Thursday, December 6, 2012

அம்மாவும் என் காதலிகளும்...


சிறு வயதில்
என்னவென்றே
தெரியாமல்
நான் நடித்த நாடகத்தில்
என் மனைவியாக
நடித்த
ரசிதா
இன்றும் கனவில் வந்து
கேலி பேசுகிறாள் -
இப்போது வரை அவளிடம்
பேசியதில்லை என்று.
ஒரே தெருவில்
வசித்திருந்தாலும்
ஒருவருக்கு ஒருவர் 
பிடித்து 
இருந்தாலும்
காதல் சொல்லாமலே
விலகி சென்ற என்னை
கேள்வி கேட்டு
கனவில் துரத்திக்
கொண்டிருக்கிறாள்
தோழி காவ்யா.
என் காதலை ஏற்காமல்
நிராகரித்த கல்லூரி தோழி
லக்ஷ்மி நிதம் கனவில்
வந்து காதல் பேசுகிறாள்.
ஆனால் -
இத்தனை ஆண்டுகள்
சேர்ந்து இருப்பினும்
வார்த்தைகளால்
அன்பை பரிமாறிக்கொள்ளவில்லை
நானும் என் அம்மாவும்
கனவிலும் கூட!  


Wednesday, December 5, 2012

உதிரும் இலை


உதிரும் இலை
கூட்டுகிறது 
காற்றின் சுமையை!



Friday, November 23, 2012

வீட்டின் கனவு


பின் இரவில்
ஆழ்ந்த உறக்கம்
கொண்டிருக்கிறது
என் வீடு.
துயில் கலைந்து
அழும் குழந்தையின்
அசைவு
வீட்டின் கனவாககூட இருக்கலாம்.




Saturday, November 3, 2012

குழந்தைகளின் அழகிய உலகம்



புதிதாகப் பள்ளியில் 
சேர்ந்திருக்கும் 
என் மகள் 
நான் அலுவலகம் 
சென்று திரும்பிய 
ஒரு மாலைப் பொழுதில் 
ஓடி வந்து கேட்கிறாள்,
"அப்பா! இன்னிக்கு 
உங்க டீச்சர் புதுசா 
என்ன rhymes சொல்லிக் கொடுத்தாங்க" என்று.
குழந்தைகளின் உலகம்தான் 
எத்தனை அழகாய் இருக்கிறது -
அவர்களின் அழகான புரிதல்களைப் போல!



Tuesday, October 23, 2012

நீ துரத்தும் வண்ணத்துப்பூச்சி


வண்ணத்துப்பூச்சியை விட அழகு
அதை நீ
பிடிக்க முயல்வது!