னிகளாக செந்நிற தேகத்துடன்.

     இடத்தை தேர்வு செய்தவுடன் அவ்வீட்டின் நபர்களையும் நன்கு அவதானித்து வைத்திருந்தான். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு மேலாக தட்டச்சு நிலையம் நடத்திவரும் ராமலிங்கத்திற்கு நான்கு பெண்களும் ஒரே ஒரு பையனும் வாரிசுகள். எல்லோருக்கும் திருமணமாகி சில வருடங்கள் கடந்திருந்த நிலையில், அவரது மகனான கணேசனும் தனது தந்தையுடன் சேர்ந்து தட்டச்சு நிலையத்தைப் பார்த்துக் கொண்டான். கால மாற்றத்தில் ஒவ்வொரு தொழிலும் வேறொரு தொழிலின் முன்பாக பலியிடப்பட்டுக் கொண்டிருந்த வரிசையில் தட்டச்சு நிலையம் கணினியின் காலடியில் குற்றுயிராய் வீழ்ந்துக் கிடந்தது உயிர்விடும் மூச்சிரைப்புடன். அதிலிருந்து மீண்டு வரும் முயற்சியாகத்தான் ராமலிங்கம் தனது வீட்டின் முன்பகுதியை கடைகளாக மாற்ற முயற்சித்து அதை முடிக்க இயலாமல் பணப் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருப்பதுவரை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றான்.

     "சார்...."

     "யாருப்பா?" என வெளியில் வந்தார் ராமலிங்கம்.

     "வணக்கம் சார். என் பேரு ராகேஷ். நான் என்னோட கடைக்கு  வாடகைக்கு ஒரு எடத்த தேடிட்டு இருக்கேன். அது விஷயமா உங்ககிட்ட பேசணும்."

     "அப்படியா. உள்ள வாங்க."

      தன் வீட்டின் கூடத்திற்கு அழைத்துச் சென்ற ராமலிங்கம் அவ்வறையின் நுழைவாயிலில் சாலைப்பார்த்து போடப்பட்டிருக்கும் தனது பிரதான சிம்மாசனமான சாதாரண மர நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு ராகேஷையும் எதிரே அமரச் சொன்னார்.

      சற்றே வீட்டை ஒரு சுற்று பார்த்த ராகேஷ் எப்படியும் அவ்வீட்டின்ஆயுள் நாற்பது இருக்கக்கூடும் என்பதை உணர்ந்துக் கொண்டான்.

      "ம்...சொல்லுங்க" என்றார் ராமலிங்கம் ஒரு அதிகாரத் தோரணையில்.

      ஆத்தோரணையை எதிர்பார்க்காத ராகேஷ் மெலிதாக தனது பின்கதையை அவருக்கு ஏற்றவாறு கத்தரித்துக் கூறிவிட்டு தனது கடைக்கு அவர்கள் வீட்டின் முன்புள்ள  இடம் வாடகைக்கு கிடைக்குமா என மிகப் பணிவுடன் கேட்டான்.

      சற்றே பெருமூச்சுவிட்டபடி ராமலிங்கம், "ம்ம்ம்...கொஞ்சம் லேட் ஆகும்ங்களே. இன்னும் வேலை முடியல. ஆறு மாசம் ஆகும்னு நெனைக்கறேன். அப்ப வேணும்னா வாங்க பேசுவோம்" என தனது இயலாமையை மறைத்துப் பேசினார்.

      எல்லாம் அறிந்த ராகேஷ் முழு தயாரிப்புடன் தனது தூண்டிலை ஒவ்வொன்றாக வீசினான். "என்ன சார்? ஆறு மாசமா? இன்னும் சிமெண்ட் பூசி white wash பண்ணா வேலை முடிஞ்சுடும் இல்லையா? அதுக்கு ரெண்டு மாசமே தாராளம். ஏன் சார் எனக்கு கொடுக்க இஷ்டமில்லையா? open-ஆ சொல்லுங்க நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன். உங்க எடம். உங்க இஷ்டம்தானே" என மிக மென்மையாக வார்த்தைகளால் அவரறியாத வண்ணம் தனது துண்டிலுக்கு அவரது வார்த்தைகளை கவர்ந்திழுத்தான்.

      "சே..சே! அப்படிலாம் இல்லைங்க. நாங்க வாடகைக்கு விடத்தானே கட்றோம்" என பட்டும்படாமல் சிரித்து மழுப்ப நினைத்தார்.

     "அப்பறம் என்ன சார்?" என விடாமல் தூண்டிலிட்டான்.

     "அது...வந்து...இப்ப எங்களுக்கு பணம் கொஞ்சம் மொடையா இருக்கு. கடைய கட்டிமுடிக்க கொறஞ்சது ஆறுமாசமாது ஆகும். அதனாலதான்  சொல்றேன்" என அவன் எதிர்பார்த்த பதிலை சொல்லவும் அதற்காகத்தான்  காத்திருந்தவன் போல தொடர்ந்தான்.

     "ஓ!!! என்ன சார்... 80% கட்டி முடிச்சுடீங்க இன்னும் 20% தான அசால்ட்டா பண்ணிடுவீங்க சார்" என நம்பிக்கை ஏற்றினான்.

     உற்சாகமாக சிரித்தார் ராமலிங்கம்.

     தன்னிடம் சிரித்துப் பேசுகிறவர்கள் உண்மையிலேயே தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார்கள் என நம்புகிற பலவீனம் அவருக்கு இருப்பதை உணர்ந்துகொண்ட ராகேஷ், "சார். எனக்கு ஒரு idea. கேக்கறீங்களா?" என்றவனிடம் "சொல்லுங்க" என ஏதுமறியாமல் சொன்னார்.

