Saturday, June 19, 2021

நினைவின் மிச்சம்


எல்லாம் கடந்து 
வந்த பின்பும் 
இன்னும் ஏதோவொன்று 
கடக்க இருப்பதை போல 
எல்லாம் மறந்துவிட்ட  
பின்பும் இன்னும் 
ஏதோவொரு நினைவு 
மிச்சமிருக்கிறது 
மறப்பதற்கென்று.






Thursday, November 5, 2020

பதற்றம் [சிறுகதை]

   


       காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள். 

        தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை தக்கவைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தருணமாகவும் இருந்ததினால் இரவு-பகல் பாகுபாடின்றி உழைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ரமேஷ் கடந்த மூன்று மாதங்களாகவே. அவ்வகையில் அன்று வீட்டிலிருந்தவாறே நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு அதிகாலை ஐந்து மணிக்குதான் உறங்கச் சென்றிருந்தான். 

        எப்போதும் ரமேஷ் உறங்கச் செல்லும்முன் ரம்யா எழுந்து அவனுக்கு காலை உணவாக இட்லியோ, தோசையோ தயார் செய்துக் கொடுத்து, அவன் உறங்கச் சென்ற பிறகு தனது தந்தையான பாண்டுரங்கனை எழுப்பி அவருக்கு காபி கொடுத்து தனது அன்றாடங்களில் தன்னைக் கரைத்துக் கொள்வாள். ஆனால், கடந்த இரு தினங்களாகவே அவளுக்கு அதிகரித்து வந்த முதுகு வலியால் ரமேஷ் அவனாகவே தனக்கு 'அதிகாலை' உணவை சமைத்து, சாப்பிட்ட பின்பு உறங்கச் செல்வது வழக்கமாயிருந்தது. 

        நிறைமதி பிறந்ததிலிருந்தே அவ்வப்போது வருகிற முதுகுவலிதான் என்றாலும் இம்முறை சற்றே அதிகமாகத்தான் இருந்தது ரம்யாவுக்கு. திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பிறகும், இரண்டு கருச்சிதைவுகளுக்குப் பிறகுமாக தனது கைக்குள் தங்கியவள் நிறைமதி என்கிற நிறைவை, மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாதபடியாக அவளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பதாகவும், அவளது ஐந்து வயதுவரை மிகப்பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படியும் மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அதனாலேயே நிறைமதியை வெகு கவனமாக இருவரும் பார்த்துக் கொண்டனர். வெளியே செல்வதாக இருப்பினும் யாரோ ஒருவரின் முழு கவனமும் அவள் மீதே பதிந்திருக்கும். இரண்டே வயதுடையவளாதலால் நிறைமதிக்கு சிலது பழகியும், பலது புரியாமலும் குழந்தைமையுடன் விளையாட்டின் ஆர்வமிகுதியில் லயித்துப் போவதுண்டு.

       அன்றைக்கு ரம்யா எழும்போது வலி வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், அவள் எழுவதற்கு முன்பாகவே ரமேஷ் வந்து படுத்துறங்கிப் போயிருந்தான். உழைத்த களைப்பு அவன் உறக்கத்தில் தெரிந்தது. நிறைமதி அவனின் மார்புச் சூட்டின் கதகதப்பில் கட்டியணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இருக்கும் வரை தன்பாலும், அப்பா வந்த மறுநிமிடமே தன்னைவிட்டு அவர்வசம் செல்வதும் இப்பெண்பிள்ளைகளின் இயல்பு போலும் என புன்னகைத்தவாறே படுக்கையைவிட்டு எழுந்தாள். தானும்கூட தன் சிறுவயதில் அப்படியிருந்தது  அவள் நினைவுக்கு வந்தது. ஆனால், நிறைமதி தூக்கத்தில்கூட அவளது தந்தையை கண்டறிபவளாக இருப்பதை நினைத்தவாறே சமயலறைக்கு செல்லும்போது வீட்டின் பிரதானக் கதவு பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். பிறகு உட்புறமாக தாளிட்டு தனது தந்தையை எழுப்ப சென்று அவரை அறையில் இல்லாதது கண்டு மீண்டும் வெளிக்கதவை திறந்து பார்த்தபோது அவரது செருப்பு அங்கில்லை என்றபோதுதான் அவளுக்கு பதற்றம் இன்னும் அதிகமாயிற்று.

        பதற்றத்தின் ஒருபாதி அவர் இல்லாததற்கும், மறுபாதி தன் கணவன் எழும் முன் அவர் வந்துவிட வேண்டுமென்பதாக இருந்தது அவளுக்கு. அப்பா இவ்வாறு சொல்லிக்கொள்ளாமல் செல்வது இது முதற்முறையல்ல. இப்போதும்கூட ரமேஷ் வந்து படுப்பதற்கும், தான் எழுவதற்குமான இடைப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள்தான் அவர் சென்றிருக்க வேண்டும் என மனதில் கணக்கிட்டுக் கொண்டாள். அவர் போவதும், வருவதும் பிரச்சனையில்லை. ஆனால், தான் எங்கே செல்கிறார் என சொல்லிக்கொள்ளாமல் செல்வதால் எழுபது வயது முதுமையானவர் வீடுவந்து சேரும்வரை மனம் கொள்கிற பதற்றம் முன்பைவிட ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு அதிகரித்தவண்ணமிருந்தது.

