Monday, March 23, 2020

நினைவின் குமிழிகள்


மனதின் ஏதோவொரு 
கொதிநிலையில் 
உடைந்து அடங்குகின்றன 
நினைவுக் குமிழிகள்.

Saturday, March 14, 2020

ரவி எனும் மேய்ப்பன் [சிறுகதை]

     "ம்பி! அடுத்த மாசம் எனக்கு மேரேஜ். கண்டிப்பா வந்துடு" என ரவி சில தினங்களுக்கு முன் தொலைபேசியில் அழைத்துச் சொல்லும் வரையில் அவர் திருமணமாகாதவர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

     "கண்டிப்பா வந்துடு" என அவர் சொன்னதன் அர்த்தம் "நான் உனக்கு ticket - லாம் book பண்ணிடுவேன். நீ வந்தா மட்டும் போதும்" என்பதுதான். அதுதான் ரவி.

     ல்லூரி முடித்த பின்னர் ஓராண்டு காலம் வேலை எதுவும்  கிடைக்காமல், பிறகு தலைவிதியே என எனது சொந்த ஊரான கோயம்புத்தூரிலேயே ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.வருமானம் போதாமையின் காரணமாக ஊரிலிருந்து பெங்களூரு வந்து ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் சேர்ந்தேன் இரண்டாண்டுகளுக்கு பிறகு.

     சான்றிதழ்களை சரிபார்த்தல், நிறுவனத்தைப்  பற்றிய முன்னுரை மற்றும் இன்னபிற சம்பிரதாயங்கள் முடிந்த மறுதினமே  எனக்கு திட்ட ஒதுக்கீடு (project allocation ) செய்யப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் பத்தாவது தளத்திலிருந்த மேலாளரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்ட பின்னர், அங்கிருந்த அணியின் ஒரு சாராரை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அங்கிருந்து பதினோராவது தளத்திற்கு அழைத்துச் சென்றவர் எங்கள் அணியின் மறுசாரார் அங்கிருப்பதாகவும், எனது இருக்கையும் அங்கேயே எனக் கூறியவாறே ஒவ்வொருக்கும் என்னை அறிமுகம் செய்தார்.

     அதன் பிறகு அங்கிருந்த தீபாவின் திசை திரும்பி, " ரவி எங்கே? " எனக் கேட்க அவர், "மணி ஒன்பதுதான் ஆகிறது" என்றார். "ஓ!!" என என்னைப் பார்த்தவர், ரவி வர இன்னும் இரண்டு மணி நேரமாகும் அதுவரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

     எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து தலையை மட்டும் மேலெழுப்பி ஒருமுறை சுற்றிப் பார்த்தேன். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள்  இருந்தனர், எனது அருகாமை இருக்கையைத் தவிர. அது ரவியுடையது என அதன் பின்புறம் ஒட்டியிருந்த காகிதம் மிக அழுத்தமாக உரைத்தது. அதைப் பார்த்தவுடன் அடக்க முடியாமல் பற்கள் தெரியாமல் சிரித்துவிட்டேன். என்னைக் கவனித்த தீபா, "ரவி அப்படித்தான்" எனச் சொல்லி அவரும் சிரித்துக் கொண்டார்.

     அரைமணி நேரத்திற்கு பின்பாக எல்லோரும் தேநீர் அருந்தச் செல்கையில் என்னையும் உடன் அழைத்தனர். ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கேற்ப என்னிடம் கேள்விகள் கேட்டு எனது பொருளாதார பின்புலத்தை அறிந்துக் கொண்டனர். கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்துப் பழகியவன் என்பதனால் யாரிடமும் ஒரு பதில் கேள்வியையும் கேட்காமல் நின்றிருந்தேன்.