     "சார். எப்படி பாத்தாலும் கடைக்கு advance வாங்குவீங்கல? எவ்வளவு சார் சொல்லறீங்க?"

     "அது வந்து பத்தாயிரம்"

     " சரி சார். ரெண்டு கடைக்கு இருபதாயிரம் ஆச்சு. வாடகை எவ்வளவு சார்?"

     "ரெண்டாயிரம்"

     தான் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக இருப்பதன் ஆச்சரியத்தை தனது முகபாவனையில் வெளிப்படுத்தாமல், "சரிங்க சார். நீங்க கடை வாடகைக்குனு வெளிய எழுதிப் போடுங்க. இன்னொரு கடைக்கும் கண்டிப்பா சீக்கிரமே ஆளு கெடைச்சிடும். அப்ப இருபதாயிரம் advance கைல இருந்தா உங்களுக்கு மிச்சம் எவ்வளவு தேவைப்படும்?"

      கணக்குகள் மிகச் சுலபமாக சமன் ஆவதைக் கண்டு குதூகலத்துடன் ராமலிங்கம், "என்ன? ஒரு அம்பதாயிரம் தேவைப்படலாம். அதுக்கு என்ன பண்ண? என அவரே அறியாமல் ராகேஷிடம் கேட்க, அவன் மெலிதான புன்முறுவலுடன், "ஒண்ணும் பிரச்சனை இல்ல சார். நானே அதை உங்களுக்கு கொடுக்கறேன். நீங்க வாடகைல கழிச்சுட்டே வாங்க. நடுவுல கொஞ்சம் கொஞ்சமா கூட கணக்க முடிச்சுக்கோங்க. ஒரு பிரச்சனையுமில்ல" என சொல்லவும் சில நிமிடங்கள் மௌனித்தார் ராமலிங்கம்.

      அதை உணர்ந்த ராகேஷ் இன்னும் சற்றே கவனமாக," புரியுது சார். திடீர்னு ஊரு, பேரு தெரியாதவன் வந்து சொல்றத நம்பி எப்படி எறங்கறதுனு யோசிக்கறீங்க போல. நியாயம்தான்." என சொல்லிக்கொண்டிருக்கும் போதே தனது பையில் கைவிட்டு ஐநூறு ரூபாய் கட்டுகளாக ஐம்பதாயிரம் ரூபாயை அவர் முன்னிருந்த மேசையில் வைத்துவிட்டு,"நீங்க என்னை நம்பலானாலும், நான் உங்களை நம்பறேன், சார். இப்ப போயிட்டு நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன். உங்களுக்கு சரினு பட்டுச்சுனா agreement போட்டுக்கலாம். இல்லனா அப்ப நான் இந்த பணத்தை திரும்பி வாங்கிக்கறேன் சார்" எனப் புறப்படத் தயாரான ராகேஷிடம் மறுதலிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார் ராமலிங்கம்.

     கணக்கிட்டு ஒருவாரம் கழித்தே ராகேஷ் மீண்டும் ராமலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றான். அப்போது அங்கு ராமலிங்கத்தின் மனைவி லட்சுமி, மகன் கணேஷன் மற்றும் அவன் மனைவி ரம்யா என நால்வரும் இருந்தனர் இவன் எதிர்பார்த்ததைப் போலவே.

     "சாரி சார். திடீர்னு ஒரு அவசர வேலை. சென்னை வரைக்கும் போய்ட்டு வரமாதிரி ஆயிடுச்சு. அதான் வர முடியல" எனப் பொய்யான ஒரு காரணத்தை சொன்னவனை அமரச் சொன்ன ராமலிங்கம், தனது குடும்பத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். எல்லாம் கனிந்து வருவதாய் உணர்ந்துக் கொண்டான். எனினும் தனது முகப்பாவனையில் எவ்வித சலனமும் இல்லாதவாறு மிகக் கவனமாக அமர்ந்திருந்தான்.

      "திடீர்னு நீங்க வந்து அய்ம்பதாயிரம் கொடுத்துட்டு போய்ட்டீங்க. எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. சரி ரெண்டு நாள் கழிச்சு வந்துடுவீங்க, உங்கள்ட்ட திருப்பி கொடுத்தாடலாம்னு பாத்தா ஆளைக் காணோம். ரொம்ப பயந்து போய்ட்டேன். அப்பறம்தான் வீட்ல வெவரத்தை சொன்னேன். அவங்களும் பயந்துட்டாங்க. எங்களுக்கு கொஞ்சம் time வேணும். இப்ப இந்த பணத்தை நீங்களே வாங்கிக்கோங்க. ஒரு ரெண்டுநாள் கழிச்சு வாங்களேன். பேசுவோம்" என்ற ராமலிங்கத்தை புன்னகையுடன் ஆமோதித்தான். இது எல்லாவற்றையும் மிக அமைதியாகவும், உன்னிப்பாகவும் கணேஷன் அவதானித்துக் கொண்டிருந்தான்.

     "சரி சார். நான் வரேன்" எனக் கிளம்ப எத்தனித்த ராகேஷை வலுக்கட்டாயமாக அமர்த்தி காஃபி கொடுத்தனுப்பினார்.

      ம்முறை மிகச் சரியாக இரண்டு நாட்கள் கழித்து நல்ல நேரமாக பார்த்து ராமலிங்கத்தின் வீட்டையடைந்தான். இவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை போலவே ராமலிங்கமும் அவரது மகன் கணேசனும் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

      வந்தவனை அமரச் செய்த ராமலிங்கம்,  "வீட்ல பேசினோம்ங்க. எல்லாரும் சரினு சொல்றாங்க. இருந்தாலும் எம்பையந்தான் உங்கள்ட்ட ஒருமொறை பேசிட்டு அப்பறம் செய்யலாம்னு சொல்றாப்ல. என்ன சொல்றீங்க?"

