Tuesday, August 28, 2012

முதுமை


ஆசைகள் 
வற்றிய பின்பு 
வாழ்க்கை என்பது 
வெறும் நாள் கடத்தியே!



Sunday, August 26, 2012

மதுபான கடை

     வாழ்வில் பலமுறை பயணம் செய்திருந்தாலும், வெகு சில பயணங்கள் மட்டுமே நினைவில் நிற்கும். எனக்கு அப்படி நினைவில் உள்ள பயணங்களில், சகபயணி குடிகாரர்களாய் அமைந்த பயணங்கள்தான். குடிகாரர்களுக்கும் சாதாரணனுக்கும் நூலிழை வேறுபாடுதான். தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்பவர் முன்னவர்; மனதிற்குள் புலம்புவர் பின்னவர். அதனால்தான் என்னவோ 'மதுபான கடை' படம் வெளிவருவதற்கு முன்பே என்னை வெகுவாக ஈர்த்தது.



     கதையின்றி, திருப்பங்களின்றி, தீர்வுகள் எதுவும் சொல்லாமல், இது ஒரு படமா என கேள்வி எழும் அளவிற்கு அமைந்திருப்பது ஆச்சர்யத்துக்குரியது. சொல்ல வந்ததை கதைமாந்தர்கள் மற்றும் வசனங்கள் மூலமாக மட்டுமே எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது வியத்தகு தைரியம் என்றே சொல்ல வேண்டும்.


     பத்து மணிக்கு திறக்க வேண்டிய மதுபான கடையை பத்து பத்துக்கு திறக்கிற பணியாளை கேள்வி கேட்கிறவர், காவல் நிலையத்தில் பெட்டிஷன் எழுதும் மணி, பயணிகளிடம் ஆங்கிலம் பேசி ஏமாற்றி காசு கறந்து குடிப்பவர், பள்ளி மாணாக்கர்கள் பயந்து பயந்து குடிக்க முனைவது, கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டமாக குடிப்பது, தொழிலாளிகள் களைப்பை போக்க குடிக்க வருவது, காதல் தோல்வியால் ஒருவன் முதல் முதலாக குடிப்பது, பணி நிமித்தமாக துப்புரவு தொழிலாளிகள் குடிப்பது என ஒவ்வொரு கதாபாத்திரமும் குடியை ஒவ்வொரு விதமாக அணுகுவது என காட்டி இருப்பதும், அதில் எந்த இடத்திலும் எவர் சார்பிலும் கருத்து சொல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே காட்சியை கடப்பது பாராட்டுதலுக்குரியது.


     படத்திற்கு வெகுவாக பலம் சேர்ப்பது வசனங்கள். 'குடிகாரன் பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படுவான்', 'வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த bar - ரினில் நமக்கே இடம் ஏது?', 'தள்ளாட குடியும் தலை சாய்க்க மடியும்தான் இந்த பெட்டிஷன் மணிக்கு தேவை','நாம தள்ளாடற வரைக்கும்தான் இந்த கவர்மென்ட் steady - யா இருக்கும். நாம steady - ஆகிட்டா இந்த கவர்மெண்டே தள்ளாடிடும்','குடிகாரன் தனி மனிதனல்ல; சமூகம்','கஞ்சிக்கே வழி இல்லாத போது கட்டிங் கொடுக்கறவன்தான் கடவுள்' என ஒவ்வொரு வசனமும் தற்கால அரசியலையும், நிகழ்வையும் வெகுவாக பகடி செய்கின்றன. அதிலும் குறிப்பாக ராமன், அனுமன் வேடதாரிகளின் உரையாடல் கடவுள்களையும் கேலி பேசுகின்றன. இறுதியாக, துப்புரவுத் தொழிலாளியின் கேள்விகள் பதிலற்று முடியும் அந்த காட்சி இப்பொழுது வரை காதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.


     மதுபான கடை - பகடியின் உச்சம்.


Friday, August 24, 2012

நினைவின் ஊசலாட்டம்


பிரிவின் நினைவுகளோடு 
வாழ்கிறேன் 
தன்னந்ததனியாக 
ஆடிக்கொண்டிருக்கும் 
ஒரு ஊஞ்சலைப்போல.
நினைவிற்கும் 
நிதர்சனத்திற்கும் 
இடையே 
நிகழும் 
இந்த ஊசலாட்டம் 
முடியும் போது 
இரண்டில் 
எந்த இடத்திலும் 
நான் இருக்கப் போவதில்லை.



Sunday, August 12, 2012

கனவுகளின் கதவு



தினம் 
ஒரு முறையாவது 
என் கனவுக்குள் 
வந்துவிடுகிறாய்.
கனவில் 
உன்னை 
பின்தொடரும் போதே
மாயமாய்  
மறைந்துவிடுகிறாய்.
நம் கனவுகளின் 
கதவு எங்கே 
இருக்கிறது என்றே 
தெரியவில்லை.
நீ வெளியே செல்லும் 
என் கனவின் கதவுகளும்.
நான் உள்ளே நுழையாதிருக்கிற
உன் கனவுகளின் கதவுகளும்.