     எங்கள் இருக்கைக்கு திரும்பி வந்த இருபதாவது நிமிடம் கிருஷ்ணன்," ரவி வந்துட்டாரு" என சொல்லவும் எல்லோரும் ஆர்ப்பரித்தனர். எதிர் திசையை நோக்கி நான் திரும்புகையில் ஆறடி உயரத்தில் பெரிய கண்களுடன், சிறிது தொப்பையுடன், சற்றே வெளுத்துப் போன கட்டம் போட்ட மேல் சட்டையும், ஜீன்ஸ்-ம் அணிந்து, ஒரு கையில் ஹெல்மெட்டும், மறுகையில் சாப்பாட்டுப் பையும், அதன் கைப்பிடிகளுக்குள் நடுவே ஒரு செய்தித்தாளையும் வைத்துக் கொண்டு மிக மெல்ல நடந்து வந்தார் ஒரு அரசு அலுவலகனைப் போல. தன் இருக்கைக்கு வந்தவர் கணினியை சட்டையே செய்யாமல், தனது பையிலிருந்து  ஒரு பெரிய நேந்திரங்காய் வறுவல் பொட்டலத்தைப் பிரித்து மேசையின் மீது பரப்பி வைக்கவும் அதற்குத்தான் காத்திருந்தது போல எல்லோரும் ரவியை சூழ்ந்துக் கொண்டனர். அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதவரைப் போல தான் கொண்டு வந்த Times of India -வைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். மென்பொருள் நிறுவனங்கள் சொல்லும் நெறிகளுக்கு அப்படியே எதிர் திசையில் இருந்த ரவியை ஏனோ அப்போதே எனக்குப் பிடித்துவிட்டது.

     கால் மணி நேரத்திற்கு மேலாக செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தவர் தனது இடப்புறம் திரும்பி என்னை ஒரு நொடி மட்டுமே பார்த்தும், எவ்வித பிரக்ஞையும் இன்றி மீண்டும் இரு பக்கங்களை ஏறிட்டு அதை மடித்து வைத்து கணினியின் திசை நோக்கி நகர்ந்தார். என்ன செய்வதென தெரியாமல் ஒரு பூனையைப் போல அவரை அவதானித்துக் கொண்டிருந்தேன்.

      "ரவி, அந்த பையன் நம்ம team -ல புதுசா சேர்ந்துருக்காப்ல" என முக்தர் சொன்னவுடன், "ஓ!!!" என என்னை திரும்பி பார்த்தார். மென்புன்னகையுடன்," என் பெயர் அருண்" என்றேன். மிக வலுவான கைகுலுக்கலுக்கு பின் தன்னை ரவி என குழந்தைமையின் முகச் சாயலுடனும், ஆர்வத்துடனும் சொன்னார்.

     "ரவி, வந்துட்டீங்களா?" என அங்கு வந்த எங்கள் மேலாளர் பைஜூ, "அருண் உங்க ப்ராஜெக்ட்ல தான் வேலை செய்யப் போறாரு, கொஞ்சம் train பண்ணிடுங்க" என சொல்லிவிட்டு கிருஷ்ணனை அழைத்துக் கொண்டுச்  சென்றார்.

     சற்றே உடைந்த ஆங்கிலத்தில் எவ்வித தயக்கமுமின்றி பேசிய ரவியும், எங்கள் அணியில் சரிபாதி தமிழர்களாகவும் இருந்தமையால் எனது மொழிப் பிரச்சனையை பற்றிய பயம் முதற்நாள் கொண்டே தளர்ந்து போனது.

      ஆனால், தனது முதல் உரையாடலையே ரவி அந்த மென்பொருள் கட்டமைப்பை (Software architecture) பற்றி விளக்க ஆரம்பித்து என்னை கலவரப்படுத்தினார். பெங்களூரின் மிதமான வானிலையையும், AC அறையின் குளிர்மையையும் மீறி எனது சட்டை வியர்வையால் நனைந்து போனதைப் பற்றியெல்லாம் எவ்வித கவலையும் இன்றி ரவி செவ்வனே தனது விளக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.

     திரும்பி வந்த கிருஷ்ணன், "ரவி சார், மொதநாளேவா?" என நக்கலாக சிரித்துக் கொண்டு, "வாங்க lunch போலாம்" என சொல்லவும் ரவி, "இன்னும் கொஞ்சம் இருக்கு கிருஷ்ணன். நீங்க போங்க. நான் பின்னாடியே வரேன்." என அடுத்த முக்கால் மணி நேரத்தையும் மிக சிரத்தையுடன் தனது விவரிப்புகளை தொடர்ந்து இறுதியில் "அவ்வளவுதான்" என்றார். அவ்வளவுதானா என மனதில் நினைத்துப் பெருமூச்சு விட்டபடியே திரும்பி ஊருக்கே ஓடிவிடலாமா என ஓர் எண்ணம் தலைத்தூக்க ஆரம்பித்தது அனிச்சையாக.

     திரும்பி வந்த கிருஷ்ணனும், முக்தரும், "என்ன சார் பயபுள்ளைய இன்னிக்கே ஒரு project -ய முடிக்க வச்சுருவீங்க போல" என சிரித்தவாரே  கேட்க, ரவி சம்பந்தமே இல்லாமல், "சார் இப்ப அந்த ஆந்திரா மெஸ் தொறந்தகிருக்குமா?" எனக் கேட்டார். முக்தர்," அப்ப அந்த lunch bag-ல என்ன இருக்கு" எனக் கேட்க ரவி, "சார், இது chips வைக்க" என அப்பாவியாக சொன்னார்.

     "அருண், சாப்பிட போலாமா? lunch கொண்டு வந்துருக்கியா?" எனக் கேட்டவர், நான் இல்லை என சொல்லவும், "அப்ப  வா, பக்கத்துல ஒரு ஆந்திரா மெஸ் இருக்கு. அங்க போகலாம்" என அழைத்துச் சென்றவர் சாப்பிட்டு முடித்தவுடன் பணம் கொடுக்க எத்தனித்த என்னை வேண்டாம் என தடுத்தவரை, "இல்ல ரவி, பரவால்ல" என சொன்னவுடன், "உனக்கு சம்பளமே கம்மி தான? இங்க தங்கற செலவு இருக்கும், வீட்டுக்கு வேற அனுப்பனும். பேசாம இரு" என இருநூறு ருபாய்க்கு மூன்று நூறு ரூபாய் தாள்களை மிகப் பதட்டத்துடன் தனது கால்ச்சட்டையின் வலப்புறத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். மீதி  நூறு ரூபாயை அவர்களாகப் பார்த்து திரும்பிதரும் வரையில் ரவி கவனிக்கவில்லை. யாருடன் சாப்பிட சென்றாலும் ரவியே பணம் கொடுப்பார் என பிறகுதான் தெரிந்துக் கொண்டேன். அதிலும் குறிப்பாக என்னைப் போன்ற இளையோர் எனில் அதில் மிகப் பிடிவாதமாக இருப்பார்.

      ஏனையவரைப் போலல்லாது ரவி என்னைப் பற்றி அவர் அறிந்துக் கொள்ள விரும்பியது எனது குடும்பத்தை பற்றி மட்டும்தான். எனது சொந்த ஊர் கோயம்புத்தூர் என சொன்ன மறுவினாடி சட்டென திரும்பியவர், "அப்டியா?" என உடைந்த ஆங்கிலத்திலிருந்து உடைந்த தமிழுக்கு மாறினார். தான் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும், தங்களது தாத்தா காலத்திலேயே ஹைதராபாத்-க்கு குடி பெயர்ந்ததாகவும், தனது அக்காவை கோயம்புத்தூரில்தான் கட்டிக் கொடுத்ததாகவும் விவரித்துக் கொண்டே போனார். சிரித்துக் கொண்டே, எங்கள்  வீட்டில் அப்படியே தலைகீழ் என சொல்லவும் அவரும் சிரித்துக் கொண்டார்.

    நாள்பட,  அவர் என்னை பெயர் சொல்லி அழைப்பது வெகுவாக குறைந்து, தம்பி என்றே அழைக்கலானார். அவரது தமிழ் புலமை எவ்வளவோ அதற்கும் கீழான தெலுங்கு புலமை என்னுடையது. அதனால்,  நாங்கள் பரஸ்பரம் இருவரது மொழியையும் கொலை செய்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஆச்சரியப்படுத்தும் வகையில் "ஒரு ஜீவன் துடித்தது" எனும் பாடலை ரவி மொழி பிறழாமல் பாடுவது அத்தனை வசீகரமாக இருக்கும்.

     ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வரவும் ரவி தொலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது. "தம்பி!! கெளம்பிட்டையா?" எனக் கேட்டவர், எத்தனை மணிக்கு இரயில் ஹைதராபாத்தை வந்தடையும் என கேட்டபின்பு தனது அக்கா மகன் - சபரி - வந்து என்னை அழைத்துக் கொள்வான். அவனே எனக்கான எல்லாத்  தேவைகளையும் பார்த்துக் கொள்வான் என சொன்ன பின்பு, பயணத்தின் போது மிக கவனமாக இருக்கவும் என்றவாறே துண்டித்தார்.

     கோயம்புத்தூர்காரன் என்பதனால் ரவி என்னிடம் மிக நெருக்கமாக ஒரு அண்ணனுடைய அடைகாத்தலுடனே ஒவ்வொரு தருணத்திலும் அருகிலிருந்தார். அந்நெருக்கம் எங்களூரிலுள்ள அவரது அக்கா மகன் சபரிக்கு அவ்வபோது அவர் கொடுத்தனுப்பும் பணம் அல்லது அலைபேசி போன்றவற்றை சேர்ப்பிக்கும் தபால்காரனாகவும் மாற்றிற்று. அப்போது கல்லூரி மாணவனாக இருந்த சபரி இப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

     ணி பதினொன்றை தாண்டியிருந்தது. விளக்குகள் அணைக்கப்பட்ட இரயிலின் சன்னலை வளர்பிறை வெளிச்சம் ஊடுருவி விழுந்துக் கொண்டிருந்தது. மழையையும், நிலவையும் ஆழ்ந்து பார்ப்பவருக்கு அவர்களது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவது அவற்றின் இயல்பு போலும்.

     அந்நிலவின் சாட்சியாக ரவி என்னை அவரது இருசக்கர வாகனத்தில் பெரும்பாலான நள்ளிரவுகளில் அலுவலகத்திலிருந்து வீட்டில் விட்டுருக்கிறார் பணி  நிமித்தம் ஏற்படும் தாமதத்தினால் - அவரது வீடு  முற்றிலும் வேறு திசையில் இருப்பினும். ஓரிரு நாட்களில் அலுவலகத்திலேயே படுத்துறங்கியதுமுண்டு.

     எனக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்த சமயம், ஒரு வரன் நிச்சயம் வரை சென்று நின்று போக அதற்காக மிக வருந்தினார். இரு மாதங்களுக்குப் பிறகு வேறொரு வரன் அமையவே அதற்காக மகிழவும் தவறவில்லை. திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பாக என்னைத் தனியாக அழைத்து, தான் இன்னும் ஒரு வாரத்தில் ஹைதராபாத்துக்கு மாற்றலாகி செல்வதாகவும், மறுநாள் முதல் தான் விடுப்பில் உள்ளதாகவும், எனக்குத் திருமணத்திற்கு போதுமான அளவு பணம் இருக்கிறதா என அக்கறையுடன் விசாரித்தவர்,  எனது கையில் சிறிய பரிசுப்பொருளை திணித்தார். வீட்டிற்கு வந்து அப்பரிசுப் பெட்டியை பிரித்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஐநூறு ரூபாய் கட்டுகளாக இருபத்தி ஐந்தாயிரம் வைத்திருந்தார். அப்போதே  அவர் திருமணத்திற்கு வரப் போவதில்லை என்பதையும் புரிந்துக் கொண்டேன். ஆனாலும் அவரிடம் துளிகூட கோபம் ஏன்  வரவில்லை என இப்போதுவரை தெரியவில்லை.

     நினைவில் கரைந்து கரைந்து எப்போது உறங்கிப் போனேன் எனத்  தெரியாமல் விழித்தபோது காலை மணி ஏழு ஆகியிருந்தது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சரியாக அழைத்த சபரி, "அண்ணா! நான் ஸ்டேஷன்க்கு வந்துட்டேன்ணா. வெளிய பைக்-ல wait பண்றேன். வந்துடுங்க" என்றான். உடன் எடுத்து வந்த ஒரே ஒரு பையை கையில் வைத்துக் கொண்டு செகந்திராபாத் இரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்து சபரியை தேடினேன். எதிர் திசையில் இருந்த சபரி என்னைப்  பார்த்து கையசைக்கவும் அவனை நோக்கி நடந்தேன் சாலையைக் கடந்து.