     "கண்டிப்பா சார். நீங்கதானே ஓனர்" என லாவகமா சொல்லிச் சிரித்தவாறே கணேசனைப் பார்த்து, "சொல்லுங்க சார்" என்றான் அச்சிரிப்பை சற்றும் உலராது.

     "ஹ்ம்ம். அப்பா சொன்னாரு. நமக்கு சுத்தி வளைச்சுலாம் பேச வராது. நீங்க தர பணத்துக்கு வட்டி என்ன சொல்றிங்க?" என எவ்வித முகபாவனையுமின்றி சொன்ன கணேஷன் தன்னை ஆழம் பார்ப்பதை புரிந்துக் கொண்டவன்," ஐயோ சார். நான் அடகுக் கடைதான் வைக்க போறேன். அங்க வரவங்களுக்குத்தான் வட்டி. இங்க நான் தானே உங்கள தேடி வந்துருக்கேன்" என மெல்லச் சிரித்தவாறே, "அதுவுமில்லாம நான் மொத மொதலா தொழில ஆரம்பிக்க போறேன். அதை நல்லவிதமா செய்யலாமே? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலைனா நீங்களே agreement ரெடி பண்ணிடுங்க. என்ன நான் சொல்றது?" என ராமலிங்கத்தை ஒரு பார்வை பார்த்தான். அவர் தனது மீட்பரைக் கண்டுகொண்ட ஆனந்தத்தில் அமர்ந்திருந்தார்.

      கணேசனுக்கும், "சரி. பிடி நம்ம கைலதானே இருக்க போகுது" என்ற நம்பிக்கை வந்த போது தனது அப்பாவை தனியே அழைத்துச் சென்று அதில் தனக்கு முழு சம்மதமில்லை என்றாலும் அவர்கள் வீட்டின் பத்திரம் தனது சகோதரிகளின் திருமணத்திற்காக அடமானம் வைப்பதும், மீட்பதுமான கால சுழற்சியில் இம்முறை தனது தங்கை பூமாவின் முறையாக அடமானத்தில் இருப்பதால் வேறு வழியின்றி  சம்மதம் சொன்னவன் agreement -யை தானே தயார் செய்வதாய் சொல்லி வெளியே சென்றான்.

     று மாதங்களுக்குப் பிறகு, எல்லாம் சரியான திசையில் தான் கணித்தவாறே செல்வதில் மகிழ்ச்சியடைந்த ராகேஷ், ஹேம்சந்த் மற்றும் ராமலிங்கத்தின்  குடும்பத்தினரை அழைத்து  தனது அடகுக் கடைக்கு பால் காய்ச்சினான். அதே நேரத்தில் அப்பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரும் திறக்கப்பட்டது. நான்கு தளங்களைக் கொண்ட அதன் அமைப்பும், ஒரே இடத்தில் எல்லாவற்றையும் வாங்க ஏதுவான வசதியும், அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய சிறு அங்காடிகளை ஒரே நேரத்தில் அடித்து நொறுக்கப் போவதையும், மிக நிச்சயமாக கோவையின் அடையாளமாக மாறக்கூடிய சாத்தியங்களையும் அப்போதே கணித்துவிட்டான் ராகேஷ்.

     தனது கடை திறக்கும் முன்பாக நடைப்பயிற்சி செல்லும் ராகேஷ் காணும் காட்சிகள் அப்போது சற்று மாறியிருந்தன. எப்போதும் அமைதியாய் இருக்கும் எட்டு மணியளவில் பல இளைஞர்களும், சில இளைஞிகளும் சற்றே உலர்ந்த நீல நிற சீருடைகளுடன் அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பணிபுரிய சென்று கொண்டிருப்பதும், எட்டே முக்காலுக்கு பின்னர் மித வேகத்துடன் ஓடுவதும் அத்தெருவின் அன்றாடங்களில் ஒன்றாகிப் போனது. காரணம், ஒன்பது மணிக்குள்ளாக வருபவர்களுக்கு மட்டுமே முழுநாள் சம்பளம் கணக்கில் வைக்கப்படுவதும் இல்லையெனில் அவர்களது கணக்கில் அரைநாள் சம்பளம் மட்டுமே குறித்துக் கொள்ளப்படுவதாகவும் தெரிந்துக்கொண்டவன் அவர்களின் வியர்வையில் ஓர் அறுவடைக்குத் தயாரானான்.

     இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அக்கடைக்கு செல்வதை வழக்கமாகிக் கொண்டவன் அங்கு பணிபுரியும் செல்வத்தை தனது நட்பு வட்டத்தில் இழுத்துக் கொண்டான். செல்வத்தின் சொந்த ஊர் மற்றும் அக்கடை நடைபெறும் விதம் என பேச்சினூடாக தெரிந்துக் கொண்டவன் அன்றிரவு செல்வம் சோர்ந்து வருவதைக் கண்டு என்ன என்று கேட்டான்.

     "ஒண்ணுமில்லண்ணா." என சொன்னவனிடம் "அட! சொல்லு செல்வம்." என தனது கடையை மூடியவாறே ராகேஷ் கேட்டான்.

     "நமக்கு இங்க தங்கறதுக்கும், திங்கறதுக்கும் மொதலாளியே வசதி பண்ணிருக்காங்க. ஆனா, சம்பளம் பத்தாந்தேதிதான் தராங்க. ஆனா, ஊர்ல பத்தாந்தேதி வரைக்கும் அவங்களால சமாளிக்க முடியலன்னு அம்மா சொல்லிச்சு. அதான் என்ன பண்றதுனு தெரியலண்ணா"

      அமைதியாக கேட்ட ராகேஷ், "புரியுது செல்வம். உனக்கு இப்ப சம்பளம் வருதுல்ல. அதை சொல்லி மளிகை கடை, பால்காரங்கிட்ட சொல்லலாம்ல?"

