Tuesday, March 29, 2011

வான் அழுகை

தன் பிள்ளைகளின்
மரணத்திற்கு அழுது அழுதே
வற்றிவிட்டன 
மேகத்தின் கண்ணீர்த் துளிகள்...

Friday, March 25, 2011

நிழற்படம்

நிறமுள்ள பூக்கள் 
நிறமற்றதாய்
மணமுள்ள பூக்கள் 
மணமற்றதாய்
நிழற்படமாக  என் கையில்.....

Tuesday, March 15, 2011

நிலாத் தேரோட்டம்



விண்ணெங்கும் கூடி நின்று 
ரசிக்கின்றன
 விண்மீன் குழந்தைகள்
நிலாத் தேரோட்டத்தை ...

Tuesday, March 8, 2011

பெண்மையின் அழகு

     அந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், "அரசே! நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு மட்டும் சரியாக விடை அளித்தால் நான் உங்களை மணம் முடிக்க சம்மதிக்கிறேன்" என்றாள். அரசனும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டான்.

     உடனே அவள், "ஒரு பெண் எதை விரும்புவாள்?" என கேள்வி எழுப்பினாள்.

     அரசனுக்கோ சற்று குழப்பமாகவே இருந்தது அந்த கேள்வி. எனவே தனக்கு ஒரு வார கால அவகாசம் அளிக்குமாறு கேட்டான். அவளும் சம்மதித்தாள்.

      அரண்மனை சென்றடைந்த அரசன் தன் அமைச்சரை உடனே அழைத்து நிலைமையை விளக்கி, தனக்கு உதவுமாறு கட்டளை இட்டான். ஒரு வார காலத்திற்குள் விடை கூறவில்லை எனில் அமைச்சரின் தலை துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்தான்.

      அமைச்சர் அதிர்ந்தே போனான். என்ன செய்ய ஏது செய்ய என செய்வதறியாது திகைத்தான். ஒரு வார கால அவகாசம் உள்ளதால் அண்டை ஊர்களுக்கு சென்று எவரிடமாவது விடை கிட்டுமா எனப் பயணிக்கலானான்.

      அப்போது ஒரு ஊரில் உள்ள ஒருவன் அந்த ஊரின் ஒதுக்கு புறத்தில் ஒரு கிழவி இருப்பதாகவும், அவள் நெடுங்காலமாக தன் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதாகவும், ஒருவேளை அவளுக்கு விடை தெரிந்திருக்கக்கூடும் எனவும் தெரிவித்தான். அமைச்சரும் ஆர்வமுடன் அங்கே சென்றான். 


      அங்கே சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த குடிசையின் கதவை அவன் திறக்கையில் உள்ளே ஒரு சூனியக்காரி போல ஒரு கிழவி அமர்ந்திருந்தாள். அவள் அமைச்சரை நோக்கி வந்த காரணம் குறித்து வினவினாள். அமைச்சரும் வந்த காரணத்தை சொல்ல, அவள் அந்த வீடே அலறும்  வண்ணம் சிரித்தாள். பிறகு, தன்னை அமைச்சர் மணந்து கொள்ள சம்மதித்தால், தான் விடை கூறுவதாக சொன்னாள். 

      அமைச்சருக்கு தலை சுற்றத் துவங்கியது. பிறகு, தான் பதில் கொண்டு வரவில்லை எனில் அரசர் தன் தலையை துண்டித்து விடுவார். அதற்கு இது எவ்வளவோ மேல் என்று ஒப்புக் கொண்டான்.

    
  
      பிறகு அவள்," ஒரு பெண் தன் விருப்பம் போல் இருக்கவே ஆசைப்படுவாள். அவள் மீது எந்த ஒரு அதிகாரத்தையும்  திணிப்பதை அவள் ஒரு போதும்  விரும்புவதில்லை" என்றாள். அமைச்சருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவளிடம் நிலைமையை விளக்கிக் கூறி, தான் அரசனிடம் சொல்லிவிட்டு அவளை வந்து மணம் முடிப்பதாக சத்தியம் செய்துக் கொண்டு ஊர் திரும்பினான்.

      பிறகு அரசனிடம் நடந்ததைக் கூறி, அவர்கள் மணம் முடித்தவுடன் திரும்பி அவளிடமே சென்றான். பின்னர், நல்லதொரு நாளில் அவன் அவளை மணம் முடித்தான். மாலை மாற்றிய மறு நிமிடம், அவள் பேரழகியாய் உருமாறினாள்.

      அமைச்சர் வாயடைத்துப் போனான். பின்னர் அவள், தான் இத்தனை ஆண்டு காலம் சாபத்தில் இருந்ததாகவும், தன்னை யாராவது மணம் முடிக்கும் நேரத்தில்தான் சாபக் காலம் முடியக் கூடும் எனவும் தெரிவித்தாள். அமைச்சர் பெருமகிழ்ச்சி அடைந்தான். அவளை தான் நாட்டுக்கு அழைத்தான்.
   
      அவள் சற்று தயங்கிக் கொண்டே, அதில் ஒரு பிரச்சனை  இருப்பதாகக் கூறினாள். அமைச்சர் என்ன என்று வினவ, அவள், "நான் உங்களுக்கு அழகாகத் தெரிந்தால், மற்ற அனைவருக்கும் கோரமாகத் தெரிவேன். மாறாக உங்களுக்கு கோரமாகத் தெரிந்தால், மற்றவர்களுக்கு அழகாக தெரிவேன். இப்போது சொல்லுங்கள் நான் எப்படி உங்களுக்கு தோன்ற வேண்டும் என்று?" எனக் கேட்டாள்.
  
       அமைச்சர் சற்று சுதாரித்துக் கொண்டு, "உனக்கு என்ன விருப்பமோ அப்படியே இருந்துக் கொள். எனக்காக உன் விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம்" என்றான்.

      அவள் புன்னகையுடன், "எனக்கு இப்படி இருக்கத் தான் விருப்பம். அப்போதும் இப்படியே இருந்துக் கொள்கிறேன்" எனக் கூற அமைச்சர் பெருமகிழ்சிக் கொண்டான்.


      "ஆம். ஒரு பெண் தன் விருப்பம் போல் வாழும் போது தேவதையாக வாழ்கிறாள். மாறாக மற்றவர்கள் விருப்பம் போல் வாழ நேரிடும் போது அவள் மட்டும் சூனியம் ஆவதோடு மட்டுமல்லாமல் அவள் வாழ்க்கையும் சூனியமாகிவிடுகிறது."

Wednesday, March 2, 2011

மாடர்ன் கீதா சாரம்


எது இன்று உன்னுடையதோ 
அது நாளை மற்றொருவர் உடையதாகிறது 
"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு"