Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Thursday, August 1, 2013

எனது Engliஷ் Vingliஷ்




     சில மாதங்களுக்கு முன்பு "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படம் பார்த்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஆங்கில மொழி அறியாமையை பற்றிய கதை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்த பின்புதான் தெரிந்தது ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவியின் அங்கீகாரமின்மைதான் கதைக்கரு என்று.

     எல்லாக் குடும்பத் தலைவிகளைப் போன்றே விடியும் சசியின் காலைப் பொழுதும். தனக்கான தேநீர் அருந்துவதற்குள்ளாகவே அடுத்தவரின் தேவையை நிறைவேற்ற வேண்டிய சூழல். கணவன், மகள், மகன், மாமியார் என அழகான குடும்பம் இருந்தும், சரியான ஆங்கில மொழியறிவு தெரியாததால் அவளை கேலி செய்கிறார்கள். ஆனாலும் அவளுக்கான உலகம் - அவள் தன் கைப்படவே செய்து விற்கும் லட்டு - பெரும் திருப்தியளிக்கிறது. ஒருநாள் சசியின் அக்கா மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், சசியை மட்டும் முதலில் அவர்கள் வசிக்கும் அமெரிக்காவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.


     எனக்கு இருவிதமான அனுபவங்களும் உண்டு - ஆங்கில அறிவின்மை மற்றும் குடும்பத் தலைவியை  அவமதித்தது. நான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி முறையில் பயின்று வந்தேன். மகனுக்கு நல்ல கல்வி அளித்துவிட வேண்டும் என்கிற காரணத்தினாலேயே எங்கள் நகரத்திலிருந்து பதினைந்து கி.மீ தொலைவிலுள்ள ஒரு நல்ல பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையில் அப்பா என்னை  சேர்த்து விட்டார். பள்ளியின் முதல்நாளன்றே என் வகுப்பிற்கு வந்து, அந்த வகுப்பாசிரியரிடம் நான் தமிழ் வழிக் கல்வி முறையில் பயின்று வந்துள்ளேன் என்றும், அதனால் என் மீது தனிக் கவனமளிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

     முதல்நாளின் முதல் இடைவேளை முடிந்து வகுப்புக்கு சென்றால், எனக்கு முன்னதாகவே  அந்த ஆசிரியை வகுப்பில் இருந்தார். "மிஸ் மிஸ்", என இருமுறை அழைத்தேன். என்னிடம் வந்தவர், "May I come in, miss ?" என கேட்க வேண்டுமென சொல்லிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாது அந்த வகுப்பிலுள்ள அனைவரையும் பார்த்து என் நிலைமையை சொல்லி எனக்கு மற்ற மாணவர்கள் உதவ வேண்டுமெனவும் கட்டளை இட்டார்.

     அன்றே மாணவர்கள் என்னிடம், " நீ hosteller ஆ? dayschollar ஆ ?" என வினவினர். hostel என்கிற வார்த்தை புரிந்தமையால் மற்றொரு வார்த்தையான dayschollar எனச் சொன்னேன்.

     பள்ளிக்கு அரசுப் பேருந்தில்தான் தினமும் சென்று வருவோம்.  பேருந்து பயணத்தின் தொடக்க இடத்திலேயே நாங்கள் ஏறிக்கொள்வோம். நாங்கள் செல்லும் அதே பேருந்தில்  சுமார் இருபத்தைந்து வயது உள்ள ஒரு அண்ணனும் வருவார். பொதுவாக நாங்கள் வரும் முன்னரே அந்த பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பார். ஆனால் அன்று சற்றே தாமதாமாக வந்தார். கொஞ்சம் நொண்டியவாறே நடந்து வந்தவரைப் பார்த்து,"என்னண்ணா கால்ல ஏதாவது அடிபட்டுடுச்சா?", என்று கேட்டேன். அவர் மெல்லிய புன்னகையுடன்,"இல்ல தம்பி நான் handicapped" என்றார். நான் சற்றும் யோசிக்காமல்,"அப்படினா என்னண்ணேன்?" என்று கேட்டேன். அருகிலமர்ந்திருந்த நண்பன் சற்றே கோபமான தொனியில்,"வாய மூடுடா" என்று காதில் அவ்வார்த்தைக்கு அர்த்தம் சொன்னான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப்பார்த்து மன்னிப்பு கேட்டேன். அவர் புன்னகையையே பதிலாக தந்தார்.