      "சொல்லலாம்ண்ணா, ஆனா ஏற்கனவே எல்லார்ட்டயும் கொஞ்சம் கடனிருக்கு, அதுனால அவங்கள்ட்ட சொன்னாலும் பிரோஜனமில்ல. இங்க சம்பளம் முன்னாடியே கொடுத்தா கூட சமாளிச்சுடலாம். ஆனா, அதுக்கும் வழியில்ல" என சோடியம் விளக்கில் தரையில் விழும் தனது நிழலைப் பார்த்தவாறே பேசி அமைதியானான்.

      "அட. இவ்வளவுதானா. நான் ஒரு ஐடியா சொல்றேன். உனக்கு ஓகேனா பண்ணலாம்" என தான் நினைத்த இடத்தில் அவன் வந்து நிற்பதைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தான்.

      "என்னண்ணா?" என ஆர்வமின்றி  செல்வம் கேட்க, "நான் உனக்கு மாசா  மாசம்  ஒண்ணாந்தேதி உன்னோட சம்பள பணத்தை தரேன். பத்தாந்தேதி நீ எனக்கு திருப்பி கொடு. என்ன சொல்ற?" எனக் கேட்க, "வேணாம்ண்ணா." என தயங்கிய செல்வத்திடம், "ஏன், உனக்கு நான் கைமாத்தாதான் தரேன். இதே மாதிரி உன்னோட வேலை பாக்கிறவங்களுக்கு தேவைப்பட்டாலும் சொல்லு, பண்ணிக்கலாம். உனக்கு எப்பவுமே அசல் மட்டும்தான். மத்தவங்களுக்கு கமிஷன் மாசத்துக்கு இருவது ரூபா மட்டும் கொடுத்தா போதும்" என அவர்களது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தனது தொழில் புத்தியை பயன்படுத்திக் கொண்டான்.

      உள்ளூரில் குடும்பம் படுகிற அவமானத்திற்கு இது எவ்வளவோ மேல் என செல்வம் சம்மதித்த மறுகணமே ராகேஷ் அவனுக்கு இரண்டாயிரத்து ஐநூறை கொடுத்து,"இந்தா செல்வம், சீக்கிரம் நாளைக்கே வீட்டுக்கு மணி ஆர்டர் பண்ணிடு" என்றவாறு இருவரும் தங்களது வீட்டிற்கு சென்றனர்.

       தான் எதிர்பார்த்த மாதிரியே செல்வம் மூலமாக அவனுடன் பணிபுரிபவர்களில் நூற்றுக்கும் மேலானவர்கள் ராகேஷின் இப்புதிய திட்டத்தில் இணைந்தனர். கொடுப்பதும், வாங்குவதும் அதில் மாதம் நபர் விதம் இருபது ரூபாயை பிடித்துக் கொள்வதும் அவர்கள் வாழ்வின் அன்றாடங்களாகின. ஒரு ருபாய் போட்டால் குறைந்தது ஒரு பைசாவது வட்டி வர வேண்டும் என்ற தன் கணக்கு ராமலிங்கத்துக்கு கொடுத்த ஐம்பதாயிரத்தில் தவறிப்போனதை இம்மாத சுழற்சியில் பன்மடங்கு அறுவடை செய்து கொண்ட ராகேஷ் அன்றைய நாள் தனது கடையின் வாசலில் ஓர் அறிவிப்பு பலகையை வைக்க அது காட்டுத்தீ போல அங்கிருந்த சிறு வணிகர்களிடமும், தினக்கூலிகளிடமும் பரவியது.

     "வட்டியில்லாக் கடன்" என்பதுதான் அது. நம்ப மறுத்தாலும் அந்த விளம்பரம் மூலம் அவனது கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் பன்மடங்கு அதிகமாயினர். வருபவரிடம் மிக மென்மையாக, நாகரிகத்துடன் நடந்து கொண்டது மட்டுமல்லாது வட்டியில்லாக் கடன் என்பது சிறு நிபந்தனைக்கு உட்பட்டது என தெளிவாக விவரித்தான். அஃதாவது கடன் வாங்கும் பணம் ஐயாயிரத்துக்குள் என்றால் மூன்று மாதங்களுக்கும், பத்தாயிரம் வரை என்றால் ஐந்து மாதங்களுக்கும், இருபதாயிரம் வரை என்றால் ஆறு மாதங்களுக்கும் வட்டியில்லை என தொகைக்கு ஏற்ப வட்டியற்ற காலத்தை வகுத்திருப்பதை மிகத் தெளிவாக வெளிப்படைத்தன்மையுடன் அவன் தெரிவித்தது வாடிக்கையாளர்கள் அதிகமாக உதவியது. அதே வேளையில் இதைக் கேள்விப்பட்ட ஹேம்சந்த் அதிர்ச்சியுடன் ராகேஷை சந்தித்து பேச வந்தார். அப்போது மக்கள் கூட்டம் வெல்லக்கட்டியை மொய்க்கும் எறும்புச் சாரையாக இருப்பதைக் கண்டு ராகேஷை தனது இல்லத்தில் வந்து அன்றிரவு சந்திக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.

     கடையடைக்க பதினோரு மணி ஆன போதிலும் ஹேம்சந்த் அழைத்த மரியாதைக்கு அவர் இல்லத்திற்கு விரைந்து சென்றான். அவனது வருகைக்காகவே காத்திருந்தது போல அவர் வாசலில் அமர்ந்திருந்தார். வந்தவனை அவசரம் அவசரமாக தனது வீட்டின் பக்கவாட்டிலுள்ள மாடிப்படியின் வழியாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவர் சற்றே கோபத்துடன்," ஹரே முட்டாள். நீ என்ன பண்றனு தெரிஞ்சுதான் பண்றியா?" எனக் கேட்கவும் அவர் தனது வட்டியில்லாக் கடன் திட்டத்தை பற்றித்தான் பேசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ராகேஷ் மிக நிதானமாக, "சாச்சா, நீங்க கேட்கறது புரியுது. ஆனா, இது கண்டிப்பா நமக்கு பலன் கொடுக்கும்" என சொன்னவனை ஒன்றும் புரியாதவராக பார்த்தார்.