        "ஆனால், சாவி எப்படி அவர் கைக்கு கிடைத்தது?" என சட்டென அவள் மனதில் அந்த கேள்வி விஸ்வரூபமாய் எழுந்தது. அம்மா இறந்த பிறகு தங்களோடு வந்து தங்கிவிட்ட அப்பா கடந்த மூன்றாண்டுகளில் பத்துமுறைக்கும் மேலாக இப்படி சென்றதுண்டு. அதனாலேயே கடந்த முறை அவர் சென்றபோது இனி வீட்டின் நுழைவாயில் கதவை ஒவ்வொரு நாளும் பூட்டி சாவியை தங்கள் அறையில் வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டனர். ஆனால், தொலைக்காட்சி மேசையின் மேலிருந்த பூட்டையும், அதன் வயிற்றில் தனது தலையை சொருகி வைத்திருந்த சாவியையும் பார்த்த போது நேற்று தான் பூட்டாது தவறவிட்டதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள். 

        ரம்யாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பலமுறை வற்புறுத்தியும் வெளியே செல்லும் போது தனது அலைபேசியை தன்னுடன் எடுத்துச் செல்லாமல் இருப்பதால் அவரை தொடர்புகொள்ள முடியாது தவிப்பதை அவளால் இன்றுவரை தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் தளத்தில் இருக்கும் தனது வீட்டின் பால்கனிக்கும், தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில்  தெரிகிற  தனது வீட்டின் வெளிப்புற நடைபாதையின் முன்பகுதிக்கும் மாறி மாறி நடந்துக் கொண்டே இருந்தாள் - அவளது தந்தையின் வருகையை எதிர்பார்த்தபடி. கீழே சென்று குடியிருப்பின் காவலாளியை பார்த்து விசாரிக்கலாமா என அவள் யோசித்தபோதே நிறைமதி "அம்மா..." என அவர்களின் அறையைவிட்டு ரம்யாவை நோக்கி நடந்து வந்தாள். இனி தன் மகளை கவனிப்பதற்குத்தான் சரியாக இருக்குமென அவளை வீட்டின் கூடத்தின் மையத்திலிருக்கும் ஊஞ்சலில் அமர வைத்து ஒவ்வொரு வேலையாக பார்க்க ஆரம்பித்தாள்.

        தனது அப்பா வருவதற்கு ஒருவேளை  தாமதமானாலோ அல்லது அவர் வருவதற்குமுன் தன் கணவர் எழுந்துவிட்டாலோ நடக்கக்கூடிய சம்பவங்களை நினைத்துப் பார்க்கவே ரம்யாவுக்கு பயமாக இருந்தது. 

        எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது பாண்டுரங்கன் கடந்தமுறை சொல்லாமல் வெளியே சென்று வரும்வரை. சொல்லப்போனால், ரமேஷுக்கு தனது மாமனாரை வைத்துப் பார்த்துக் கொள்வதிலோ அவர் வயதின் வெளிப்பாடாக செய்கிற காரியங்களிலோ ஒரு புகாருமில்லை. தனது மச்சினன் ஜெகன் உதிர்த்த ஒரு சொல்தான் ரமேஷை இப்போது பிடித்து ஆட்டுகிறது. 

        "என்ன ரம்யா, நீங்க நல்லா பாத்துப்பீங்கதானே உங்க வீட்ல அப்பாவை விட்டுட்டு இப்படி கடல் கடந்து வந்து நாங்க கஷ்டபடுதோம்.  இப்படி ஒவ்வொரு முறையும் அவர் எங்க போனாருன்னே தெரியலைனு சொல்றீங்க? எங்க மனசு இங்க கெடந்து அடிச்சுக்கறது உங்களுக்கு எங்க தெரியப்போகுது?" என அவன் கனடாவிலிருந்து தொலைபேசியில் சொன்ன மறுநிமிடம் ரம்யாவின் அலைபேசியை சுக்குநூறாக ரமேஷ் உடைத்தெறிந்தான் .

        ஆனால், அதே ஜெகன் தனது அம்மா இறந்தபோது நடந்துகொண்ட விதமும், இப்போது நடந்துக்கொள்கிற விதமும்தான் ரமேஷையும், ரம்யாவையும் வெகுவாக காயப்படுத்தியது.  