     இரண்டாவதாக, பல முறை அம்மாவின் மேல் கோபப்பட்டுள்ளேன்; காயப்படுத்தியுள்ளேன். பனிரெண்டாம் வகுப்பு முடித்தபின்னான கோடை விடுமுறை. அப்போது அப்பா வேறொரு ஊரில் பணி செய்துக் கொண்டிருந்தார். குடும்பத்துடன் ஊர் மாறிச் சென்றால் என் படிப்பு பாதிக்கப்படுமே என்று என்னையும் அம்மாவையும் விட்டுவிட்டு தான் மட்டும் அங்கு சென்றார். நான்  காலையில் எழுந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு விட்டு வெளியே சென்றால் எப்போது வீட்டுக்கு  வருவேன் என்று  எனக்கேத் தெரியாது. அன்றும் அதுபோலவே மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்து என்ன உணவு என்று அம்மாவிடம் கேட்டேன். பதிலளித்த அவரிடம் ஏன் வேறொரு சமையல் செய்யவில்லை  என்று கத்தினேன். "உன் மனசுல என்னதான்டா நினச்சுகிட்டு இருக்க? ஏதோ boarding & lodging மாதிரி நெனச்ச நேரத்துக்கு வர; போற. கொஞ்சம் கூட  நல்லா இல்லைடா" என எரிமலையாக வெடித்தார். இப்போதும் எங்களுக்கு பரிமாறிவிட்ட பின்னரே தான் சாப்பிட அமருவார். அப்படி நாங்கள் சாப்பிட்ட பின்னர் எதுவும் இல்லாத சமயங்களில் மீதமுள்ள காய்கறிகளையோ, பாலையோ சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுவார்.

     புத்தகங்களில்  என்னைத் தொலைக்க ஆரம்பித்த நாட்களில், "கதவுகளுக்கு பின்னே கண்ணீர் பதிவுகள், நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்" என்கிற பெண்கள் சார்ந்த இரு புத்தகங்கள் வாங்கி வீட்டுக்குச் சென்றேன். புத்தகத்தை எடுத்துப் பார்த்த அம்மா "ச்!" என்ற அலுப்புடன் கீழே போட்டார். அது எத்தனை வருடத்திற்கானது என்பதை என்னால் உணர முடியவில்லை.


      இப்படத்தில் சசி ஆங்கிலம் பயிலும் இடத்தில் உடனிருக்கும் ஒரு பிரஞ்சுக்காரன் அவளிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசுவான். அப்போது அருகிலிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அக்கா மகள்,"சித்தி, he really likes you. உங்கள்ளுக்கும் அவர.. ?" என்பவளை ஒரு வெற்றுப்புன்னகையுடன் சசி,"எனக்கு காதலெல்லாம் தேவையில்லை. தேவைனா கொஞ்சம் மரியாதைதான்" என்பாள்.

     அதுதானே எல்லோரது தேவையும்!!!





 

Tuesday, August 28, 2012

முதுமை


ஆசைகள் 
வற்றிய பின்பு 
வாழ்க்கை என்பது 
வெறும் நாள் கடத்தியே!



Saturday, July 21, 2012

வாழ்தல் ஒரு கலை - XI


     "நல்லா இருக்கீங்களா?", என்கிற பொதுவான விசாரிப்புகளைவிட "சாப்டீங்களா?", போன்ற விசாரிப்பில் பின் ஒளிந்திருக்கும் சகமனிதனின் பிரியத்தையே அதிகம் நேசிக்கிறேன்.

     சகமனிதனின் பசியைப் புரிந்துகொள்ளுதல் என்பது எவ்வளவு மகத்தானது! எத்தனை பேரின் பசியை இதுவரை நிராகரித்திருக்கிறோம்? புரிந்திருக்கிறோம்?


     ஒருவேளை பசியைக் கடத்துவதற்குதானே வாழ்வின் இத்தனை போராட்டங்களும்? பசியின் அவமதிப்பு தலையணை நனைக்கும் கண்ணீராக கழியும் இரவுதான் எத்தனை கொடுமையானது?

     நடுநிசியில் வீட்டினுள் நுழையும் நபரின் முகத்தைப் பார்த்தே சமையலறை நோக்கி நகரும் பாதங்களை எத்தனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தாலும் தகும்.


     ஒரு ரொட்டித் துண்டில், ஒரு கோப்பைத் தேநீரில் தன் பசியைக் கடக்கும் மனிதனின் பார்வையில்  இந்த உலகம் எப்படித் தெரியும்? இந்த உலகத்தின் மீதான அவனின் கருத்து என்னவாக இருக்கும்?

     சகமனிதர் பசியுடன் இருக்க அதை உணர்ந்து அவர் பசியாற்றுவது இறைவன் ஆசிர்வதிக்கப்பட்ட இதயம் என்பதைத் தவிர வேறென்ன?

     கல்லூரியின் இறுதி இரண்டாண்டுகள், நண்பர்களுடன் வெளியில் அறை  எடுத்துத் தங்கியிருந்தேன். தங்கியிருந்த அறையிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில்தான் உணவகமே இருந்தது. வெயில், மழை போன்ற இயற்கையின் தன்மையை கண்டுகொள்ளாமல் பசி என்ற இயற்கைத்தன்மையைதான் முக்கியமாக கருதவேண்டியதாயிற்று.

     அதற்குமுன் அறிமுகமிருந்தாலும், கல்லூரி தினங்களிலிருந்துதான் 'பசி' அறைத்தோழன் அளவுக்கு உரிமையுடன் என்னிடம்  நெருங்கியது. கையில் பணமிருந்தும் சரியான அல்லது கிடைக்கவே பெறாத உணவு என்பதுதான் பிறர் வாழ்க்கையை தரிசிக்க வைத்தது.


     அது பொங்கல் பண்டிகை சமயம். உணவகம் வைத்திருந்த அனைவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதனால், எங்கும் உணவு கிடைக்காத நிலை. அறைத் தோழர்களும் அவரவர் ஊருக்கு சென்றிருந்தனர். நான் அறையைவிட்டு எங்கும் செல்லாதிருப்பதைக் கவனித்த வீட்டின் உரிமையாளர் என்னை அழைத்து,"சாப்பிட்டியா?" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்பதைப் போல தலையசைத்தேன். என் முகத்தை சில நொடிகள் கவனித்தவர், "இவனுக்கு சாப்பாடு கொண்டு வாம்மா", எனத் தன் மனைவியிடம் சொன்னார். பிறகு என்னை நோக்கி, "நீ வெளியே எல்லாம் போய் சாப்பிட வேண்டாம்.இங்கேயே வந்துடு, என்ன ?" என்று கூறினார்.

     கல்லூரி முடிந்து வேறு இடத்திற்கு நான் வீடு பார்த்து மாறுகையில் கடைசியாக அவர் என்னிடம் சொன்னது,"அங்க புது எடத்துல ஏதாவது பிரச்சனைனா சும்மா யோசிச்சுகிட்டு நிக்காம, பெட்டியை தூக்கிட்டு இங்கேயே
வந்துடு என்ன?" என என் பதிலையும் எதிர்பாராமல் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினார்.



     வீட்டில் மிஞ்சுகிற பாலை தெருவில் இருக்கும் நாய்க்கு ஊற்றும் பக்கத்து வீட்டு அக்கா, தனக்களிக்கும் உணவை குருவிக்குத் தருமாறு அடம்பிடிக்கும் குழந்தை, வீட்டு வாசலில் பிராணிகளின் தாகம் தணிக்க தண்ணீர் வைக்கும் முதியவர் என பிறர் நலன் கருதி வாழ்பவர்கள்தானே நம் உலகத்தின் பெருங்கொடை!




     சார்லி சாப்ளினிடம் அவரை இயங்க வைக்கும் உந்து சக்தி என்ன என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"பசி" என பதில் அளித்தார். அவரது படங்களை சற்றே கூர்ந்து கவனித்தீர்களேயானால் அது எவ்வளவு பெரிய உண்மை எனத் தெரிய வரும். தனது ஒவ்வொரு படங்களிலும் அவர்  நிதானித்து உண்கிற மாதிரியான காட்சி இருக்காது. மாறாக தனக்கு கிடைத்த உணவை அவசரமாக, பிறர் பிடுங்கி விடுவார்களோ போன்ற தவிப்புடனே சாப்பிடுகிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பார். 

   சிறிது யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு உயிரின் முதல் அனுபவம் பசியாகத்தானே இருக்கிறது?




   


Wednesday, February 1, 2012

வாழ்தல் ஒரு கலை - X




     உலகமயமாதலின் விளைவாக இன்று நம் கைக்குள் உலகம் வந்துவிட்டது. மறுபுறம் மற்றவர்களை தொடர்புகொள்ளும் தூரம், நேரம் போன்ற காரணிகளும் காலவதியாகிவிட்டன. நினைத்தவுடன் நினைத்த நபரை தொடர்புகொள்ளுதல் என்பது இன்று சர்வசாதாரண விஷயம். தொலைத்தொடர்பு வசதி குறைந்து இருந்த நாட்களில் ஊரில் இருப்பவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல் என்பது எவ்வளவு அலாதியானது என்பது இனி வரும் தலை முறைக்கு புரியாத/புரிய வைக்க முடியாத விஷயம். 

     இந்த தொலைபேசுதல் என்பது நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது சமீபத்திய நாட்களில் சில அனுபவங்கள் வாயிலாக புரிந்துக் கொள்ள நேர்ந்தது. எதிர்முனையில் இருப்பவரின் மனநிலையை அவரிடம் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் புரிந்துக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமான விஷயம். குறிப்பாக நண்பர்களிடம் பேசும் போது உரையாடல் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அங்கே சம்பிரதாயங்களுக்கு என்றுமே இடமில்லை. அதனால் அங்கே எதிர்முனையில் இருப்பவரின் மன நிலையை புரிந்துகொள்ளுதலில் நம் உரையாடல் தொடங்கும் விதத்தைப் பொறுத்து சில தர்மசங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.



     சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். சென்னையிலிருந்து ஒரு மாற்றத்திற்காக கோயம்புத்தூரில் வேலை தேடலாம் என ஒரு வாரம் அங்கு தங்கி தேடிக் கொண்டிருந்தேன். ஒரு மாலை, என் உயிர் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்திருந்தான். நான் எடுத்தவுடனேயே, "என்ன மச்சி! எப்படி இருக்க? ஒரு வாரமா போன் - ஐயே காணோம். என்ன ஆச்சு ?" என்று ஒரு அரை நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சற்று நிதானித்து, "இல்ல டா, அப்பா இறந்துட்டாரு. எங்களுக்கெல்லாம் என்ன பண்றதுனே தெரியல. நம்ம பிரண்ட்ஸ்ட யார்கிட்டயும் சொல்லல. நீ கொஞ்சம் சொல்லிடிரியா" என்றான். என்னால்  பதில் ஏதும் பேச முடியவில்லை. அந்த ஒரு நிமிட மௌனம் என் வாழ்வின் தீராக் குற்றவுணர்வில் கொண்டு தள்ளியது. இப்படி ஒரு அனுபவம் என்றால் இதற்கு சற்றே மாறான  இன்னொரு அனுபவமும் சமீபத்தில் நிகழ்ந்தது.