     "வட்டிதான் நமக்கு சோறு. அது இல்லன்னா பட்டினிதான். புரியுதா?"

     "அதையேதான் சாச்சா நானும் சொல்றேன். வட்டிதான் நமக்கு சோறு. அது இப்ப கெடைக்கறத விட கொஞ்சம் அதிகமாவே இனி கெடைக்கும்" என்றவனை, "எப்புடி?" எனக் கூர்மையாக பார்த்தார் தேர்வெழுதும் மாணவனை அவன் பின்னாலிருந்து அவதானிக்கும் ஓர் ஆசிரியரைப் போல.

     "சாச்சா, நீங்களே நல்லா யோசிச்சுப் பாருங்க. இத்தன  வருஷ அனுபவத்துல நம்மள்ட்ட சொன்ன தேதிக்கு கடனை சரியா திருப்பி கொடுக்கறவன் எத்தன  பேரு? நூத்துல பத்துகூட தேறாது. அதே மாதிரி இந்த மனுஷங்களுக்கு கொஞ்சூண்டு ஆசைய துண்டினாலே போதும் அவங்களா வந்து விழுந்துடுவாங்க. அதேமாதிரி அவங்கள்ட்ட இலவச தவணை காலம் முடிஞ்சதுனா நாம பொதுவா வாங்கற வட்டியை விட கொஞ்சம் அதிகமாதான் வாங்கறேன். ஆனா அவங்க யோசனைலாம் எப்படியும் அந்த டைத்துக்குள்ள கட்டிடலாம்னுதான் இருக்கும். நீங்களே சொல்லுங்க அப்படி எத்தனை பேரால கட்ட முடியும்னு. Terms and conditions -ய அவங்கள்ட்ட தெளிவா சொல்லி நல்ல பேரை வாங்கின மாதிரியும் ஆச்சு. நமக்கு தேவையான வட்டியை வாங்கின மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லுல நெறைய மாங்கா அடிக்கற வித்தை" என ராகேஷ் சிரிக்கவும் "இது சரியா வரும்னு நெனைக்கற?" என ஹேம்சந்த் வியந்து கேட்க, "சாச்சா, இது சின்ன சாம்பிள்தான். நான் நெனைக்கற மாதிரி நடந்துச்சுனா என்னோட அடுத்த கட்டம் இதுவரைக்கும் நம்ம பிஸினெஸ்ல யாரும் பண்ணாத ஒரு வேலைய பண்ண போறேன்" என ஆகாயத்தைப் பார்த்தவனை "நீ இப்ப பண்றதையே இது வரைக்கும் எவனும் பண்ணதில்ல" என தன் நெஞ்சில் கைவைத்தார். வெடித்துச் சிரித்த ராகேஷ் விடைபெற்று தன் வீட்டுக்குச் சென்றான்.

     ல்லாம் தான் கணித்தவாறே செல்ல ஆறு மாதங்களுக்குப் பிறகு தனது அடுத்த திட்டத்தை செயல் வடிவமாக்க ஆரம்பித்தான். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் தங்க நகைகள் வங்கிகளில் இருப்பதும் அதை திருப்பி எடுக்க இயலாமல் தவிக்கும் அவர்களது நிலைமையை  ஆதாயமாகக் கொண்டும், தனது முந்தய வட்டியில்லாக் கடன் மூலமாக ஈட்டிய நற்பெயரையும் பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் வரும்போது தனது அடுத்த திட்டத்தை ஒவ்வொருவராக  விவரித்தான்.

      வங்கியில் பெற்ற நகைக்கடனை அடைக்க முடியாதவர்களுக்கும், நிலைமை கை மீறி ஏலத்துக்கு செல்லும் நகைகளுக்கு தான் கடன் தருவதாகவும், அதற்கு அடமானமாக அதே நகைகளை வாங்கிக் கொள்வதாகவும், கடன் பெற்ற ஓராண்டுக்குள் வங்கியை விட குறைவான வட்டியையும், அதற்கு மேலானால் வங்கியின் வட்டி விகிதமும், இரண்டாண்டுகளுக்கு மேலானால் ஒன்று முழுவதுமாக வட்டியை அசலுடன் சேர்த்துக் கட்டி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அசலுக்கும், வட்டிக்குமான தொகைக்கு ஈடாக நகையை தனது அடக்குக் கடையே சொந்தமாக்கிக் கொள்ளும் என்ற திட்டமும் மிகுந்த பலனை தந்தது.

     ஆனாலும், மற்ற அடக்குக் கடையை போலல்லாது மிக மென்மையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் ஆரம்பம் முதலே நடந்துக் கொண்டான். அதனாலேயே அவனது பெயர் ராம் நகர் முழுவதும் பிரபலமானது.

      தற்கிடையே ராமலிங்கத்துக்கு, கணேசனுக்கும் இடையே உண்டான குடும்பத் தகராறில் கணேஷன் தனது மனைவியையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட ராமலிங்கம் சற்றே துவண்டு போயிருந்தார். அதை வைத்து மற்றுமொரு புதுக் கணக்கை தொடங்க ராகேஷ் திட்டமிட ஆரம்பித்தான்.

     ஓரிரு மாதங்கள் கழித்து காலாவதியான தனது வாடகை ஒப்பந்தத்தை தானாகவே புதுப்பித்து, பழைய வாடகையுடன்  ஐநூறு ரூபாயை அதிகரித்து புது வாடகையாக மாற்றி அவரிடம் கொடுக்க சென்றான்.

    எப்போதும் போல வீட்டின் கூடத்தில் இருக்கும் தனது பிரதான இருக்கையில் அமர்ந்திருந்த ராமலிங்கத்தை பார்த்து வணக்கம் வைத்தவனை உள்ளே வரச் சொன்னார்.

    "சார், நேத்தோட நம்ம rental agreement முடிஞ்சுடுச்சு. இந்தாங்க சார் அதோட renewal copy. இந்த மாசத்துல இருந்து ஐந்நூறு ரூபாய் அதிகம். நீங்களும் பாத்துக்கோங்க சார்" என அவன் கொடுத்த காகிதங்களை துளியும் பொருட்படுத்தாமல் தன்  முன்னிருந்த மேசையில் போட்டவர் பெருமூச்சு விட்டவாறு தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

    "என்ன சார்? உடம்பு எதுவும் சரியா இல்லையா? ஆஸ்பத்திரி வேணா போய்ட்டு வரலாங்களா? எனக் கேட்கவும் "அதுலாம் ஒண்ணுமில்லப்பா. இந்த கணேஷன் இப்படி வீட்டை விட்டு போயிட்டானே. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மத்தபடி ஒண்ணுமில்ல." என அதே உடல் மொழியுடன் அமர்ந்திருந்தார்.

     "ஏன் சார்? என்ன பிரச்சனைனாலும் பேசி தீர்த்திருக்கலாமே சார்" என சொன்னவனை ஏறெடுத்து பார்த்தவர்,"ஒரே ஒரு வார்த்தை தான்பா. எதுக்குடா இப்படி செலவு பண்ற. முன்ன மாதிரி நமக்கு typewriting institute -ல இருந்து வருமானமில்ல. வெறும் வாடகையை நம்பித்தான் இருக்கோம். அதுவும் உனக்கு பொட்ட புள்ளையா போச்சு. நாளைக்கு அதுக்கு ஏதாவது சேத்து வைக்கலாம்ல-னு தான் கேட்டேன். அன்னிக்கே சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போய்ட்டான்" என கண்ணோரம் கசிந்த கண்ணீரை தனது வேஷ்டியால் துடைத்துக் கொண்டார்.

      "புரியுது சார். கவலைபடாதீங்க. கொஞ்ச நாள் போனா அவரே உங்கள்ட்ட திரும்பி வந்துடுவாரு" என ஆறுதல் சொல்லிவிட்டு கடைக்குத் திரும்பினான்.

      பிற்பாடுதான் ராகேஷுக்கு முழு விவரமும் தெரியவந்தது. கணேஷன் தனியாக தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு தனது வட்டிக்கடையின் இடத்தை காலி செய்து தருமாறு ராமலிங்கத்திடம் கேட்க அதற்கு அவர் மறுதலித்துள்ளார். அதன் நீட்சியின் ஒரு புள்ளியில்தான் ராமலிங்கம் கணேஷனின் சுயமரியாதையை உரசும் விதமாக அவனை கையாலாகாதவன் எனக் கூறிய உச்ச தருணமொன்றில் வெளியேறியதாக அறிந்துக் கொண்டான்.

       அதனால் எந்த நொடியிலும் தனக்கு கீழே கணேஷன் குழி பறிக்கக் கூடுமென அவ்வப்போது ராமலிங்கத்துக்கும் அவரது மனைவிக்கும் தேவையானவற்றை ராகேஷ் கவனித்துக் கொண்டான். சில மாதங்கள் கழித்து அதன் ஊடாக ராமலிங்கத்திடம் அவ்வளவு பெரிய வீட்டை அவர்களது தேவைக்கேற்ப சுருக்கிக் கொண்டு உபரி இடத்தை வீட்டு வாடகைக்கு விட்டால் அது இன்னும் உதவக்கூடுமே என தன் எண்ணத்தை சொல்ல ராமலிங்கத்துக்கு அந்த யோசனை பிடித்துப் போனது. அதன் விளைவாக வீட்டின் பக்கவாட்டிலும், பின்புறமும், முதற் தளத்திலேயும் மூன்று குடும்பங்களுக்கு வாடகைக்கு அமர்த்தினார். அதற்கு ஒத்தாசையாக இருந்த ராகேஷிடம் அவ்வப்போது நன்றி தெரிவித்துக் கொண்டார்.

        தினங்கள் செல்ல தனது அடக்குக் கடையை விரிவாக்கம் செய்ய ராமலிங்கத்துக்கு சொந்தமான மற்றுமொரு கடையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்ட ராகேஷ், வருடா வருடம் தானே இரண்டு கடைகளின் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பித்து பழைய வாடகைக்கு மேல் ஐநூறு ரூபாயை அதிகரித்துக் கொண்டே வந்தான். தனக்கு வாடகை சரியாக வருவதாலும், ராகேஷே முன்னின்று வாடகை ஒப்பந்தம் உட்பட எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதாலும் மாற்றுச் சிந்தனையின்றி இருந்தார் ராமலிங்கம். போலவே வெளியுலகம் அறியாத ராமலிங்கத்தின் அப்பாவித்தனத்தை இருபத்தி ஐந்தாண்டுகளாக அனுபவித்து வந்தவனுக்கு அவரது மாரடைப்பு பெரும் அதிர்ச்சியை தந்ததனால் தூக்கமற்று தனது படுக்கையில் கிடந்தான் கொழுத்த தேகத்துடன்.

