Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, March 21, 2012

இது உங்க டைரியா பாருங்க!



     புத்தகக் கடையில் சற்றே யதார்த்தமாக கண்ணில் பட்டது அந்த புத்தகம். புத்தகத்தின் தலைப்பே அதை எடுத்து ஒரு முறையேனும் புரட்டத் தோன்றும். அப்படிப் புரட்டிய போது, என்னை வசீகரித்த விஷயம் அதன் எழுத்தாளார்கள். நண்பர்கள் மூவர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளான அவர்கள், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தும் எழுத்தை கைவிடாது அதை செம்மையானா புத்தகமாகக் கொண்டுவந்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்று. ஒரு எழுத்தாளர் பதிப்பகத்தாரின் மகன் எனினும், எழுத்து நடை எந்த இடத்திலும் சோர்வாக இல்லாமல் அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கின்றனர்!

    உங்களுக்குகாக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து உதவிய நண்பர்களை நினைவு கூர்ந்தது உண்டா? உலகை திரும்பி பார்க்க வைத்த சாதனை செய்து, பின்வரும் நாட்களிலே இந்த உலகம் அதை மறந்து புறக்கணித்து அந்த வெறுமையை எதிர்கொண்டது உண்டா? இவள் நமக்கானவள் என முடிவு செய்து, அதை அவளிடம் கூறிய பின் அவளது புறக்கணிப்பு உங்களை வாழ்வில் மற்றுமொரு தளத்திற்கு அழைத்து சென்று, வாழ்வில் பின்னொரு நாளில் இனிமையான தினத்தில் அவளை சந்தித்த அனுபவம் உண்டா?

     தங்கள் தந்தை செய்து வரும் தொழிலை, தங்கள் அனுபவம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமான தருணம் நினைவிருக்கிறதா? தங்கள் கனவை வெறியோடு துரத்தி அதை அடைந்த ஆனந்தம் இருக்கிறதா? சிறு வயதில் பெற்றவர்களுடன் போராடி மீன் வளர்த்த அனுபவம் உண்டா ? சரக்கடித்துவிட்டு காதலியை பற்றி நண்பன் தங்களிடம் புலம்பியது உண்டா? ஒரு பின்தங்கிய சமுதாயம் ஒரு பெண்ணின் கல்வி ஆசையாய் மறுத்து அவளை ஒதுக்கிய சம்பவம் அறிந்தது உண்டா?  தங்களின் காதலியிடம் காதலை சொல்ல பரிதவித்து, ஆயிரமாயிரம் தயக்கங்களுடன் அவளிடம் காதலை சொன்ன அனுபவம் உண்டா?

    இதில் எந்த அனுபம் இல்லாவிடினும் இந்த புத்தகத்தை படித்து ரசிக்கலாம். எதிர்மறையான முடிவுகள் தர வாய்ப்பு இருந்தும், அத்தனை கதைகளையும் நேர்மறையாக முடித்துள்ளது பாராட்டுதலுக்குரியது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் என வகைப்படுத்த முடியாவிட்டாலும், பயணங்களில் படிக்க ஏதுவான புத்தகம்.


நூல் விவரம்:

பெயர்: இது உங்க டைரியா பாருங்க!

ஆசிரியர் : கே.பி.கார்த்திக், பு.கார்த்திகேயன், பா.சீனுவாசன்.

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

விலை: ரூ. 100 /-



    

Friday, February 24, 2012

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க!





     "Hi, How is your life"
    "as usual, nothing interesting"
    "Then make it interesting"

     சிறியதொரு உரையாடலில் எவ்வளவு பெரிய உண்மை ஒளிந்திருக்கிறது! வாழ்வில் பெரும்பான்மையான விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருப்பதில்லை. தெரிந்திருந்தும் நாம் அலட்சியம் செய்வதே வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணம். அப்படி நமக்கு தெரிந்தும் நாம் அலட்சியம் செய்யும் விஷயங்களை எப்படி அணுகுவது என சொல்வதே கோபிநாத்தின் "ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க!"


     புத்தகத்தின் தலைப்பே வியாபார உத்தி எனினும் அதற்கு முன்னுரையிலேயே விளக்கம் அளித்திருப்பது பாராட்டுதலுக்குரியது.  அன்பு, வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கொள்கை, லட்சியம், முனைப்பு, நேர்மறை எண்ணம், ஆழ் மன சக்தி என பல தளங்களில் விஷயங்கள் இதில் பரிமாறப்பட்டுள்ளன.