      இன்னொரு நண்பன். அவன் தொலைபேசியில் எங்களை அழைப்பதே அரிது. நாங்கள் அழைத்தாலும் அவனைத் தொடர்பு கொள்ளுதல் அதைவிட அரிது. ஆனால், அந்த மாதத்தில் இந்த நிலை சற்றே உச்சத்தில் இருந்தது. அவனது தந்தை சற்றே உடல்நிலை குன்றி இருந்ததால், அவரின் தொழிலை இவன் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமின்மை மற்றும் சோர்வு காரணமாக அவனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என எண்ணி இருந்தேன். ஒரு மாதம் கழித்து என்னை அழைத்தான். "எப்படி இருக்க டா?" போன்ற வழக்கமான விசாரிப்புகளுடன் (முன் அனுபவம் காரணமாக) பொறுமையாக தொடங்கிற்று அந்த உரையாடல். பின் நான் சற்றே மகிழ்ச்சியான தொனியில் பேச அரைமணி நேரம் பேசி இருப்போம். பிறகு ஒரு வாரம் கழித்து எங்கள் (நாங்கள் மூவர் ஒரு நண்பர் குழு) நண்பன் இன்னொருவன் என்னை அழைத்தான். "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமாடா?" என்று கேட்டான். "என்னடா விஷயம்? எதை பத்தி கேக்குற?", என்று கேட்டேன். "இல்லடா, அவனோட அப்பா இறந்துட்டாராம். அதை உன்கிட்ட சொல்லலாம்னு அன்னிக்கு அவன் போன் பண்ணிருக்கான். நீ ஏதோ சந்தோசமா பேசிட்டு இருந்ததுனால உன் mood - அ கெடுக்க வேண்டாமேன்னு  அவன் சொல்லலையாண்டாம்". நான் விக்கித்து நின்றேன். 


     ஒரே அனுபவம். ஆனால் இரு விதமான படிப்பினைகள். வாழ்க்கை ஒருபோதும் கற்பித்தலை நிறுத்துவதில்லை, நாம் கற்க விரும்பா விடினும்!





 

Saturday, January 7, 2012

வாழ்தல் ஒரு கலை - IX

 
     பயணம் வாழ்வில் தவிர்க்க முடியாதது;பலருக்கு தடுக்கப் படக் கூடாதது ! என்னதான் பெரிய குளமாக இருந்தாலும் பயணம் செய்யாததால் அது மாசு படிந்து விடுகிறது. ஆனால், பயணிக்கப்படுகிற சிறு ஓடைக்கூட வெளிச்சத்தில் மிளிர்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" என் வாழ்வில் பயணம் குறித்த பார்வையை விசாலம் ஆக்கியது. ஒரு இடத்திற்கு முன்னேற்பாடோடு செல்வதற்க்கும், பயணம் ஒன்றே காரணமாக கொண்டு செல்வதற்கும்  நிறையவே வித்தியாசம் உள்ளது.

     சென்ற மாதம் சென்னையிலிருந்து பெங்களூர் வருவதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். சற்றே கூட்டம் அதிகமாக இருந்ததால், இடம் கிடைத்தால் போதுமென சாதரண பேருந்தில் ஏறி மூன்று பேர் அமர்கிற இருக்கையின் சன்னலோர இடத்தை தேர்வு செய்து அமர்ந்தேன். சன்னலை திறக்க முடியாததால், அதே இருக்கையின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். பேருந்து 98 சதவிகிதம் நிரம்பி இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு பேர் அமர்கிற இருக்கையில் ஒருவரே உட்காருகிற உடல்வாகு உடையவர் ஒருவர் ஏறி, சுற்றும் முற்றும் பார்த்து என்னருகில் வந்து சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டார். ஆனால் அவர் அந்த சன்னலை இலகுவாக திறந்துவிட்டார்.  இன்னும் ஒருவர் அமர மட்டுமே பேருந்தில் இடம் இருந்தது (அதுவும் என்னருகில்தான்). சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து என்னருகே அமர்ந்து கொண்டார்.