        மூன்றாண்டுகளுக்கு முன் ரம்யாவின் அம்மா - பகவதி - மாரடைப்பால் இறந்து போன போது  எல்லாவற்றையும் முன் நின்று கவனித்துக் கொண்டது ரமேஷ்தான். கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த ஜெகன் செய்தவை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று இறுதிச் சடங்கு. மற்றொன்று பந்தல் முதல் சுடுகாடுவரை செய்யப்பட்ட செலவுகளை சரியாக இருக்கிறதா என மிகச் சரியாக கணக்குப் பார்த்து செலுத்தியது.

        அப்போதும்கூட தனது மாமனாரின் எதிர்காலம் குறித்த பேச்சை ஆரம்பித்து வைத்தது ரமேஷ்தான். ரமேஷ் பேசாமலிருந்திருந்தால் ஜெகனும் அமைதியாக கனடாவிற்கு திரும்பியிருக்கக்கூடும். அதற்கு வழி வகுக்காமல் இருக்கவே ரமேஷே உரையாடலை தொடங்கி வைத்தான் பதிமூன்றாம் நாள் எல்லா காரிய நிகழ்வுகளும் முடிந்த அன்றிரவே.

        "என்ன மச்சான்? அப்பாவை இப்படியே இங்க தனியா விட்டுட முடியுமா?"

        "ஆமாங்க மாமா, எனக்கும் அதே யோசனைதான்" என்ற போது ஜெகனின் மனைவி சுந்தரி மிக சாதுர்யமாக ரமேஷின் பின்புறமுள்ள கதவுக்கு வெளியே நின்று கொண்டாள் தனது கண் ஜாடைகளுக்கு ஏற்றவாறு ஜெகனை ஆட்டுவிப்பதற்காக.

        அதை எதிர்பார்த்த ரமேஷ் உடனே சமயலறையிலிருந்த ரம்யாவை அழைக்கவும், அவளும் தன் அண்ணி நின்றுக் கொண்டிருந்த கதவின் மறுமுனையில் வந்து நின்றாள்.

        "ம்... என்ன முடிவு பண்ணிருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி பண்ணிட்டு நாங்களும் சென்னைக்கு கெளம்பிடுவோம்"

        "அது வந்து மச்சான்.... நானே உங்கள்ட்டயும், தங்கச்சிட்டையும் பேசணும்னு இருந்தேன். நீங்களே கேட்டுட்டீங்க........"  என இழுத்தவாறே தரையைப் பார்க்கவும் ரமேஷ் தான் எதிர்பார்த்ததுதான் என்பதை உறுதி செய்துக்கொண்டான்.

        "எனக்கு இன்னும் ஆறு மாசத்துல ப்ராஜெக்ட் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் எப்படி பாத்தாலும் இந்தியாவுக்குத்தான் வந்தாகணும். அது வரைக்கும் அப்பாவை இங்க இருக்கிறதைவிட சென்னைல உங்ககூட இருந்தா அவருக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்.  நாங்களும் அங்க கொஞ்ச நிம்மதியா இருப்போம். அப்பறம் நாங்க இங்க வந்த பின்னாடி அப்பாவை எங்களோட கூப்பிட்டுக்கறோம். என்ன சொல்ற ரம்யா?" என லாவகமாக காயை ரமேஷிடமிருந்து தனது தங்கையிடம் நகர்த்தினான்.

        "ஆமாங்க. அண்ணன் சொல்றதும் கரெக்ட்தான். அவரை இங்க தனியா விடறதுக்கு எனக்கும் பயமாதான் இருக்கு" என்ற ரம்யாவை திரும்பி பார்க்காமல் "சரி, அப்ப அண்ணன்-தங்கச்சி நீங்களே பேசி முடிவு பண்ணிக்கோங்க" என அந்த அறையைவிட்டு வெளியேறிய ரமேஷ் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு மூலையில் நின்றவாறே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் - நிலவற்ற வானில் மேகங்கள் அதை தேடி அலைவதைப்  போலிருந்தது அவனுக்கு.

        அரைமணி நேரம் கழித்து மேலே வந்த ரம்யா, "என்னங்க... என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீங்க? கோவமா?" என்றபோது பதிலேதும் பேசாமல் திரும்பிக் கொண்டான்.

        "கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க" என்றவளை பார்க்காமலேயே "ம்ம்ம்...அதான் அண்ணன்-தங்கச்சி நீங்களே பேசி முடிவெடுத்தாச்சுல. இன்னும் என்ன கேக்கறதுக்கு இருக்கு?

        "கொஞ்சம் கோவப்படாம கேளுங்க" என ரமேஷை தன் பக்கம் திருப்பி, "அப்பாவை இங்க தனியா விட்டுட்டு போய் நாளைக்கே ஏதாவது அவசரம்னா சென்னைல இருந்து திருச்சிக்கு நாமதான் கெளம்பி வரணும். அதுக்கு பேசாம அவரை நம்மளோட கூப்பிட்டு போய்ட்டா ஆறு மாசம் கழிச்சு ஒரேடியா அண்ணனோட அனுப்பிச்சிடலாம்"

        "ம்... அதுவும் ஒருவகையில சரிதான். ஆனா, உங்க அண்ணனதான் எப்படி நம்பறதுன்னு மனசு ஓரத்துல ஒரு பல்லி கெடந்து கத்துது" என்ற தன் கணவனை ஒருவழியாக சம்மதிக்க வைத்து அடுத்த வாரத்தில் தன்னுடன் பாண்டுரங்கனை அழைத்துச் சென்றாள். 

       னால், அவர்கள் எதிர்பாராவிதமாக அடுத்த ஆறு மாதத்தில் கனடாவில் தனது குடும்பம் சகிதமாக குடியுரிமைப் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான் ஜெகன். ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வருவதுண்டு. அப்போதும்கூட பெயரளவில் இரண்டு நாட்கள் சென்னையில் தனது தங்கை வீட்டில் தங்கிவிட்டு மீதமிருக்கும் ஒரு மாத விடுமுறையில் பெரும்பாலும் அவன் மனைவியின் வீட்டிலிருப்பதும், ஊர் சுற்றுவதுமாக இருந்துவிட்டு திரும்பி விடுவான். மாதத்தின் முதல்நாள் ரமேஷுக்கு சம்பளம் வருகிறதோ, இல்லையோ விடிவதற்கு முன்பாகவே ஜெகனிடமிருந்து பணம் வந்துவிடும். பணத்தைக் கொண்டு பிறரது வாயடைக்கும் வித்தை தெரிந்தவன் அவன். 

        அதன்பிறகு ரம்யாவால் ரமேஷிடம் தனது அப்பா குறித்தோ, அண்ணன் குறித்தோ ஒன்றும் சொல்ல முடிவதில்லை. அண்ணனுக்கு அவன் பையில் நிறைகிற பணமும், அவனது குடும்பமும், எதற்கும் பொறுப்பேற்காத தான்தோன்றித்தனமும்தான் பிரதானம். 

    ஆனால், அப்பா ஏன் இப்படி இருக்கிறார்? அந்த காலத்திலேயே பொறியியல் படித்தவர். ரயில்வேயில் நல்ல பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். குடும்பத்திற்கு ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தவர். ஆனால், அம்மா இறந்தபின்பு முற்றிலுமாக மாறிப் போயிருந்தார். நேரத்திற்கு தனது வேலைகள் நடக்க வேண்டுமென பெரிதாக எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தார். காபி கொடுக்க பத்து நிமிடங்கள் தாமதமானாலும் தன்னை யாரும் இப்போது கவனித்துக் கொள்வதேயில்லை, "உங்கம்மா இருந்திருந்தா எனக்கு இந்த நெலமை வந்துருக்குமா?"  என ஒவ்வொன்றாக புலம்பஆரம்பிப்பார்.

        கடந்தகால கசப்பின் ஒவ்வொரு துளியையும் தனது நினைவுகளால் மீண்டும் ருசிக்கத் துவங்கியிருந்தார். உடலில் ஏற்படுகின்ற பலவீனம், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஒவ்வொன்றாக தனது மனதில் வைத்து பலசமயங்களில் விஷமாக வார்த்தைகளை வெளிப்படுத்துவதுண்டு. அது அவரை மட்டுமல்லாது வீட்டிலேயே இருக்கும் ரம்யாவையும் வெகுவாக பாதித்தது.  அதுகூட தனது ஒரு கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கக்கூடுமோ என அவள்எண்ணுகிற அளவுக்கு பாண்டுரங்கனின் செயல்களும், சொற்களும் வெகுவாக மாறியிருந்தன பச்சையம் இழந்த முதிர்ந்த செடியொன்றின் சாயலைப் போல.

        இருப்பினும், அவளது தந்தையின் செய்கைகள் குறித்து ரமேஷிடம் எந்த புகார்களும் சொல்லாது தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டாள். ஏற்கனவே அவளது அண்ணனின் செய்கையால் கோபத்திலுள்ள ரமேஷ் இதனால் மேலும் கோபமடையாது நிலைமையை முடிந்தளவு தனது கட்டுக்குள் வைத்திருந்தாள். 

        நிறைமதி பிறந்தபிறகு இவையனைத்தும் வெகுவாக மாறியிருந்தன. அவர் ரம்யாவைப் பார்த்துக் கொண்டதைப் போலவே தனது பேத்தியையும் பார்த்துக் கொண்டார். அதுகுறித்து ரமேஷுக்கும், ரம்யாவுக்கும் பெரும் நிறைவிருந்தது. ஒருவகையில் அவர் இங்கிருப்பதுகூட நல்லதுக்குதான் என அவர்கள் மனம் மாறிக்கொண்டிருந்த தருணத்தில்தான் ஜெகன் சொன்ன அந்தவொரு வார்த்தை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டது.