     "அண்ணா! எப்படி இருக்கீங்க? பாத்து எவ்வளவு நாளாச்சு?"

     "நல்லா இருக்கேன் சபரி. நீ எப்படி இருக்க?"

      "சூப்பர்னா. வாங்க உக்காருங்க. பக்கத்துலதான் room போட்ருக்கு. அங்க போய் refresh பண்ணிட்டு மண்டபத்துக்கு போயிடலாம்" என சொன்னவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு ஹோட்டலில் நிறுத்தி, அங்கே சாவி வாங்கி என்னிடம் கொடுத்து, "நீங்க ரூம் போய் ரெடி ஆகிட்டு கீழ வந்துடுங்கண்ணா. அதுக்குள்ள  நான் பக்கத்துல கடைக்கு போய்ட்டு வந்தடறேன்" என அடுத்த வேலையை கவனிக்கச் சென்றான்.

   நான் தயாராவதற்கு அவ்வளவு நேரம் பிடிக்கவில்லை. அரை மணி நேரத்தில் கீழே வரவும் சபரி வருவதற்கும் சரியாக இருந்தது.

     "என்னண்ணா? bag -ஓட வர்றிங்க? இங்கேயே வச்சுட்டு வந்துடுங்க. மத்தியானம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் reception வந்துக்கலாம்"

     "இல்ல சபரி. இங்க மாதாப்பூர்ல-தான் எங்க சித்தி வீடு இருக்கு. மத்தியானம் சாப்டுட்டு அவங்கள ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன். இங்க நான் வந்தும் பல வருஷம் ஆச்சு. இவ்வளவு தூரம் வந்துட்டு பாக்காமாப் போனா நல்லாருக்காதுல்ல?"

     "அப்படியாண்ணே, சரி வாங்க. உக்காருங்க".

      பதினைந்து நிமிடங்களிலேயே மண்டபத்தை அடைந்தோம். சற்றே பிரமாண்டமாகவே இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பின் நடுவே மண்டபமும் அதைச் சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. ஆனாலும், அத்தககைய பெரிய இடத்தை ஒப்பிடுகையில் அங்கிருந்த மக்கள் திரள் சற்று குறைவானதாகவே இருந்தது.

     நாங்கள் உள்நுழைந்த போது வயதான தம்பதி இருவர் "வாங்க வாங்க" எனத் தெலுங்கில் வரவேற்றனர். ரவியின் பெற்றோர் என சபரி என் காதில் கிசுகிசுத்து, மணமேடையின் வலப்புறமுள்ள மணமகன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

     "மாமா, இக்கட சூடு" என உள்நுழையும் போதே குரல் கொடுத்த சபரியை திரும்பிப் பார்த்த ரவி, "தம்பி" என அதே வாஞ்சையுடன் கூப்பிட்டு கைகுலுக்கினார். அதில் இன்னமும் அதே அன்பின் அடர்த்தியும், அடைகாத்தலின் மென்சூடும்  அப்படியே இருந்தன. தனது நரைத்த முடியை அதன் இயல்பிலேயே விட்டுவைத்திருந்த ரவி மாறுவதற்கான சாத்தியம் எப்போதும் நிகழப்போவதில்லை என்பதை ஈராண்டுகள் கழித்து மீண்டும் காலம் உறுதி செய்தது.

      "சார்" என்பதைத் தாண்டி வார்த்தைகளற்ற என் மௌனத்தை "உக்காருப்பா" என மீண்டும் தனது உடைந்த தமிழில் மொழிவதைக்கு தயாரானவராய் இருந்தார்.

      எல்லாவற்றையும் விசாரித்தவர், "சாப்பிட்டியா?" எனக் கேட்டு, சபரியை அழைத்து என்னைக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார். அப்போது சபரி, "அண்ணா, bag-அ இங்கேயே வச்சுருங்க" என சொல்லவும் ரவி, "ஏன், ஹோட்டல்லயே வச்சுட்டு வந்துருக்கலாம்ல?" எனக் கேட்கவும் எனது  திட்டத்தை சொல்லவும், "என்ன தம்பி?" என கடித்துக் கொண்டார். அப்போது யாரோ அறையின் கதவைத் தட்டவும் ரவி அவசரமாக எழுந்திரிக்க, "நீ உக்காரு மாமா" என சபரி சென்றான்.
   
         உள்நுழைந்த பெண்மணியை தனது அம்மாவென அறிமுகப்படுத்திய சபரி அவரிடம்,"அம்மா! இந்த அண்ணாதான் அருண். நம்மூருதான்" என சொல்லவும் அவர், "அப்படியா கண்ணு, வூட்ல எல்லாரும் சௌக்கியமா" எனப்  பூரிப்புடன் கேட்டு சாப்பிட அழைத்துச் செல்லுமாறு தன்  மகனிடம் சொன்னார்.

      சாப்பிட்டு திரும்பி வரும் போது ரவியும், மணப்பெண்ணும்  மேடையை அலங்ககரித்துக் கொண்டனர். அவர்களை சுற்றியிருந்த அவர்களது உறவினர்கள் உதிரிப் பூக்களாகவும்.

     எல்லோரையும் விட ரவியின் பெற்றோர்கள் மிக பரபரப்புடனும், பெருமகிழ்வுடனும் எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதாவது உதவி வேண்டுமா என சபரியிடம் கேட்ட போதிலும், " இல்லண்ணா  எங்களுக்கே இங்க ஒரு வேலையும் இல்ல. நீங்க rest எடுங்க?" என உரக்கச் சொன்னவன், "மாமா திட்டும்" எனக் காதில் கிசுகிசுகித்து கண்ணடித்துச் சென்றான்.

      சுமார் பத்தரை மணி போல தாலிக் கட்டிய தருணத்தில் மணப்பெண்ணை விட ரவியின் முகம்தான் வெகுவாக சிவந்திருந்தது. கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளை மேடையேறி அவர்களுக்கு கொடுத்துவிட்டு சாப்பிட்டுத் திரும்பியபோது மேடையிலிருந்து இருவரும் ரவியின் அறையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். சற்றே வேகத்துடன் சென்று நிதானமாக ரவியின் காதில் நான் கிளம்புவதாக சொன்னபோது,"ரொம்ப தேங்க்ஸ் தம்பி நீ வந்ததுக்கு" என்றவர் தன் மனைவிடம், "வீடு நா தம்புடு" எனத்  தெலுங்கில் சொல்லவும் அவர், "தின்னாரா?" என பதிலுக்கு கேட்டதில் அப்படியே ரவியின் சாயல்.  "கொஞ்சம் இருப்பா" என்ற ரவி தூரத்திலிருந்த சபரியை அழைத்து என்னைக்  கொண்டு மாதாப்பூரில் விடுமாறு சொன்னதை நான் மறுத்தும் கேளாமல் "பேசாம இரு" என்றார்.

       "வாங்கண்ணா" என அழைத்த சபரியிடம் எனது பை  ரவியின் அறையில் இருப்பதாக சொல்லவும் இருவரும் உள்நுழைந்தோம். எங்கள் பின்பு வந்த ரவியின் பெற்றோர் மற்றும் சபரியின் அம்மா மணமக்களை அழைத்து பாலும், பழமும் தந்து உடன் வந்தவர்களையும் உபசரித்து வழியனுப்பினர்.

      அனைவரும் சென்ற பின்பு சபரியின் அம்மா சட்டென தனது அம்மாவைக் கட்டிக் கொண்டு, "ரொம்ப  சந்தோசம்மா. நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா இந்த கல்யாணமே நடந்துருக்காது. நாங்க எப்போவோ ரவிக்கு பண்ண வேண்டியதை இத்தனை வருஷம் கழிச்சு நீங்க வந்து பண்ணி வச்சுருக்கீங்க. உங்கள  ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்" எனத் தெலுங்கில்  அழுதுகொண்டே சொல்லவும், அந்தம்மா, "அப்படிலாம் ஒண்ணுமில்ல. இப்பதான் எங்களுக்கு சந்தோசமா இருக்கு. இனி நிம்மதியா கண்ணை மூடிடுவோம்" என்றவாறே அவர்களை வெளியில் அழைத்துக் கொண்டு மணமேடைக்கு சென்றார்.

     நடப்பது என்னவென புரியாமல் கண் விரித்துப் பார்த்ததுக் கொண்டிருந்தேன். உடனிருந்த சபரியும் பெரும் அமைதியாக இருந்தான். மண்டபத்திலிருந்து நானும், சபரியும் வெளியே வந்தோம். எங்களைத் தொடர்ந்து இறுக்கமான ஒரு மனநிலையும் பின்தொடர்ந்து வந்தது.
   
     காரில் ஏறி பத்து நிமிடங்களாக உறைந்திருந்த மௌனத்தை இருவரும் அடைக்காத்துக்கொண்டிருந்தோம். எதிர்பாரா தருணமொன்றில் சபரி, "ஆமாண்ணா, அது மாமாவோட அப்பா-அம்மா இல்ல" என ஆரம்பித்தான்.

    "அப்ப நான் சின்ன பையன்-ணா. பத்து வருஷம் முன்ன இருக்கும். மாமா ஒரு பொண்ண லவ் பண்ணிச்சு. ரெண்டு வீட்லயும் ஓகே பண்ணி கல்யாணம்லாம்கூட முடிவாயிடுச்சு. ஆனா, திடீர்னு அந்த பொண்ணு ஒரு accident-ல செத்துப் போயிடுச்சு. மாமாவ இது மனசளவுல ரொம்ப பாதிச்சுடுச்சு. கொஞ்ச நாள்லயே யார்ட்டயும் சொல்லாம எங்கேயே போயிட்டாரு. ஒரே பையனோட வாழ்க்கை இப்படியாகிடுச்சேன்னு எங்க தாத்தா பாட்டியும் படுத்த படுக்கையாகிட்டாங்க. அப்பதான் உங்க மூலமா ஒருமுறை மாமா எனக்கு பணம் அனுபிச்சத வச்சு அவரு பெங்களூருல வேலை பாக்கறது தெரிஞ்சுகிட்டோம். உடனே அவரை பாத்து தாத்தா பாட்டியோட நிலைமையை சொல்லவும் அவரும் மறுபடியும் ஹைதராபாத்துக்கே திரும்பி வந்துட்டாரு. அவரைப் பாக்கறதுக்கே காத்துட்டு இருந்தது போல எங்க தாத்தா பாட்டியும் மூணு மாச இடைவெளில காலமாகிட்டாங்க. இதையெல்லாம் கேள்விப்பட்ட அந்த பொண்ணோட அப்பா அம்மா மறுபடியும் எங்க மாமாவ பாத்து சமாதானம் சொல்லி அவரை சம்மதிக்க வச்சு அவங்களுக்கு தெரிஞ்ச பொண்ணையே முன்ன நின்னு  கட்டி வச்சுருக்காங்க" எனும் போது  நான் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது. அமைதியாக விடைப் பெற்றுக் கொண்டோம்.

     பிறரைப் பற்றிய நம் முன் அனுமானங்களை கலைத்துப் போடுகிற ஒரு பின்கதை ஒவ்வொருவர் பின்னும் மௌனம் காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்ட தருணம்.

   
        

Saturday, March 7, 2020

நட்பின் அடர்த்தி


அணுகுவதற்கோ, விலகுவதற்கோ 
எவ்வித சிரமமுமின்றி ஒரே 
இடத்தில் சிலையென 
நிலைக் கொண்டிருக்கிறேன்.
உங்களின் முன் நகர்வோ 
பின் நகர்வோதான் நம் 
உறவின் அடர்த்தியை 
நிர்ணயிக்கிறது காலங்காலமாக.