     விதவிதமான உடல்வாகு உடையவர்கள் அருகருகே அமர்ந்ததால் சற்றே அசௌகரியமான சூழ்நிலை அங்கு நிலவியது. பயணச்சீட்டு வாங்கி விட்டதனால் பேருந்தை விட்டு இறங்க முடியாத நிலைமை வேறு. விதிக்கப்பட்டது இதுதான் என சுயசமாதானம் சொல்லிக்கொண்டு பயணத்தை தொடங்கியாயிற்று.

     பேருந்து சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தது. எனக்கோ உட்காரவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் அவஸ்தையாக இருந்தது. வேலூருக்கு சற்று முன்னர் இருந்த உணவு விடுதியில் பேருந்து நிறுத்தப்பட்டது.  இளைப்பாற இறங்கி அரைமணி நேரமாகியும் பேருந்து எடுத்த பாடில்லை. என்னவென சிலர் இறங்கிப் பார்க்க பேருந்தின் சக்கரம் பழுதாகி இருந்தது தெரியவந்தது. அப்போது மணி பத்து. நடத்துனரிடம் மாற்று வழி செய்யச் சொல்லி எந்த பயனும் இல்லை. ஓட்டுனரோ ஆளையே காணவில்லை.
     சக அரசுப் பேருந்து ஓட்டுனர்களோ/நடத்துனர்களோ அவர்களிடம் இருக்கும் மாற்று சக்கரத்தை தரவும் முன்வரவில்லை. அறுபதுக்கு மேல் அகவை உள்ள ஒருவர், "இவங்கள்ட எல்லாம் பேசி பிரோஜனம் இல்ல. நம்ம எல்லாம் சேர்ந்து நடு ரோட்டுல உட்கார்ந்துடுவோம். அப்பறம் எப்படி வழிக்கு வராங்கனு பாருங்க" னு சொல்லி சிலர் அவருடன் போக, இன்னும் சிலரோ பேருந்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அந்த உணவு விடுதியில் இருந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி இருப்பார்கள் போலும், ஒரு காவலர் அங்கே வந்தார். பயணிகளோ கடுமையான ஆத்திரத்தில் இருந்தோம்.

"என்னப்பா பிரச்சனை?", என வினவினார்.

"சார்! பஸ் பஞ்சர் ஆகி ரெண்டுமணி நேரம் ஆச்சு, இன்னும் எந்த நடவடிக்கையுமே எடுக்க மாட்டீங்கிறாரு...."

"சரி, கண்டக்டர் சீக்கரம் சரி பண்ணி ஊருக்கு போய் சேருங்க. உங்கள் பயணம் இனிதே நிறைவேற எல்லா வல்ல இறைவன் அருள் புரிவார்(?!)" , என சொல்லி விட்டு அந்த காவலர் (எ) இறை தூதர் சென்றுவிட்டார்.

     இதற்கிடையில் சிலர் மட்டும் நடத்துனரிடம்,"யோவ்! எனக்கு என் பணத்தை கொடுத்திடு, நான் போய்க்கிறேன்" என அவர்கள் பங்குக்கு நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டிருந்தனர்.

     ஒருவர் மட்டும் நடத்துனரிடம்,"சார், வேலூர் டிப்போ மானேஜருக்குப் ஃபோன் போட்டு சொல்லுங்க சார், அவர் spare பஸ் அனுப்புவாரு" எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

     ஒரு பேருந்து கிளம்பும் போது முன்னேற்பாடாக சக்கரம் என எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டே நிலையத்தை விட்டு புறப்பட வேண்டும். ஆனால், அவர்கள் செய்த தவறால், வேலூர் மேலாளரை அழைக்க அஞ்சி எங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தார்.