     வெற்றி, தோல்வி குறித்த வைரமுத்துவின் பேட்டியை பதிவு செய்தது குறிப்பிடத்தகுந்தது. அந்த பேட்டியில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
"வெற்றி என்பதும் தோல்வி என்பதும் உங்கள் பார்வைதான். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த வருடம் எனக்கு தேசிய விருது கிடைத்தது உங்கள் பார்வையின்படி அது எனக்கு கிடைத்த வெற்றி என்றால், அடுத்த வருடம் அது எனக்குக் கிடைக்காமல் போனால் அதன் பெயர் தோல்வி என்றாகி விடும். இது இரண்டுமே என்னைப் பற்றிய உங்கள் பார்வைதான். என்னைப் பொறுத்தவரை, வெற்றி என்பதும் தோல்வி என்பதும் இரு வேறு சம்பவங்கள். இந்த வாழ்க்கை என்பது பல சம்பவங்களால் ஆனது"



    இப்படி பற்பல சம்பவங்கள் கொண்டு சொல்ல வந்த கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறார். மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை படிக்க ஏதுவாக விஷயங்களை ஒரே புத்தகத்தில் தொகுத்திருக்கிறார்.


    அவர் பாணியிலேயே சொல்வதானால் ஒன்றும் ஒன்றும் இரண்டு நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிற போதுஒரு கால்குலேட்டரைத் தேடுகிறோம். அதனால் நமக்கு கணக்கு தெரியாது என்று அர்த்தமன்று. அதுபோல இந்த புத்தகம் ஒரு கால்குலேட்டர். நமக்கு தெரிந்ததை நாமே வேகமாக புரிந்துக் கொள்ள இது எழுத்து கால்குலேட்டர்.



நூல் விவரம்:-
பெயர்: ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூ. 60 /-

Sunday, September 18, 2011

...சொல்லாததும் உண்மை

    

     "பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே. மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், பொய் உன்னை வாழ விடாது. உண்மை உன்னை சாக விடாது", என்றார் விவேகானந்தர்.

     இன்று நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், உண்மையை எப்படி எதிர்கொள்வது என்பதே. உண்மை பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அன்றோ? இந்த உலகத்தில் சொல்ல மறுக்கிற விஷயங்களும், சொல்லாமல் மறைக்கிற வீஷயங்களும் மட்டுமே தற்போது உண்மையாக இருக்கின்றன. உண்மை பேசுகிறவன் பலர் பார்க்க கயிற்றின் மேல் நடக்கிறவன் போல. எல்லாருக்கும் அந்த தைரியம் வந்துவிடாது. ஆனால், அவனது செய்கையை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். மேற்கொண்டு அவனுக்கு எதுவும் கிடைக்காது!

     மௌனத்தை வார்த்தைகளால் என்றுமே வெல்ல முடியாது. ஏனென்றால் மௌனம் என்பதுதான் உண்மை. வார்த்தைகளால் மௌனத்தை விளக்க முடியும். ஆனால், நம்மால் என்றுமே மௌனத்தை உருவாக்க முடியாது. மௌனம் சில நேரங்களில் தண்டனை; சில நேரங்களில் மன்னிப்பு!

    நிர்வாணமே உண்மை. ஆனால், நம்மால் அந்த நிர்வாணத்தை எதிர்கொள்ள முடியுமா? எதிர்க்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை ஒப்புக்கொள்ளவாது முடியுமா? இந்த உலகத்தில் சொல்லாமல் போகின்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் போவதில்லை. 
          
    வாழ்க்கை அபூர்வம் என்றால், அதை அணு அணுவாக வாழ்பவன்? அபூர்வங்களின் அபூர்வம்! அப்படி ஒரு அபூர்வக் கலைஞன் தான் "பிரகாஷ்ராஜ்". அவரது "...சொல்லாததும் உண்மை" என்கிற தொடர் ஆனந்த விகடனில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்து, பிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.  உண்மையை சொல்வதே தைரியமான விஷயம் என்றால், ஒரு ஊடகத்தின் வாயிலாக உண்மையை உரக்க சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!

     தாயன்பு, காதல், காமம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம், நட்பு, திமிர், கர்வம், பயம், பிரிவு என ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதைகளை உண்மையாக திரும்பி பார்க்கிற தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாது. ஒரு விஷயத்தை உண்மையாக பார்ப்பதற்கும், நமக்கு வசதியாக பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், நமக்கு எது வசதி என்பதில், எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.