        இனியொருமுறை பாண்டுரங்கன் சொல்லாமல் அவர் இஷ்டத்துக்கு வெளியே சென்றால் அவருக்கு அந்த வீட்டில் இடமில்லை என ரமேஷ் திட்டவட்டமாக ரம்யாவிடம் எச்சரித்திருந்தான். அதனாலேயே அனுதினமும் மிக ஜாக்கிரதையாக இருந்த ரம்யா  இப்போது செய்வதறியாது தனது தந்தையின் வரவை எதிர்பார்த்து வீட்டின் வாசலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள்.

        ணி பதினொன்று ஆகியிருந்தது. நிறைமதிக்கு இட்லி கொடுத்து இரண்டு மணிநேரமாகியிருந்ததால் அவளுக்காக பால் காய்ச்சிக் கொடுத்தாள். அவ்வப்போது ரமேஷ் எழுகிற அறிகுறி தெரிகிறதா என அறைக் கதவின் இடைவெளியில் எட்டிப்பார்த்துக் கொண்டாள். தொலைக்காட்சியில் ஏதோவொரு கேலிச்சித்திரத்தை மெல்லிய சத்தத்துடன் போட்டுவிட்டு நிறைமதியின் கவனத்தை அதில் குவியச் செய்து சமயலறையில் மத்திய உணவை தயார் செய்தபடியே வெளிப்புற கதவுக்கும், பால்கனிக்கு மாறி மாறி முக்கோண வடிவில் நடந்துக் கொண்டிருந்தாள்.

        நிமிடங்கள் அதிகரிக்க அதிகரிக்க சென்னையின் கோடையைத் தாண்டியும் அவளுக்கு வியர்த்தது . அப்போது எதிர்பாரா விதமாக ரமேஷின் அலைபேசிக்கு அழைப்பு வரவும் ரம்யா பதற்றமானாள். மெதுவாக அவர்களது அறைக்கதவின் இடைவெளியில் எட்டிப்பார்த்தபோது அவன் படுத்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தான். பேசும் தன்மையால் அது அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்பதை இலகுவாக யூகித்துக் கொண்டாள். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அழைப்பு நீடிக்கவே ரமேஷ் நேராக கூடத்திற்கு எழுந்து வரக்கூடும் என நினைக்க அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பேசாமல் தானாகவே ரமேஷிடம் சென்று சொல்லிவிடலாமா என மனம் அழைக்கழிந்த போது  பாண்டுரங்கன் மிகச் சரியாக வீட்டுக்குள் நுழைந்தார்.

        வெடித்துவந்த அழுகையை தனக்குள்ளாக அடக்கிக் கொண்டு, "எங்கப்பா போனீங்க?" என்றவளின் பதற்றத்தை கிரகிக்கத் தெரியாத பாண்டுரங்கன், "இல்லம்மா, ரொம்ப நாளாச்சேன்னு காலைல வாக்கிங் போய்ட்டு அப்படியே கோயம்பேட்டுல காய், பழமெல்லாம் சீப்பா கெடைக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்" என்றவரை அவசரமாக அமரச் செய்து அவர் வாங்கி வந்த பைகளை ரமேஷ் கண்ணுக்கு புலப்படாதபடியாக சமையலறையின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு கூடத்திற்கு வந்து, "நீங்க வெளிய போய்ட்டு வந்தது அவருக்கு தெரிய வேணாம். கொஞ்சம் அமைதியா இங்கேயே உக்காருங்க" என்ற போது மிகச் சரியாக ரமேஷ்," ரம்யா......" என்றழைத்தான்.

        பயந்தபடியே சென்று அறைக்கதவை அவள் திறந்த போது, "சாப்பாடு ரெடியாம்மா. ரொம்ப பசிக்குது" என சோம்பல் முறித்தவாறே கேட்கவும் அவளும் பெருமூச்சுவிட்டபடி, "பல் தேச்சுட்டு வாங்க. எடுத்து வைக்கறேன்" என எல்லாவற்றையும் கூடத்தில் அடுக்கிவைத்தாள்.

       சில நிமிடங்கள் கழித்து வந்த ரமேஷ், "வாங்க மாமா, சாப்பிடலாம்" என பாண்டுரங்கனை பார்த்து அழைத்தவாறே தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தான்.

        "குட்டிம்மா, நீங்களும் வாங்க. தாத்தாவோட சாப்பிடலாம். தாத்தா உங்களுக்கு ஊட்டி விடறேன்" என தனது கையிலிருந்த பருப்பு சாத உருண்டையை நிறைமதியின் வாயில் திணித்த போதுதொலைக்காட்சியில் அச்செய்தி ஒளிபரப்பப்பட்டது.

    "நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் அடுத்தகட்டமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்- தொற்றின் சங்கிலித்தொடராக இருக்கக்கூடுமோ என ஆய்வில் சந்தேகிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் பணியாற்றி வந்த 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்தி விளம்பர இடைவேளைக்குப் பிறகு..."


