Sunday, July 29, 2012

வாழ்நாள் தனிமைப் பயணம்




நீ என்னை 
பிரிந்து செல்லும் 
அந்த நொடிப்பொழுதில் 
தலைமேல் அனிச்சையாக 
பறக்கிறது 
ஒற்றைப் பறவை.



Saturday, July 21, 2012

வாழ்தல் ஒரு கலை - XI


     "நல்லா இருக்கீங்களா?", என்கிற பொதுவான விசாரிப்புகளைவிட "சாப்டீங்களா?", போன்ற விசாரிப்பில் பின் ஒளிந்திருக்கும் சகமனிதனின் பிரியத்தையே அதிகம் நேசிக்கிறேன்.

     சகமனிதனின் பசியைப் புரிந்துகொள்ளுதல் என்பது எவ்வளவு மகத்தானது! எத்தனை பேரின் பசியை இதுவரை நிராகரித்திருக்கிறோம்? புரிந்திருக்கிறோம்?


     ஒருவேளை பசியைக் கடத்துவதற்குதானே வாழ்வின் இத்தனை போராட்டங்களும்? பசியின் அவமதிப்பு தலையணை நனைக்கும் கண்ணீராக கழியும் இரவுதான் எத்தனை கொடுமையானது?

     நடுநிசியில் வீட்டினுள் நுழையும் நபரின் முகத்தைப் பார்த்தே சமையலறை நோக்கி நகரும் பாதங்களை எத்தனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தாலும் தகும்.


     ஒரு ரொட்டித் துண்டில், ஒரு கோப்பைத் தேநீரில் தன் பசியைக் கடக்கும் மனிதனின் பார்வையில்  இந்த உலகம் எப்படித் தெரியும்? இந்த உலகத்தின் மீதான அவனின் கருத்து என்னவாக இருக்கும்?

     சகமனிதர் பசியுடன் இருக்க அதை உணர்ந்து அவர் பசியாற்றுவது இறைவன் ஆசிர்வதிக்கப்பட்ட இதயம் என்பதைத் தவிர வேறென்ன?

     கல்லூரியின் இறுதி இரண்டாண்டுகள், நண்பர்களுடன் வெளியில் அறை  எடுத்துத் தங்கியிருந்தேன். தங்கியிருந்த அறையிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில்தான் உணவகமே இருந்தது. வெயில், மழை போன்ற இயற்கையின் தன்மையை கண்டுகொள்ளாமல் பசி என்ற இயற்கைத்தன்மையைதான் முக்கியமாக கருதவேண்டியதாயிற்று.

     அதற்குமுன் அறிமுகமிருந்தாலும், கல்லூரி தினங்களிலிருந்துதான் 'பசி' அறைத்தோழன் அளவுக்கு உரிமையுடன் என்னிடம்  நெருங்கியது. கையில் பணமிருந்தும் சரியான அல்லது கிடைக்கவே பெறாத உணவு என்பதுதான் பிறர் வாழ்க்கையை தரிசிக்க வைத்தது.


     அது பொங்கல் பண்டிகை சமயம். உணவகம் வைத்திருந்த அனைவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதனால், எங்கும் உணவு கிடைக்காத நிலை. அறைத் தோழர்களும் அவரவர் ஊருக்கு சென்றிருந்தனர். நான் அறையைவிட்டு எங்கும் செல்லாதிருப்பதைக் கவனித்த வீட்டின் உரிமையாளர் என்னை அழைத்து,"சாப்பிட்டியா?" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்பதைப் போல தலையசைத்தேன். என் முகத்தை சில நொடிகள் கவனித்தவர், "இவனுக்கு சாப்பாடு கொண்டு வாம்மா", எனத் தன் மனைவியிடம் சொன்னார். பிறகு என்னை நோக்கி, "நீ வெளியே எல்லாம் போய் சாப்பிட வேண்டாம்.இங்கேயே வந்துடு, என்ன ?" என்று கூறினார்.

     கல்லூரி முடிந்து வேறு இடத்திற்கு நான் வீடு பார்த்து மாறுகையில் கடைசியாக அவர் என்னிடம் சொன்னது,"அங்க புது எடத்துல ஏதாவது பிரச்சனைனா சும்மா யோசிச்சுகிட்டு நிக்காம, பெட்டியை தூக்கிட்டு இங்கேயே
வந்துடு என்ன?" என என் பதிலையும் எதிர்பாராமல் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினார்.



     வீட்டில் மிஞ்சுகிற பாலை தெருவில் இருக்கும் நாய்க்கு ஊற்றும் பக்கத்து வீட்டு அக்கா, தனக்களிக்கும் உணவை குருவிக்குத் தருமாறு அடம்பிடிக்கும் குழந்தை, வீட்டு வாசலில் பிராணிகளின் தாகம் தணிக்க தண்ணீர் வைக்கும் முதியவர் என பிறர் நலன் கருதி வாழ்பவர்கள்தானே நம் உலகத்தின் பெருங்கொடை!




     சார்லி சாப்ளினிடம் அவரை இயங்க வைக்கும் உந்து சக்தி என்ன என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"பசி" என பதில் அளித்தார். அவரது படங்களை சற்றே கூர்ந்து கவனித்தீர்களேயானால் அது எவ்வளவு பெரிய உண்மை எனத் தெரிய வரும். தனது ஒவ்வொரு படங்களிலும் அவர்  நிதானித்து உண்கிற மாதிரியான காட்சி இருக்காது. மாறாக தனக்கு கிடைத்த உணவை அவசரமாக, பிறர் பிடுங்கி விடுவார்களோ போன்ற தவிப்புடனே சாப்பிடுகிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பார். 

   சிறிது யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு உயிரின் முதல் அனுபவம் பசியாகத்தானே இருக்கிறது?




   


Tuesday, July 17, 2012

குழந்தைக் கவிஞன்



உன் பிரிவில் 
பிறந்த கவிஞன் நான்.
இக்குழந்தைக்குத்தான் 
எத்தனை வலி 
இப்பிரசவிப்பில்!




Saturday, July 7, 2012

காதல் தவம்


உன் பதிலுக்கு
காத்திருக்கிற
நாட்கள்
நீள்கையில்
வரத்திற்கு
தகுதியானவனா
என்ற
ஐயத்தைவிட
தவமிருக்க
தகுதியானவனா
என்ற
கேள்வியே
எழுகிறது!