     வீட்டுக்கு வந்து இதனை நேரமாக சாப்பிட வராமல் இருக்கவும் ராகேஷை அழைக்க அவனது மகன் அனில் படுக்கை அறைக்குள் நுழைந்து, "ப்பா. வாங்க சாப்படலாம். மணி பதினொண்ணு ஆயிடுச்சு. அம்மாவும் wait பண்றாங்க" என்றவனை முகம் காணாது, "நீ போய் சாப்டு. எனக்கு வேணாம்" என சொல்லவும் "ஏன்  என்னாச்சு? முகமே சரியில்லையே" எனக் கேட்டான்.

      கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் அனில்  இன்னும் இரண்டாண்டுகளில் தனது தொழிலை பார்க்க வேண்டிவரும் என்பதனால் அவனிடம் சொல்வதில் தவறேதுமில்லை என அவன் வசம் திரும்பி,"நம்ம ஓனர் ராமலிங்கத்துக்கு இன்னிக்கு சாயங்காலம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு" என சொல்லவும்,

      "ஐயையோ. அப்பறம் என்னாச்சு?"

       "நானும், அவங்க வீட்ல குடியிருக்கற சிவராமனும் அவசரம் அவசரமா பக்கத்துல இருந்த ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனோம். அப்பறம் அவரோட பையன் கணேசனுக்கு தகவல் சொல்லி வரச் சொன்னோம். சிவராமன், கணேஷன் வர வரைக்கும் இருக்கேன்னாரு. கடைய தொறந்து போட்டே வந்துட்டோமேன்னு நான் உடனே திரும்பி வந்துட்டேன்" என்ற போது ராகேஷின் மனைவி ஷைலஜாவும் உள்நுழைந்து எப்போதும் போலவே அமைதியாக சொல்பவற்றை கேட்டுக் கொண்டவாறு நின்றுக் கொண்டிருந்தார் அவ்வறையின் நுழைவாயிலிலேயே.

     "ஓ!!! இப்ப எப்படி இருக்காராமாம். ஒண்ணும் பிரச்சனை இல்லையே? என்ற அனிலை நன்கு கூர்ந்து பார்த்தபடி "எப்படி இருக்காருனு தெரியல. ஆனா நமக்கு தான் இப்ப பிரச்சனை" என்ற போது ஒன்றும் புரியாமல் அனிலும் , ஷைலஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

     பின்பு மெதுவாக அனில்,"நமக்கா? ஏன் ?" என ராகேஷ் படுத்திருந்த கட்டிலில் அவனின் காலடியில் அமர்ந்த போது அவன் நின்றுக் கொண்டிருடந்த இடத்தை ஷைலஜா ஆக்கிரமித்துக் கொண்டாள்.

      "சரி...நம்மளோட ரெண்டு கடைக்கும் சேர்த்து எவ்வளவு வாடகை கொடுக்கறோம்னு தெரியமா?" எனக் கேட்ட ராகேஷை மலங்க மலங்க பார்த்தான் அனில்.

     அமைதியாக இருந்த இருவரையும் இடமும், வலமும் பார்த்த ராகேஷ் தனது தலையில் அடித்துக் கொண்டு, "எல்லாம் என் தப்பு. ஒன்ன முன்னாடியே தொழில்ல விட்ருக்கணும்" என அனிலைப் பார்த்து சொன்னவன், "ரெண்டு கடைக்கும் சேர்த்து இருபதாயிரம் வாடகை" என சொல்லவும் "சரி அதுக்கென்ன இப்ப?" என்ற அனிலை பார்த்து முறைத்தவாறே, "டேய், நம்ம கடைக்கு எதிர்த்தாப்புல இப்ப புதுசா ஒரு toy shop ஆரம்பிச்சுருக்கானே அதோட வாடகை என்னனு தெரியமா?" என்ற போது  சற்றே நிலைமையை ஊகித்துக்  கொண்ட அனில் தயங்கியவாறே," என்ன ஒரு முப்பதாயிரம் இருக்குமா?" என்றபோதே இடைமறித்த ராகேஷ்," ஆங்....எழுபதாயிரம்டா. அந்த ஒரு கடைக்கு மட்டும். நாம ரெண்டு கடைக்கும் சேர்த்தே இருபதாயிரம்தான் தரோம்" என மீண்டும் விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான்.

      "சரி, இப்ப நமக்கு லாபம் தான? என்ன பிரச்சனை" என்ற அனிலை படுத்தவாறே எட்டி உதைத்து, "முட்டாப்பயலே...முட்டாப்பயலே. நான் சொல்றது ஒனக்கு இன்னும் வெளங்கலையா?" என்றபடியே தனது மனைவியை பார்த்தார் அவள் ஏதோ ஒரு நாடகத்தை பார்க்கும் பாவனையில் இருக்க இன்னும் சற்றே சினங்கொண்டு,"அடேய், பெருசுக்கு 85 வயசு. இது மொத அட்டாக்தானாலும் பொழைக்கறது கஷ்டம். அப்படி அவரு போயிட்டார்னா அவரோட மகன் கணேஷன்தான் இனிமே ஓனர். இவரை இத்தனை வருஷம் ஏமாத்தின மாதிரி அவன ஏமாத்த முடியாது. அவன் ஊதாரினாலும், கெட்டிக்காரன் குறிப்பா பணம் விஷயத்துல. அப்படி பாத்தா, ஒண்ணு நாம இப்ப கொடுக்கற வாடகையை விட ஏழு மடங்கு அதிகமா கொடுக்க வேண்டி வரும். இல்ல கடைய காலி பண்ண வேண்டி வரும். எப்படி பாத்தாலும் எழப்பு நமக்குத்தான்" என விவரித்த போதுதான் அனிலுக்கு உறைத்தது.