Thursday, September 24, 2020

90's நினைவுகள் - கிரிக்கெட் கார்டு


My Vikatan-னில் பிரசுரமாகியுள்ள எனது கட்டுரை:

        இப்போது நான் அறவே கிரிக்கெட் பார்ப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்தவைக் கூட பத்துக்கும் குறைவான ஆட்டங்களாகவே இருக்கக்கூடும் - அதிலும்  கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதியாட்டம் என மூன்றும் 2011-ன் உலகக்கோப்பைக்கானது. 

        எல்லா ஆண்களின் பால்யம் போலவே எனதும் கிரிக்கெட்டால் நிறைந்ததுதான். அதைத் தவிர வேறொன்றும் ஆடியதாக நினைவில்லை. இருப்பினும் கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வமற்று விளையாடுவதில் மட்டுமே ஆர்வமாயிருந்தேன். 

        அது 1997-98-ன் இடைப்பட்ட காலம் - ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். கைச் செலவுக்கென பெற்றோர்கள் எதையும் தத்தம் பிள்ளைகளுக்கு தந்திராத காலகட்டம். சிலர் அவரவர் பிள்ளைகளுக்கு பிஸ்கட்டையோ, முறுக்கையோ மதிய உணவுடன் கொடுத்து அனுப்புவதுண்டு.

        அப்படியான காலகட்டத்தில் திடீரென அந்தவொன்று பேரலையாக எங்கள் வாழ்வில் பிரவேசித்தது. அதுதான் bubble gum -க்கு இலவசமாக வழங்கப்பட்ட கிரிக்கெட் கார்டுகள்.


        என் நினைவு சரியெனில் அதை அறிமுகப்படுத்தியது big fun ஆக இருக்கக்கூடும். இல்லையெனில் அதன் மூலமாகதான் எனக்கு அறிமுகமாயிற்று. முதன் முதலாக ஏதோவொரு tournament அடிப்படையில் வெளியிடப்பட்டன 
(அநேகமாக சஹாரா அல்லது ஷார்ஜாஹ்). அதன் பின்பாக ஒவ்வொரு chewing gum நிறுவனமும் வெவ்வேறு வகையிலான கார்டுகளை கிரிக்கெட் வீரர்களின் தரவுகளைக் கொண்டு வெளியிட்டன. அதாவது ஒரு bubble gum வாங்கினால் ஒரு கார்டு இலவசம். ஆனால், center fresh மட்டுமே இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என இருந்தது. எனினும் அதற்கும் நல்ல வியாபாரம் இருந்தது.

    
        அப்படியான தருணத்தில் பள்ளியை விட்டு வீட்டிற்குச் செல்கையில் யாரேனும் ஒருவர் கிரிக்கெட் கார்டு வாங்குவதாக இருந்தாலும் அவர்களது நண்பர்கள் புடைச் சூழ கடைக்குச் சென்று ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்தை பரிந்துரைக்க அதற்கு ஏற்றார் போல ஒன்றை தேர்ந்தெடுப்பதுண்டு. அது சந்தைக்குப் புதிது என்பதால் கடைக்காரர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆரம்ப கட்டத்தில் வாங்க வரும் சிறுவனிடமே கொடுத்து அவனது விருப்பம் போல எடுத்துக் கொள்ள அனுமதித்தவர்கள் அதன் பின்பு தாங்கள் கொடுப்பதை வாங்குவதாக இருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதித்தனர். காரணம் என்னவென்று நான் சொல்லி புரிய தேவையில்லை.

        எனக்கு அதன் மீது ஆசை இருப்பினும் வாங்குவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. வீட்டில் கேட்டாலும், "bubble gum -லாம் சாப்பிடக் கூடாது" எனக் கண்டித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக இருக்க "இதுதான் மொதலும், கடைசியும் என அப்பா ஒருமுறை வாங்கித் தந்தார். கைவசம் ராகுல் டிராவிட் - எனது ஆசான்.

    
        நண்பர்கள் அனைவரும் அவரவர் பலத்திற்கு ஏற்ப வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், அதை வைத்து எப்படி விளையாடுவதென யாருக்கும் புரிந்தபாடில்லை. நாங்கள் தமிழ் வழிக் கல்வியில் பயின்று வந்தோம். முதன்முறையாக ஆங்கிலம் அறிமுகமானதே மூன்றாம் வகுப்பில்தான். அப்போதைய வகுப்பாசிரியை பரிமளம் ஒவ்வொரு மாணவர்களின் பெயரையும் சிலேட்டில் ஆங்கிலத்தில் எழுதித் தந்து மறுநாள் எங்களை மனப்பாடம் செய்து சொல்லச் சொன்னது எப்போதும் நினைவில் இருப்பதற்கான எளிய காரணம் - பதினைந்து ஆங்கில எழுத்துக்களாலான எனது பெயர்.