     பொறுமை இழந்த பயணிகள், "சார்! நீங்க பேச வேண்டாம், நாங்க பேசறோம். நம்பர மட்டும் கொடுங்க" என கெஞ்சிக் கேட்டும் பயனில்லை.

     நேரம் அப்போது ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் மறுநாள், தங்கள் அலுவலகதிற்கு போக நேருமா என சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலரோ தங்களுக்கு " loss of pay " என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

     பிறகு ஒருவழியாக ஒரே ஒரு அரசு ஓட்டுனர் தன் பேருந்தில் இருந்த மாற்று சக்கரத்தை தர முன்வந்தார். இனியும் தாமதிக்கக் கூடாது என பய்ணிகளே முன் சென்று அந்த சக்கரத்தை கீழிறக்கி, அருகிலிருந்த mechanic -யிடம் பேசி சக்கரத்தை மாற்றினோம்.

     பிறகு நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் "அண்ணா, போய் டீ குடிசுட்டு வாங்க, கிளம்பலாம்" என புறப்பட்ட போது மணி கிட்டத்தட்ட இரண்டு!

மேல் கூறிய சம்பவத்தில் பல விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தன:
1 . வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற ஒரு துன்பத்தை (பெரிய உடல்வாகு கொண்டவரின் அருகில் அமர நேர்ந்ததால் ஏற்பட்ட அசௌகரிய நிலை) பின்வருகிற மற்றொரு துன்பம் ஒன்றும் இல்லாதது போல் ஆக்கிவிடுகிறது.

2 . முன்னேற்பாடின்றி செய்கிற செயல் எத்தனை பெரிய துன்பத்தையும் தர நேரிடும்.

3 . தான் ஒழுங்காக தன் பணியை செய்யாவிடில், தனக்கு உதவும் அதிகாரம் உள்ள அதிகாரியிடம் கூட உதவி கேட்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.

4 . ஒற்றுமை இருந்தால் எந்த நிலைமையையும் எளிதில் சமாளித்துவிடலாம்.

5 . வீரம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு விவேகமும் முக்கியம்.

6 . எந்த ஒரு காரியத்தையும் முன்னிறுத்தி கொண்டு செல்ல சரியான தலைவன் தேவைப்படுகிறான்.

7 . ஒரு வேலையை முடிக்காவிடில் திட்டுகிற அதே வேளையில், அந்த வேலை முடிக்கப்பட்டுவிடால் அதற்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் அவசியம்.

8 . பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவதை விட, அதை எதிர்கொண்டு சமாளித்தலே புத்திசாலித்தனம்.
(The best way to gain self-confidence is to do what you are afraid to do).

9 . ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாவிட்டால், அதை எவராலும் செய்ய முடியாது என்றில்லை.

     எல்லா பயணங்களும் தன் லட்சியத்தை அடைவதில்லை. ஆனால், ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது. 


Tuesday, December 20, 2011

உதிரும் விருப்பங்கள்


வாழ்க்கைக் குறித்த 
நம் விருப்பம் 
உதிர்ந்த 
மறுக்கணத்தில் 
துளிர்க்க  
ஆரம்பிக்கிறது 
நம் குறித்த 
வாழ்க்கையின் விருப்பம்.

Thursday, November 17, 2011

நிலவும் வாழ்வும்


வளர்பிறையையும் 
தேய்பிறையையும் 
தவிர 
வேறென்ன வேண்டும்
நிலவையும் 
வாழ்வையும் 
ரசிக்க ?!



Thursday, November 10, 2011

ஜனனம் - மரணம்


பிறப்பின் முடிவுரை 
மரணம்.
 இறப்பின் முன்னுரை 
ஜனனம்.