      "சரி. சாப்பிட வாங்க" என இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல அழைத்த ஷைலஜாவை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட ராகேஷ், "எனக்குன்னு வந்து சேர்ந்துருக்கு பாரு" என்றவாறே அனிலைப் பார்த்து, "நீ போய் சாப்டுடா" என்றவாறே அறையின் விளக்கை அனைத்துவிட்டுச் செல்லுமாறு சுவரைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக்க கொண்டான்.

      அறையின் கதவருகே சென்று விளக்கை அணைக்க கையை உயர்த்திவாறே அனில்,"இப்ப என்னப்பா பண்றது?" என்றவனை திரும்பிப் பார்க்காமல் ஒரு பெருமூச்சுடன், "வாழ்க்கை பாலைவனமா மாறுச்சுனா நாமளும் ஒட்டகமா மாறிக்கணும்" என்ற போது சரியாக விளக்கும் அணைக்கப்பட்டது.

      இரு மாதங்கள் கழித்து-

      பெய்து ஓய்ந்த மழையினால் மரக்கிளையிலிருந்து நீர்த்துளிகள் இடைவெளிவிட்டு அந்த சாலையில் விழுந்துக்கொண்டிருந்தன. அதை தொந்தரவு செய்வது போல மரக்கிளைக்கும் சாலைக்கும் நடுவே ஓர் ஆட்டோ வந்து நின்றது. வீட்டின் முகப்பில் அமர்ந்து கணக்குகளை ஆராய்ந்துக் கொண்டிருந்த அனில் கதவை யாரோ தட்டும் ஓசையை கேட்டு எதிர் திசையில் தலை தூக்கிப் பார்த்தவன் கொஞ்சம் அதிர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்," வாங்க. உக்காருங்க." என்றவாறே "அம்மா" என அழைத்தபடி உள்ளே சென்று ஷைலஜாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

      தலை முழுவதும் முக்காடிட்டுக் கொண்டு பரபரக்க வந்தவள் ராமலிங்கத்தைப் பார்த்து வணங்கி கதவின் ஓரம் நின்று கொண்டாள்.

     மிகத் தயங்கி தலை குனிந்தவாறே அமர்ந்திருந்த ராமலிங்கம் மிக நிதானித்து,"எல்லாம் கேள்விபட்டேன்ம்மா. என்ன சொல்றதுனே தெரியல. இந்த பாவி மனுஷன் சாக வேண்டிய வயசுல இப்படி உக்கார்ந்துட்டு இருக்கேன். ஆனா, இந்த ராகேஷ் பைய நம்மளை எல்லாம் விட்டுட்டு இப்படி போய்ட்டானே" என்ற போது ஷைலஜாவை மீறி வந்த அழுகையை தனது சேலையில் அடக்கிக் கொண்டாள்.

     சற்றே இடைவெளி விட்டு, "இனிமேதான்மா  நீங்க ரெண்டு பேரும் தைரியமா இருக்கணும். அவன் தனி மனுஷனா இந்த ஊருக்கு வந்து பாஷை தெரியாம, மனுஷங்களை தெரியாம இவ்வளவு பெரிய ஆளாகிருக்கான். அப்படி ஒரு உழைப்பாளி. சேட்டுனாலே கெட்டவங்கனு நம்பி கெடந்த இந்த மனுஷங்கட்ட நல்ல பேரு வாங்கி ஒரு ஆலமரமா வளந்து நின்னதுலாம் சாதாரணமில்லப்பா" என சொல்ல சொல்ல அனிலாலும் தாங்க முடியவில்லை.

     தான் அவர்களை தொந்தரவு செய்வதாக நினைத்துக் கொண்ட ராமலிங்கம் வந்த வேலையை முடித்துவிட நினைத்தவர், தனது கையில் உள்ள மஞ்சப்பையில் கைவிட்டு ஒரு காகித பொட்டலத்தை அனிலிடம் நீட்டி அதை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லவும் என்னவென்று விளங்காமல் அதைப் பிரித்துப் பார்த்தவன் அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க ராமலிங்கம் கண்ணீருடன்,"ஒங்கப்பாட்ட ஆறு மாசம் முன்னாடி பத்தாயிரம் கடன் வாங்கியிருந்தேன். அதை திருப்பிக் கொடுக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலதான் எனக்கு மாரடைப்பு வந்துடுச்சு. ஒங்கப்பா என்னை ஹாஸ்பிடலுக்கு கூப்புட்டு போகும்போது கூட மனசுல ஒரு ஓரத்துல கெடந்து அடிச்சுக்குது. ஐயோ இந்த பயலுக்கு இன்னும் பணத்தை திருப்பி தரலையே. பணத்தை வாங்கின விஷயத்த என் பொண்டாட்டிட்டையும் சொல்லலேயேன்னு. உசுரு பொழச்சு வீட்டுக்கு வந்து பொறவு கூட என்னடா தெனமும் காலைல சரியா ஒம்பது மணிக்கு கடை தெறக்க வருவாப்ல. ஒரு வாரமா வரதில்லையேனு வூட்ல கேட்கவும் தயங்கி தயங்கி சொன்னாங்க நான் ஹாஸ்பிட்டலுக்கு போன அன்னிக்கு ராத்திரியே மாரடைப்புல போய்ட்டாருனு. தூக்கி வாரி போட்டுச்சு. அப்பவே வரணும்னு நெனச்சேன். ஆனா வூட்ல விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் கடன்காரன் வேற. மனசு கேக்கல. அதான் பக்கத்துல இருந்த ஆட்டோவ புடிச்சு வூட்டுக்கு தெரியாம வந்துட்டேன்" என எழுந்து வெளியில் வந்தபோது ஷைலஜாவின் அழுகைச் சத்தம் அவ்வீடு அதிர கேட்டது.

     ராமலிங்கம் அது அவளது கணவனின் இறப்பிற்கான அழுகை என்றே கற்பிதம் செய்து கொண்டார்.