        அப்படியான பின்புலத்தில் இருந்த எங்களுக்கு கிரிக்கெட்டின் பதங்களான  economy என்பதோ, batting/bowling average என்பதோ புரிபடவில்லை. அப்போதுதான் எங்கள் வகுப்பின் ரௌடிகளென பெயரெடுத்த வினோத்தும், பிரபாகரனும் விளையாட்டின் விதிகளை அவர்களாக வரையறுத்தார்கள்.  இருவர் மட்டுமே ஆடுபவர்கள். இருவரிடத்திலும் அவர்கள் சேகரித்த கார்டுகளில் சில. கையில் ஒரு நாணயம். ஒருவர் சுண்டி தனது உள்ளங்கைக்குள் மறைத்து வைத்து, "பட்டா? பொம்மையா?" (பூவா?தலையா? என்பதைத்தான் அப்படி சொல்லிவந்தோம்) எனக் கேட்க, சரியாகச் சொன்னால் கேட்டவனிடம் சுண்டியவனின் கார்டு ஒன்று கொடுக்கப்படும். இல்லையெனில் எதிர்மாறாக கார்டுகள் பயணப்படும். 

    
        நாள்தோறும் அவர்கள் இருவருமே பெரும்பாலும் விளையாடினார்கள். பிரபாகரனுக்கெனவும் , வினோத்துக்கெனவும் நண்பர்கள் இரு அணிகளாக பிரிந்து நின்றோம். ஒவ்வொரு காலையிலும் பள்ளியின் பின்புறமுள்ள சத்துணவுக் கூடத்தின் முன்பாக உள்ள மரநிழலில் ஆட்டம் நடப்பது அன்றாடமாகிப் போனது. அவரவர்களுக்கென தனித்தனியே சுண்டுவதெற்கென நாணயங்களை வைத்துக் கொண்டனர் - அவரவர்க்கு அது ராசியென.  ஒரு நாணயத்தை எத்திசையில் வைத்து சுண்டினால் எது விழுமென அவரவருக்கான கோட்பாடுகளை வைத்திருந்தனர். நாணயத்தின் தலைப்பகுதியை நம் பக்கமாக வைத்து எவ்வளவு முறை சுண்டினாலும் அவர்கள் சொன்னது போல தலைதான் விழுந்தது. ஒரு நாணயத்தை எவ்வளவு முறை எப்படி சுண்டினாலும் தலை அல்லது பூ விழுவதற்கான சாத்தியக்கூறுகள் ஐம்பது சதவிகிதம் இரண்டுக்கும் இருக்கின்றன என்பது போன்ற விதிகளோ, கணிதங்களோ அறியாத வயது அது.

    
        மிகக் குறுகிய காலகட்டத்தில் இன்னும் பலவாறு கார்டுகள் வெளியிடப்பட்டன. தினம் தினம் இதனால் எங்களது ஆட்டமும் சூடுபிடித்தன. காலை நேரத்தில் மட்டும் என இருந்த ஆட்டம் அத்தனை இடைவேளைகளிலும் நடந்தேறின. இருவர் மட்டும் ஆடிய விளையாட்டு இப்போது கிட்டத்தட்ட அனைவராலும் ஆடப்பட்டது. அப்படியான ஒரு மதிய வேளையில் விளையாட்டின் ஊடாக பிரபாகரனுக்கும், வினோத்துக்கு தொடங்கிய சண்டை மைதானத்தில் அவர்கள் இருவரும் கட்டிப் புரண்டு ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி ஏறி அடித்துக் கொள்ளும் அளவுக்கு வலுத்தது. 

        மேலோங்கிய சச்சரவின் பரபரப்பில் தனது அறையைவிட்டு வெளியே வந்த தலைமையாசிரியை இருவரையும் இழுத்துச் சென்றார். பின்பு - விசாரணை, பள்ளி முழுவதிலும் திடீர்ச் சோதனை, கிரிக்கெட் கார்டு வைத்திருந்த அத்தனை பேரையும் மைதானத்தில் மண்டியிட வைத்து என மீதமிருந்த அன்றையப் பொழுது முழுவதையும் ஒரு சூன்யம் விழுங்கிக் கொண்டிருந்தது.

        பள்ளி விடுவதற்கு முன்பாக அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் அணிவகுத்து நிற்கச் சொல்லி சுற்றறிக்கை வந்தது. தலைமையாசிரியை ஆவேசம் கொண்டவராக கத்தினார். இனிமேல் யாரேனும் கிரிக்கெட் கார்டுகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு TC கொடுக்கப்படும் என முடித்த போது ஒன்றும் புரியாத ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் இருவர் அழத்தொடங்கினர்.