Tuesday, September 20, 2011

பால்ய நினைவு



குறும்பு செய்யும் 
என் மகனை 
அதட்டும் போது
என்னை 
அதட்டும் 
என் பெற்றோரைப் 
பார்க்கையில் 
நினைவுக்கு 
வருகிறது
தாத்தா பாட்டி 
இல்லாத 
எனது பால்ய காலம்!

Sunday, September 18, 2011

...சொல்லாததும் உண்மை

    

     "பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே. மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால், பொய் உன்னை வாழ விடாது. உண்மை உன்னை சாக விடாது", என்றார் விவேகானந்தர்.

     இன்று நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், உண்மையை எப்படி எதிர்கொள்வது என்பதே. உண்மை பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அன்றோ? இந்த உலகத்தில் சொல்ல மறுக்கிற விஷயங்களும், சொல்லாமல் மறைக்கிற வீஷயங்களும் மட்டுமே தற்போது உண்மையாக இருக்கின்றன. உண்மை பேசுகிறவன் பலர் பார்க்க கயிற்றின் மேல் நடக்கிறவன் போல. எல்லாருக்கும் அந்த தைரியம் வந்துவிடாது. ஆனால், அவனது செய்கையை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். மேற்கொண்டு அவனுக்கு எதுவும் கிடைக்காது!

     மௌனத்தை வார்த்தைகளால் என்றுமே வெல்ல முடியாது. ஏனென்றால் மௌனம் என்பதுதான் உண்மை. வார்த்தைகளால் மௌனத்தை விளக்க முடியும். ஆனால், நம்மால் என்றுமே மௌனத்தை உருவாக்க முடியாது. மௌனம் சில நேரங்களில் தண்டனை; சில நேரங்களில் மன்னிப்பு!

    நிர்வாணமே உண்மை. ஆனால், நம்மால் அந்த நிர்வாணத்தை எதிர்கொள்ள முடியுமா? எதிர்க்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை ஒப்புக்கொள்ளவாது முடியுமா? இந்த உலகத்தில் சொல்லாமல் போகின்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் போவதில்லை. 
          
    வாழ்க்கை அபூர்வம் என்றால், அதை அணு அணுவாக வாழ்பவன்? அபூர்வங்களின் அபூர்வம்! அப்படி ஒரு அபூர்வக் கலைஞன் தான் "பிரகாஷ்ராஜ்". அவரது "...சொல்லாததும் உண்மை" என்கிற தொடர் ஆனந்த விகடனில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்து, பிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.  உண்மையை சொல்வதே தைரியமான விஷயம் என்றால், ஒரு ஊடகத்தின் வாயிலாக உண்மையை உரக்க சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!

     தாயன்பு, காதல், காமம், நம்பிக்கை, நம்பிக்கை துரோகம், நட்பு, திமிர், கர்வம், பயம், பிரிவு என ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதைகளை உண்மையாக திரும்பி பார்க்கிற தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாது. ஒரு விஷயத்தை உண்மையாக பார்ப்பதற்கும், நமக்கு வசதியாக பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், நமக்கு எது வசதி என்பதில், எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.



    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எந்த மனிதனும் காமத்துடனான தன் அனுபவத்தை எவரிடமும் அவ்வளவு எளிதில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். காந்தி  தன் தந்தை இறக்கும் தருவாயில், தன் உடல் பசியை தீர்க்க தன் மனைவியை அழைத்ததையும், தனது வயதோகிய காலத்தில் தன் துறவர வாழ்க்கையின் மீது தானே சந்தேகம் கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டதையும் இந்த உலகத்துக்கு வெளிப்படையாக சொன்னார். அதே துணிச்சலை பிரகாஷ்ரஜிடமும் பார்க்கிறேன்.

    சகமனிதனின் அனுபவம் தானே நமக்கு வாழ்க்கை பாடம்?  

நூல் விவரம்:- 
பெயர்: ...சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ. 110 /-