    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எந்த மனிதனும் காமத்துடனான தன் அனுபவத்தை எவரிடமும் அவ்வளவு எளிதில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். காந்தி  தன் தந்தை இறக்கும் தருவாயில், தன் உடல் பசியை தீர்க்க தன் மனைவியை அழைத்ததையும், தனது வயதோகிய காலத்தில் தன் துறவர வாழ்க்கையின் மீது தானே சந்தேகம் கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டதையும் இந்த உலகத்துக்கு வெளிப்படையாக சொன்னார். அதே துணிச்சலை பிரகாஷ்ரஜிடமும் பார்க்கிறேன்.

    சகமனிதனின் அனுபவம் தானே நமக்கு வாழ்க்கை பாடம்?  

நூல் விவரம்:- 
பெயர்: ...சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ. 110 /- 


Friday, April 29, 2011

நேர் நேர் தேமா

     வைரமுத்து சொன்னது போல "யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அந்த வகையில் தன் பணி நிமித்தம் காரணமாக எடுத்த சில பேட்டிகளை புத்தக வடிவமாக்கி இருக்கிறார் "நீயா நானா " கோபிநாத். திரையில் நாம் காணும் பேட்டி பிரபலங்களின் மனதை மட்டுமே பதிவு செய்கிறது. ஆனால், இந்த புத்தகத்தின் மூலம் பேட்டி எடுப்பவரின்  மனதையும் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு.
      பேட்டிகளை எழுத்தாக்கம் செய்யும் போது எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் வார்த்தைகளைக்  கையாண்டு இருக்கிறார். அதற்காக பேட்டி காணும் முன் ஏற்பட்ட படபடப்பு, மனதில் தோன்றிய கேள்விகள் என அற்புதமாக நம்மை அந்த இடத்திற்கே கூட்டி சென்று விடுகிறார்.

     "ஒரு சுய முன்னேற்ற நூலில் கூறிய அனைத்தும் உனக்கு ஒத்துவராது. உனக்கு என்ன தேவையோ, அதை நீ எடுத்துக் கொள்", என யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல பல்துறை சாதனையாளர்களின் பேட்டிகளின் தொகுப்பு என்ற வகையில் இது முக்கியமான படைப்பாக மனதிற்குப்படுகிறது. 


புத்தகத்தின் முன்னுரையில் கோபிநாத் கூறியுள்ளதாவது:
     அரிச்சந்திரன் நாடகம் பார்த்து காந்தி, தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார் என்று சொல்வார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையை அது அப்படியே மாற்றி விடுமா என்ன? அது சாத்தியம் என்றால் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த அத்தனை பேரும் உண்மையே பேச வேண்டும் என்று காந்திபோல் முடிவு செய்திருக்க வேண்டும்.

     இந்த புத்தகத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

     என் வாய்ப்பின் மூலம் நான் சந்தித்த சிறப்பான மனிதர்கள் சிலர் பேசிய விஷயங்கள், அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் முன்னேற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

     அவற்றை இனம் கண்டு ஆராய்கிற நுட்பத்தை, தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கிக் கொள்ளும் சிந்தனையைப் புத்தகத்தைப் படிப்பவரே கொண்டு வரவேண்டும் காந்தி கொண்டு வந்ததைப் போல. வேண்டுமானால் இந்த புத்தகம் அதற்குரிய ஆர்வத்தைத் தூண்டலாம்.

     இது சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ஏற்பாடு இல்லை. அவர்கள் கடந்து வந்த பாதையில் கற்றுக் கொண்ட உத்திகளை முன்வைக்கிற முயற்சி. 

     இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெலாம் உறுதி தருவதற்கில்லை. தன்னம்பிக்கை நம்முள் இருந்து தான் பிறக்கிறது என்பதை நானும் தீவிரமாக நம்புகிறேன். என்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்த புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும்.

     எழுதியது கோபிநாத் - ஆக இருக்கட்டும்.
     படிக்கிறவர்கள் காந்தி - ஆக இருங்கள்.
     அது தான் என் வேண்டுகோள்.
நன்றியுடன்,
கோபிநாத்.

நூல் விவரம்:- 
பெயர்: நேர் நேர் தேமா
ஆசிரியர்: கோபிநாத் 
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூ. 100 /-