        பிற்பாடு கோடை விடுமுறைக்குச் சித்தி வீட்டுக்கு தூத்துக்குடி சென்ற வந்தபோது என்னிடம் இருந்த கார்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தன. ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்ந்த சமயம் உலகக்கோப்பை'99 நெருங்கிக் கொண்டிருந்தது. அதுவரையிலும் இந்திய அணி வீரர்களின் பெயரையே தெரிந்திராத எனக்கு கார்டுகளின் மூலம் எந்த அணியில் யார் நட்சத்திர வீரர், ஒவ்வொரு அணிக்கும் யார் கீப்பர்கள் என எல்லாம் அத்துப்படியாகி இருந்தன. முந்தய நாளின் ஆட்டங்கள் அடுத்த நாளில் வகுப்பறைத் தோழர்களிடம் விவாதிக்கப்பட்டன. வாரயிறுதிகளில் கிரிக்கெட் விளையாடுவதுடன் கார்டுகளும் சேகரிக்கப்பட்டன. அப்போது நகரத்தில் இருந்து பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்ததினால் என்னிடமும் எப்போதும் கணிசமாக சில்லறைக் காசுகள் இருந்தன. 

        எந்தக் கடைகளில் என்ன கார்டுகள் இருக்கின்றன? எந்தக் கடைக்காரர் எப்படி? எங்கு சென்றால் நாமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனக் களப்பணிகள் மிகச் செம்மையாக நடந்தேறின. அப்படியானதொரு தேடலில்தான் எங்கள் தெருமுனையின் வலப்புறமுள்ள கவிதா ஹோட்டலின் பெட்டிக்கடைக்காரரை கண்டடைந்தோம் நானும், ரகுமான் அண்ணனும். அப்போதைய தினத்தில் அந்தக் கடை புதிதாக திறக்கப்பட்டது. அதனாலேயே கடைக்காரருக்கு விபரம் போதவில்லை என்பது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு அவர் கடைக்குச் சென்று நாங்களாகவே எங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அக்கடையில் கிரிக்கெட் கார்டுகள் கிடைக்கின்றது என்பதை எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்துக் கொண்டோம். அதற்கு மிக முக்கியமானதொரு காரணமும் இருந்தது. புதிதாக வந்திருந்த கார்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எங்களுக்குத் தேவையான கார்டுகளை தேர்ந்தெடுத்த பின்னர் கடைக்காரரிடம், "அண்ணா, இதோ இதை எடுத்துக்கறோம்" என எங்கள் கையிலிருந்தபடியே அவரிடம் காண்பிக்கும் போது அவர் பார்ப்பது லாரா-வாகவும், நாங்கள் பார்ப்பது அப்ரிடி-யாகவும் இருக்கும். நானும், ரகுமான் அண்ணனும் எங்களுக்குள்ளாகவே அறிவித்துக் கொண்ட "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசத்திட்டம்". சமயங்களில் ஒன்று வாங்க இலவசமாக இரண்டு, மூன்றென நேரமும் கைகூடியது.


        கார்டுகளின் எண்ணிக்கை நாள்பட அதிகரித்துக் கொண்டே போனது. பத்தாம் வகுப்புக்கு சென்ற ரகுமான் அண்ணன் அவர்வசம் இருந்த கார்டுகளை எல்லாம் என்வசம் ஒப்படைத்தார். ஒருகட்டத்திற்குப் பிறகு என்னிடம் இல்லாத கார்டுகளே இல்லை எனும் அளவிற்கு ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்தன. அதை வைத்திருந்த பைகளையும் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே வரும் போது வீட்டிலிருந்தவர்களின் கண்களிலிருந்து அதை மறைத்து வைப்பதென்பது சவாலாகிப்போனது. 

        வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளைகள் சர்வ நிச்சயமாக நாசமாய்ப் போவார்கள் என நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று. அவ்வகையில் வீட்டின் கண்கள் என்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

        பத்தாம் வகுப்பில் கடைசி மூன்று மாதங்கள் கட்டாய விடுதி என்பது எங்கள் பள்ளியின் விதிகளுள் ஒன்று. மீண்டும் வீடு வந்தபோது எல்லாம் சரியாக இருந்தன எனது பொக்கிஷத்தைத் தவிர. எத்தனை முறை வீட்டிலிருப்பவர்களிடம் கேட்ட போதிலும், "எங்களுக்கு தெரியாதுடா. நீ எங்க வச்சன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?" என அவரவர் வேலைகளில் கரைத்துக் கொண்டனர். 

        அதன் பின்பு நான்கு ஊர்களும், ஆறு வீடுகளும் மாறியாகிவிட்டது. இன்னமும் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஓர் அட்டைப்பெட்டியினுள்ளே  சென்ற தலைமுறையின் நிகரில்லா கிரிக்கெட் வீரர்கள் உயிர்த்தெழ முடியாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.


நன்றி: விகடன்.

Wednesday, August 19, 2020

தற்கொலை

 


மகன்களின் 
தற்கொலைகள் 
சமயங்களில் அப்பாக்களால் 
நிகழ்த்தப்படும் 
மறைமுக படுகொலைகள்...

Saturday, July 11, 2020

அன்பின் பாசாங்கு


இறந்தவரின் 
உடல் முன் 
அரங்கேறும் பெரும்பாலான 
நிகழ்வுகள் யாவும் 
முகத்திரைப் போர்த்திய 
அன்பின் பாசாங்குகளே!!!